SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கத்தில் திருநீறு அணியலாமா?
சன்மார்கத்தில் திருநீறு அணியலாமா?

இன்றைய தினம் இது ஒரு பெரிய பிரச்சினைக்குரிய வினா . சுத்த சன்மார்கிகள் என்று தன்னை சொல்லிக் கொள்வோர் திருநீறு அணியக்கூடாது என்று ஆணித் தரமாக கூறுவதோடு சமயம் கடந்த சன்மார்கத்தில் சமய சின்னமான திருநீறு எப்படிப் பொருந்தும் என்றும் கேட்கின்றார்கள், திருநீறு என்பது சைவ சமயச் சின்னம்தான், ஒரு சமயச் சின்னம் இருக்குமேயானால் மற்ற சமய மதத்தவர் எப்படி நமது சன்மார்கத்திற்கு வருவர் என்பதும் அவர்களது வினா.? சமய மதம் கடந்த சுத்த சன்மார்கத்தில் ஒரு குறிப்பிட்ட சமயச் சின்னம் இருக்குமேயானால் அது எப்படி பொது மார்கமாக விளங்க ,முடியும்? இவர்களது கேள்வியில் ஒரு நியாயம் இருக்கலாம் .ஆனால் இவர்கள் குருவாக ஏற்றுக்கொண்டுள்ள வள்ளலார் அல்லவா மூல புருஷர்? அவர் திருநீறு விஷயமாக என்ன சொன்னார் என்ன செய்தார் என்று நடு நிலையாக நின்று பார்ப்போம். திரு நீற்றைப் போற்றிப் பலப் பல பாடல்கள் உள்ளன. அவை ஆரம்ப காலத்தில் பாடப்பட்டவை என்றாலும் இந்தப் பாடலைப் பாருங்கள்.
"மலங்கு மாலுடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே
கலங்குறேல் அருள் திரு வெண்ணீர் எனது கருத்திருந்தது கண்டிலை போலும்
விலகுறாப் பெருங்காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல்
அழியா
,நலங் கொள் செஞ்சடை நாதன் தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே"
நோய் தீர்க்கும் மருந்தாகவும் திருநீற்றை ப் பெருமானார் பயன்படுத்தி இருக்கின்றார் என்பதும் நாம் அறிய வேண்டிய உண்மை. இதை ஊர்ஜிதம் செய்வது போல தேவநாத பிள்ளையின் மகன் அய்யாசாமி பிள்ளைக்கு ஒரு காலில் கட்டி வந்து அவதியுற்ற போது நம் பெருமானார் அவர்கள் , தேவநாத பிள்ளைக்குக் கடிதம் எழுதி திருநீறும் உடன் வைத்து அனுப்பி இருக்கிறார் . அவர் எழுதிய கவிதைக் கடிதம் இதோ
:"இறை அருள் நிரம்ப இருத்தலான் மகிழ்ந்து பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு ஊருவிற் கட்டி உடனே உடையும் அது குறித்து நீ அஞ்சலை அஞ்சலை இது குறித்து அருள் நீறு இதற்குள் அடக்கம் செய்து வைத்தனன் அத்திரு நீறு எடுத்து எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் கொவ்வைச் சாறும் கோள் வெடி உப்பும் கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக பாசுரு முருங்கைப்பட்டை சாற்றினில்"
கட்டி உடைந்து குணப் படுவதற்காக பெருமானார் திருநீறு அனுப்பி இருக்கிறார்கள். நோய் தீர்ப்பது என்பது ஜீவகாருண்யச் செயல் .இதை அந்த நீறு செய்யும் என்பதால் தான் அதை கையாண்டார்கள். இந்த வகையில் திருநீறு வள்ளலாருக்கு உடன்பாடே . பின்னால் எழுதிய ஆறாம் திருமுறையிலும் திருநீற்றைப் புகழ்ந்தே பாடி யிருக்கின்றார்கள் .அனுபவமாலை பத்தாவது பாடலைக் கவனியுங்கள்.
"நற்பூதி அணிந்த திரு வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே"
ஆறாம் திருமுறையிலும் திருநீறு மகிமை பெற்றே விளங்குகிறது.
ஒரு பாடலில் பெருமானார் திரு நீறு கேட்க இறைவன் செஞ்சுடர்பூ அளித்ததாக வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி சிலர் இறைவன் செஞ்சுடர்ப்பூதானே அளித்தான். திருநீறு தரவில்லையே .எனவே சன்மார்கத்தில் திருநீறு உகந்தது அல்ல என்று வாதிடுகின்றார்கள். அந்தப் பாடல் இதோ நன்கு படியுங்கள்.

"திருவுருக் கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திருநீற்றுப் பையவிழ்த்து செஞ்சுடர்ப் பூ அளிக்கத்
தருவுருக் கொண்டெதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருக எனக் கேட்ப
மருவுருக் கொண்டு அன்றளித்தாம் திருநீறு இன்று உனக்கு மகிழ்ந்தளித்தாம் இவை என்று வாய் மலர்ந்து நின்றாய்
குருவுருக் கொண்டம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன் ஆட்கொண்ட குணக்குன்றே"

இந்தப் பாடலில் ஆண்டவன் திருநீற்றுப் பை அவிழ்த்து செஞ்சுடர்ப்பூ அளித்ததாகவும் தான் மீண்டும் திருநீறு கேட்டதாகவும் அறிவிக்கின்றார். நமக்குத் தேவை ஆண்டவன் வள்ளலாருக்கு என்ன கொடுத்தான் என்பதல்ல . வள்ளலாருக்குத் திருநீறு உடன்பாடா இல்லையா என்பதே .செஞ்சுடர்ப்பூ பெற்றுக்கொண்ட பின்னும் வள்ளலார் திருநீறு கேட்டதிலிருந்து அவருக்குத் திருநீறு உடன்பாடே என்று தெரிகிறது.
கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்பவர் வள்ளலாரைச் சந்தித்து மூன்று நாட்கள் உரையாடினார்.முடிவில் பெருமானாரிடம் திருநீறு கேட்டார் . வள்ளலார் தரவில்லை. இதையும் சான்றாகக் காட்டி வள்ளலாருக்குத் திருநீறு உடன் பாடில்லை என்று சொல்கிறார்கள். .சுந்தர ஸ்வாமிகள் தன் மடியிலிருந்து திருநீறு எடுத்து வள்ளலாரின்\ நெற்றியில் இட்டு மீதத்தை வள்ளலார் தந்ததாகக் கொண்டு தானும் இட்டுக்கொண்டு மற்றவர்க்கும் அளித்தார். இதைச் சற்று சிந்திப்போம் .மூன்று நாட்கள் உரையாடிய சுந்தர ஸ்வாமிகள் . வள்ளலாரிடம் திருநீறு ஏன் கேட்டார் ? ஒன்று வள்ளலாரின் நெற்றியில் திருநீறு இருந்திருக்கவேண்டும் அல்லது அந்த மூன்று நாட்களில் வள்ளலார் யாருக்கேனும் திருநீறு தந்திருக்க வேண்டும் .ஒன்றுமில்லாமல் சுந்தரசாமிகள் வள்ளலாரிடம் திருநீறு கேட்டிருப்பாரா ? வள்ளலார் வெள்ளை வேட்டி அணிந்தவர்.வெள்ளை வேட்டி அணிந்தவர்கள் காவி அணிந்தோருக்கு திருநீறு தரக்கூடாது என்பது சம்பிரதாயம் .அதை ஒட்டியே வள்ளலார் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகட்கு திருநீறு தரவில்லை.
இவை எல்லாவற்றையும் விட மேலாக ஞான சபையிலே முதன் முதலாகப் பூஜை செய்த ரத்ன ஓதுவார் அவர்கள் சபையில் திரைக்குத் தீபாராதனை முடிந்ததும் எல்லோருக்கும் திருநீறு அளிப்பதே வழக்கம் என்று கூறியுள்ளார்.இது வள்ளலாருக்குத் தெரியாமல் நடந்திருக்க வழியே இல்லை. நன்கு சிந்தித்தால் வள்ளலாருக்கு உடன்பாடாய் இருந்த திருநீறு சன்மார்கத்திற்கும் உடன்பாடே.
ரத்ன ஓதுவார் அளித்த வாக்குமூலம் இதோ படிக்கலாம்.
பூஜை முறை என்னவெனில் :
காலையில் ஸ்நானம் செய்து எட்டு மணிக்குச் சபைக்குப் போகும்போது எனக்கென்று ப்ரத்யேகமாய்க் கொடுத்திருக்கும் பீரோவில் வைத்திருக்கும் பட்டு அரைஞாண்கயிறு,பட்டு கௌபீனம்,பட்டு வாய்க்கட்டு,கால்களுக்குச் சுற்றிக்கொள்ளும் பட்டு,(இவைகள் எல்லாம் வெள்ளைப்பட்டு) இவைகளைத் தரித்துக்கொண்டு உள்ளே போய் .தென்னங்குருத்து ஈர்க் கினால் அமைத்த திரு அலகினால் இரத்தினச் சமுக்காளம் விரித்திருக்கும் ஏழு பிரகாரங்களையும் சுத்தி செய்துவிட்டு,ஏழு திரைகளுக்கு வெளிவந்து கற்பூர ஆராத்தி செய்து எல்லோருக்கும் விபூதி கொடுப்பது வழக்கம். இதே வழக்கம்தான் தைப்பூச தினமும்.ஆனால் அன்றையதினம் பகல் இரண்டு மணிக்கு நடக்கும். மற்றைய தினம் சாயந்திரம் ஐந்து மணிக்கு. எக்காலத்தும் திரையைத் திறந்து உள்ளே இருக்கும் தீப தரிசனம் செய்விப்பது கிடையாது. ஜனங்கள் சேவிப்பது திரைக்கு வெளியில் இருக்கும் கற்பூர தரிசனம்தான்.தீபாராதனை காலத்து எல்லோரும் அருட்பா பாராயணம் கும்பலாய்ச் செய்வார்கள். "
திருநீறு என்பது ஓர் சமயச் சின்னம். சன்மார்க்கம் அதைக் கடந்தது. எனவே சன்மார்க்கத் தில் திருநீறு அணியக் ,கூடாது.என்பதே அவர்கள் வாதம். வள்ளலார் காட்டிய சன்மார்கத்தில் அவர் என்ன சொன்னார்,என்ன செய்தார் என்று பார்த்தே நாம் முடிவு செய்யலாமே தவிர நாமாக நம்முடைய மனம்போல் ஒரு முடிவிற்கு வரக் கூடாது. ஞான சபை வழிபாடு முடிந்த முடிபு அங்கேயே வள்ளலார் திருநீறு தரும்படி ஏற்பாடு செய்திருக்கின்றார். எனவே வள்ளலார் சன்மார்கத்தில் திருநீறு உடன்பாடே.

SABAPATHY R
NICE EXPLANTION. THANKS
Saturday, February 26, 2022 at 06:27 am by SABAPATHY R