Karunai Sabai-Salai Trust.
என்ன காரணம் ? தெரியவில்லையே - APJ அருள்
திருவருட்பிரகாச வள்ளலார் தனக்கு வெளிப்பட்ட தனி மற்றும் உண்மை பொது நெறியாகிய " சுத்த சன்மார்க்கத்தை " சித்திரை முதல் தேதி 1871 அன்று உலகத்தார்களுக்கு வெளிப்படுத்தினார் .
இம்மார்க்கம் குறித்து அவர் சொல்கையில் ; 

#
சுத்த சன்மார்க்கத்திற்கு மற்ற சமய மத மார்க்கங்களும் அல்லாதனவன்றி இல்லாதனவல்ல.
#
பூர்வத்தில் நின்ற மார்க்கங்களுக்கு சுத்த சன்மார்க்கம் அநந்நநியமாக உள்ளது. அதாவது அந்நியமல்ல.
#
சுத்த சன்மர்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாகிய உலக சமய மத மார்க்கங்கள் மற்றும் அதன் ஆசார சங்கற்ப விகற்பங்களும் மற்றும் உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் நம் மனதில் பற்றக் கூடாது.
#
சுத்த சன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது.
மேலும்; வெளிப்பட்டுள்ள சன்மார்க்கங்கள் வள்ளலாருக்கு முன்பு வரை இரண்டு என்கிறார்௧ள் அவை;
ஒன்று; சமய சன்மார்க்கம் 
இரண்டு ; மத சன்மார்க்கம் 
வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கம் மூன்றாவது சன்மார்க்கம் ஆகும், என்கிறார்.
ஆனால் ;
இதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் ?
இதுவே நம்மிடையே எழும் கேள்வி ஆகும்.
நிற்க!
சிவாலயங்களில் கொடுக்கும் " திருநீறு "  வைணவ கோயில் கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள்.
அல்லது;
வைணவ கோயிலின் திருமண் மற்றும் துளசி நீர் சைவ கோயிலில் அனுமதி கிடையாது.
இப்படி இருந்தாலும் அதாவது,  அவரவர் வேறுப்பட்ட சடங்குகள் சம்பிராதயங்கள் இருப்பினும்  இந்த இரு சமயத்தார்களும் இன்று ஒற்றுமையுடன் சகோதர்களாக இருப்பது போல், கடவுள் நம்பிக்கை கொண்ட சுத்த சன்மார்க்கத்தை ஏன் ஏற்கவில்லை? என்ன காரணம் என்று தெரியவில்லையே?

வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது?

  • வள்ளலார் தான் சத்திய அறிவால் அறியப்பட்ட கடவுள் சொரூபம் சமய மதத்தில் சொல்லப்பட்ட கடவுள், தெய்வம் கர்த்தர் யோகி... இவர்கள் இல்லை என்றார்.
  • கருணை நம்மிடையே விருத்தியாகாமல் செய்வது சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களே என்பதை கண்டேன் என்றார்.
  • அக்கடவுளை நீங்களும் கண்டு களிக்க வேண்டுமானால், என்னை போல் ஆசார வகைகளை விட்டொழித்து கருணை ஒன்றையே சாதனமாக கொள்ள வேண்டும் என்றார் வள்ளலார்.
  • அக்கடவுளின் அருளால் பேரின்ப பெருவாழ்வாகிய இறவா வரம் பெறலாம். இது சத்தியம் என்றார்.

இருக்கட்டுமே. புதிய மற்றும் பொதுவாக தானே உள்ளது. கடவுள் உண்டு என்று தானே சொல்கிறார்.
இதில் என்ன தப்பு உள்ளது. ஏற்கனவே வேறுப்பட்ட கடவுள் கொள்கைகள் கொண்டது தானே சைவமும் வைணமும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய  " கடவுள் கொள்கை கொண்டது தானே "சுத்த சன்மார்க்கமும். பின் ஏன் ?
ஆம் ,
வள்ளலாரின் உண்மை பொது நெறியை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தாமல், அவரை முந்தைய சைவ நெறியிலேயே காட்ட முயலுகிறார்கள்?
ஏன் இப்படி செய்கிறார்கள் என்று ஒன்னுமே புரியவில்லையே !
சைவ சமயம் உட்பட அனைத்து உலக சமயங்களையும் பொய் என்றவர் தான் வள்ளலார். சைவ சமயத்தில் லட்சியம் கூடாது என்ற வள்ளலாரை மீண்டும் அவருக்கு திருநீறு பூசி, அவரால் பொய் என்று உரைக்கப்பட்ட சைவ கோயில் உள்ளே அவர் சிலை வைத்து வருவது ஏன் என்று புரியவில்லையே?  
அவர் இயற்றியவை என்றாலும், சமய ஸ்தோத்திர பாடல்களில் லட்சியம் வேண்ட்டாம் என்ற பிறகும் எதற்கு ஸ்தோத்திர பாடல்களை அச்சிட்டு வெளியிடுகிறார்கள்?
ஏன் என்று புரியவில்லையே? 
காரணம் தெரியவில்லையே.
மேதகு நீதி மன்ற தீர்ப்புகள், ஆணையரின் ஆணைகள் பல வள்ளலாரின் கடவுள் கொள்கையானது  வெளிப்பட்டுள்ள சமய மதங்களை சாரவில்லை என்ற உத்தரவுகள் இருந்தும் ஏன் சிலர் வள்ளலாரை மீண்டும் சமய சிறைக்குள்ளேயே அடைக்கும் செயலுக்கான காரணம் தெரியவில்லையே?
ஒன்னுமே புரியவில்லையே.

உங்களுக்காவது  ஏதேனும் காரணம் தெரிகிறதா?
இவர்களின் முரணான  செயல்களுக்கு பின் புறமுள்ள திட்டம் என்ன?
தெரிந்தால் சொல்லுங்களேன், please....
anbudan அன்புடன் 
உங்கள் இளங்கோ என்ற APJ அருள்
8778874134
பார்க்க : யூ டியுப் : vallalar apj arul