Karunai Sabai-Salai Trust.
நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? – அந்த நான்கு உண்மைகள் எவை? ஏபிஜெ அருள்.

அன்பர்களே!
நாம் நண்பர்களுடனோ அல்லது மற்றவர்களுடனோ பேசும் போது மாற்றுக் கருத்து ஏற்பட்டால் உடனே நம்மை பார்த்தோ அல்லது நாம் அவர்களை பார்த்தோ கேட்பது;

நாலும் தெரிந்த மாதிரி பேசுகிறாய்? நாலும் தெரிந்தவர் யார்?

தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும் நான்கு தான்.

அஃது யாதெனில்;
1. சாகாத கல்வியே கல்வி
2. ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவு.
3. மலம் 5 ம் வெல்லும் வல்லபம்.
4. வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளையவிளைவித்த தொழில்.

இந்த நான்கு உண்மைகள் சுத்த சன்மார்க்கத்தின் மரபுகள்.
இதை ஆண்டவரே வள்ளலாருக்கு உரைத்தார்கள். இதோ அது குறித்த பாடல்: எண்; 1369.
• சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
• தான்என அறிந்தஅறிவே
• தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
• தனித்தபூ ரணவல்லபம்
• வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
• விளையவிளை வித்ததொழிலே
• மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
• வியந்தடைந் துலகம்எல்லாம்
• மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
• வானவர மேஇன்பமாம்
• மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
• மரபென் றுரைத்தகுருவே
• தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
• தேற்றிஅருள் செய்தசிவமே
• சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
• தெய்வநட ராஜபதியே.

இங்கு குறிப்பிட்டுள்ள 5 மலங்கள் எவை என்றால்;
1.ஆணவம்.
2.கன்மம்
3.மாயை
4.மாமாயை
5.திரோதாயி

இங்கு நூல்களின் உதவியால் இவை குறித்து இயன்றவரை பார்ப்போம்;

காரிருள்-செருக்கு (இதணால் கோபம்/குரோதம்) – (அஞ்ஞானம்) – இயற்கையானது.

கன்மம் என்பது;

வெவ்வியவினை செயல்/தொழில் – பயனை விரும்பிச் செய்யும் சாத்திரப்படியான சடங்கு- செயற்கையானது

மாயை என்பது

மயக்கம் – வஞ்சக மனம் ( & தந்திரம்,ஏமாற்றம்) – இயற்கையில் செயற்கையானது

மாமாயை என்பது;

சுத்தமாயை –பொய்த்தோற்றம்- பிரபஞ்ச பொருள்களின் பொய்த்தோற்றம்

திரோதாயி என்பது;

மறைக்கை (திரை)- உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்தல்.

வேகாத கால் ஆதி (முதலிய) கண்டு....

சாகாதலை, போகபுனல் வேகாத கால் குறித்து காணுதல் வேண்டும்.

அன்பர்களே!

எவர் ஒருவர் தானென்னும் அபிமானம் இல்லாமல் கோபம், குரோதம் கொள்ளாமல், சாத்திரத்தின் அடிப்படையில் அமையப்பெற்ற சமயமத சடங்குகளில் லட்சியம் வையாமல், வஞ்சக மனமில்லாமல், உலகப்பொருள்களின் போலித்தோற்ற மறைப்பை நீக்கி கொண்டவர்கள், உலக அனுபவங்களை கொடுத்து உண்மையை மறைத்துக் கொண்டுள்ள திரைகளை நீக்கி கொண்டவர்கள் 5 மலங்களையும் வென்றவர் ஆவார்.
அடுத்து எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம் உண்மை அன்பு உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகா கல்வியை தெரிவிக்கும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் இம்மூன்றும் ஞான யோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர்.

ஒழுக்கம் நிரப்பி, சாகாத கல்வியே கல்வி என்றும், சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே என்றும் உண்மையை அறிய சொல்லும் சுத்தசன்மார்க்கத்தை தழுபவர் எவரோ அவரே
“” நாலும் தெரிந்தவர்கள்” ஆவார்கள்

நன்றியுடன் அன்புடன் உங்கள் ஏபிஜெ அருள்.

 

7 Comments
Damodaran Raman
அன்பர்களே,இப்பாடலுக்குக் கூறப்படும் விளக்கம் திருத்தப் பட வேண்டும்.சிவம் என்று பாடலில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் ஒன்றே சிவம் என்று அறிவதுதான் தகும் அறிவு என்று கூறாமல் சத்திய அறிவால் அறியப்படும் கடவுள் ஒருவர் என்று கூறுவது சரியானதல்ல.காரணம் கடவுள் என்பது பொதுப்பெயர். சிவம் என்பது சிறப்புப் பெயராகும்.சிவன் மட்டுந்தான் அனாதி சித்தனாவான்.அறிவித்தவர் நடராசப் பெருமான் என்பது தெளிவாகப் பாடலில் குறிப்பிடப்பட்டிருந்தும்,உண்மைக் கடவுள் வேறு ஒருவர்போல் விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஐந்து மலங்களைப் பற்றியும் சரியாகக் குறிப்பிடப்பட வில்லை. விளக்கமும் சரியானதல்ல.
1.ஆணவத்தின் இயல்பு நிலை உயிரின் இச்சை,ஞானம்,கிரியை என்னும் மூவகை ஆற்றல்களையும் செயல்பட விடாமல் முற்றிலும் தடுப்பதாகும்.மனித உடம்பு கிடைத்த பின்னர்தான் ஆணவமானது காமம்,குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் போன்றவற்றைச் செயல்படுத்தும்.
2.கன்மம் என்பது நல்வினை,தீவினை என்னும் இருள்சேர் இருவினையைக் குறிக்கும்.
3.மாயை என்பது 36 தத்துவங்களைத் தோற்றுவிப்பதற்கான அடிப்படை மூலப்பொருள்.கண்ணுக்குப் புலப்படாதது.
4.திரோதாயி என்பது ஆதி சத்தி எனப்படும் இறைவனின் மறைப்பாற்றல்.ஆணவம் உட்பட உடம்பு,உலகப் பொருட்களைக் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குவிக்கும் இறையாற்றலே திரோதாயி.உண்மையில் திரோதாயி சத்தி,தூய்மையான இறையாற்றலே என்றாலும் மாயையை இயக்கும் காரணத்தால் மலத்தினுள் ஒன்றாகக் கூறப்பட்டது.
5.மாமாயை என்பது சுத்த மாயையின் ஐந்து தத்துவங்கள் ஆவன.இவை மலமாகா.மாயேயம் என்பதுதான் ஐந்தாவதான மலம் ஆகும்.ஆதி சத்தி என்னும் திரோதாயி இயக்கும் மாயையின் பொருட்களான தனு(உடம்பு)கரண(உடல் உறுப்புக்கள்)புவன(உலகம்)போகங்(நுகர்வு)களைத்தான் மாயேயம் என்று குறிப்பிடுவர்.

வேகாத காலாதிகள்,ஞானயோகக் காட்சியால் பதியப்படும் அனுபவம் என்பதும் தவறு.வேகாத காலாதி கண்டு கொண்டு விளைய விளைவிக்கும் தொழிலே மெய்த்தொழில் என்று பாடலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.கண்டு என்பது மெய்ஞ்ஞானத்தால் கண்டு எனப்பொருள் கொள்ள வேண்டும்.

சாகாநிலையைப் பெற்ற சுத்த தேகிகள் மட்டுந்தான் ஐந்து மலத்தையும் வென்ற பூரண வல்லபர் ஆவார்கள்.

சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனலைப் பற்றி நான் ஏற்கனவே இந்த வலைதளத்தில் சுருக்கமாக விளக்கி யுள்ளேன்.வணக்கம். வாழ்க.
Sunday, May 1, 2016 at 15:55 pm by Damodaran Raman
narayani julu
அய்யா எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடிப்பீர்களோ. தாங்கள் தனியாக கட்டுரை எழுதி விளக்குங்கள். திருமதி ஏபிஜெ அவர்கள் கட்டுரையில் சொல்லிருப்பது; எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம் உண்மை அன்பு உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகா கல்வியை தெரிவிக்கும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் இம்மூன்றும் ஞான யோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர்.” அவ்வளவே. தாங்கள்;”வேகாத காலாதிகள்,ஞானயோகக் காட்சியால் பதியப்படும் அனுபவம் என்பதும் தவறு என்கிறிர்கள்’.ஆனால் வரிகள் அனைத்தும் உ.ந.பகுதியில் பக்கம் 440 ல் உள்ளதை தந்துள்ளார்கள். உள்ளது உள்ளபடியே தந்துள்ளவரே ஏபிஜெ அருள். உங்கள் கருத்துக்கள் எங்கள் வள்ளற்பெருமான் கருத்துக்களிடமிருந்து வேறுப்படுகிறது. இதில் பதில் அளிக்க வேண்டாம். தனியாக கட்டுரை எழுத வேண்டுகிறேன். அன்புடன் வேண்டும் உங்கள் வாசகி நாராயணி.
Friday, May 6, 2016 at 03:40 am by narayani julu
Damodaran Raman
டாக்டர் நாராயணி ஜுலு அவர்களே,கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்வது சரியாகாது. வள்ளலார் உரைப்பகுதியில் உள்ளது உள்ளபடி என்ன எழுதப் பட்டுள்ளன?
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் பற்றிய உபதேசக் குறிப்பில் என்ன கூறப்பட்டுள்ளன?ஆ.பா.பதிப்பில் உள்ளது வருமாறு.
47.மேற்குறித்த மூன்றும் பரமார்க்க மாகிய யோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள்.

42.அவைகளின் உண்மைப் பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம்.ஆகையால் இவை யோக அனுபவங்களே யென்று அறிய வேண்டு மென்பது இதே தலைப்பில் உள்ள வேறொரு குறிப்பு.

எனவே நீங்கள்தான் வள்ளலார் கூறாததைக் கூறிவிட்டு அதனை எங்கள் வள்ளலார் கூறிய கருத்து என்றால் என்றால் நீங்கள் உரிமை கொண்டாடும் வள்ளலார் யார்?
நீங்கள் குறிப்பிடும் வள்ளலார் உரைப்பகுதியில் உள்ளது எந்த வள்ளலாரின் உரைப்பகுதி?அது எங்கே உள்ளது?
மீண்டும் ஒருமுறை உரைப்பகுதி கூறுவதைக் கவனிக்க.
பர மார்க்கமாகிய யோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள்.இன்னொரு குறிப்பில் யோக அனுபவங்கள் எனப்படுகிறது.
ஆனால் எபிஜெ என்ன கூறுகிறார்?எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம்,உண்மை அன்பு,உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகாக்கல்வியைத் தெரிவிக்கும் சாகாத்தலை,வேகாக்கால்.போகாப்புனல் இம்மூன்றும் ஞானயோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர் என்பது எபி ஜெயின் சொந்தக் கருத்தாகுமே யன்றி ஒருபோதும் வள்ளலார் கருத்தாகாது.பக்கம் 440-இல் உள்ளதை அப்படியே முடிந்தால் பதிவு செய்து உங்கள் வள்ளலாரின் கருத்தைத் தயவு செய்து உறுதி படுத்துங்கள்.
பரமார்க்கம் என்றால் என்ன?யோகக் காட்சி என்றால் என்ன?யோகானுபவங்களை விளக்க முடியுமா?
ஞானயோகம் என்றால் என்ன?வேகாத காலாதிகள் ஞானயோகக் காட்சியால் எப்படிப் பதிவு செய்யப்படும்?பதியப்படுவது வேறு.அனுபவிக்கப்படுவது வேறு.அனுபவம் என்பது தானே அழுந்தி அறியப்படும் ஒன்று.அனுபவத்தைப் பிறவற்றால் ஒருவரிடம் பதிக்க முடியாது.
Friday, May 6, 2016 at 12:50 pm by Damodaran Raman
thiruma valavan
http://valavan-teentonic.blogspot.com/2016/05/arutperunjothi.html. வள்ளளாரின் வார்த்தைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
Friday, May 6, 2016 at 16:17 pm by thiruma valavan
narayani julu
அய்யா ஏபிஜெ அருள் வள்ளலார் விளக்கம் என்று தரவே இல்லை. மற்ற நூல்களிலிருந்து என்று தான் சொல்லியுள்ளார்கள். அந்த நூல் புதுக்கோட்டை ஜக நாதன் அய்யா நூல் ஆகும். போன் மாச பூசத்தில் தான் வடலூரில் வாங்கினேன். நீங்களும் ஒரு விளக்கம் தருகீறீர்கள். நன்றி. ஆனால் வள்ளலார் பாடல் தந்துள்ளார்கள். உங்களைப் போல் ஒரு அறிஞர் புதுக்கோட்டை திரு ஜெகனாதன் என நினைக்கிறேன். அவர் தான் பதில் தர வேண்டும். தருவார் என நினைக்கிறேன். மேலே உள்ள வரிகள்:””வேகாக்கால்.போகாப்புனல் இம்மூன்றும் ஞானயோகக் காட்சியில் பதிந்து”” இது வள்ளலாரின் வார்த்தை இதற்கும் மறுப்பா? ஒன்றும் புரியவில்லை. எங்கள் வயது உங்களின் வயதில் பாதிக்கும் கீழே இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவாவது முயற்ச்சிக்கிறார்களே என சந்தோசம் அடையாமல் இப்படியா அடுத்தவர் கட்டுரையில் அநாகரிகமாக சாடுவது உங்கள் வயதுக்கு சரியா அய்யா. தனியாக எழுதுங்கள் நன்றி கூறி படிக்கிறோம். நன்றி.
Sunday, May 8, 2016 at 03:15 am by narayani julu
Damodaran Raman
யாரும் யாரையும் சாட வில்லை.நான் வள்ளலார் உரைப்பகுதியின் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கூறியுள்ளேன்."சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் இம்மூன்றும் ஞான யோகக் காட்சியில் பதிந்து" என்பது எங்கு எதில் உள்ளது என்பதைத் தெளிவு படுத்துங்கள்.
Sunday, May 8, 2016 at 07:29 am by Damodaran Raman
narayani julu
உங்கள் வரிகள்:”சாகாத்தலை,வேகாக்கால்.போகாப்புனல் இம்மூன்றும் ஞானயோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர் என்பது எபி ஜெயின் சொந்தக் கருத்தாகுமே யன்றி ஒருபோதும் வள்ளலார் கருத்தாகாது.” தயவு செய்து 129 பாராவில் உபதேசக்குறிப்பை பார்க்கவும்: அதில்: “மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள்.’’”...அவைகளினுண்மைப் பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களே யென்று அறியவேண்டும்.”- வள்ளலார். அய்யா எங்களிடம் ஏபிஜெ அருள் முழு நம்பிக்கைப்பெற்றுள்ளார்கள். ”கண்டிப்பாக வள்ளலாரின் சத்தியவாக்கியத்தினை உள்ளது உள்ளபடியே தருதல் வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் ஒழுக்கம் நிரப்பி,சுத்த சன்மார்க்க நெறியுடன் உள்ளழுந்தி சிந்தித்துப் பார்க்க வேண்டும். வள்ளலாருக்கு அறிவித்த வண்ணம் நமக்கும் ஆண்டவர் தெரிவிப்பார் என்பதை சத்தியமாக நம்புதல் வேண்டும் என ஒரு கட்டுரையில் தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.” இதன் அடிப்படையில் தான் இன்று அவரின் கட்டுரைகள் பல நூறு வாசகர்களை பெற்று முதன்மை இடத்தில் உள்ளார்கள். இது யாருக்கும் கிடைக்காத பேறு ஆகும். தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். மேலும்; எவர் ஒருவரிடம் உண்மை இரக்கம்,உண்மை அன்பு,உண்மை அருள் அமையப் பெறுகிறதோ அவரிடம் சாகாக்கல்வியைத் தெரிவிக்கும் சாகாத்தலை,வேகாக்கால்.போகாப்புனல் இம்மூன்றும் ஞானயோகக் காட்சியில் பதிந்து அனுபவம் பெறுவர்” இதில் என்ன தவறு உள்ளது?. முதலில் இதைஉண்மை இரக்கம்,உண்மை அன்பு,உண்மை அருள் பெறாமல் எதையும் பெறமுடியாது என்பது கூட...??? மன்னிக்கவும். என்னை விட்டு விடுங்கள். அய்யா உங்கள் வயதுக்கு வணங்குகிறோம்.
Monday, May 9, 2016 at 04:13 am by narayani julu