அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே
அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே
அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே
" ஒரு மலரஞ்சலி"
அந்த அணையாத தீபம் திடீரென அணைந்தது. என்னது ஜோதி முருகன் அய்யாவுக்க இப்படி எனத் தமிழகத்தின் அனைத்து சன்மார்க்க இதயங்களும் துடித்தன. மறக்க முடியாத அந்த நான்கு நாட்கள். 25.01.07 காலை வடலூரில் ஜோதி திடீரென மயக்கமானார். மூளையில் ரத்தக் கசிவு. பாண்டிச்சேரி டாக்டர்கள் கைவிரிப்பு.சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதி. முதல் நாள் மயக்கத்திலிருந்து 28-01-07 வரை ஜோதிக்கு நினைவுதிரும்பவில்லை. டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம். 28-01-07 ஞாயிறு இரவு 8.25 மணிக்கு உயிர் அடக்கம் கொண்டார். 29.01.07 திங்கட்கிழமை இராமநாதபுரம் ஆற்றாங்கரையில் உள்ள சன்மார்க்க அறநிலையவளாகத்தில் மாலை 5.30மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வள்ளலாருக்கே வாழ்க்கைப்பட்டு இரவு பகலாக இடைவிடாது ஏழைகளுக்காகத் துடித்தஅந்த இதயம் கடைசியில் அமைதிகொண்டது. மனம் நம்ப மறுக்கிறது. நமது ஜோதிக்கா இந்த நிலை.எங்கெங்கு சன்மார்க்கம் வாழ்கிறதோ அங்கெல்லாம் ஜோதியின் சன்மார்க்கப் பயிற்சி மைய நினைவுகள் பசுமையாக இருக்கும். வள்ளலார் யுனிவர்சல் மிஷன் ஆரம்பித்த பொழுது நான் நினைத்தேன் இந்த ஒருஜோதியால் ( ஜோதி முருகனால்) உலகில் பல ஜோதிகளை ஏற்ற முடியும் என்று. அது நடந்தது. இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் ஒரு தர்மசாலை, ஒரு தயவாலயம், நான்கு அறநிலையங்கள், ஆதரவற்றமுதியோர் / மாணவர் இல்லங்கள் என ஏழு தொண்டு நிறுவனங்கள் செவ்வனே நடந்தன. இராமநாதபுரம் தங்கல் மனை சன்மார்க்க உலகத்தின் அமுத சுரபியாய்ப் பணிபுரிந்தது.
அன்புள்ள ஜோதியே , சன்மார்க்க உலகின் சார்பாக உனக்கு எப்படி அஞ்சலி செலுத்துவேன்.நட்புரிமை காரணமாக உன்னை "அன்" விகுதியிட்டு அழைப்பதற்கு என்னை மன்னித்துவிடு,தயவு, தயவு, என்று பேசி தயவை வாழ்க்கையில் காட்டி, தயவால், அனைவரையும் தன்னிடம் ஈர்த்த தயவாலயமே. உன்னோடு பேசுவதும், பழகுவதும் ஒரு பண்பாட்டுப் பயிற்சியே. கனவுகள், திட்டமிடுதல்,ஈடுபாடு, உழைப்பு, கட்டுபாடு, அரவணைப்பு, முடிவெடுக்கும் திறமை, அதைத்தானே முன்னின்று செயல்படுத்துதல் இவை அனைத்தும் தலைமையின் இலக்கணங்கள். இந்த இலக்கணங்களின் இலக்கியமே.உன்னை ஆழ்ந்து படிக்கப் படிக்க நானே இலக்கியமாகி விடுகிறேன். தூரத்திலிருந்து ரசிக்க ஒரு துருவ நட்சத்திரமாய், பக்கத்தில் நின்று படிக்க ஒரு பல்கலைக் கழகமாய் இந்த மாணவனுக்கு கிடைத்த சரவணானந்தாவின் அன்புச்சீடன் நீ, உன்னோடு பழகிய அந்த இனியநாட்களை அசைபோட, அசைபோட நான் கண்ணீரில் கரைந்து போகிறேன். எவரிடமும் அளவான மரியாதை, அளவான சிரிப்பு, அளவான வெளிப்பாடு, மிகையின்மை இவை என்னை உன்னிடம் ஈர்த்த குணங்கள். உன் அணுகுமுறையும்,.ஆற்றலும் மிகப் பெரியது. வாழ்க்கையில் முக்கியமான நிமிடங்களில் என்னை முடிவெடுக்க வைத்தவன் நீ. விலாசம்வேண்டும்.விளம்பரம் வேண்டாம் என்ற உன் முத்திரை இன்றைய சன்மார்க்க வியாபாரிகளுக்கு ஒருபாடமாக அமைய வேண்டும். உலகமே சைவமாகி, சன்மார்க்க நெறி நின்று, சமரசம் நாடிஉலக அமைதி நாட வேண்டும் என்பது உன் கனவு, உன் தனி மனித ஆளுமையும், வள்ளலார்கருத்தரங்குகளில் தலைமை கொள்ளுகின்ற ஆளூமையும் கண்டு நான் வியந்திருக்கின்றேன்.
இராமநாதபுரத்தில் ஒருநாள், வடலூரில் ஒருநாள், பயிற்சி முகாம்களில் பல நாட்கள், மாநாடுகளில் சில நாட்கள், அயல் நாடுகளில் சில நாட்கள் என வள்ளல் பெருமான் சுற்றிவிட்ட பம்பரமே, பயிற்சியும், முயற்சியும் மூச்சாக இருந்த உனது அயராத உழைப்புக்குத் தான் ஆண்டவர் ஓய்வு தர விரும்பினாரோ. உன்னை நாங்கள் எப்படி மறப்போம்.
மகாமந்திரத்தை எழுதி வைக்க வசதியாக உன் அகன்ற நெற்றி
அறிவுச் சூட்டில் உதிர்ந்து போன முடி
புலமையில் தொலைந்து போகாத பணிவு
பணியில் கரைந்து போன உடல்
இமைப்பொழுதும் சோராத மனம்
எண்ணியதை முடிக்கும் திண்மை
பதிலை கேள்விக்கு முன் தரும் வேகம்
ஒளி வீசும் கண்கள்
அண்ணாவை போன்ற உருவம்
மொத்தத்தில் ஜோதியின்று ஈர்ப்பும், முருகனது
இளமையும் உன்னிடம் இருந்தது.
ஒரு நல்ல நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் வாழ்ந்து மறைந்த எங்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பிள்ளையே, உங்களை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்துக்கு நாங்கள் எப்படி ஆறுதல் சொல்லுவோம். நீ ஏற்றி வைத்த ஒளி விளக்குகள் அணையாமல் காப்பதும், உன் குடும்பத்தின் துணையோடுமேலும் பல விளக்குகளை ஏற்றுவதும், அந்த ஜோதியை ஒலிம்பிக் ஜோதியாய் உலகெங்கும்சுமந்து சென்று சன்மார்க்க உலகத்திற்கு வித்திடுவதும் தான் நாங்கள் உனக்குச் செய்யும் கைமாறாகும்.
" உலகமெலாம் பரவ என் உள்ளத்திலிருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ்சோதி"
- டாக்டர். பி.கி. சிவராமன்