அன்புடையீர்!
இன்று நாம் மூதறிஞச் சன்மார்க்கி திரு. மு.பாலசுப்ரமணியம் ஐயாவை இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
திரு. மு.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் மிகவும் தன்னடக்கம் கொண்டவர்கள், திருவருட்பா அகவல் உரை, ஞானசரியை, அருள்விளக்க மாலை, சற்குருமணி மாலை போன்ற திருவருட்பா பாடல்களுக்கு உரை எழுதியிருக்கிறார். மேலும் பல பாடல்களுக்கு இப்பொழுதும் உரை எழுதி வருகிறார். இவர் வெளியிட்ட ஆன்மீகக் கலைக் களஞ்சியம் என்ற புத்தகம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தைப்பூச விழாவிற்குச் சென்னையில் இருந்து தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
திருவருட்பாவில் எந்த ஒரு பாடலுக்கு பொருள் கேட்டாலும் அதனை விளக்கமாகவும், தெளிவாகவும், எளிய நடையிலும் விரிவுரை வழங்குவார். திரு. மு.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் திருவருட்பா அகவல் பாராயணத்தை தினமும் காலையும், மாலையும் பாராயணம் செய்பவர். மேலும் திருவருட்பா அகவலை பார்க்காமலே படிக்கும் திறன் பெற்றவர். வள்ளல் பெருமானை முழுமுதற் கடவுளாகக்கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு வள்ளல் பெருமானை வழிபடுங்கள், அவர் இயற்றிய திருவருட்பாவை பாராயணம் செய்யுங்கள் என்று அனைவருக்கும் வழிக்காட்டிக் கொண்டிருக்கிறார். இவரை இவருடைய சக அன்பர்கள் சுருக்கமாக மு.பா என்றும் அழைக்கிறார்கள்.
மேலும் இவர் திருவருட்பா அகவல் உரைக்கு வேறு எந்த நூலையும் பார்த்து மேற்கோள் காட்டாமல் திருவருட்பா பாடல்கள் மூலமே ( அனைத்து திருமுறைகள் மூலம்) எளிய நடையில் உரை எழுதியிருப்பது திரு. மு.பா அவர்களின் தனித்தன்மையைக் காட்டும்.
திரு. மு.பா அவர்கள் சுமார் 80 வயதை கடந்தவர். சாதியும், மதமும், சமயமும் பொய் என்ற வள்ளலார் வாக்கிற்கிணங்க இவர் கலப்பு திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய மகனுக்கு வேறு மதப் பெண்ணையே திருமணம் செய்து வைத்தவர். இன்றைக்கு சுத்த சன்மார்க்கிகள் என்று கூறுபவர்கள் கூட அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் சாதி, மதம், இனத்திற்கு முதலிடம் கொடுப்பார்கள், ஆனால் திரு. மு.பா அவர்கள் வள்ளல் வழியில் வாழ்ந்து வரும் ஒரு உத்தம மனிதர் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேலும் வள்ளல் பெருமானார் தான் இயற்றிய எந்த ஒரு பாடலையும் ஓத வேண்டாம் என்று சொல்லவில்லை, அவர் இயற்றிய பாடல்களில் உள்ள ஆழமான கருத்துகளை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு சன்மார்க்க கூட்டத்திலும் பேசி சன்மார்க்க அன்பர்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இன்று வள்ளல் பெருமானார் வேறு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறில்லை, இருவரும் ஒருவரே அதில் எவ்வித ஐயப்பாடும் கொள்ள தேவையில்லை, எனவே வள்ளலாரை வணங்குவோம், வாழ்வோம் என்று அருள் முழக்கமிட்டு வரும் ஒரு உத்தம மனிதர். வள்ளல் பெருமானை தெய்வமாக வணங்குங்கள், அவர் உங்களுக்கு எவ்வித சோதனையும் தர மாட்டார்.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை.....என்று வள்ளல் பெருமானானே கூறுகிறார், எனவே வாருங்கள் வணங்குவோம், வாழ்வோம் என்று கூறி வருபவர்.
“வள்ளல் பெருமானார் இன்று நம்மிடயே ஞான தேகத்தில் இருந்துக்கொண்டு எத்தனையோ அன்பர்களுக்கு அவர்களுடைய உலகியியல் வாழ்விலும், அருளியியல் வாழ்விலும் தாயாகவும், தந்தையாகவும், துணையாகவும், குருவாகவும், தெய்வமாகவும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். இது அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப சரியாக விளங்கும்”. அதற்கு எடுத்துக்காட்டாக திரு.மு.பா. அவர்களுக்கு பல சந்தர்ப்பத்தில் வள்ளல் பெருமானார் துணையாகவும், குருவாகவும், தெய்வமாகவும் இருந்து இன்று அவர் மூலம் நமக்கும் பல அரியச் செய்திகளையும் அள்ளித் தருகிறார் என்றால் அதுவும் மிகையாகாது. திரு. மு.பாலசுப்ரமணியம் ஐயாவின் கட்டுரைகளையும், புத்தகத்தையும் வள்ளலார் ஆர்க்- www.Vallalar.org என்ற இணைய தளத்திலும், மற்றும் நம்முடைய வள்ளலார் ஷ்பேஸ் http://www.vallalarspace.com/mupa என்ற தளத்திலும் காணலாம்.
மேலும் ஐயா அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா,மற்றும் கர்நாடகாவிலும் வெளிநாடுகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியை பல சொற்பொழிவுகள் மூலம் பரப்பி வருகிறார்கள்.
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
*************
ஐயா,
நிறைய கட்டுரைகள், பதில்கள் அளித்து வருகிறீர்கள், எனவே சன்மார்க்க அன்பர்களும், புதிதாக இந்த இணையத் தளத்தை பார்ப்பவர்களுக்கும், மு.பா என்றால் யார்? என்று தெரியாதவர்களுக்கும் இக்கட்டுரை பயனளிக்கும் என்று நம்புகிறேன். மேலும் வள்ளல் பெருமானார் உங்களைப்போன்ற சான்றோர்கள் வாயிலாகவும் நிறையப் பணிகளை செய்து வருகிறார்.
நீங்கள் அடைந்த இன்பத்தைப்போல், சுகநிலையைப்போல் இளைய சமுதாயத்தினரும் சுத்த சன்மார்க்கத்திற்கு வந்து அத்தகைய நிலையை அனுபவிக்க வேண்டும். அவர்களுக்கெல்லாம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளல் பெருமானார் ஞானத்தை தந்து கருநெறியை விடுத்து அருள்நெறியை உலகெலாம் பரவச் செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கலாம்.
அதற்கான செயல்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆட்டுவித்தால் ஆடுகிறேன்! என்னால் ஆவது ஒன்றுமில்லை.
நன்றி!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி