Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
வள்ளலார் தனது வருகை பற்றியும் சன்மார்க்கத்தில் வள்ளலார் வாழவேண்டிய வாழ்வியல் பற்றி கூறுவது என்ன?

இதை வள்ளற்பெருமான் சில பாடல்களில் கூறியுள்ளார்.

அகத்தே கறுத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத் தடைவிதித்து அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த உகத்தே வருவிக்கவுற்றேன் அருளைப் பெற்றேனே என்றும்

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன்வார்த்தை என்றுப் பாடலில் தெளிவுபடக் கூறுகிறார்.

எனவே அன்பு மிகுந்த சன்மார்க்க அன்பர்களே சன்மார்க்கத்தில் வந்த நாம் நமது சத்குரு கூறிய உயர்ந்த நெறியான சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை நன்கு கற்று தெளிவு பெற வேண்டும். அதன்படி வாழ்வியலில் வாழப் பழக வேண்டும். சாதி சமய சடங்குகளுக்கு சிறிதும் வாய்ப்பு இல்லாத ஜோதி வழிபாடு மட்டுமே செய்தல் வேண்டும். அதன்படி வாழ்ந்தால் தான் சன்மார்க்கத்தின் தனித்தன்மை உலகினருக்கு விளங்கும்.

உலகியலில் வாழும் நாம், பிற மதத்தவரை வேறுபடுத்தி ஒதுக்காமல் அவர்களிடம் அன்புடனும், நட்புணர்வுடனும் பழகி அவர்களை நம்மவர்களாக்க முயற்சித்தல் வேண்டும். அதற்கு நாம் சமய வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தாமல் வாழவேண்டும். ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் 20 வருடம் 30 வருடம் சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட சமய வழக்கத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

உலக உயிர்களுக்கு ஒரே இறைவன்தான் உண்டு என்று கூறி மெய்ப்பித்தவர் நமது சத்குரு வள்ளற்பெருமான். அந்த இறை ஆற்றல் உலக உயிர்கள் அனைத்திலும் ஒளியாய் ஆன்ம ரூபத்தில் இருந்து இயக்கத்தை தந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு தெளிவாக நமது சத்குரு கூறிய பின்னரும் நாம் சமய வழிபாட்டில் நாட்டம் கொள்வது சரியா என சிந்திக்க வேண்டுகிறேன்.