Vallalar Universal Mission Trust   ramnad......
எச்சம் நினக்கிலை

(உரைவிளக்கம்) மக்கள் இவ்வுலகில் அடிக்கடி பலவகையான துன்பங்களுக்கு ஆளாகி மடிந்து ஒழிந்து கொண்டுள்ளனர். துன்பங்களை யொழித்து இன்பமாக வாழவேண்டும் என்பதே, ஒவ்வொருவரின் விருப்பமாம். ஆனால் துன்பங்கள் ஒழிக்கப் பட்டு நல்ல இன்பத்தோடு வாழ வழிவகையை உள்ளபடி உணர்ந்து பெற்றுக்கொள்ள முடிகின்றதில்லையே, ஏன்? ஏனென்றால் உண்மை நெறி ஒழுக்கம் இதுவெனத் தெரிந்து அடைந்து அதன்படி வாழாததினால்தான் ஆம். துன்பங்கள் தோன்றக் காரணமாயுள்ள விடயங்கள் யாவை யெனில்; 1. ஆகாரம் 2. தூக்கம், 3. மைதுனம் 4. பயம். இந் நான்கினும் மக்கள் முறையோடு நடந்துகொண்டு , சத் விசார வழியிற் பயின்றுவந்தால் உள்ளொளி பெருகும். மேல், அக நின்று உலகியலைத் தயா இயலாக ஏற்று வாழ்ந்தால் நலமெல்லாம் பெருகும், இன்பமே தழைக்கும்.


ஆகாராதிகளின் பழக்க வழக்கம் ஒருவனுக்கு உள்ளொளி யைப் பெருக்கி, உலவா இன்ப நிலைக்கு ஏற்றுவதாயிருக்க வேண்டும், இது விபரம் பற்றி நம் வள்ளலார் குறிப்பது; ஆகாரம் – அரை, நித்திரை – அரைக்கால். மைதுனம் – வீசம் , பயம் – பூஜ்யம் ஆக இருத்தல் வேண்டும் என்றுள்ளார். இங்கு குறிக்கப்பட்டுள்ள ½, 1/8. 1/16, 0, எல்லாம் வெற்றுக் கணக்கு அளவு மட்டுமல்ல, அக உண்மையோடிணைந்து விளங்குவதாம், யாதெனில் ; சன்மார்க்க சாதகன் உணவு விஷயத்தில் விருப்பு வெறுப்பு கொள்ளாமல் சுத்த சத்துவகுண விருத்தியும் விளக்கமும் செய்யும் ஆகாரத்தை மன ஒருமையோடு அகமிருந்து ஏற்றுப் பழகல் வேண்டும். அகமாகிய ஆன்மக்கடவுள் நிலை நின்று உலகில் வாழ்கின்றவன், தான் என்றும் கடவுள் இரண்டுபடாத ஒரு வடிவிலிருந்து அனுபவிக்கின்றான். சுத்த உணவைத் தன் இச்சையின்றி , கடவுட் சம்மதமாக , குறைந்த அளவே ஏற்கும்போது , இவன் பாதி ஆகாரமே ஏற்கின்றவனாகின்றான் அப்போது கடவுளின் அருளாகிய அமுதம் பாதி இவனுக்குக் கிடைத்து, நாளடைவில் புற உண்டி சுருங்கியொழிய , அக அமுதமே நிறையிடம் பெற்று வாழ்விப்பதாம். இதுபோல் நித்திரை விஷயத்தில் , இவன் அகத்தே அரை நிலையில் இருப்பதோடு, அங்கு கடவுளருள் ஒளியாம் திருவடியை மறாவாது துயின்று, விழித்து வாழல் வேண்டும் என்பதாம். இது அரைக்காலாம், அடுத்து, மைதுனம் வீசம் என்பது, அகப்புணர்ச்சி அனுபவமாகப் பக்குவிக்கு விளங்குவது . ஞான பூரண உள் உள்ளொளி பதினாறு கலை நிறை முழு நிலவு ஒளி போல் விளங்கல், பதினாறில் ஒன்று ( 1/ 16, வீச நிலையாம்) இதுவே மாகாணி, என்பர். மா என்பது ஆன்ம ஜோதி மணியாம், இத்னால் இந் நிலையை மாவாகக்காண் நீ என்றும், மாகாண் நீ அல்லது மாகாணி என்றும் கூறப்படுவது. இதற்குமேல் பயம் பூஜ்யம் ஆவது; அகநிலை நின்று அருள் ஒளியே தன்னைச் சூழ்ந்து காத்து வருதலை உண்மையிற்கண்டுள்ள ஒருவனுக்கு எந்த பயமும்,மரணபயம் கூட ஏற்படாதென்பது உண்மை. இவ்வளவும் பக்குவியில் உயர் அனுபவ சித்தியில் விளங்குவன. சாதாரண உலகியலில் உள்ளவர்கள் விஷயத்தில் உணவு அரை வயிற்றுக்கும், நீர் கால்வயிற்றுக்கும், இருக்கவேண்டும் என்பர். தூக்கம் முழு உணர்வற்ற முரட்டு நித்திரையாய் இல்லாது அரை அல்லது கால், அல்லது அரைக்கால் வினாடியில் விழிப்படைவதாக இருக்கவேண்டும் என்பதாம். மைதுனம் அல்லது உடலுறவு விஷயத்தில் தாதுவிருத்தி மிகாமலும் குறையாமலும் கட்டுப்பாட்டுடன் இருந்துவரின் பதினாறு நாட்களுக்கு ஒரு முறை திருத்தமடைந்து ஒளிபெறும்., நேர்மையும் ஒழுக்கமும் நிரம்பி வாழும் ஒருவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. திருவருள் காக்கும் என்றா அக நம்பிக்கையே பயத்தைச் சூனியமாக்கி வாழ்வருளும்.


நமது அருள் வள்ளலார்க்கு அபயம் அளித்த அருட்பெருஞ்ஜோதி , பயத்தை முற்றும் போக்கி வாழ்விக்கின்றதாம். இப் பிறப்பில் உனக்கு குறைவு ஒன்றுமில்லை வேண்டுவன எல்லாம் நிறையவே பெறுவாயாக. ஆதலின் எதற்கும் பயப்படவேண்டாம்’ என்று உறுதியான அருள் வாக்கு வழங்கியுள்ளது அருட்பெருஞ்ஜோதி, எச்சம் என்பதற்கு குறைவு என்று பொருளாம் குறைவு இல்லை என்றால், அருள் நிறைவு உண்டென்பது குறிப்பு, எச்சம் என்பதற்கு மிச்சம் என்ற பொருளும் கொள்ள்வர். இப் பிறப்பின் அருள் நிறைவால் முன் வினை முடிவுறும், மேலை பிறவிக்காம் சஞ்சிதமும் எஞ்சா அல்லது மிஞ்சா வண்ணம் அவ்வெச்சம் முற்றும் ஒழிக்கப்பெறுகின்றதாம். இதனால் இறப்பச்சம் ஒழிவதோடு, மேற் பிறப்பச்சத்திற்கே இடமில்லாது செய்து விடுகின்றதாம். ஒருவனுக்கு இறாப்பு என்பதேயில்லை என்றானபோது, அதனால் ஏற்படும் அச்சத்திற்கிடமேது? இறப்பச்சம் இல்லை என்றானால் வேறு அச்சத்திற்கும் சிறிதும் இடம் இல்லையாம். இவ்வாழ்வு நிலைபெறாது உண்மையும் உணராது அச்சமில்லை அச்சமில்லை என்று வீணிற் சொல்லிக்கொண்டு மாய்ந்து ஒழிவது எவ்வளவு அறியாமை மூடத்தால் அஞ்சாதிருந்து மடிதல் வீரமா? அருளால் அழியாது வாழ்தல் அன்றோ பெருமையாம்.

தயவு சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்....