SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
தவறான போதனை
தவறான போதனை.

இந்தத் தமிழ் நாட்டில் ஒருவர் தன்னைத் தானே குரு என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறார். தான் பல அனுபவங்களை அடைந்துவிட்டதாகவும் கூறு கிறார். அவருக்குப் பல சீடர்களும் இருப்பதாகத் தெரிகிறது. தான் உபதேசிக்கும் சாதனைக்கு வள்ளலாரின் திரு அருட்பாவைச் சான்றாக எடுத்துக் காட்டுகிறார். தியானம் செய்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடாது. கண்ணைத் திறந்துகொண்டுதான் செய்யவேண்டும் என்று வழி காட்டுகிறார். அதற்கு அவர் வள்ளலார் கூறியுள்ள கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக எனற திரு அருட்பா வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார். அருட்பாவில் அந்த வரி எங்கே வருகிறது என்று பார்த்தேன். அந்த வரி வருகின்ற பாடல்; இதுதான்.
கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக
மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற எவ்வுலகும் வாழ்ந்தோங்கக் கருதி அருள் வழங்கினை என்றனக்கே
உலை வரும் இப்பொழுதே நற்றருணம் என நீயே உணர்த்தினை வந்தணைந்தருள்வாய்
சிலை நிகர் வன் மனம் கரைத்துத் தெள்ளமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திருநட நாயகனே
புராணங்கள் போன்ற நூல்கள் உரைக்கும் அத்தனையும் ஞானிகளின் கற்பனையே என்று உணராமல் அந்த நூல்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தவைதான் என்று நம்புகின்ற பாமர மக்களைப் பார்த்து வள்ளலார் உண்மை என்ன என்று ஆராயாமல் அவ்வளவு கற்பனைகளையும் உண்மை என்று நம்புவதையே கண்மூடிப் பழக்கம் என்றும் அந்தப் பழக்கம் மண் மூடிப் போகவேண்டும் என்றும் கூறினாரே தவிர
தியானம் செய்வோருக்குக் கூறியதல்ல. இந்த குருவானவர் தன் கருத்தைச் சொல்ல எல்லா உரிமையும் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையைத் திரித்துக் கூறி மக்களை ஏமாற்றுவது சன்மார்க்க மல்ல. அருட்பாவை யாருமே படித்திருக்க மாட்டார்கள் என்று எண்ணுகின்றாரா என்பது தெரியவில்லை. மேலும் வள்ளலார் உள்ளே நோக்குகின்றோரை நோக்கும் மருந்து என்றும், இந்தக் கதவை மூடு இரட்டைத் தாழ்ப்பாளைப் போடு என்றெல்லாம் பாடி இருக்கிறார். இந்தக் குருவானவர் காட்டியுள்ள அருட்பா வரி அவர் கருத்துக்குச் சரியானதல்ல.அவரது தியான முறை வள்ளலார் காட்டிய முறை அல்ல. எனவே அவர் அருட்பா தவிர வேறு எதையாவது சான்று காட்டிக்கொள்ளட்டும். அவர் தியான முறை வள்ளலார் காட்டிய முறை என்று தயவு செய்து சொல்லாமல் இருப்பது நல்லது. அவரது குருவான திருச்சி ராமசாமி தேசிகர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரே என்னிடம், திருக் கைலாய பரம்பரை ஆதி நாயக சுவாமிகளின் சீடர் பாலை யானந்த சுவாமிகளின் சீடர் திருச்சி ராமசாமி தேசிகர் நான் என்று கூறியுள்ளார். வள்ளலாருக்கும் அவருக்கும் தியான முறையில் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவரே என்னிடம் கூறியுள்ளார். நான் சன்மார்கத்திற்கு வந்தது என் பயிற்சியை விரும்பும் அடியார்களுக்கு அளிக்கவே என்றும் கூறியுள்ளார். உண்மையைச் சன் மார்கிகளா வது அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டும்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வேறு எந்த நோக்கமும் இல்லை. நன்றி.

venkatachalapathi baskar
மேலே சொல்லப்பட்ட குருவானவர் சில வருடங்களுக்கு முன்னால் மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு இதய பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டது. பின்னர் சிறிது நாளில் காலமானார். அவருடைய சீடர்கள் அவர் சித்தியாகி விட்டதாக கூறுகின்றார்கள்...! தன்னுடைய தவறான புரிதல்களை எல்லாம் பல நூல்களை ஆக்கி அதன் வழியே பல குழப்பங்களையும் உண்டாக்கி வந்த அந்த குருவின் பணியை அவருடைய சீடர்கள் இப்போதும் தொடங்குகிறார்கள்... குரு சத்குரு போன்ற பட்டங்களையெல்லாம் தங்களுக்கு கொடுத்துக் கொள்கிறார்கள்.. ஞானநிலை அடைந்துவிட்டதாக கூறும் இந்த குருவின் சீடர்கள் பலர் மெத்த படித்து கணினித்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்...!
Friday, March 4, 2022 at 16:14 pm by venkatachalapathi baskar