சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், தூத்துக்குடி
தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழா
1.8.08 – 3.8.08 (மூன்று நாள் நிகழ்ச்சிகள்)
தூத்துக்குடி நகரில் மில்லர்புரம் நீச்சல்குளம் அருகே “வள்ளலார் நந்தவனம்” என்னும் இடத்தில் சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நடத்தும் அன்பர்கள் வருடா வருடம், சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்தும் வழக்கத்தினை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தொடங்கி, நடத்தி வருகின்றனர்.
2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி (முதலாம் ஆண்டு நிகழ்ச்சி)
கடந்த ஆண்டு, இந் நிகழ்ச்சி, 11.8.2007 மற்றும் 12.8.2007 ஆகிய நாட்களில், தூத்துக்குடி மில்லர்புரம் திருமந்திர நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது சென்னையில் வசித்த ராமானுஜம் மற்றும் மதுரையில் இருந்து தயவு விஜயராமன் ஆகியோர் இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து சுத்த சன்மார்க்க உரை நிகழ்த்தினர்
இந் நிகழ்ச்சியில் சுமார் 60 சன்மார்க்க அன்பர்களும், வள்ளலார் நந்தவனத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்துப் பயன்பெற்றனர். 2 நாட்களும் கலந்து கொண்டோருக்கும், ஏழை மக்களுக்கும், சிறப்பாக அன்னம் பாலிக்கும் பணி நடைபெற்றது.
அந்த வகையில், நடப்பு 2008ஆம் ஆண்டில் இந்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அலுவல் சார் குழுவினர், 1.8.2008 (வெள்ளிக்கிழமை மாலை) முதல் 3.8.2008 (ஞாயிற்றுக்கிழமை) வரை தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழாவினை (இரண்டாம் ஆண்டு தொடக்க விழா) அதே போன்றதொரு கூட்டத்தினை நடத்துவதற்குத் திட்டமிட்டனர். இவ் விழாவினை, அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் உள்ள சாது சிவா சுவாமிகள் ஆசிரமத்தில் நடத்துவதற்கு முதலில், முடிவு செய்தனர். அதையே எண்ணி. அனைவருக்கும் தகவல் தந்து விட்டனர்.
ஆனால், பாபநாசத்தில், ஆண்டு தோறும் ஆடி அமாவாசை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதால், அதில் கலந்து கொள்வதற்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான அன்பர்கள் அங்கு வரும் சூழ்நிலையில், இந் நிகழ்ச்சியை சாது சிவா சுவாமிகள் ஆஸ்ரமத்தில், சிறப்பாக நடத்த முடியாது எனக் கருதி, பின்னர், பாபநாசம் நகருக்கு வெகு அருகாமையில் (நடை தூரத்தில்) உள்ள விக்கிரமசிங்க புரம் உலகாம்பிகை திருமண மண்டபத்தில் நடத்துவதற்கு முடிவு செய்தனர். அனைத்து அன்பர்களுக்கும், முன்கூட்டியே, இத் தகவலையும் தெரிவித்து விட்டனர்.
சாது சிவா சுவாமிகள், வருடந்தோறும் அவர்களது ஆஸ்ரமத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னம் பாலிக்கும் பணியை இந்த ஆடி அமாவாசை நாளில், மேற்கொள்வதால், அவர்கள் தமது பணியை செய்வதற்கு வசதியாக, அவர்களிடமும் தெரிவித்து விட்டு, குறிப்பிட்ட இந் நிகழ்ச்சியை அருகே உள்ள உலகாம்பிகை திருமண மண்டபத்தில் மேற்கொண்டனர்.
1.8.2008 (வெள்ளிக்கிழமை)
இந் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கெனதஞ்சாவூர், திண்டுக்கல், வடலூர். சின்னாளப்பட்டி, விழுப்புரம், கும்பகோணம் கோயம்புத்தூர், நாராயணபுரம் (மதுரை), ஐயர் பங்களா (மதுரை) திருப்பரங்குன்றம், திருப்பூர், பெங்களூர் (அன்பரசன்), பட்டி வீரன்பட்டி (திண்டுக்கல்), பெருங்குடி (மதுரை), சென்னை, புதுச்சேரி மாநிலம் சாகாக்கல்வி பத்திரிகை நடத்தும் ஆசிரியரின் குழுவில் உள்ள அன்பர், தூத்துக்குடி, திருநெல்வேலி முதலான இடங்களில் இருந்தும் அன்பர்கள் பெருமளவில், மாலை சுமார் 4.00 மணி முதலே திருமண மண்டபத்தில் குவியத் தொடங்கினர்.
இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த அன்பர்கள், தங்குவதற்கு திருமண மண்டபத்தில் மையப் பகுதியும், பெண்களுக்கு தனி அறைகளும், அந்த திருமண மண்டபத்தில் இருந்த மேல் மாடியில் உள்ள அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. எனவே, வெளியூரில் இருந்து வந்த அன்பர்கள், எவ்வித சிரமுமின்றித் தங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழா அறிவிப்பு பேனர்கள், திருமண மண்டபத்தின் முகப்பில் தொங்க விடப்பட்டன.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் மதுரை தயவு விஜயராமன், அனைவரையும் வரவேற்றார்.
பின்னர், திரு அருட்பா பாடல்களை, அன்பர்கள் அனைவரும் பாடினர். இதில் குறிப்பாக, அருட்பா திரு ரங்கநாதன் அவர்கள், திரு அருட்பா பாடல்களை நல்ல இசையுடன் பாடினார். அதேபோல், மதுரை திரு ஹரி கோவிந்தன், திருப்பரங்குன்றம் திருமதி அம்மாக்கண்ணு, சங்கீத சிரோமணி, திருமுறை இசைவாணி திருமதி G.S. கோமதி நாராயணன் ஆகியோர், திரு அருட்பா பாடல்களை, மனமுருகப் பாடி, வந்திருந்த அன்பர்களை, மிகவும் பரவசப் படுத்தினர்.
சின்னாளப்பட்டி சன்மார்க்கப் பெரியோர் திரு வி.பி.ஷண்முகம் அவர்கள் திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் அருட் கருத்துக்களை, புத்தக வடிவில் ஆக்கம் செய்து, கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வினியோகித்து, அதனை அனைவரும் அறியும் வண்ணம் வாசித்து, அதன்பின்னர், சத் விசார நிகழ்ச்சி நடத்தி, வந்திருந்த அன்பர்களின் விசார அறிவினைப் பெருக்கும், பெரும் தொண்டினைச் செய்தார்.
மலேசியாவில் சுங்கப்பட்டானியில் இயங்கி வரும் அருட்ஜோதி நிலைய அன்பர் டாக்டர் திரு விநாயக மூர்த்தி அவர்களும், இ.மெயில் மூலம் சன்மார்க்க விரிவுரையாளர் திரு தர்மலிங்க சுவாமி அவர்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் பாபநாசம் நகரில், அன்னதானப் பணி மேற்கொண்டிருப்பதைத் தெரிவித்தார். மலேசியாவில் உள்ள சில அன்பர்களுடன் உடன் வந்து, திரு தர்மலிங்க சுவாமி இப் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் டாக்டர் திரு விநாயக மூர்த்தி அவர்கள், நாராயணபுரம் சன்மார்க்க அன்பருக்கு இ.மெயில் மூலம் தகவல் தந்திருந்தார். இவ் விபரம், நிகழ்ச்சி நடத்தும் ஒருங்கிணைப் பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
. மலேசியாவில், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, வெகு எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில், சொற்பொழிவு நிகழ்த்தி வரும் திரு தர்மலிங்க சுவாமி அவர்கள், பாபநாசத்திற்கு வந்து இருப்பதால், அவரையும், இந் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய வேண்டும் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், திரு கலியுக வரதனும் திரு கணேசனும் விரும்பினர்.
எனவே தர்மலிங்க சுவாமி அவர்களிடம் இங்கு 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்துச் சொல்வதற்கும், இந் நிகழ்ச்சியில் அவரும் பங்கு கொண்டு, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை கலந்து கொண்டுள்ள அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்தியம்ப வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்கும், திண்டுக்கல்லில் இருந்து வந்திருந்த தயவு விசுவநாதனையும், மதுரை நாராயணபுரத்தில் இருந்து வருகை புரிந்த சன்மர்க்க அன்பர் ஒருவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு கலியுக வரதனும், திரு கணேசனும் அனுப்பி வைத்தனர்.
அவர்கள், பாபநாசம் சேனைத்தலைவர் 3வது மண்டகப்படியில் அன்னதானப் பணி மேற்கொண்டிருந்த திரு தர்மலிங்க சுவாமிகளை நேரில் சந்தித்து, அருகாமையில், தூத்துக்குடி மாவட்ட அன்பர்கள் 3 நாட்கள், சுத்த சன்மார்க்க முகாம் நடத்துவதைத் தெரிவித்து, அம் முகாமில் அவரும் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் எனவும் அதன் மூலம் அந் நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். திரு தர்மலிங்க சுவாமிகளும் அக் கோரிக்கையினை ஏற்று, தமக்கு அன்னதானப் பணி தொடர்ந்து இருந்து வரினும், அன்பர்களின் வேண்டுகோளின்படி, மறுநாள் (2.8.2008) அன்று அந் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதியளித்தார்.
இரவு நிகழ்ச்சி நடைபெற்ற உலகாம்பிகை திருமண மண்டப அரங்கில் உலக சமாதானத்திற்காக, கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அனைவரும் பங்கேற்றனர்.
2.8.2008 (சனிக்கிழமை) காலை சுமார் 5.30 மணி.
அதிகாலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் துவங்கப்பட்டது. அனைத்து அன்பர்களும் இதில் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணி.
சுத்த சன்மார்க்கக் கொடியேற்றம் துவங்கியது. அன்பர்கள் அனைவரும் திருமண மண்டப வாயிலில் உள்ள கொடிக்கம்பத்தில், திரு அருட்பாவில் உள்ள சிற்சக்தி துதி கொடிப்பாட்டினைப் பாடி சன்மார்க்கக் கொடியினை விண்ணை முட்டும் அளவில், உயரப் பறக்க விட்டனர். சன்மார்க்கச் சான்றோர்கள், மதுரை மாவட்ட சன்மார்க்கச் சங்கத் தலைவர், திரு டி.ஆர். ஜவஹர்லால் மற்றும் தூத்துக்குடி தயவுத் திரு அன்பர் கலியுக வரதன், தயவுத்திரு கணேசன், ஆகியோர் இந் நிகழ்ச்சியினை முன்னிலை வகித்து நடத்தி வைத்தனர்.
இந் நிகழ்ச்சி நிரலில், கீழ்க்கண்ட வாசகம் கண்டிருந்தது.
“சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா, தயவு ஜோதி முருகன் அவர்கள், பாபநாசத்தில், சாது சிவா சுவாமிகள் ஆசியுடன், சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் இரண்டு தினங்கள் எல்லோரும் மகிழும்படி சிறப்புற நடத்தி அருளினார்கள்”.
எனவே, இந் நிகழ்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்த இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் ட்ரஸ்ட் நடத்திவந்த திரு ஜோதி முருகன் ஐயாவைப்பற்றியும், அவர் ஆற்றிய சன்மார்க்கப் பணிகளைப்பற்றியும், இவ் விழாவில் பங்கேற்ற அனைவரும் அறிந்து கொள்வதற்கு வசதியாக, அவரது உறவினரான, (மதுரை) நாராயணபுரத்திலிருந்து வந்திருந்த அன்பரைப் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
திரு ஜோதிமுருகனின் சன்மார்க்க பணிகளை அவர் கீழ்க்கண்டவாறு விவரித்தார்.
1) திரு ஜோதிமுருகனின் இயற்பெயர் கனகசபாபதி ஆகும்.
2) அவர், 1937ஆம் ஆண்டு, பரமக்குடியில் பிறந்தார்.
3) தகப்பனார் பெயர் சாமிநாதன். தாயார் ஆறுமுகம் அம்மாள்.
4) ஆரம்பத்தில் செட்டில்மெண்ட் துறையில் அவர் பணி புரிந்தார்.
5) அவருடன் பிறந்தவர்கள், 4 சகோதரர்கள், 6 சகோதரிகள் ஆவர்.
6) மதுரையில் ஷெனாய் நகரில் இருந்த செட்டில்மெண்ட் ஆபிசில் பணி புரியும் போது, 1959ஆம் ஆண்டு வாக்கில், அவர், முருகப் பெருமானின் பேராற்றலால் ஈர்க்கப்பட்டு, தமது உத்யோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு, பெருமானின் பணிகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்துவிட்டு, அவரது அண்ணன் சங்கரன் கோவிலில் இருந்த திரு அய்யாத்துரை என்பவரிடம் சென்றார். பணியிலே முழு ஈடுபாடு கொண்டு செயலாற்றும் இவரது இந் நிலையைக் கருதி, அப்போது மதுரை செட்டில்மெண்ட் ஆபீசராகப் பணிபுரிந்த திரு சஞ்சீவி ஐ.ஏ.எஸ் அவர்கள், இவரது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல், ஒரு சில நாட்களில் அவர் நிலை சீர்பட்டபின்பு, அவரது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள உதவி செய்தார். அதன் பின்னர், தொடர்ந்து செட்டில்மெண்ட் அலுவலகத்திலேயே அவர் பணிபுரியவும், அனைவரும் உதவினர்.
7) அவரது நிலைமையை உணர்ந்த அவரது தமயனார் திரு அய்யாத்துரை உடனடியாக பெண் பார்த்து, அவருக்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஷண்முக லெட்சுமியைத் திருமணம் செய்து வைத்தார்.
8) செட்டில்மெண்ட் துறை ஒரு கால கட்டத்தில், கலைக்கப்பட்ட பின்னர், அவர், தனது பணியை, வருவாய்த் துறையில் தொடர்ந்தார்.
9) அரசுத் துறையில் பணி புரிந்தாலும், இவருக்கு, ஆன்மீகத் துறையில் நாட்டம் மிக அதிகம் இருந்தது. ஒரு கால கட்டத்தில், திரு அருட்பிரகாச வள்ளலாரை தனது குருவாகக் கொண்டார். திரு அருட்பாவினை தனது ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்டார். தொடர்ந்து வடலூர் செல்லும் வழக்கத்தை ஒவ்வொரு தைப்பூசத்திலும் மேற்கொண்டார். முதலில் தாம் மட்டும் சென்றார். ஒரு கால கட்டத்தில், இவருடன் அன்பர்கள் பலரும், வடலூருக்கு செல்லும் வாய்ப்பு இவரால் ஏற்படுத்தப்பட்டது. அங்கு சென்று, அன்னதானப் பணிகளை, பிரதானமாக மேற்கொண்டார். 1970ஆம் ஆண்டில் இவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டார், அந் நிலையிலும், வள்ளற் பெருமானிடமும், திரு அருட்பாவிலும் தீவிர நாட்டங்கொண்டு அதனைப் பயிலலானார். அவர், தனது பெயரை, ஜோதிமுருகன் என மாற்றம் செய்து கொண்டார்.திருவாடானை தேவகோட்டை, கோவில்பட்டி, பரமக்குடி என பல்வேறு இடங்களில் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்தாலும், இராமநாதபுரத்தில் இவர் 1.7.1974 அன்று பணியேற்ற பின், இவரது வாழ்வு புதிய பரிமாணம் பெற்றது. அங்கு எப்போதெல்லாம் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை பரப்பும் வகையில் சொற்பொழிவுகள் நடைபெறுமோ, அதில் எல்லாம், தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதன் முதலில் ராமநாதபுரம் சிவன் கோவிலில் திரு அருட்பா சத் விசாரம் மற்றும் சொற்பொழிவுகளை மேற்கொண்டார். திருவாடானையில் அப்போது வசித்த இவரது தமயனார் திரு அய்யாத்துரை அவர்களும், இவருக்கு, சன்மார்க்கக் கல்வியிலும், ஒழுக்கத்திலும் இருந்த தீவிர நாட்டம் கருதி, தாமே இராமநாதபுரத்திற்கு வந்து சன்மார்க்கச் சொற்பொழி வாற்றினாராயினர். சன்மார்க்கத்தில் தமிழ் நாட்டின் பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வந்த, மூத்த அன்பர்களை அழைத்து வந்து, மற்ற அன்பர்களும் சுத்த சன்மார்க்கத்தின் உயர்வினை அறியும் வண்ணம் அவர்களும், வள்ளல் பெருமான் காட்டிய வழியில், தமது வாழ்க்கையினில் ஈடுபட வேண்டும் என்ற பொது நோக்கில், சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்தார். இவரது இப் பணியால், ராமநாதபுரத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சுத்த சன்மார்க்க நெறி, வேகமாகப் பரவியது. பல அன்பர்கள், தமக்கு ஏற்படும் சந்தேகங்களை இவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
10)துணை வட்டாட்சியர், பின் வட்டாட்சியர் என்ற பணி உயர்வு அவருக்கு, காலத்தே ஏற்பட்டது. மிகுந்த பொறுப்புனர்வுடன் அவர் வருவாய்த் துறையில் பணி புரிந்ததால், அவருக்கு, தேர்தல் வட்டாட்சியர் பணியிடம் ஒதுக்கப் பட்டது. ஏனைய நிலைகளில் அவர் வட்டாட்சியராக, திருவாடானை மற்றும் பல இடங்களில் பணி ஆற்றியிருப்பினும், தேர்தல் என அரசு அறிவித்து விட்டால், இவரை உடனே, தேர்தல் தனி வட்டாட்சியராகப் பணி மாற்றி, இவர் மூலம், தேர்தல் பணிகளை செவ்வனே ஆற்றுவதற்கு, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
11)துணை வட்டாட்சியர் நிலையில் பணி புரியும் பொழுது, இவர்மேல், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் அருட் பார்வை விழுந்தது. சுவாமிகளின் நூல்களை, பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று, விற்பதை, தமது தலையாய பணியாக அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு தைப் பூச நாளின்போதும், வடலூரில் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களை புக் ஸ்டால் போட்டு, விற்பனை செய்து, அன்பர்கள், பயன்பெற உதவினார். பின்னர், ராமநாதபுரம் நகரில், கேணிக்கரை என்ற பகுதியில் 1991ஆம் ஆண்டில், அன்பர்களின் பேராதவுடன், ஒரு தயவு ஆலயம் கட்டினார். இவரது சுத்த சன்மார்க்கப் பணியை ஊன்றிக் கவனித்து வந்த தயாநிதி திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள், கேணிக்கரையில் கட்டப்பட்ட அந்த தயவு ஆலயத்திற்குத் தாமே வருகை தந்து, திறந்து வைத்தார்கள். அனாதைக் குழந்தைகள் அங்கேயே தங்கிப் படிக்கும் ஒரு நிலையமாக, கேணிக்கரை தயவு ஆலயத்தினை அவர் மாற்றினார்.
12)வட்டாட்சியர் நிலைக்கு மேல், துணை ஆட்சியர் (Deputy Collector Cadre) என பணி உயர்த்தப்பட்டதும், இவருக்கு, வடலூருக்கு அருகாமையில் உள்ள காடாம்புலியூர் என்ற இடத்தில் இயங்கி வரும் கெம்ப்ளாஸ்ட் என்ற நிறுவனத்தில், வடிசாலை அலுவலராகப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெருமானின் அருட்கருணை தான் தன்னை, இந்த இடத்தில் பணி நியமித்தது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் துதித்து, அடிக்கடி வடலூர் செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். தனது ஐந்து குழந்தைகளையும் அவர்களின் பரி பக்குவத்திற்கேற்ப, காலத்தே திருமணம் செய்து வைத்தார். பின்னர், இவர் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் 1996ஆம் ஆண்டில் இவரது மனைவியார் திருமதி ஷண்முக லெட்சுமி காலமானார்..
13)அதன் பின் இவர் முழுமையாக தன்னை, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் பாதையில் ஈடுபடுத்திக் கொண்டார். தைப்பூச நாட்களுக்கு, வடலூர்ப் பெருவெளியில், ஏழைகளுக்கு அன்னம் பாலிப்புப் பணியினை அன்பர்களின் உதவியினைப் பெற்று, மிகுந்த சிரமத்துடன் மேற்கொண்டு வந்தார். அடிக்கடி, வடலூர் சென்று வந்ததன் மூலம், வடலூரில், தர்மச்சாலை செல்லும் வழியில், ஒரு தங்கல் மனையினை அன்பர்களின் உதவியுடன் கிரையம் பெற்றார். அங்கு, தமிழகம் மற்றும் வேற்று மாநிலங்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராயினும், அல்லது, வேற்று நாட்டவராயினும் வந்து, வள்ளல் பெருமானின் கொள்கைகளை அறிவதற்காகத் தங்கிச் செல்வதற்கு, வசதிகளை, இந்தக் கட்டிடத்தில் ஏற்படுத்திக் கொடுத்தார்.
14)இராமநாதபுரம் சிவன் கோவில் பின்புறம் இருந்த நூலகக் கட்டிடம் ஆன சேஷாத்திரி மெமோரியல் ஹால் உபயோகமற்றுக் கிடந்ததைக்கண்ணுற்ற அவர், அதன் நிர்வாகிகளான, வக்கீல் திரு சடகோபனின் உதவியை நாடினார். இவரது சன்மார்க்கப் பணிகளையும், வள்ளல் பெருமானின் மேல் இவர் கொண்ட அலாதி அன்பினையும் கேள்விப்பட்ட வக்கீல் திரு சடகோபன், அக் கட்டிடத்தை உயிர்ப்பிப்பதற்கு, இவரே தேர்ந்த நபர் என எண்ணி, வாடகைக்கு அதனை, திரு ஜோதிமுருகனிடம் ஒப்படைத்தார். அங்கு, ஆதரவற்ற முதியோர்களைப் பராமரிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தார்.
15)வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கையினை எல்லா நாடுகளுக்கும் பரப்ப வேண்டும், இவ் வுலகில், மனித உடல் கொண்ட அனைத்து ஜீவர்களும் பயன்பெற்று, இறவா நிலையினை அவர்களும் அடைய வேண்டும் என்ற அவாவினை இவர் கொண்டிருந்த வேளையில், சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த அன்பர் திரு சிவக்குமாரின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. இருவரும் இணைந்து, www.vallalar.org என்ற இணைய தளத்தினைத் துவக்கி, வள்ளல் பெருமானின் திரு அருட்பா, உபதேசப் பகுதிகள், சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய ஆன்றோரின் நூல்கள் பலவற்றை, இந்த இணைய தளத்தில் இடம் பெறச் செய்தார். இந்த இணணய தளத்தின் வயது, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். இந்த இணணய தளத்தின் மூலம், இந்த நில உலகத்தின் எந்த மூலையில் உள்ள நபரும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், திரு அருட்பாவின் ஆறு திருமுறைகளையும், இலவசமாக பெற்றுக் கொள்ள (free downloading) வழி வகுத்துக் கொடுத்தார்.
16)இராமநாதபுரம் வட்டத்தில், கடற் கரையிலேயே அமைந்த கிராமம், ஆத்தாங்கரை ஆகும். அங்கு வசிக்கும் திருமதி காளியம்மாள் என்பவர், தாம், அந்த ஊரில், சொந்தச் செலவில், முருகன் கோயிலைப் புதுப்பித்து, அவ் விசேஷத்தில் கலந்து கொள்ளும்படி இவரை அழைத்திருந்தார். அங்கு சென்ற இவர், அருகே சிதிலமாகிக் கிடந்த ஒரு கட்டிடத்தைப் பார்க்க நேரிட்டது. அது குறித்து விசாரித்த போது,. ராமநாதபுரம் ராஜா அவர்களுக்குச் சொந்தமான கட்டிடம் அது என தெரிய வந்தது. உடனே, ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் அவர்களை நாடி, இக் கட்டிடத்தை சன்மார்க்கப் பணி மேற்கொள்வதற்காக கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இராமநாதபுரத்தில், இவரது சன்மார்க்கப் பணிகளைப் பற்றிக் கேள்வியுற்ற திவான் அவர்களும், அக் கட்டிடத்தை வாடகைக்குக் கொடுத்து, அதனை சீரமைக்கும் பொறுப்பை இவரே மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அன்பர்களின் உதவியுடன், பாழடைந்த அந்த கட்டிடத்தை அதன் ரூபத்தையே, வெகு விரைவிலேயே மாற்றி, கூடுதல் கட்டிடங்கள் எழுப்பி, அங்கு நிரந்தரமாக அன்பர்கள் தங்கி, பணியாற்றும் விதத்தில், ஏற்பாடு செய்தார்.
17)ராமேஸ்வரத்திற்கு, பல வடநாட்டு அன்பர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்வதைக் கேள்விப்பட்டு, அவர்களும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்கக் கருத்துக்களைத் தெரிந்துகொண்டு, வாழ்வில் இன்புற வேண்டும் எனக் கருதியவராக, அந்த ஊர் முழுவதும் சுற்றி வரலானார். அங்கு, ராமநாதசுவாமி கோவிலின் மேற்கு கோபுர வாசலின் அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமான, ஒரு கட்டிடம் உபயோகிப்பிப்பார் அற்றுப் பாழடைந்து கிடந்ததைக் கண்ணுற்றார். சமஸ்தானம் திவானை அணுகி, அந்தக் கட்டிடத்தையும் வாடகைக்குப் பெற்றார். அங்கு ஞான சபையை ஏற்படுத்தினார். அந்தப் பகுதியில், அனாதரவாக உள்ள மாணவர்கள் சுமார் 10 பேர் வரை தேர்வு செய்து, அவர்கள் தங்குவதற்கும், அவர்களுக்கு உணவும் உடையும், உறையுளும் கொடுத்தார். இந்த இடத்தில் தனது தமயனார் சோமசுந்தரம் என்பவரை, கோயம்புத்தூரை அடுத்த சூலூரில் இருந்து வரவழைத்து, இந்த மையம் செம்மையுடன் செயல்பட வைத்தார். வெளி நாட்டினரும், வட இந்தியர்களும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் அன்பர்கள், இந்த ஞான சபைக் கட்டிடத்திற்கு வந்து, திரு அருட்பா மற்றும், சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய நூல்களை வாங்கிப் போய்ப் படித்து இன்புறுவதற்கு வழிவகை செய்தார்.
18)ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில், வருடந்தோறும் பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு சுற்று வட்டாரத்திலிருந்தெல்லாம் குடும்பத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, இவ் விழாவில் பங்கேற்பர். அவர்களுக்கெல்லாம், வண்டிக்காரத்தெருவில் அமைந்திருந்த சவுராஷ்ட்ரா சத்திரத்தில், வருடந்தோறும் 2 நாட்கள் பசியாற்றுவித்தல் பணியை மேற்கொண்டார். அதனை அடுத்து ஒரு கட்டிடம் வெகு நாட்களாக, யாருமில்லாமல் கிடந்ததைக் கண்ணுற்று, சம்பந்தப்பட்டவர்களை அணுகி, அதனை வாடகைக்குப் பெற்று, அதில், அனாதரவாக உள்ள பெண் குழந்தைகளைத் தங்க வைத்து, பயில வைத்தார். அங்கு பகல் வேளைகளில், வேனிற் காலங்களில், மோர் வினியோகம் செய்து, சுற்று வட்டாரத்திலிருந்து வரும் கிராமத்து மக்களுக்கு தாகசாந்தி செய்தார்.
19)ராமநாதபுரம் வட்டத்தில் 16 கி.மீ. தூரத்தில் உள்ள திரு உத்திர கோச மங்கை என்னும் கிராமத்தில், மாணிக்க வாசகர் பாடல் பெற்ற ஒரு சிவஸ்தலம் இருந்தது. அங்கு, நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரபலமானது. சுற்று வட்டாரத்திலிருந்து மக்களெல்லாம் இவ் விசேஷத்தில் பங்கு கொள்ள இங்கு குடும்பத்துடன் வருகை தருவர். அங்கும் ராமநாதபுரம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஒரு கட்டிடம் பழுது பட்டு பாழடைந்து கொண்டிருந்ததைக் கண்ணுற்று, திவானை அணுகி, குத்தகைக்குப் பெற்று, அக் கட்டிடத்தை புனருத்தாரணம் செய்து, அங்கு நித்திய தீபத்தை ஏற்று, அனைவரும் வழிபடச் செய்தார். வருடா வருடம் ஆருத்ரா தரிசனத்துக்கு வருகை தரும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும் 2 நாட்களுக்கு அன்னம் பாலித்துப் பசியாற்றுவித்தல் பணியை மேற்கொண்டார்
இவரது இத்தகைய அருட் பணிகளால், சிதிலமாக (செத்துக் கிடந்த) கட்டிடங்கள் எல்லாம் உயிர்பெற்றுப் புதுப் பொலிவு பெற்றன.
20)வருடந்தோறும், திரு உத்திர கோச மங்கை மற்றும் நயினார்கோவில் ஆகிய இடங்களில், தம்மிடம் தங்கிப் படித்து வரும் மாணவர்களின் உதவியுடன், வருடந்தோறும் உழவாரப் பணி செய்து பொதுமக்களுக்குப் பணி ஆற்றினார்..
21)வெளிநாடுகளான சிங்கப்பூர், சுங்கப் பட்டாணி (மலேசியா) ஆகிய நாடுகளில் சுத்த சன்மார்க்கக் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவாற்றினார்.
22)இலங்கையின் வடமேற்குப் பகுதி ஜாஃப்னா அருகே உள்ள சாவகச்சேரியில் , அளவெட்டி சன்மார்க்க அன்பர் திரு கேத்தீஸ்வரன் – விஜயலக்ஷ்மி தம்பதியருக்கு, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் ஆசி கிடைத்ததும், அங்கு சத்திய ஞானக் கோட்டம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார். 3 முறை இலங்கைக்குச் சென்று, அந்த கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து, உரிய ஆலோசனைகளை திரு கேத்தீஸ்வரனுக்கு வழங்கினார். கடைசி முறையாக, இறுதிப் பணிகள் மற்றும், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு, கல்வித்துறை மூலம், பண்ணிசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு அங்குள்ள ஆன்மீகப் பெரியோர்கள் ஆகியோர்க்ளையும் சந்தித்து, முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 2006 ஏப்ரல் மாதத்தில் 12ந் தேதி அங்கு, திரு கேத்தீஸ்வரனுடன் சென்றபோது, வவுனியா பகுதிகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்து, வெளி நாட்டவர்களுக்கு, தரை வழி மார்க்கத்தில் (by road) செல்ல அரசாங்கத்தின் (to get special permission from the Govt.) அனுமதியினைப் பெற்று வரவேண்டும் எனச் சொல்லித் திருப்பி அனுப்பினர். அச் சமயம், கேத்தீஸ்வரனின் உறவினர்கள், நீர்கொழும்பு பகுதியில் வசித்து வந்ததால், அங்கு 2 நாட்கள் தங்கி, சில பணிகளை பார்த்தார். அதன் பின்னர், வான் வழியில் செல்வதற்கு அனுமதிப்பது தெரிந்து, ரட்னமாலா மிலிட்டரி ஏர்போர்ட் மூலம், பலாலி மிலிட்டரி ஏர்போர்ட் அடைந்து, அதன் பின்னர், கடுமையான மிலிட்டரி சோதனைகளையும் தாண்டி, சாவகச்சேரி சென்று, கிட்டத்தட்ட 13 நாட்கள் அங்கே இருந்து அவ் அருட் பணிகளைப் பார்த்து விட்டு, 27.4.2006ந் தேதி, இந்தியா வந்து சேர்ந்தார். இது அவரது வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக அமைந்தது.
23)தமிழ்நாட்டில், பல சன்மார்க்கச் சங்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருந்தார். பல அன்பர்கள், தமது ஊர்களில், சன்மார்க்க சங்கங்கள் துவக்க விழாவிற்கு, இவரை அழைத்து சென்று சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு ஊன்றுகோலாக இருந்தார்.
24)மதுரையில் ஐயர் பங்களா என்ற இடத்தில், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருமதி சுந்தராம்பாள் என்ற சன்மார்க்க அன்பர் கட்டிய சத்திய ஞான சபைத் துவக்க விழாவில், சொற்பொழிவாற்றினார்.
25)புதுக்கோட்டை மாவட்டம், காடவராயன்பட்டி என்ற ஒரு கிராமத்தில், அன்பர் செல்வி சந்திரா என்பவர், சன்மார்க்க சங்கம் துவங்கியதை, நெறிமுறைப்படுத்தி, இப் பணியில் அவரை தீவிரமாக ஈடுபடுவதற்குக் காரணமாக இருந்தார்.
26)திருவண்ணாமலையில், அன்பர் திரு கலைநம்பி அவர்களது கட்டிடத்தில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் துவக்கினார். அதன் பின்னர், அவர், அடி அண்ணாமலைக்கு அருகே ஒரு புதிய சத்திய ஞான சபை அமைக்கும் ஆரம்பப் பணிகளில் இவர் தீவிரமாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
27)இவரது இத்தகைய நிலையினைக் கண்டு, சுத்த சன்மார்க்கத்தில் இவர் வாழ்வில் அடைந்த உயர்வினை, கீழக்கரைக் கல்லூரியிலிருந்தும், மதுரை வள்ளலார் – காந்தியியல் தத்துவத் துறையிலிருந்தும். பல மாணாக்கர்கள், வந்து பயின்று பி.எச்.டி பட்டம் பெறுவதற்கு, இவரது வாழ்க்கையினையே ஆதாரமாக எடுத்துக் கொண்டனர்.
28)ஆத்தாங்கரை சத்திய ஞான சபையில். வருடந்தோறும், சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாமை, இவர், பெரும் முயற்சி மேற்கொண்டு, நடத்தினார். திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சியினை இங்கு நடத்தினார். தமிழ் நாட்டில் உள்ள ஏனைய சன்மார்க்கச் சான்றோர் முதலானோர்களை, இந்த வாழ்வியல் பயிற்சி முகாம்களுக்கு வரவழைத்து, சொற்பொழிவுகளை, அன்பர்கள் கேட்கும் வாய்ப்பினை ஏற்படுத்தினார். இது போன்ற நிகழ்ச்சிகளை, தமிழ் நாட்டில் உள்ள ஏனைய சங்கங்களும் நடத்துவதற்கு, இவரே ஒரு காரண கர்த்தாவானார். தனக்கென வாழாப் பிறர்க்குரியாராக, இவர் தமது வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.
29)24.1.2007 அன்று, திருவண்ணாமலை ஞானசபை கட்டும் பணியை மேற்கொண்டுவிட்டு, வடலூரை நோக்கிச் சென்றார்.
அன்று இரவு ராமநாதபுரம் தங்கல் மனையில் தங்கினார். தமது பணிகளை மேற்கொண்டுவிட்டுக் கண் அயர்ந்தார்.
வடலூரில் உயிர் அடக்கம் பெறும் வெளி நபர் யாரையும் அங்கு அடக்கம் செய்வதை, அங்குள்ள மக்கள் அனுமதிப்பதில்லை என்பது, கடந்த காலச் சரித்திரம் ஆகும்.
ஆனால், இவரது தொடர் பணிகளை உற்றுக் கவனித்து வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இனி மேலும் இவரை அலைய விடாமல் சும்மா இருக்கும் சுகத்தைக் கொடுக்க எண்ணினாரோ என்னவோ, வடலூரில், இவரை ஆட்கொண்டார்.
ஏனையோருக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெரும் பாக்கியம், இவர், வடலூரில், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஆட்கொள்ளப் பட்டதாகும்.
இவரது அருட்பணிகளால், தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பல அன்பர்கள், தென் தமிழ் நாட்டின் கடைகோடியான ராமநாதபுரத்தைத் தேடி வந்து சுத்த சன்மார்க்கம் பயின்று சென்றனர்.
ஏற்கனவே அவர் விரும்பியிருந்தபடி, ஆத்தாங்கரையில், கடற்கரை ஓரத்தில், அமைதியான சூழ்நிலையில், உள்ள சத்திய ஞான சபையில், இயற்கை விளக்கம், இயற்கை உண்மை பெருங்கடவுள் சந்நிதியில் இவரது உடல், சமாதி செய்யப்பட்டது. திண்டுக்கல் தயாநிதி சரவணானந்தா அவர்களின் ஆசியினைப் பெற்ற இவர், தயவு நெறியினைப் பரப்புவதில் மிகச் சிறந்து விளங்கினார். வள்ளல் பெருமானின் வாழ்க்கைக்கும், ஜோதிமுருகன் வாழ்க்கைக்கும் பலவகைகளில் ஒற்றுமை உண்டு. பெருமான், தருமச் சாலை, சங்கம், சத்திய ஞான சபை அமைத்து, உலகர் அனைவரும் அருட் பயன் பெற வழி வகுத்துக் கொடுத்தார்.
அதே போன்று, ஜோதிமுருகன் அவர்களும், ராமநாதபுரத்தில், தருமச் சாலை அமைத்து, சன்மார்க்க சங்கங்களை அமைத்து, சத்திய ஞான சபையினையும் அமைத்தார். இவரது வாழ்க்கை உண்மை, யாரைப் போல் அமைந்தது என்பது, இவரை உண்மையில் புரிந்து கொண்டோரைத் தவிர ஏனைய யாராலும் புரிந்து கொள்ள இயலாது.
இவரது அருட்பெரும் பணி, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
அவருக்குப்பின், அவரால் ஏற்படுத்தப்பட்ட 7 சன்மார்க்க நிறுவனங்களிலும் சுத்த சன்மார்க்கப் பணி, தக்க அன்பர்களின் உதவியால், அவரது மகன் திரு ராஜவீர் என்ற பழனி மற்றும் பழனியின் மனைவி, திருமதி ஹரி லக்ஷ்மி ஆகியோரால் செம்மையாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும், திரு ஜோதி முருகன் அய்யாவின் சரிதத்தைக் கேட்டுப் பரவசமடைந்தனர்.
பின்னர், திண்டுக்கல் தயவு அன்பர், விஸ்வநாதன் அவர்கள், இந் நிகழ்ச்சியின் சிறப்பினை விரிவாக எடுத்துரைத்தார். அவர் உரைத்தது, உரைத்தபடி அடியில் கண்டுள்ளது.
இச் சிறப்பு நிகழ்ச்சி, இயற்கைச் சூழலில், பாபநாசத்தில் நடைபெறுவதே ஒரு சிறப்பு. இராமநாதபுரம் ஜோதிமுருகன் அய்யா திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் ஆசியுடன் நடத்திய சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம்களை முன்வைத்து, இது இங்கு நடத்தப் பெறுவது, மிகவும் பெருமைக்குரியது. அவர், திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களையெல்லாம், வெளி உலகம் அறியும் வண்ணம், எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று, விற்பனை செய்து, தயா சன்மார்க்கத்தைப் பரப்புவதற்கு உறுதுணையாக இருந்தார். சுவாமிகளின் நூல்கள் மிக ஆழ்ந்த நிலையில் இருந்து பயில வேண்டியவை ஆகும். சிரநடுச் சிற்றம்பலத்திலே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை சதா காலமும் நமது அகத்திலே நினைத்துக் கொண்டு, நமது புறவியல் காரியங்களை நடத்தி வர வேண்டும். வள்ளல் பெருமான், 1874 ஆம் ஆண்டில் திரிதேக சித்தி பெற்றார்.
தயாநிதி சுவாமி அவர்கள் எழுதிய சுத்த சன்மார்க்க விளக்கப் புத்தகங்கள் அனைத்துமே அருட்பெரும் பொக்கிஷங்கள் ஆகும். அவற்றிலும் சிறப்புக்குச் சிறப்புச் சேர்ப்பது, அருட்பெருஞ்ஜோதி அகவலின் உரை விளக்கமாகும். வள்ளற் பெருமான் சித்தி அடைந்த 100 வது ஆண்டில், திண்டுக்கல் சுவாமி அவர்கள் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம், 1974-ல் பொள்ளாச்சி அய்யா டாக்டர் மகாலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. அந்நந் நூல் வெளிவந்த பின், சுத்த சன்மார்க்கத்தில், மிகப் பெரும் எழுச்சி ஏற்பட்டது. சுவாமிகளைப் பற்றிய செய்தி, அதன் பின்னர், உலகளாவிய அளவில் பரவியது.
இந்த உடலில், ஆன்மா, அழியாத ஒரு ஒப்பற்ற பொருளாகும். உடல் பல பிறவிகள் எடுக்கிறது. ஒவ்வொருவரது உடலில், தலை நடுவே சத்திய ஞான தீபம் விளங்குகிறது. கடந்த 134 ஆண்டுகளாக, அது, அகண்ட தீபமாக எரிந்து கொண்டிருக்கிறது. சுவாமி சரவணானந்தா அவர்கள், 6.4.2006 ம் நாளில், மாதப் பூச நாளில், சித்தி பெற்றார்கள். திரு ஜோதி முருகன் 2007 ஜனவரி இறுதி வாரத்தில் உயிரடக்கம் ஆனார். வள்ளல் பெருமானின் ஆற்றல், திண்டுக்கல் சுவாமிகளின் ஆற்றல், ஜோதி முருகனின் ஆற்றல் ஆகிய அனைத்துமே ஒரு பேராற்றலாகச் சேர்ந்து, இந்த அருமையான கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.
கை புனைந்தியற்றாக் கவின் பெறு வனப்புடன் திகழும் இயற்கைச் சூழல் நிறைந்த பொதிகை மலையின் அருகில் இந்தக் கூட்டம் சிறப்புற நடைபெறுவது, ஒரு சிறப்பு ஆகும்.
சுத்த சன்மார்க்க வரலாற்றில், வள்ளற் பெருமான் அவதரித்த 1823க்குப்பின் . 185 (1823 + 185 = 2008) 2008ஆம் ஆண்டில், இவ்வித நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவதே மிகச் சிறப்பாகும். www.vallalar.org மூலம் இது போன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிவிக்கப் பட்டுக் கொண்டுள்ளன.
சத்திய ஞான சபை அமைப்பின் ரகசியம் முப்பாற் புள்ளியினை மையமாக வைத்து அமைந்துள்ளது. அருட்பெருஞ்ஜோதி மேற்புள்ளி யாகவும் இடது புறம் சிற்சபை யும் வலது புறம் பொற்சபையும் அமைந்து அம் முப்பாற்புள்ளியின் மற்ற இரு புள்ளிகளாகவும் விளங்குகின்றன. தேங்காயில் உள்ளதும், இதே முப்பாற்புள்ளி அமைப்புத்தான்.
கல் தோன்றி முன் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ். 18 சித்தர்கள், 63 நாயன் மார்கள் மற்றும் 12 ஆழ்வார்கள் ஆகியோர் பாடிவைத்த தெல்லாவற்றையும் தொகுத்த சாராம்சம்தான் திரு அருட்பா ஆறு திருமுறைகள் ஆகும். திண்டுக்கல் சுவாமி அவர்கள், வள்ளற் பெருமானின் பெரும்பாலான பாடல்களுக்கு உரை எழுதி சன்மார்க்க உலகுக்குப் பெரும் பணி ஆற்றியுள்ளார்கள். அவர்கள் எழுதிய உரை நூல்களே இன்று, சுத்த சன்மார்க்கத்திற்கு பிரதானமாக அமைந்துள்ளன. அவர்களது நெறியினைப் பரப்புவதில், தூத்துக்குடி சன்மார்க்க அன்பர்கள், திரு கலியுக வரதன். திரு கணேசன், திரு மா.பழனி மற்றும் அவருடன் சேர்ந்து பணி புரியும் பக்குவப்பட்ட அனைத்து ஊழியர்கள் ஆகியோரின் அக நிலை பொருந்திய பணியின் மூலமே, தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம், சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு ஒரு அடிப்படைக் காரணமாகி உள்ளது.
இந்த உடம்பு 3 வகைப்பட்டது. தூல உடல், சூக்கும உடல், காரண உடல் ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியது. இன்று இங்கு நடைபெறுவதும் தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழா ஆக உள்ளது.
கலி ஒழிந்ததற்கு உரிய காலம் 1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் நாள் ஆகும் (1.8.1943 – ஆடி மாதம் 17ந் தேதி – பூச நட்சத்திரம் – அமாவாசை நாள்) கலி முடிவு காலத்தில் மூன்று கிரகங்கள் ஒரு நட்சத்திரத்தின் ஒரே பாதத்தில் வந்து அமையும். பூச நட்சத்திரத்தில், சூரியன், சந்திரன். குரு இம் மூன்றும் அந் நாளில் ஒரே பாதத்தில் வந்து அமைந்தது. திண்டுக்கல் சுவாமிகளுக்கு, அன்று அருட் காட்சி கிட்டியது.
அதனை ஒட்டி, 1.8.2008ம் நாள் இந் நிகழ்ச்சி இங்கே தொடங்கப் பெற்று, 3 நாட்கள் நடத்தப் பெறுவது ஒரு பெரும் சிறப்பு ஆகும். சத்திய ஞான தீபம் ஒவ்வொருவருடைய சிரநடுச் சிற்றம்பலத்திலே ஒளிர்கிறது. வள்ளல் பெருமான், தாம் திருக்காப்பிட்டுக் கொண்டபோது, அன்பர்களுக்கு, தீபத்தைக் கொடுத்து, இத் தீப முன்னிலையில், ஆண்டவர் விளங்குவதாக பாவித்து, வழிபடும்படி சொல்லிச் சென்றார். நால்வகை ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து, சத் விசாரம், பரோபகாரப் பணிகளைச் செய்து வரும்படி அருளினார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், சத்திய ஞான தீபமாக ஒளி வீசிக் கொண்டுள்ளார். இச் செயல் எல்லாம் தயவில் தான் அடங்கியுள்ளது.
அவரை அடுத்து தயவு விஜயராமன் தமது உரையில், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களும், அவர்களை அடுத்து, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவுப் பெரு நெறியும், ஜீவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற பெரு நோக்கில், தூத்துக்குடி அன்பர்கள், இவ் விதம் விழா எடுத்து, அவர் வழி நிற்கின்றார்கள் என்றார்.
(1) இறை (2) இயல் (3) உண்மை என்னும் தலைப்பு, இனி வருகின்ற காலத்திற்கெல்லாம் பொருந்தி வருகிறது,. 3 நாட்களாக இப் பயிற்சி முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. த - ய – வு மூன்று எழுத்துக்களாக உள்ளது. 1.8.1943 அன்று அண்டத்திலும் பிண்டத்திலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களுக்கு இந்த நாள் மிகப் பெரிய நிலையினைக் கொடுத்தது. வள்ளலார், சித்திரை நட்சத்திரத்தில் வருவிக்க உற்றார். அவரது பிறந்த நாள் 5.10.1823 ஆகும். தமிழ் சித்தர்கள், தீர்க்க தரிசனமாக, அன்றே சொல்லிச் சென்ற தகவல் இன்னும் 120 ஆண்டுகளில் பெரிய நிகழ்வு ஒன்று நிகழும் என்பது ஆகும். அதன்படி பார்த்தால், 1823+120=1943. இந்த ஆண்டில் திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளுக்கு 1.8.1943 அன்று மிகப் பெரிய நிலை கிடைத்து அன்று முதல் தயவு என்ற சொல் அவ்ர்களுக்கு வழங்கப்பட்டு, தயவுப் பாக்கள் என்றும், தயவுப் பெரு நெறி என்றும், தயவுக் குறள் என்றும் பல்லாயிரக்கான பாடல்களும், உரைநடை நூல்களும் வெளி வருவதற்கு திருவருளே துணை நின்றது. வள்ளல் பெருமான் திரி தேக சித்தியுடன் ஒளியுடம்பைப் பெற்ற நாள் பெளர்ணமி நாள் ஆகும். சுவாமிகளுக்கு, 1.8.1943 அன்று அமாவாசை அற்புதக் காட்சி கிடைத்தது. இந்த நாளே கலி ஒழிந்ததற்கு உரிய காலம் ஆகும். கலி முடிவு காலத்தில், மூன்று கிரகங்கள், ஒரு நட்சத்திரத்தின் ஒரே பாதத்தில் வந்து அமையும். பூச நட்சத்திரத்தில் சூரியன், சந்திரன், குரு இம் மூன்றும் ஒரே பாதத்தில் வந்து அமைந்தது. இறைவனின் திருவடி விளங்கும் தலைநடு பகர வடிவத்தலமே காற்குளமாகும். பிண்டக் காட்சியைக் கொண்டு அண்ட வெளியைக் காணுதல் வேண்டும். முன்னோர்கள், வான சாஸ்திரத்தை எப்படிக் கணக்கிட்டனர் ? அவர்கள், அக அனுபவத்தில் கண்டதையே வெளியிட்டனர். புறத்திருந்து ரோக்கும்போது, இடையில் வரும் மறைப்பு தெரிவதில்லை. இப்போது வான சாஸ்திரத்தைப் புற நிலையிலிருந்து முயன்று கண்டறிகின்றனர். இங்கு காணப்படுவது அகவுண்மை விளக்கமாகும்.
(2)
வான வட்டம் 360 டிகிரி எனக் கொண்டு 12 ராசிகளுக்கு, ஒவ்வொன்று 30 டிகிரி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என மூன்று நட்சத்திரங்கள் அமைந்திருக்கும். இதில், நடுவாக விளங்குவது பூசம் ஆகும். கடக நடுப் பூச நட்சத்திரமே காற்குளம் ஆகும். நமது தேகம் கடம் ஆகும். இதில் தலையிடமே ‘கம்’ ஆகும். தலையிடத்தே விளங்கும் பகரவடிவத் தலம், கடவுள் பீடமாக பூசமாக விளங்குகின்றது. வள்ளல் பெருமானுக்கும் தயாநிதி திண்டுக்கல் சுவாமிக்கும் பொருத்தம் உண்டு. 1.8.1943 ஆடி 17 அமாவாசை நாளாகும். இங்கு நடத்தப் பெறும், இந்த விசேஷம் துவங்கிய நாள் 1.8.1943 ஆடி 17 அமாவாசை நாளாக, வெகு சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ், மற்றும் ஆங்கிலக் கணக்கு ஒன்றி வரும் நாளாக, இது அமைந்துள்ளது.
முதலில், இங்கு நடைபெறும் நிகழ்ச்சி பற்றிய செய்தி, அருட்சுடரில் அட்டைப் பகுதியில் வெளிவந்தது. பின்னர், அதனை தக்கோர் மூலம், வள்ளலார்ஸ்பேஸில் (www.vallalarspace.com) இணைய தளத்தில் இடம் பெறச் செய்தது. அதன் மூலம், தூத்துக்குடி அன்பர்கள் நடத்தும் இந் நிகழ்ச்சி, உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதுவே வள்ளல் பெருமான் மற்றும் திண்டுக்கல் சுவாமி ஆகியோரின் அருள் ஆட்சியுடன் நடத்தப் படுவதற்கு நிதர்சனமான சாட்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திண்டுக்கல்லில் இருந்து வந்த போது, பாபநாசம் செல்லும் வாய்ப்பு வந்தது. அங்கு, சொரிமுத்து அய்யனார் கோவிலில், 31.7.2008 முதலே முன்கூட்டியே, மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது. அடுத்த நாளான 1.8.2008 அன்று அமாவாசைக்கும் அங்கு கூட்டம் உள்ளது. அங்கு சென்று திரும்பி வரும்போது வந்த டவுன் பஸ் எண்ணும் 0123 ஆகும். அதேபோன்று, 1.8.2008ஆம் நாளன்று, இந்தக் கூட்டம் இங்கு ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் திங்கள், 1,2,3 ஆகிய நாட்களில் நடைபெற்று வருகிறது.
சுவாமிகள் எழுதிய தயவுப் பெரு நெறி என்ற புத்தகம், வள்ளலார் குருகுலம் என்ற பத்திரிக்கை மூலம் 25 வாரங்களாக, தொடர்ந்து வெளி வந்தது. அது புத்தகமாக தற்போது இங்கே கிடைக்கிறது. மனித குலத்தின் மாண்பு – இறை இயல் நெறி பற்றி, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் சிறப்பினை கீழே கண்டவாறு விவரிக்கலாம்.
|
த
|
இறை
|
சித்தி
|
|
ய
|
இயல்
|
பெரு
|
|
வு
|
உண்மை
|
விழா
|
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் – என வள்ளற் பெருமான், அருட்பெருஞ்ஜோதி அகவலிலே குறிப்பிட்டுள்ளார்கள்.
திண்டுக்கல் சுவாமிகள், 6.4.2006 அன்று சித்தி அடைந்தார்கள். அதனை அடுத்து, ராமநாதபுரம் ஜோதிமுருகன் அவர்கள், 25.1.2007 அன்று, தயவு சித்தி அடைந்தார். தய – அக நிலை, வு – நமது நிலை. அருள் – பொருள் – தயவு இங்கே விளங்குகின்றது. அவ் விளக்கம் இந் நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இந்த இடம் அகத்தியர் தொல்காப்பியர் ஆகியோர் எல்லாம் வாழ்ந்த இடம். பொதிகை மலையே இதற்குச் சான்றாக உள்ளது.
தென் தமிழ்நாட்டில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பல மாவட்டங்கள் இருந்தாலும், ராமநாதபுரத்திலும், தூத்துக்குடியிலும் தயவின் வெளிப்பாடு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இயற்கை உண்மையோடு அமைந்த ஊர் பாபநாசம் ஆகும். தமிழ்நாட்டிற்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு கண்டம் அக் காலத்தில் இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு நெற்றிக் கண் புடைப்பு இருந்தது. அவன், அந்த அகக் காட்சியில் ஒன்றினான். புற உடல் படைக்கப்பட்டதன் உண்மையை அவன் உணரவில்லை. அக் கண்டத்தில், பஃறுளியாறு ஓடியது.
தொல்காப்பியத்தில், கந்தழி ஜோதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கால மக்கள், கந்தழி ஜோதி, கொடிநிலை, வள்ளி என வழிபட்டனர். தேங்காயில் முப்பாற்புள்ளி உள்ளது போல, மனித உடலில், நெற்றியில் சிரநடுவில் நெற்றிக் கண் உள்ளது. அடுத்த இரண்டு புள்ளிகளாக இடது, வலது கண்கள் அமைந்துள்ளன. சுத்த சன்மார்க்கத்தில், ஞானம் விளங்குவது, கழுத்துக்கு மேல் என்பார்கள்.
அக் காலத்தில், கைலாயத்தில் சிவபெருமான் பார்வதி திருமணம் நடைபெற்றது. அவ் வைபவத்தைக் காண்பதற்கு, தேவர்கள் அனனவரும் வடக்கே சென்று விட்டனர். எனவே தெற்குப்பகுதி தாழ்ந்து விட்டது. அகத்திய மாமுனிவரை, சிவபெருமான், தெற்கே அனுப்பி, தாழ்ச்சி உயர்ச்சியினை சரி செய்வதற்கு அனுப்பினார். அப்படி அகத்திய மாமுனிவர் தங்கியதுதான் இப் பொதிகை மலையாகும்.
ஒரு கோணத்தில் பார்த்தால், தயாநிதி சுவாமிகள், சிவபெருமானாகவும், தெற்கே அனுப்பப்பட்ட அகத்தியராக ஜோதி முருகனும், சீடர்களாக கலியுக வரதன், ஜவஹர்லால், தயவு விஜயராமன், சிவகுமார், சுதர்சன், சந்திர சேகரன் ஆகியோர் இங்கே உள்ளனர்.
தயவுக் குறளில், தயாநிதி சுவாமிகள், எல்லா விளக்கங்களையும் தந்துள்ளார்கள். திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர், ஒளவையார் இயற்றிய ஒளவைக் குறள் ஆகியவையே போன்று, திண்டுக்கல் சுவாமிகள் தயவுக் குறளினை, அன்பர்கள் சுத்த சன்மார்க்க நெறி நின்று வாழும் முறைமைகளைப் போதித்துச் சென்றுள்ளார்.
வள்ளல் பெருமான் அவர்கள், இந்திரிய ஒழுக்கம் என்று இரு மந்திரச் சொற்களாகச் சொல்லிச் சென்றுள்ளதற்கு, தயாநிதி சுவாமி அவர்கள், விளக்கமாக, (1) பாயிரம், (2) ஒழுக்கவியல் (3) விசார இயல் மற்றும் (4) இன்ப இயல் என தொகுத்தளித்துள்ளார்.
ஒழுக்கவியலில், (1) கண்ணிந்திரிய ஒழுக்கம் (2) காது இந்திரிய ஒழுக்கம் (3) வாய் இந்திரிய ஒழுக்கம் (4) மூக்கு இந்திரிய ஒழுக்கம் மற்றும் (5) மெய் இந்திரிய ஒழுக்கம் என விளக்கியுள்ளார்.
அதேபோல், சுவாமிகள், கரண் ஒழுக்கத் தலைப்பின்கீழ், (1) மனம், (2) முக்குணாவத்தை (3) நகை (4) அழுகை (5) இளி வரல் (6) மனவமைதி (7) மனவொறுப்பு (8) மனோ சக்தி (9) மனோவுருவம் (10) மனோன்மணி (11) தன்னை மதியாமை என்றும் இன்னும் 20 தலைப்பின்கீழ் குறட்பாக்களை இயற்றி, அதற்குப் பொருளும் தந்துல்ளார்கள். தெற்கே ஆன்மா வடக்கே புலையுடம்பு. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதற்கு, திண்டுக்கல் சுவாமிகள், தயவுக் குறளில்,
”தியாகேசன் தாள்படுமித் தென்னிந் தியாவே
தயாமூல பண்டாரந் தான்”
எனத் தெரிவித்துள்ளார். அதன் பொருள் விளக்கம்.
நம் தென்னிந்தியா தான். தியாகேசன் உள்ளவாறு அறிந்து வழிபட்டு, தயா உண்மையைக் கண்டு கொண்டது. தென்னிந்தியா என்பதன் உட்பொருள் ஆன்மாவாம். நமது ஆன்மாவில்தான் தியாகேசனாகிய கடவுள் திருவருள் பொருந்தி நின்று இன்பானுபவம் வழங்குகின்றது. இவ் வான்மாவே தயா மூல பண்டாரம்.
நமது ஆன்மநாதன் தான் எல்லோருடைய ஆன்மாவிலும் உள்ளவன். அன்றியும், பிற எல்லா உயிர்களின் அகத்தும் உள்ளவன் நம் அகமுடையானாகிய தியாகேசனே.
தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கு மிறைவன் என்றதன் கருத்தும். நம் தென்னிந்தியாகேசனே எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இறைவன் என்றதும் உண்மையே.
இதுபோன்ற உண்மையை விளக்கும் தத்துவங்கள் கொண்ட புத்தகங்கள் எல்லாம் கிடைப்பது தற்போது அரிதாகி விட்டது. ஆனால், தூத்துக்குடி சன்மார்க்க சங்க அன்பர்கள், திண்டுக்கல் சுவாமி எழுதிய நூல்களை, இங்கே விற்பனைக்கு வைத்துள்ளனர். அனைத்தும் பெறற்கரிய பொக்கிஷங்களாகும். அன்பர்கள் அனைவரும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் பயின்று, தமது வாழ்வில் சுத்த சன்மார்க்க அனுபவம் பெற வேண்டும்.
வள்ளல் பெருமான் திரு அருட்பாவில்.
வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே - என்றார்.
தமிழ் நாட்டின் தெற்குப் பக்கத்தில் இந் நிகழ்ச்சி நடைபெறுவது மிகப் பெரும் சிறப்பானது ஆகும். சுட்டுக் காட்டாத வித்தையைத் தொட்டுக்காட்டும் விழாவாக இது அமைந்துள்ளது. வரும் காலங்களிலும் தூத்துக்குடி அன்பர்கள், இதனைத் தொடர்ந்து நடத்தி சுத்த சன்மார்க்கம் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கும் பரவுவதற்கு உதவ வேண்டும்.
துறவி கந்தசாமி, பழ சண்முகனார், ஊரன் அடிகளார், ஜோதிமுருகன்,. ஆகியோர், தமிழ்நாடு பூராவும், மற்றும் வெளி நாடுகளிலும், சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்தனர்.
வடலூரில், முப்பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன. (1) தைப்பூச நாள் விழா (2) சாலை சகாப்த நாள் விழா (3) வள்ளலார் வருகை என 3 விழாக்கள் நடைபெறுகின்றன. வள்ளல் பெருமானால், 1865ஆம் ஆண்டில்தான் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தருமச் சாலை, சத்திய ஞான சபப முதலானவையும் அடுத்தடுத்து துவங்கப்பட்டன. திரு அருட்பாவின் சிறப்பு, அப்போதிருந்து வெளிப்படுவதாயிற்று. 23.5.1867ல் சத்திய ஞான சபை துவக்க விழா வள்ளற் பெருமானால் எடுக்கப்பட்டது. 1,000 பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டன. அந்த விழாவில் மட்டும், அக் காலத்திலேயே 100 மூடைகள் அரிசி, அன்னதானத்திற்கென செலவிடப்பட்டது. மேட்டுக் குப்பத்திலே வள்ளற் பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்டார். அதன்பின் திரிதேக சித்தியை அடைந்து, ஒளியுடம்பு பெற்றார். நித்திய தேகம் பெற்றார்.
மேயினை மெய்ப்பொருள் விளங்கினைநீ அது
ஆயினை என்றருள் அருட்பெருஞ்ஜோதி
என அருட்பெருஞ்ஜோதி அகவலிலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவர், வள்ளலாரிடம் இவ்விதம் சொல்கிறார்.
வள்ளற் பெருமான்,
“அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு “ எனவும்,
சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு – சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்.
என திரு அருட்பாவில் இதனைக் குறிப்பிடுகிறார். ஐந்தொழிற் காரியப்பாடுகளைச் செய்ய, வள்ளற்பெருமானை, ஆண்டவர், இவ் வுலகிற்கு அனுப்பியுள்ளார்.
உலகுயிர்த் திரளெல்லாம் ஒளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு இந் நிலை கிடைக்கிறது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஐந்தொழில் காரியப்பாடுகளை செய்வதற்கு, வள்ளல் பெருமானுக்கு, சக்தியினை அளிக்கின்றார். எனவே, வள்ளற் பெருமான், நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்கின்றார். இனிமேல் நான் (பக்குவப்பட்ட) எல்லா ஆன்மாக்களினுள்ளும் புகுந்து கொள்வேன் என்றார். அவர், 5/10/1823 அன்று பிறந்தார். 12 ஆண்டுகள் சூரிய கலை யும் 16 ஆண்டுகள் முழு சந்திர கலையும் பின்னர் 23 ஆண்டுகள் திருவொற்றியூரிலும், வடலூர், மற்றும் மேட்டுக்குப்பத்தில் வசித்து 1874ல் திரிதேக சித்தி நிலை பெற்றார்.
30.1.1865ல் வள்ளலார் சங்கம் துவக்கினார்.
23.5.1867ல் சத்திய தர்மச் சாலை துவக்கினார்.
25.1.1872ல் சத்திய ஞான சபையினை அமைத்தார்.
வள்ளற் பெருமான் 51 ஆண்டுகளில், இத் திரிதேக சித்தி நிலையினைப் பெற்றார். அதே போன்று, நடமாடும் சத்திய ஞான சபையாக ராமநாதபுரம் ஜோதிமுருகன் விளங்கி, சங்கம், சாலை, சபை என ராமநாதபுரத்தில் அமைத்து, 25.1.2007ல் தனது 70ஆவது அகவையில், இறை நிலை அடைந்தார்.
ஒரு வகையால் பார்த்தால், வள்ளல் பெருமானின் நிலையும், ஜோதி முருகன் அவர்களின் நிலையும் ஒன்றாவது போன்ற அமைப்பு மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் அறியக் கிடைக்கிறது.
வள்ளல் பெருமான், 18.4.1872ஆம் நாளில், ஒரே நாளில், அருட்பெருஞ்ஜோதி அகவல் என்ற பொக்கிஷத்தை எழுதி முடித்தார். தமது 51-வது வயதில், 30.1.1874 அன்று, தைப்பூச நாளன்று, பெளர்ணமி அன்று திரிதேக சித்தி பெற்றார். 51 ஆண்டுகளுக்குப் பின் 69 ஆண்டுகளில் , அதாவது, 120 ஆண்டுகள் கழித்து, 1943ல் திண்டுக்கல் தயாநிதி அவர்கள் தயவு நிலையினைப் பெற்று, தயவின் அடிப்படையில் பாக்களை இயற்றலானார். வள்ளலார் அனுபவம், 69 ஆண்டுக்காலத்தில், சுவாமிகளுக்குக் கிடைத்தது. இங்கு நடைபெறும் இவ் விழா இயற்கையில் இந் நாளில், (1.8.2008)ல் அமைந்தது. முதலில் அருள் அனுபவமும், பின்னர் தயவு அனுபவமும், இங்கே விளங்குகிறது. குரு+சூரியன்+சந்திரன் ஒரே நேர்க் கோட்டில் வரும் நாள் மிகுந்த சிறப்புடையது. அவ்வித சேர்க்கையான ஒரு நாள் தயவின் சேர்க்கையினால் சிறப்புப் பெறுகின்றது.
1.8.1943 அன்று கலியுகம் முடிந்து, ஞானசித்தர்களின் காலம் துவங்கியது. 1.8.2008 ஆகிய இன்றைய நாளில், தூத்துக்குடி அன்பர் திரு கலியுக வரதன், திரு கணேசன் மற்றும் அவரது குழுவினர் மூலம், நடைபெறும், இந் நிகழ்ச்சியின் மூலம் சுத்த சன்மார்க்க வெளிப்பாடு, உச்ச நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. நாம் தயவுச் செயல்கள் செய்வதை, சிரநடுச் சிற்றம்பலத்தி லிருக்கின்ற ஆன்மச் சிற்சபை நிலையினின்று செய்ய வேண்டும். தயவு செய்து செய்து, தயவு வாழ்க்கை வாழ, வாழ, அனுபவம் கைகூடும்.
தவத்திரு ஊரன் அடிகளார்,. திரு அருட்பா 1818 பாடல்களை, மிகச் சிறப்பாகத் தொகுத்து, 6 திருமுறைகளாக, சன்மார்க்க உலகம் படித்து, வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக, பதிப்பித்து அருளினார். அதில். சத்திய அறிவிப்பு என்ற தலைப்பின்கீழ் வரும் கடைசி 4 பாடல்கள், மிகச் சிறந்தவையாகும். அவை.
(1)ஐயனருள் வருகின்ற தருணமிது கண்டீர்
(2)தனித்தலைமைப் பெரும்பதி என்தந்தை வருகின்ற
(3)சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டீர்
(4)என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
வள்ளற் பெருமான், செத்தாரை எழுப்புதல் என்றார். செத்தவர்கள் என்று அவர் யாரைக்குறிப்பிடுகிறார். சுத்த சன்மார்க்க நெறியினின்று வாழ்க்கை நடத்துபவர்கள் தவிர, ஏனையோர் அனைவரும் செத்தவர்களாக உள்ளனர் என்கின்றார். அவர்களும், பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை இனியும் காலந் தாழ்த்தாது, கடைப்பிடித்து, வாழ்வில் நந்நிலையினை அடைய வேண்டும்.
வள்ளல் பெருமானின் 6 திருமுறைகளுக்கு அடுத்த படியாக, திண்டுக்கல் சுவாமி அவர்களால், தயவுப் பாக்களில், சுத்த சன்மார்க்கப் பதி வருகை என்ற தலைப்பின் கீழ் 10 பாடல்கள் பாடப்பட்டன. முதலாவது பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சுத்ததயா சன்மார்க்க ஜோதி வருகின்ற
சுகாரம்ப தினம்இதுவாம் சூழ்ந்துவம்மின் இங்கே
இத்தரணி எங்கும்இனி என்பதியின் எழிலே
இயல்பெறவே ஓங்கிடும்நீர் மயலறவே காண்பீர்
சித்தசிகா மணிஎன்று வித்தகர்கள் செய்யும்
செல்வப்பேர் ஒடுதெய்வத் திருநாமம் எல்லாம்
உத்தமனார் ஒருவருக்கே கற்பித்த உண்மை
ஒருமையினாற் கண்டென்ரும் பெருமையில்வாழ் வீரே.
நாமெல்லோரும், நடமாடும் சத்திய ஞான சபையாக உள்ளோம் என்பதை அனைவரும் நினைவில் கொண்டு அந் நெறியினின்று சற்றும் பிறழாது, உலகியல் காரியப்பாடுகளை நடத்தி வரவேண்டும்.
வள்ளற் பெருமான், திரு அருட்பாவில், “நான் உரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன் தன் வார்த்தை” எனக் குறிப்பிட்டது போல் திண்டுக்கல் சுவாமிகள் தனது தயவுப் பாவில், இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
“என்வார்த்தை என்றிதனை எண்ணாதீர் எனக்கு
என்தலைவர் உள்ளிருந்து இசைந்திட்டால் அன்றி
புன் அணுவும் அசைத்தொலிக்க என்னாவாற் கூடா
புரிந்துகொள்வீர் எல்லாமென் புண்ணியனார் உரையாய்
பொன்பொன்ற அவர் இன்று புவியில்வரு தற்கு
புலையேனுள் இருந்திங்கே புனைந்துரைக்கின் றாரே
நன்மொழியீ தென்றுகொண்டு நல்தயவால் வருவீர்
நாதனருள் பெற்றென்றும் நனிமகிழத் தானே.
6, 9 என்ற எண்களைக் கையை எடுக்காமல் எழுதினால், நடுவில் 8 என்ற எண் கிடைக்கிறது. எண்சாண் உடம்பின் தத்துவமே அது.
திரு அருட்பா மற்றும் திரு தயவுப்பா என்ற அருள் நூல்கள் எல்லாம் கடல் போன்றவை. அவற்றில் மூழ்கினால், அருள் முத்துக்களை எடுக்கலாம். இங்கு இந் நிகழ்ச்சியினை, தூத்துக்குடி அன்பர்கள் குழாம் நடத்துகின்றது. தூத்துக்குடி கடல், முத்துக்களுக்குப் பெயர் போனது ஆகும். இங்கு, சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்தும், இவ் வன்பர்கள் குழு, தயவு முத்துக்களாக விளங்குகின்றன. இம் முகாமில், கலந்து கொள்ளும் அன்பர்கள் அனைவருக்கும், இந் நிகழ்ச்சியின் மூலம், தயவு அருள் முத்துக்கள் கிடைத்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
வள்ளலார் வகுத்த வள்ளல் சன்மார்க்கம், தயாநிதி சுவாமிகளின் அருளால், தூத்துக்குடியில், தயா சன்மார்க்கமாக மாறியதை அன்பர்கள் அனைவரும் தற்போது உணருகின்றனர். 2ஆம் ஆண்டு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கண்ட செய்திகள் எல்லாம், இணைய தளத்தின் www.vallalarspace.com மூலம், உலகெங்கும் பரவுகின்றது,
அவரை அடுத்து, கோயம்புத்தூர் அன்பர், திரு சிவக்குமார் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரையும், தயா தியான முறையில், தியானம் செய்யச் சொல்லி, உரிய வாசகங்களை படித்தார். அன்பர்கள் தியானத்தில் ஆழ்ந்ததன் மூலம், புற உலகை ஒரு சிறிது நேரம் மறந்து, அக உலகில் சஞ்சரித்தனர்.
அது முடிந்ததும், வள்ளல் பெருமான், ஞான சரியையில் உள்ள 28 பாடல்களையும் படிக்கச் சொன்னதை அவர் நினைவு கூர்ந்து, அவற்றில் ஒரு சில பாடல்களை மனணமாக அனைவரும் அறியும் வண்ணம் படித்து, அதற்கு உரை விளக்கமும் கொடுத்தார்.
திண்டுக்கல் சுவாமிகளுடன், சின்னாளப்பட்டி அன்பர் செல்வராஜ் ஒருமுறை வெளியூருக்கு வண்டியில் செல்லும்போது ஒரு காரணத்தால், வண்டி நின்றவுடன், சுவாமிகள் அவரிடம் வெளியில் என்ன தெரிகிறது என்றார். அவர், மாடு போகுது, கார் போகுது என்றெல்லாம், தான் கண்ட காட்சியினை சுவாமிகளிடம் விவரித்தார்.
அதற்கு சுவாமிகள், எல்லாவற்றையும், அருட்பெருஞ்ஜோதியாகப் பார்ப்பதற்குப் பழகிக் கொள்ளுங்கள் என அவருக்கு அருளுரை வழங்கினார்.
முன்னோர்கள் கண்ட வழி முறைகள் எல்லாம், முக்தி அடைவதற்கு உரியதே ஆகும். ஆனால், வள்ளற் பெருமான் சொன்னது, நால் வகை ஒழுக்கங்களை கடைப்பிடித்து, சத் விசாரம், பரோபகாரம் முதலானவைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், சித்தி பெறலாம் என்றும், அதுவே இறவாமை பெறுவதற்குரிய வழி என்றும் சொல்லிச் சென்றார்.
திருவண்ணாமலையில், ஜோதிக் காட்சி, மாலை நேரம் முடிந்து, இரவு ஆரம்பிக்கும் பொழுது காண்பிக்கப்படுகின்றது. அந் நிகழ்ச்சி ஜோதி பார்த்தவுடன் முடிவடைகின்றது. ஜீவான்மா பரமான்மாவுடன் கலப்பது, அதுதான் இதுவரை முன்னோர்கள் கண்ட முடிவாக இருந்தது.
ஆனால் வள்ளலார் கட்டி வைத்த சத்திய ஞான சபையினில், நாம், அருட்பெருஞ்ஜோதிக் காட்சியை, அதிகாலையில், காண்கின்றோம். இதன் மூலம், முக்திக்குப்பின் உள்ள நிலை துவங்குகின்றதை இதன் மூலம் நாம் உணர்கின்றோம்.
இதுவரை ஆண்டவராக இருந்தவர், வள்ளலார் வடிவாக, அருட் பிரகாசர் என்ற பெயருடன் விளங்கினார். அதேபோல், திண்டுக்கல் தயாநிதி சுவாமி அவர்கள், தயா பிரகாசர் ஆக விளங்குகின்றார்.
மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்ற பலரில், தானுமொருவன் என்று திண்டுக்கல் சுவாமி அவர்கள் கூறியுள்ளார்.
பதி, பசு, பாசம், என்றும், ஜெக, ஜீவ, பரம் என்றெல்லாம் முன்னோர்கள் முந்நிலைகளைக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்கள். ஆனால், வள்ளல் பெருமானோ அவை மூன்றல்ல, மூன்றும் ஒன்றே என்றார். எல்லாம் ஒன்றே என உணர்ந்து பரோபகாரச் செயலை, இடைவிடாது நாம் நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டும். ஜீவான்மாவை விட்டு, பரமான்மா பிரிந்ததில்லை எனவும் சொல்லியுள்ளார்.
கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந்திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
சுத்த சன்மார்க்க நெறியினைக் கற்பதற்கு, விரைந்து விரைந்து வருமாறு வள்ளல் பெருமான் திரு அருட்பாவில், அனைத்து ஜீவர்களையும் அழைப்பார்.
இறைநிலையைப் பெற உதவுவது, ஞான சரியை 28 பாடல்கள் ஆகும். எனவே சுத்த சன்மார்க்க அன்பர்கள், அப் பாடல்களை, நன்கு பொருள் உணர்ந்து, படித்து, வாழ்வில், நந்நிலையை அடைய வேண்டும்.
அவரை அடுத்து, மதுரை திரு T.R. ஜவஹர்லால் அவர்கள் கீழ்க்கண்டவாறு பேசினார்.
சுத்த சன்மார்க்கம் பயிலும் அனைவரும் வள்ளல் பெருமான் சொல்லியது போல், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுடன் பழக வேண்டும். உயிருள் யாம் எம்முள் உயிர் என்ற உணர்வுடன் உலகியற் காரியப்பாடுகளைக் கவனிக்க வேண்டும். வள்ளலார் 30.1.1874 அன்று திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது, இப்போது இந்த உடம்பிலுள்ளோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் எனச் சொல்லிச் சென்றார். அவர் சன்மார்க்க ஒழுக்கம் கடைப்பிடிப்பவர்களை மட்டும் அவ்வாறு தனித்துச் சொல்லவில்லை. அனைவரது உடம்புகளிலும் தான் புகுந்து கொள்வதாகத்தான் சொல்லியுள்ளார்.
தான் கொண்டு வந்திருந்த SWAMY RAMALINGAM என்ற ஆங்கில புத்தகம் ஒன்றையும், வள்ளலார் போட்டோ ஒன்றையும், கூட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வழங்கினார். இந்த போட்டோவை நாம் உணவுண்ணும் போது அருகில் வைத்து, அதனைத் தொட்ட பின் உணவு உண்ண வேண்டும். 30 நாட்கள், இவ்விதம் உணவு அருந்த வேண்டும் என்றார். அவ்விதம் கடைப்பிடித்தால், நமது உடல், சதை, எலும்பு அனைத்தும் இறையனுபவம் பெறும். இந்தப் போட்டோ அந்த சிறப்பு பெற்றது, ஆன்ம உணர்வு நெற்றியிலும், அருள் உணர்ச்சி, உச்சந் தலையிலும், ஏற்படும். உடம்பில் தலைமைச் செயலகமாக, திருச்சிற்றம்பலம் விளங்கும் உச்சந்தலை உள்ளது. 84 லட்சம் ஜீவராசிகளைக் கடந்து ஆண்டவரின் கருணைச் சித்தியால், இந்த மனித உடம்பு, ஒவ்வொருவருக்கும் கிடைத்துள்ளது. இவ் வுடம்பில் 6 ஆதாரங்கள் உள்ளன. அவற்றிற்குப் புத்துணர்வு ஊட்ட வேண்டும்.
ஒருமுறை ராகவேந்திரர் ஒரு திருமண மண்டபத்திற்குச் சென்றார். அவரைத் தெரியாத நபர்கள், அவருக்கு வேலை கொடுத்தனர். அவர், ரம், ரம், ரம் என்று சொல்லிக் கொண்டே தனக்குக் கொடுக்கப்பட்ட உணவு தயாரிக்கும் வேலையினைச் செய்தார். மணிபூரகச் சக்தி அவ்விதம் சொல்லிக் கொண்டிருந்ததால் ஏற்பட்டது. அதனால் அதிக உஷ்ணமும் உண்டாகியது. உனவு அருந்தியவர்கள் அச் சக்தியால் தாக்கப்பட்டனர். இவ் வுடம்பின் ஆதாரங்களின் சக்தியை புரிந்து கொள்வதற்காக இது சொல்லப்பட்டது.
திருமந்திரத்தில், சொல்லப்பட்ட அக்ஷரங்கள் சக்கரங்கள் உள்ளன, அவற்றிற்கு அ, இ, உ, ஏ, ஓ என ஓசை கொடுக்கப்பட்டுள்ளது. அக்ஷரங்களைச் சொல்லிப் பழக வேண்டும். அவ்விதம் சொல்வதால், ஆனந்தம் சித்திக்கும். உடம்பிற்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். வள்ளல் பெருமான் கூறியதுபோல, இவ் வுடம்பைப் பாதுகாப்பாக பல காலம் வைத்திருக்க இது உதவும்.
திருவருட்பாவில் அவர், கீழ்க்கண்ட பாடலை திருவடிப்பெருமை என்ற தலைப்பின் கீழ் பாடி வைத்துள்ளார்.
மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாயவ்
வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி நடுவே
பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
பகுத்துணர முடியாதேல் பதமலர் என்தலைமேல்
நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லிவர்காண் தோழி.
சிருஷ்டி ஞாயத்தைப்பற்றி வள்ளல் பெருமான் சொல்லியுள்ளார். விஞ்ஞானிகளுக்கு முன்பே, அணுவைப்பற்றி அவர் சொல்லிவிட்டார். ஒளி, வெளி, வெளி நடுவே, பூத ஆகாச வெளி என இறைவன் நடம்புரியும் இடங்களைப் பற்றிய உண்மைகளையும், எலக்ட்ரான், ப்ரோட்டான், ந்யூட்ரான், எக்ஸ்ரே கதிர், காமா கதிர் முதலானவற்றின் கூறுகளைப் பற்றியும், 100 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளற் பெருமான் விரிவான விளக்கத்தை, திரு அருட்பா வாயிலாக உணர்த்தி விட்டார்.
SWAMY RAMALINGAM என்று தற்போது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட நூல், தமது அண்ணன் T.R. துளசிராம் எழுதிய ஒரு நூலின் சிறு கூறு ஆகும் எனவும், மேலும் தகவல் இது குறித்து அறிய வேண்டுமெனில், www.auro-ma-ramalingam.org மூலம் தெரிந்து கொள்ளுமாறு அவர், அன்பர்களைக் கேட்டுக் கொண்டார்.
உணவு இடைவெளிக்குப்பின் நாராயணபுரத்திலிருந்து வந்த அன்பர்,. சில திரு அருட்பா பாடல்களை இசையுடன் பாடினர்.
அதன் பின், மலேயாவிலிருந்து பாபநாசம் வருகை புரிந்த, தர்மலிங்க சுவாமிகள் மற்றும் அவருடன் வடலூர் தர்மச்சாலையில் பணி புரியும் சேகர் மற்றும் மலேயாவிலிருந்து சுவாமிகளுடன் மற்றுமொரு அன்பரும் வருகை தந்தனர்.
அவர் சன்மார்க்க அன்பர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அவரது உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எனக்கு சொந்த ஊர் மலேயா நாட்டில் உள்ளது. நான், அந்த நாட்டிலிருந்து, அன்னதானப் பணிக்காக, ஆடி அமாவாசை நாளுக்கு முன்பாக சில அன்பர்களுடன், வருடா வருடம், பாபநாசம் வரும் வழக்கத்தைக் கொண்டுள்ளேன். அந்த வகையில், இங்கு சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி, மற்றும் இறை இயல் உண்மை விளக்கக் கூட்டம் நடைபெறுவதைக் கேள்விப்பட்டேன். இந்த அமைப்பிலிருந்து சில அன்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், இங்கு வந்து இந்த சொற்பொழிவினை ஆற்றுகின்றேன்.
முதலில் எனக்கு சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. 1994ஆம் ஆண்டில், திரு ரெங்கராஜ் சுவாமிகள் ஆத்ம தியானம் சொல்லிக் கொடுத்தார். எனக்கும் மலேசியாவில், ஆத்மானந்த சுவாமிகள் குரு ஆவார். மாசு நீக்கப்பட்ட ஆன்மாவை வைத்து, உயர் வழியைத் தேட வேண்டும் என எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், அகத்திய மாமுனிவரைப் பற்றிச் சொல்லி, இதுவரை வந்த ஞானிகளில், மாசு நீக்கப்பட்ட ஞானி, அகத்தியர் ஆவார் எனவே, அவரையே குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் என என்னிடம் அவர் சொன்னார். அதன்படி அகத்தியரைக் குருவாக மனத்தில் கொண்டு, அன்மீக வழி தேடலானேன். அவரது நெறி முற்றுப் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை. அதன் பின்னர், மேற்கொண்டும் தேடல் என்னுள்ளே பொங்கியது.
2001ஆம் ஆண்டு, மலேசியாவில், 2வது சன்மார்க்க மாநாடு நடைபெற்றது. தமிழ் நாட்டில் இருந்து நிறைய அன்பர்கள் அங்கு வந்து, சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினர். வழி வழி வந்த ஞானிகளில், வள்ளற் பெருமான், மிகவும் உயர் நெறியினைப் போதித்தவர் என்றும், எந்த வகையால் மற்றையோரிலிருந்து அவர் உயர்ந்தவர் எனவும் கூறினர். ஆனால் எனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை அவர்களிடம் நேரடியாகக் கேட்டபோது , அவர்கள் யாருமே அதனை நிவர்த்திக்கவில்லை.
. திருக்குறள், திருமந்திரம் முதலான நூல்களின் ஆசிரியர்கள் அடைந்த நிலையினைத்தான் வள்ளல் பெருமானும் அடைந்தார் என்று, தமிழ் நாட்டில் இருந்து வந்த அனைவரும், என்னிடம் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டார்கள். ஒரு வகையால் சொல்லப் போனால், என்னை அவர்கள், குழப்பிச் சென்று விட்டனர். எனது தேடல்களுக்கு சரியான விடை அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.
அதன் பின், திரு அருட்பா ஆறு திருமுறைகளையும் படித்தேன். அப்போதும், எனக்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. உபதேசத்தைப் படித்தால், சரியாகப் புரியாமல் இருந்தது. 8, 2 ஆகியவற்றைப் பற்றி, எல்லா ஞானிகளும் சொல்லியுள்ளனர். வள்ளல் பெருமானும் கீழே குறிப்பிட்டவாறு, அருட்பெருஞ்ஜோதி அகவலில், அது குறித்து சொல்லிச் சென்றுள்ளார்.
எட்டிரண் டறிவித்து எனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்தில் பதித்த மெய்த் தந்தையே
என அவர் கூறுகின்றார். பின்னர், 2003ஆம் ஆண்டில், வடலூரிலேயே, 48 நாட்கள் தங்கி, வள்ளல் பெருமானை வேண்டிக்கொண்டு, எனக்கு சுத்த சன்மார்க்க கருத்துக்களை நன்கு புரியும்படி உணர்த்த வேண்டும் என அங்கேயே தவம் கிடந்தேன். பலவிதமான பதில்கள், அங்கு உள்ள, மற்றும் அங்கே வந்து சென்ற பல அன்பர்களிடமிருந்து கிடைத்தன. யார் சொன்ன பதிலிலும் எனக்கு உண்மைப் பொருள் விளங்கவில்லை. வெறுத்துப் போய் மலேசியாவிற்கே நான் திரும்பிவிட்டேன்.
அங்கு சென்ற பின்னர், என்னையறியாமல் எனக்கே ஒரு திருப்பம் கிடைத்தது. அதுவரை சித்தாந்தம் பேசிக் கொண்டிருந்த நான், அங்கு சென்றதும், வள்ளலாரின் உயரிய தத்துவங்களை எல்லோரிடமும் பேசியுள்ளேன். இந்த மாற்றமும், எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதுவரை, சித்தாந்தத்தில் நான் ஈடுபாடு கொண்டிருந்த போது பழகிய நபர்கள், இந்த வேறுபாட்டினைக் கவனித்துள்ளனர். அவர்கள், நான் சொன்னவற்றை ஏற்கவில்லை. நான் சொன்ன வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும் நம்பத் தயாரில்லை எனத் தெரிவித்தனர். இவ்வித மாற்றத்துக்கு ஆதாரம் கேட்டனர் (They required evidence for this immediate change in my life) அதனை வள்ளற் பெருமானிடமே நான் கேட்டேன். பெருமானின் திருவருளால், அதற்கு ஆறாம் திருமுறையில் உள்ள பாடலில் அற்புதமான விளக்கம் கிடைத்தது,
நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
நாரணர்கள் மற்றவரின் நாடின்மிகப் பெரியர்
வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
மீன்முகந்த விந்ததனில் பெரிததனில் நாதம்
மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
இந்த அருட்பா பாடலில் எனக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது. அதன் பின் போற்றிச் சந்த விருத்தத்தில் உள்ள கீழ்க்காணும் பாடலைப் படிக்க அறிவுறுத்தப்பட்டேன்.
போற்றி நின்அருள் போற்றி நின்பொது
போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
போற்றி நின்நெறி போற்றிநின்சுகம்
போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
போற்றி நின்முடி போற்றி நின்நடு
போற்றி நின்அடி போற்றி போற்றியே
இதில் மட்டும் 16 விதங்களாக நின் – உனது என்றே வரும்.
பாமாலை ஏற்றருள் – இது ஒரு புதிய வேதம் என எனக்குத் தெரிந்தது. இவ் வேதம் யாராலும் இதுவரை சொல்லப்படவில்லை. அரங்கேற்றப்பட்ட ஒரு நூலாக திரு அருட்பா விளங்கியது.
பின்னர், திரு அருட்பாவை திரும்பத் திரும்பப் படித்ததில், வெளிகளின் ரகசியம் தெரியவந்தது. 35 நிலைகளில் அந்த வெளிகள் உள்ளன.
திரு அருட்பாவிற்கு நிகர் வேறு எந்த நூலும் கிடையாது, புதிய வேதமாக ஆறாம் திருமுறை உள்ளது என்ற உணர்வு எனக்கு திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் அருளால் கிடைத்தது.
பரசிவ வணக்கம்.
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்க ஒளிசிறந்த திருவிளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்துஒரு பால்விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே.
நமது பூத உடம்பு அசுத்தமாக வளர்கிறது. இதுவரை ஞானிகள் கண்ட சித்தாந்தம் வரை பொய் நெறியே என எனக்குத் திரு அருட்பா பாசுரங்களை படித்தபின் தெரிந்தது.
மற்றறிவோம் எனச்சிறிது தாழ்ந்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
பலப்பற்றே பற்றுமினோ என்றும்இற வீரே.
இப்பாடலில் அம்பலப் பற்றைப் பற்றினால்தான் இறவா வரம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டில், திரு அருட்பாவினை நான் ஆய்வு செய்தபோது இரு விதமாகப் பிரித்தேன். ஒரு பகுதி வள்ளலார் காலத்திற்கு முன் என்றும், மற்றொரு பகுதி வள்ளலார் காலத்திற்குப் பின் என்றும் அதாவது BV (Before Vallalar) and AV (After Vallalar) பிரித்துப் பார்த்து, ஆய்வு மேற்கொண்டேன். கிட்டத்தட்ட 2 வருடங்களாக இந்த ஆய்வினை கடுமையாக மேற்கொண்டேன். காரணம், உண்மை எனக்கு விளங்க வேண்டும் என்ற அவாவே ஆகும்.
அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தில், ஒரு பாடல் வருகிறது.
கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவது அரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே.
இதில் சொல்லப்பட்ட பராபர நிலையாக எனக்கு அப்போது, விளங்கியது. அதுவே, ஒரு சரியான நிலை எனத் தெளிவு கொள்ளப்பட்டது.
அட்டகத்தில் 7ஆவது பாடலில்
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும் எம்உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று
அத்தகை யுணர்ந்தோர் வழுத்த நின்றோங்கும்
அருட்பெருஞ்ஜோதி என் அரசே.
ஒத்த அந் நிலைக்கண் யாமும் என் உணர்வும் ஒருங்குறக் கரைந்து போயினம் என்று - இப் பாடல் படித்தபின் எனக்குத் தெளிவு பிறந்தது.
ஆனால் மலேசியாவில் உள்ள அன்பர்களோ இதனை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுத்தனர். ஏனெனில் எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை, அதனால் இதனை ஏற்க மாட்டோம் என்றனர். மேலும், இதன் மூலம், இதுவரை தாம் பின்பற்றி வந்த சமயம், மதம், சித்தாந்தம், சிவக் கொள்கை ஆகியவை முழுவதும் அடிபடுவதை ஏற்க மாட்டோம் என்றனர்.
இவர்களது இத் தகைய எதிர்ப்பைப் பார்த்தபின் மேலும் திரு அருட்பாவினை ஆராய்ந்தபோது, தோழிக்கு உரிமை கிளத்தல் என்ற அதிகாரத்தில், பராபரை வெளி பற்றி சொல்லப்பட்டுள்ளதை படிக்க நேர்ந்தது.
மேலும், பேருபதேசத்தில், குறிப்பிடும் பொழுது, வள்ளற் பெருமான், சித்தாந்தத்தில் லக்ஷியம் ஏதுமே வைக்க வேண்டாம் என்றுள்ளார்.
என்னுடன் இருந்த அன்பர்கள், நாங்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக,. சித்தாந்த நெறியின்கண் உள்ளோம். அதை விட்டு விட்டு, இப்போது திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா மற்றும் அருட்பெருஞ்ஜோதி குறித்துச் சொல்லணும்னா எப்படி எங்களால் ஏற்க முடியும் என்று அன்பர்கள் கேட்டனர்.
அன்றைய தேதியிலிருந்து, அவர்களது கேள்விகளுக்கு நான் திரு அருட்பாவிலிருந்து விளக்கங்களை எடுத்துச் சொன்னேன். சந்தேகப் பட்டுக் கேட்டவர்களுக்கெல்லாம் சரியான திரு அருட்பா பாடல்கள் மூலம் விளக்கம் சொன்னேன். நான் சொன்ன விளக்கங்களை ஏற்றுக் கொண்டு, இன்று கேள்வி கேட்டவர்கள் எல்லாம் மன நிம்மதியுடன் உள்ளனர். அவர்கள் அனைவரும், வேதாந்த, சித்தாந்த நிலையிலிருந்து, வள்ளற் பெருமான் வழியில், சுத்த சன்மார்க்க நெறியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தில் நமக்குப் பாதுகாப்பு அதிகம். நம் ஆயுள் காலத்தின், பாதி நாட்களில், நாம், இறந்து படுவோம் என சித்தாந்தத்தில் சொல்லப்படுகிறது.
சித்தாந்தத்தையும், வள்ளலார் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, வள்ளல் சன்மார்க்கம் மிகவும் உயர் நிலையில் காணப்படுகிறது.
அதில், தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் எனவும் வள்ளற் பெருமான் பாடி வைத்துள்ளார். அதற்காக அடிக்கடி தவறுகள் செய்தல் என்பது கூடாது.
எனவே, இரு நெறிகளையும், பலகாலம், அலசி ஆராய்ந்த பின் ஏற்பட்ட முடிவில், எந்த நெறி சிறந்த நெறி என சீர்தூக்கிப்பார்த்தபோது, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே சிறந்தது எனத் தெரிந்தது.
கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே.
வள்ளல் பெருமான் சொல்லும் நெறி ஒன்றே காலத்திற்கேற்ற அதீதமான நெறி என எனக்குத் தெளிவு பிறந்தது.
அதன் பின்னரும் ஒரு சந்தேகம் என்னை வாட்டியது. அது என்னவெனில், சுத்த சன்மார்க்கம் கடைப்பிடித்தவர்கள் எல்லோரும் இறந்து போய்க் கொண்டிருக்கின்றார்களே என்பதுதான் அது. வள்ளல் பெருமானிடம் வேண்டிய போது, உள்ளம் கடந்து போவதுதான் சுத்த சன்மார்க்கம். சமரச சுத்த சன்மார்க்கிகள் அல்லார், மரணம் தவிர்க்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற வெளிகளுக்கு, இரவு, பகல் உண்டு. அவை அசுத்த வெளிகளாகும். ஆனால் சுத்த வெளிக்குள் நாம் இருந்தால், இரவே கிடையாது. ராப்பகலற்ற இடம் அந்த வெளியாகும்.
வள்ளல் பெருமானுக்கு உறக்கம் இல்லை. அவர் அதனால் சோர்வு ஏதும் அடையவில்லை. நாம் பூலோக வாசிகளாக, அசுத்த வெளிக்குள் உள்ளோம். அகம் கருத்தும், புறம் வெளுத்தும் உள்ளது. ஆணவ மலம் நம்மைச் சூழ்ந்துள்ளது. மனிதர்களாகிய நாம் எதிர்ப்புச் சக்தியை இழந்து விட்டோம் (we have lost the defence power) நமக்கு இறைவன் (Defence power) கொடுத்துள்ளார். நாம் அதனை அடைய முயல வேண்டும்.
சமீப காலத்தில் நாம் பார்க்கிறோம். புதிது, புதிதாக மனித குலத்தை அழிப்பதற்கென்றே, கிருமிகள் வருகின்றன.
வள்ளல் பெருமான், எந்த நிலையில், சித்தியைப் பெற்றார் ? ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை அடைந்தார் ? தன்னையே நினைமின்கள் என்கின்றார். அங்கு, எல்லா அந்தமும் அடிபட்டு விட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை அனைவரும் அறிவோம். அதனையே நாங்கள் எடுத்துக் கொண்டோம்.
மற்ற நெறிகளில், பரவெளியில் துணையில்லை என்ற நிலையில், வள்ளற் பெருமானின் நெறி, ஒரு அதிர்ச்சியான – ஆனால் அற்புதமான நெறி என எங்களுக்குப் பட்டது.
இதனை மற்ற மதங்கள் ஏற்றுக் கொள்ளுமா ?
பராபரை வெளி, பெருவெளி என்றெல்லாம் தெரிவித்து, அவற்றைத் தவிர ஒன்றும் அதற்கு மேலில்லை என்ற நிலைதான் மற்றவற்றில் இன்றளவும் நிலவுகின்றன.
ஆனால் (micro mechaniscm) என்ற முறையில், வள்ளல் பெருமான் சொல்லியுள்ளார். அதற்கு முன்பெல்லாம், நடராஜ தத்துவம் இருந்தது. இயக்கம்தான் நம்மை மாற்றுகின்றது. பொது நடனத்தைப் போற்றுவீர்.
பொதுவது சிறப்பது புதியது பழையதென்று
அதுவதுவாய்த் திகழ் அருட்பெருஞ்ஜோதி
சித்தாந்தம் பழையது. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி புதியது. இந்த நடம்தான் இந்த இடத்தில் நிறுத்தும் என வள்ளலார் சொல்லியுள்ளார். அது பிறப்பை ஒழித்திடும். இச் சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே பெருவெளிக்குள் நம்மைக் கொண்டு செல்லும். வள்ளல் பெருமானுக்குப் பின், நடராஜப் பெருமானை, micro mechanism ஆகப் பார்க்கின்றோம். அணுக்களின் இயக்கம், ஒளித்தத்துவமாக எங்களுக்கு விளங்குகின்றது. திரு அருட்பா ஆறாம் திருமுறையில் வரும் 855 (தெய்வ நிலையங்கள் பதிப்பு) ஆம் பாடல், இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.
ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பொருளே
ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
இந்நாட் புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
தாமே குழைந்து தழந்தமுத சார மயமா கின்றேனே.
அந்நாளில் இல்லையே இந்த அருள் ஒளி என இதனை எண்ணினோம். மனித உடம்பில் 4 கோடியே 48 ஆயிரம் தத்துவம் உள்ளது.
ஒரு இயக்கம் வள்ளற் பெருமானுக்குக் கிடைத்தது. அவருக்கு, “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற மகா மந்திரம் ஆண்டவரால் வழங்கப்பட்டது.
சன்மார்க்கிகள் ஏன் இறக்கின்றனர் ? அருள் இயல் காரியப்படவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று உணர்ந்தோம்.
“புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே” என்கிறார் வள்ளலார்.
நம்மிலே எத்தனை பேர் இதனை வேண்டிப் பெருகின்றோம் ? அல்லது பெற முயல்கிறோம் ?
பாபநாசத்தில், 1994ஆம் ஆண்டிலிருந்து, அன்னதானப்பணி எங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், வடலூருக்குச் செல்லும் போதெல்லாம் வருடந்தோறும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யும் பரோபகாரப் பணியினை நாங்கள் மேற்கொள்கிறோம். அதனைத் தக்க நபர்கள் மூலம் நிறைவேற்றுகின்றோம்.
தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் என்கிறார் வள்ளற் பெருமான். இதனைப் பாடினாலே, எங்களுக்குள் ஒரு முழு வீச்சான இயக்கம் (it creates vibration) கிடைக்கிறது. சத் விசாரம் செய்தாலே, வள்ளற் பெருமானே எல்லா விளக்கம் கிடைக்க அருள் செய்வார். வள்ளற் பெரு நெறியினை ஆய்வு செய்யச் செய்யப் புதுப்புது விளக்கங்கள் கிடைக்கும். எனவே தயவு நெறியையும், ஜீவகாருண்யத்தையும் அன்பர்கள் விடாது மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட விதத்தில், சுவாமி தர்மலிங்கம் அவர்கள் தனது உரையினை நிறைவு செய்தார். அவரது உரை, மற்றும். தம் வாழ்வில், அடைந்த நேரடி அனுபவம், தாம் சார்ந்திருந்த முந்தைய நெறியினைக் காட்டிலும், வள்ளற் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி எவ்வாறெல்லாம் உயர்ந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டிய விதம் மற்றும், ஜீவர்கள் எல்லாம், புண்ணியத்தைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகியவை அனைத்துமே, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் ஒரு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
தர்மலிங்க சுவாமிகளைப் பற்றி ஒரு சிறிது இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர், 2007ஆம் ஆண்டில், மலேயாப் பல்கலைக் கழகத்தில் 25.5.2007 முதல் 27.7.2007 வரை நடைபெற்ற உலக சித்தர் முதல் மாநாட்டின் கலந்து கொண்டு வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி குறித்து, விரிவான விளக்கம் அளித்தார். அது ஒரு சித்தர்கள் பற்றிய மாநாடாக இருந்ததால், வருகை தந்திருந்த அனைவரும், சித்தர்களைப் பற்றிப் பேசிய போதும். இவர், வள்ளற் பெருமானின் ஒழுக்க நெறி எவ்வகையால், எல்லா நெறிகளிலும் சிறந்தது, மனித குலம் மாண்படைவதற்கு வள்ளற் பெருமானால் என்ன சொல்லப்பட்டது என்ற விவரங்களை எல்லாம் அங்கு விளக்கினார்.
உண்மையில் சொல்லப் போனால், கேள்விப்பட்ட வகையில், சித்தர் மாநாட்டில், எக் காரணத்தைக் கொண்டும் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டு விட வேண்டாம் என்று, அங்கு மாநாடு நடத்திய அன்பர்களாலேயே கேட்டுக் கொள்ளப்பட்டவர் இவர்.
ஆனால், கிட்டத்தட்ட 132 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஒருவருமே வள்ளற் பெருமான் வடித்த சுத்த சன்மார்க்க உயர் நெறி பற்றிப் பேசவே இல்லையே என்ற ஆதங்கத்தில், மற்ற நாதாந்த போதாந்த சித்தாந்த etc., etc., நெறிகளைக் காட்டிலும் எந்தெந்த வகையாலெல்லாம் வள்ளற் பெருமான் இவ் வுலகிற்குக் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி உயர்ந்தது என்பதை, ஒரு வரை படத்தின் மூலம் (Flex Banner) இவர் அம் மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் மேடையிலேயே விளக்கிக் காட்டினார். இதுவரை தோன்றிய ஞானிகள் எல்லாம் அடைந்த நிலை ஒரு கட்டம் வரை (Gone upto certain stage and stopped) போய் பின்னர் நின்று விட்டது. ஆனால் வள்ளற் பெருமான் காண்பித்த புதிய நெறி, எல்லா அந்தங்களையும் தாண்டி, மேலே சென்று, யாரும் சொல்லாத நெறியாக, எல்லோரும் எளிதாக அடையத்தக்க வழி தொகைகளுடன் கூடிய நெறியாக உயர்ந்து நிற்கின்றது என்பதை விளக்கிக் காட்டினார்.
தமிழ் நாட்டிலிருந்து குறிப்பாக வடலூரிலிருந்தும், அம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மூத்த அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம், சொல்லத் தவறிய, வள்ளற் பெருமானைப்பற்றிய தகவல்களை, இவர் மேடையில் வள்ளற் பெருமானின் அருள் துணை ஒன்றையெ மனத்தில் கொண்டு அரங்கேற்றினார். மூத்த அறிஞராக இன்றளவும் தமிழகத்தில் பாராட்டப் படுபவர் எல்லாம், தாம் பேசிய போது, வள்ளற் பெருமான், சித்தர்களுக்கெல்லாம் சித்தர் என்ற ஒரே வரியுடன் சுத்த சன்மார்க்கத்தின் உயர்வு குறித்துப் பேசாமல், வாயடைத்துப் போனார்கள்.
ஆனால், இவருக்கு பேசுவதற்கு என கடந்த 27.5.2007 அன்று ஒதுக்கப்பட்ட நேரம் (மலேயா நேரம் காலை 9.30 மணி), வெறும் 20 மணித்துளிகளே ஆகும். அதற்குள், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க உயர் ஒழுக்க நெறி, அதனால் இம் மனித குலம் அடையப் பெறும் சாகாக் கல்வி, பராபரை வெளி அதற்கு மேல் உள்ள வெளி, என்ற உயர்ந்த தகவல்களை எல்லாம் - அந்த மேடையில், இவரைத் தாக்கிய ஆட்சேபணைகளை எல்லாம் - தூக்கி எறிந்து விட்டு -இவர், 0.35 நிமிடம், அங்கு விரிவாக விளக்கிக் கூறினார்.
அடுத்தாற்போல், இவர், மலேயாவில், சுங்கைப் பட்டானி என்ற நகரில் இயங்கி வரும் அருட்ஜோதி நிலையத்தில் வள்ளற் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி குறித்து அடிக்கடி, சொற்பொழிவு ஆற்றும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில், 28.6.2008 மற்றும் 29.6.2008 ஆகிய இரு நாட்களில் மலேயாவில் நடைபெற்ற வள்ளலார் மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார். எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே, எந்தை நினதருட் புகழை இயம்பியிடம் வேண்டும் என்ற இவரது எண்ணக் கிடக்கை அனைவருக்கும் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இம் மாநாட்டில் இவர் ஆற்றிய உரை www.vallalarspace.com இணைய தளத்தில் கேட்கக் கிடைக்கின்றது. விரும்பும் அன்பர்கள் அதனைக் கேட்டு இன்புறலாம். மலாயாவில் 2008 ஜூன் 28, 29 தேதிகளில், நடைபெற்ற வள்ளலார் மாநாட்டில் இவர், உரையாற்றிய போது எடுக்கப் பட்ட புகைப்படமும், பாபநாசத்தில் அவர் 2.8.2008 அன்று மாலை உரை நிகழ்த்திய போது எடுக்கப்பட்ட புகைப்படமும், 2008 ஜூலை மற்றும், 7.8.2008 ஆகிய நாட்களில் சுங்கப் பட்டானி அன்பர் டாக்டர் திரு விநாயக மூர்த்தி அவர்களால் www.vallalarspace.com இணைய தளத்தில், post செய்யப்பட்டுள்ளது.
வடலூரிலிருந்து இங்கு வந்து கலந்து கொண்ட 4 அன்பர்களில், ஒருவரரன (பணி ஓய்வு பெற்ற) சன்மார்க்க அன்பர் திரு ராமலிங்கம், மனித உடலின் தத்துவங்களை அவை உள்ள இடங்களையும், ஃப்ளெக்ஸ் பேனர் மூலமாக விளக்கம் கொடுத்தார்.
மேலும், அவர், வள்ளல் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை எல்லா அன்பர்களுக்கும் எடுத்துரைத்தார்.
திரு கண்ணன், திருக்குறள் மன்றம், விழுப்புரம்.
இவர், தனது உரையில், கம்பரும், இளங்கோவும் சொல்லாத சுத்த சன்மார்க்க நெறியினை வள்ளல் பெருமான், உலகில் பரப்பினார்.
அகத்தே கருத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர்அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
என்று திரு அருட்பாவில் வள்ளற் பெருமான் பாடுவார். உழை – உயர் – உதவு என்பதே அவரது கொள்கைகள் ஆகும்.
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
எனவும்,
ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழித்தனன் அப்போது
நான் தானோ அவர்தானோ அறிந்திலன்முன் குறிப்பை
ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் ஆங்கே
உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
ஆங்காரம் ஒழி என இந்த திரு அருட்பா பாடலிலே சொல்கிறார்.
விவேகானந்தர், Man is the instrument of God என்று சொன்னார். வள்ளற் பெருமான் சொன்ன சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
முழுதும் ஆனான்என ஆகமவேத
முறைகளெ லாமொழி கின்றமுன் னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ்ஜோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
என்றெல்லாம் வள்ளல் பெருமான், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எப்படியெல்லாம் தொழுது ஏத்த வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றுள்ளார். எனவே, இந்த சன்மார்க்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட் அனைத்து அன்பர்களும், வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழி நின்று, கழிபேருவகை அடைய வேண்டும் என அவர் தனது உரையினை முடித்தார்.
3.8.2008 அன்று அதிகாலை சுமார் 5.00 மணிக்கே அன்பர்கள் அருட்பெருஞ்ஜோதி அகவலினை பாடி, கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இறை அருள், பட்டி வீரன் பட்டி
வள்ளல் பெருமான், புலால் மறுக்கச் சொல்லியுள்ளார். குடும்பத்தில் அனைவருமே, சுத்த சன்மார்க்கத்தின் முதற் படியாகிய புலால் மறுத்தலைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். சைவம் சார்ந்தால் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் குறையும். நோய்கள் குறையும்.
அதன் பின்னர், அன்பர் திரு சந்திர சேகரன், (ஆசிரியர், செளராஷ்ட்ரா உயர்நிலைப்பள்ளி, மதுரை) பேசினார்.
அவர், வள்ளற் பெருமான் வகுத்த நெறியினை அன்பர்கள் எல்லோரும் இலகுவாகத் தெரிந்து கொள்ளும் வகையில், திரு அருட்பா பாடல்களையும், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் “தயவு” பெருநெறி பற்றியும் மிகவும் விரிவாக எடுத்துரைத்தார். அனைத்து சன்மார்க்க அன்பர்களும் வள்ளல் பெருமான் சொன்ன அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தின் சுருக்கம்தான் “தயவு” ஆக வெளிப்பட்டுள்ளதை உணர வேண்டும். சிரநடுச் சிற்றம்பலத்திலே விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை சதா நினைத்துக் கொண்டே நாம் அகவிழிப்பு சற்றும் குறையாமல் புற உலகியல் காரியங்களைச் செய்து கொண்டே இருந்தால், நாம் செய்யும் பரோபகாரப் பணிக்கும் நமது பக்குவத்துக்கும் தக்கவாறு, ஆண்டவரின் தயவு நமக்குக் கிடைக்கும். திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் “தயவு செய் – செய் தயவு” என்று அடிக்கடி சொல்வார்கள்.
வள்ளல் பெருமான், உபதேசப்பகுதியில், சிறு நெருப்பைக் கொண்டு பெரு நெருப்பினை உண்டாக்குவதுபோல் சிறு தயவினைச் செய்து, ஆண்டவரிடம் பெரிய தயவு கிடைப்பதற்கு, நாமெல்லாம் காரியப்பட வேண்டும் என்றார்.
பின்னர், சமீபத்தில் வெளியிடப்பட்ட சுத்த சன்மார்க்கப் பதி வருகை என்ற நூலில் உள்ள 4ஆவது பாடலின் பொருளை, அன்பர்களுக்கு, அந்தப் புத்தகத்தைப் பார்த்து, படித்துக் காண்பித்தார். அனைவரும் அதன்படி நடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மதுரை நாராயணபுரத்திலிருந்து கலந்து கொண்ட அன்பர், வள்ளலார் ஸ்பேஸ் டீம் என்ற முறையில், www.vallalarspace.com என்ற இணைய தளம், அமெரிக்காவில் வசிக்கும் திரு செந்தில் மருதையப்பனாலும், சிங்கப்பூர் வாழ் திரு சிவக்குமாராலும் Temple of Grace Light USA மற்றும் www.vallalar org foundation ஆகியவற்றால், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கப்பட்டதென்றும், கடந்த 4 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 27.000 சன்மார்க்கிகள் இந்த இணைய தளத்தைப் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் இதனைப் பற்றி மேலும் தெரிவித்த தகவல்கள் வருமாறு
|
1.
|
உண்மையில் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கப் பணிகள் செய்யும் சங்கங்கள், தனி நபர்கள் ஆகியோருக்கு இலவசமாக Space directory யில் இடம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
|
|
2.
|
இதுவரை இந்தியாவில் சுமார் 13 சங்கங்கள் மற்றும் தனி நபர்களும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை, அமெரிக்கா, போன்ற வெளி நாடுகளில் வாழும் 12 பேரும் இணைந்துள்ளனர்.
|
|
3.
|
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் ஒலிக்கின்றது
|
|
4.
|
30 தினங்களில் நடைபெற உள்ள தகவல்கள், முன்கூட்டியே இதில் பார்த்துக் கொள்ளலாம். (upcoming events)
|
|
5.
|
வள்ளல் பெருமானின் நெறி, இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த உலகத்தில் உள்ள கிட்டத்தட்ட 25 மொழிகளில் translate செய்து பார்ப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது
|
|
6.
|
திரு அருட்பாவினை பதிக அடிப்படையிலும், பாட்டு முதற்குறிப்பகராதி வகையிலும், உடனே பார்க்க வசதி உள்ளது. இலவசமாக, திரு அருட்பா உபதேசம் மற்றும் நூல்கள் ஆகியவற்றை டெளன்லோடு செய்து கொள்ளலாம்.
|
|
7.
|
சங்கங்களிலே நடந்த நிகழ்ச்சி, போட்டோ, ஆடியோ, வீடியோ முதலானவற்றை இதில் அந்தந்த சங்கங்களே post செய்யும் வசதி உள்ளது.
|
|
8.
|
தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் செய்திகள் / கட்டுரைகள் படிக்கலாம்
|
|
9.
|
சுத்த சன்மார்க்கத்தில் சந்தேகங்களை மூத்த சன்மார்க்கிகளின் மூலமாகத் தெளிவு செய்து கொள்ளும் பகுதி உள்ளது.
|
|
10
|
Vallalar Space Radio (test) அவ்வப்போது திரு அருட்பாவினை இசைக்கிறது
|
|
11.
|
வெளியிடப்பட்ட செய்தி குறித்த ஐயப்பாடுகளைத் தீர்ப்பதற்கும் வசதி உள்ளது.
|
|
12.
|
எங்கும் சத்திய ஞான சபை கட்டினால் அதற்கென வடலூர் சத்திய ஞான சபை மாதிரி வரைபடம் இவ் விணைய தளத்தில் உள்ளது.(Sathiya Gnana Sabai Model plan blue print)
|
|
13.
|
திரு அருட்பா ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வதற்கென ஒரு ஸ்பேஸ் உள்ளது.
|
|
14.
|
இம் முயற்சிகள் எல்லாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு (Universal Brotherhood) அகில உலக சகோதரத்துவம், உலகில் உள்ள எல்லாத்தரப்பு மக்களிடமும் ஏற்பட வேண்டும் என்பதுதான்.
|
|
15.
|
எங்கும் தேடிப் போக வேண்டாதபடி, கணிப்பொறி வீட்டில் இருந்தால், வள்ளல் பெருமானே நேரடியாகவே ஒவ்வொரு வீட்டினுள்ளும் இணைய தளம் வழியாகப் புகுந்து கொண்டு, சன்மார்க்க நெறியினன அனைவரும் இலவசமாகப் படித்து வாழ்வில் கடைப்பிடிக்க வழி செய்கிறது.
|
|
16.
|
திரு அருட்பா ஆடியோ சி.டி. விற்பனை செய்யும் மையங்களின் பெயர்கள் குறித்த விபரம்.
|
www.vallalarspace.com குறித்த ப்ளெக்ஸ் – தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றில் அனைவரும் அறியும் விதத்தில் தொங்க விடப்பட்டிருந்தது. இந்த இணைய தளம் பற்றியும், இலவசமாக பதிவு செய்யலாம் என்ற வகையில் நோட்டீஸ்களும், அடையாள கார்டுகளும், வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
எனவே, உண்மையான சுத்த சன்மார்க்கச் செயல்பாடுகளைச் செய்து வரும் சன்மார்க்க சங்கங்கள், தங்களது செயல்பாடுகளைப் பற்றித் தெரிவித்து, இந்த இணைய தளத்தில் இடம் பெறலாம். இது முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது என அவர் கூறினார்.
அதன் பின்னர், மதுரையிலிருந்து வந்த திரு ஹரி கோவிந்தன் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை அருமையான இசையுடன் அன்பர்களுக்கு விருந்தாகப் படைத்தார். அன்பர்கள், பசி தாகம் மறந்து திரு அருட்பாக்களின் இசை மழையில் நனைந்து, அம் மழை நின்றதும் மயக்க நிலையிலிருந்து எழுந்து, உணவருந்தச் சென்றனர்.
திரு கலியுக வரதன்
நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டது போல, சென்னையில் வருடந் தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், வள்ளல் பெருமானின் திரு அருட்பா மற்றும் உபதேசம், அதுபோல் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்கள், பாக்கள் முதலானவற்றைக் கொண்டு சென்று, வரும் காலத்தில் விற்பனை செய்து, சுத்த சன்மார்க்க நெறி, அனைவருக்கும் வெகு விரைவில் பரவுவதற்கான ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். அதற்கு, சென்னையில் ஒரு ஸ்டால் அமைப்பதற்கு, ரூ.20,000/- வரை கட்ட வேண்டும் என்றார். அந்த ஸ்டாலில் பணி புரிய, சுமார் 4 அன்பர்கள் வர வேண்டும் என்றார். இவ் விதம் செய்தால், மாநிலம் முழுவதிலும் இருந்து அங்கு புத்தகக் கண்காட்சியினைக் காண வரும் மக்கள், திரு அருட்பா மற்றும் தயவு நெறி பரப்பும் நூல்களைப் பெற்றுச் செல்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்றார். தூத்துக்குடி சன்மார்க்க சங்கம் இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு மாவட்டத்தின் கடை கோடியில் கூட்டம் போட்டிருந்தாலும், மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் இருந்தும் அன்பர்கள் இந்த தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழாவில் கலந்து கொண்டு, தூத்துக்குடி அன்பர்களின் கோரிக்கையை ஏற்றது, தாம் அனைவருக்கும் பெருமையாக உள்ளது என்றார். வருடா வருடம், இது போன்றதொரு சன்மார்க்கக் கூட்டத்தினை இனிமேல் தொடர்ந்து நடத்தத் தாம் உறுதி பூண்டிருப்பதையும் அவர் தெரிவித்தார்.
பாபநாசம் நிகழ்ச்சிக்குத் தம் குழு அன்பர்களுடன் திரு கலியுக வரதனும் திரு கணேசனும் சேர்ந்து செய்த இந்த அருமையான பணிகளை அனைவரும் பாராட்டினர். ஏற்பாடு செய்த குழுவினர் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், திரு கலியுக வரதனுக்கு, திரு T.R. ஜவஹர்லால் அவர்கள், பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். அதேபோல், சன்மார்க்க பெரியவர், மதுரை அருகே பரம்புப்பட்டியில் பலகாலம் சர்வ சமய சன்மார்க்க அறநிலைய முதியோர் காப்பகம் நடத்தி சன்மார்க்கப் பணிகளை செய்து வரும் (அன்னதானம்) திரு சு.ம.பாலகிருஷ்ணன் அவர்களும், தூத்துக்குடி செயல்வீரர்கள் சார்பாக, அதன் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், திரு கலியுக வரதனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
ஒவ்வொருவருக்கும் அடையாள பேட்ஜ் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் விற்பனை செய்வதற்கென கும்பகோணம் சன்மார்க்க அன்பர் திரு பாஸ்கர், திரு அருட்பா சம்பந்தப்பட்ட நூல்களை எல்லாம் கொண்டு வந்து, விற்பனை செய்தார்.
புதுச் சேரியிலிருந்து “சாகாக்கலை” ஆசிரியர், தனது அன்பர் ஒருவரை அனுப்பி, அந்த மாதாந்திர பத்திரிக்கையினை விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.
மதுரை ஞானதீபம் ஆசிரியர் மூலமாக, மேற்படி பத்திரிக்கை மற்றும் சுத்த சன்மார்க்கம் குறித்த புத்தகங்கள், ஆகியவற்றுடன், அன்பர்கள் ஜோதி ராமலிங்கம், மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் குறிப்பெடுப்பதற்காக, சிறிய குட்டை நோட்டையும், பால் பாய்ன்ட் பேனாவவயும், விழா நடத்தும் அன்பர்கள், கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக வினியோகித்தனர். அது மிகவும் உபயோககரமாக இருந்ததாக வந்த அன்பர்கள் தெரிவித்தனர்.
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானையும், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளையும் முன்வைத்து, அவர்களிருவரும் சொல்லிச் சென்ற “தயவே இறைவன் தனி உரு காண்மின்” என்னும் வாக்குக்கு செயல் வடிவம் கொடுத்த, தூத்துக்குடி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர், இத்தகைய ஒரு சுத்த சன்மார்க்க இறை இயல் உண்மை சித்திப் பெருவிழாவினை நடத்தி சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, தூத்துக்குடி தவிர, திருநெல்வேலி மாவட்டத்திலும் பரப்பியதன் பலனாக, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தமது தனிப்பெருங்கருணை பாலித்து, தூத்துக்குடி வாழ் மக்கள்பால் தயவுக் கதிர்களைப் பரப்பியதால், தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சி அந்தஸ்து பெற்றது.
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் 5.8.2008ந் தேதி அன்று தாமே நேரில் வந்து, அவ் விழாவினை நடத்திக் கொடுத்தார்கள்.
இது ஒருவகை விசேஷம் என்றால், அமெரிக்காவில் வசிக்கும் திரு செந்தில் மருதையப்பன் அவர்களும் சிங்கப்பூரில் வசிக்கும் திரு சிவக்குமார் ஆகியோரும் சேர்ந்து, அகில உலகும் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளைப் பரப்பி வரும் www.vallalarspace.com இணைய தளத்தில், தூத்துக்குடி சன்மார்க்க சங்கத்திற்கு (allotted space in the space directory of the above website) இடம் ஒதுக்கீடு செய்து தென் மாவட்டங்களில் சன்மார்க்கம் பரவ அரும்பாடு படும் இச் சங்கத்திற்கு, இணைய தள அங்கீகாரம் அளித்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில், அனைவருக்கும் பயிற்சி முகாமின் நினைவாக, “பொதிகை” ஸ்வீட்ஸ் பாக்கட் வழங்கப்பட்டது. இறுதியில் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
இந் நிகழ்ச்சியில் சுமார் 150 சன்மார்க்கிகள் கலந்து கொண்டனர்.
Write a comment