Vallalar Universal Mission Orphange Homes
129. எட்டு இரண்டு – முதற்படி

( உரைவிளக்கம்)


எட்டும் இரண்டும் எண்ணிக்கையாக அல்லது எண்ணாக இருப்பது எவரும் அறிந்ததே. ஆனால் மெய்ஞ்ஞான அனுபவத்தில் இவற்றின் உண்மையும் விளக்கமும் பற்றி ஒரு சிலரே அறிவர். அதுவும் ஒருவன் எந்த அளவுக்கு அருள் உணர்வு பெற்றுள்ளாரோ அந்த அளவுக்கு உண்மை விளங்குவதாயிருக்கிறதாம். இங்கு, எட்டும் இரண்டும் இயலு முற்படியாயுள்ளதெனக் குறிக்கப்படுகின்றது. இயலு முற்படி என்றால், ( அருளியல்) அக அனுபவத்திற்கு ஆதாரமாய், முதல் நிலையாய், உள்ளதென்பதாம். இவ்வுண்மையை நம் வள்ளலார்க்கு அருட்பெருஞ்ஜோதியே அருளியதாம். அதுவும் அட்டநின்று அருளியது எனப்படுகின்றது. அட்டம் என்பது மேலான, மனோவாக்குக்கு எட்டாது சுத்த அருட்ஜோதி நிலையினின்று திருவருளால் உணர்த்தப்பட்டது என்பதாம். அருளால் உணர்த்தப்பட்ட, எட்டும் இரண்டும் என்பதன் உண்மையை நாமும் அறிய வேண்டியுள்ளது. அதற்குத் திருவருள் துணையை வேண்டுவோம். அதுவே உணர்த்துகின்ற உண்மை இதுவாம் எட்டு – அகரமாய், ஆகாச நிலையாய், பரமாகாச சொரூபியாகிய கடவுள் வடிவாய் எங்கும் நிறைந்ததாய் உள்ளதாம். இரண்டு உகரமாய், வான்வெளி நிரம்பிய காற்றின் கூறாய் கடவுளின் சத்தியாகிய, அருள் ஆற்றலாய் இருந்து யாவுமாய் விளங்குகின்றதாம். எட்டு புறப்பொருள் எல்லாமாய் உருவாகித் தோன்ற; இரண்டு அகநின்ற ஆற்றலாய் இருந்து செயல் படுத்துகின்றதாம். இது அணுமுதல், அண்ட வடிவுகளிலும், சிறிய உயிர்ரி ( அணுஜீவன்) முதல் பரமஞானியின் அக உணர்வு வரையிலும் , அகர உகர உண்மை கொண்டே விளங்குகின்றனவாம். உண்மையுணர் நிறைமனிதனில், அகரம் எண் சாண் உடலாயிஉர்க்க, உகரம் ஈருயிர்ச் செயலாய், விளங்குகின்ற தாம். அக அனுபவத்தில் , “ எட்டும் இரண்டும் இலிங்கமதாமே” என்பதுகொண்டு , இந்த எட்டும் இரண்டும் சேர்ந்து பத்து ஆகி நம் கடவுள் ஆன்மவடிவாய்த்திகழ்வதாம். கடவுள், எட்டாகிய அகரவடிவமாய் இருக்க, மனிதனின் ஆன்மத்தன்மையாம், உணர்வு இரண்டாகிய உயிர் உணர்வாய், அவ்வகரத்தோடு கூடிப் பிரிவற வுள்ளதாம். இதனால் இரண்டே கடவுளின் அருட்சத்தியாகிய, நம் உணர்வாய் இருந்து , அக்கடவுளையே உணர்கின்றதாம். இந்த ஆன்மா கடவுளோடு இரண்டற இருந்தாலும், தான் அருள்ஞான உணர்வு பெறாதவரை, பொறியுடம்புணர்வுகொண்டு இருக்கும் வரை, தன்னை கடவுளுக்கு அன்னியமாகவே கண்டு உழன்று கொண்டிருப்பதாம். தேகப் பற்றற்று உள்ளொளி மயமாகி நிற்கும்போதுதான் உண்மை அனுபவம் பெறுகின்றான் மனிதன் . இந்த அபக்குவிகளைக் குறித்தே, “ எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே” என்று கேட்கின்றார் நமது ஞானசித்தர் அருட்பிரகாசர்”


மேற்படி எட்டும் இரண்டும் இரண்டும் தான், உலகமெல்லாம், உயிரெல்லாம் தோற்றுவிக்கபடவும், விளக்கம் செய்யப்படவும், முடிவில் அருளனுபவ அற்புதச் சித்திகொண்டு வாழவும், அடிப்படையான காரண காரியமாய் இருக்கின்றனவாம். இந்த ஆதாரத்தின் பேரில் பிரபஞ்ச காரியப்பாடு நடந்து கொண்டுள்ளது, அகரமாகிய அணு, உகர அகச் சிற்றசைவினால் ( மின்காந்த விசையால்) விளங்கி நின்று, எவ்வளவோ காலத்திற்குப்பின் அவ்வகச் சக்தி உயிர்சக்தியாகி வெளியுறும் தருணம், சூழ்நிலையை ஒரு புல்லாதி உயிரின வடிவாய் ஆக்கிக்கொண்டு விளங்குவதாம். அவ்வுயிர் வடிவில் அகச்சத்தியே புலன் உணர்வாய் இருந்து பெருகி , மனிதப் பிறப்பில் ஐம்புலன் உணர்வுக்கு மேல் ஆறாவதான மனோ அறிவாய்த் திகழ்கின்றாதாம். மேலும், பக்குவ மனிதனில் மனமும், சகல கேவலமற்ற சுத்தநிலையில் அருள்ஞானமாக விளங்குகின்றதாம். இந்த அருள் ஞானத்தாலேதான் அகமெய்ப்பொருளாம் கடவுள் உண்மையை அறிந்து அனுப்வத்திற் கொள்ள முடிவதாம். இந்த அருள் அனுபவம்தான் அருட்பெருஞ்ஜோதியாய் பெறப்படுவது; மற்று கீழான அனுபவம் பெறுவிக்கச் செய்யும் விளக்கமும் , பொருளும் கொள்ளற்பாலன அல்லவாம்.


அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா …..