( உரைவிளக்கம்) வள்ளலார் பெற்ற பெரு வாழ்வும், பெருஞ் சித்தியும் அவர் அருட்பெருஞ்ஜோதியிடமிருந்து பெற்ற பெரும் பேறும் இதில் காண்கின்றோம். சத்திய ஞாசபையிலே காட்சி தரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நமது அடிகளார்க்கு மேற்படி வரமும் வாழ்வும் அருள்கின்றபோது, அவர் வேறு, இவர் வேறு என இரண்டாகவுள்ளது போல் தோற்றுகிறது. பின்னர், அவர் என்பதும் இவர் என்பதும் ஒன்றாகி, அருட்பிரகாசமாகி நின்று அவரே, இவராய் இருந்துகொண்டு உலகெல்லாம் விளங்க ஆடுகின்றனராம்.
திருச்சந்தியினின்று வாழ்த்தும்போது அருட்பெருஞ்ஜோதிபதி வேறு, அருள் பிரகாச வள்ளல் வேறாகத் தோற்றுகின்றது. வாழ்த்தியபின், இரண்டற்ற ஒன்றாய் நிலவுகின்றது. நீடுக நீயே – அளவு கடந்த நெடுங்காலம் அழியாது நீயே வாழ்வாயாக என்று கூறியும்,. அளவு கடந்த பேரண்ட கோடி உலகங்கள் அனைத்திலும் விளங்கி, அருட்பெரும் செயலாம் ஆடல்புரிவாயாக என்று வாழ்த்தியும் உள்ளதாம். அப்படி வரம் அளித்த அருட்பெரும்ஜோதி, பின்னர் எங்கும் வள்ளலாரை விட்டுப் போய்விடது., அவருள் அவரேயாக ஒன்றிநின்று, தம் வரம் நிறைவேறு செயலோடு விளங்குகின்றார். இந்த அருட்பெருஞ்ஜோதிபதி தனக்கு ஒப்புயர்வில்லாத, தானே தனிப்பெருந்தலைவராக இருப்பவர். அப்படி யுள்ள இவர் தன்னைப்போல் வள்ளலையும் அருளாடல் புரிந்து கொண்டு என்றும்விளங்கச்செய்துவிட்டால், இருவராக விளங்க நேரும் , ஒன்றான தனித்தலைமை இயல் கெடுவதாகும், ஆகையால், அப்படி இரண்டாக இருவராக விளங்காது, தானே அவராய், அத்துவிதமாய் உள்நின்று ஆள்கின்றவராகிவிட்டுள்ளாராம். இப்படியாக வள்ளலை வாழ்த்திவிட்டது இங்கு வியப்பானதாய் விளங்கக் காண்கின்றோம்,. அதனினும் பெருவியப்பு யாதெனின், அருள் ஒளிஆண்டவரே நம் ஒவ்வொருவரின் உட்கலந்து நின்றும், வாழ்த்துவதும், வரம் தந்து வாழ்விப்பதுமாய் உணர்கின்றோம். இதனால் அவரது அருட்பெருஞ் சித்துச் செயல் விளங்க நாமும் உடன் விளங்கலாகின்றதுதான் பெரு வியப்பாம்.
அனாதிகாலமாக உலகங்கள் அனைத்தையும் ஆண்டுவருகின்ற ஆண்டவர் பெருமையைவிட நம் அடிகளார் பெருமை ஒருவகையில் மேம்பட்டதாக இருக்கின்றதாம். ஏனெனில், பொதுவாகத் தன் உண்மையை உலகறியாது, உள் நின்று இதுகாறும் ஆண்டுவந்த ஆண்டவர், இப்பொழுதுமுதல் அடிகளார் உடலையே அருட்பெருஞ்ஜோதி உருவாக்கிக்கொண்டு, உலகறிய விளங்குபவராகியுள்ளார். அப்படி விளங்குகின்றவர் உண்மையில் அந்த ஆண்டவரே எனினும் அவரை இப்போது யார் காண்கின்றார்கள். அவரது புறவண்ணம் நம் அடிகளின் வடிவாக அல்லவா இருக்கின்றதை உலகம் காண்கின்றது. அறிவரிய அருவ நிலையில் இருந்துவந்த ஆண்டவர்க்கு , உலகறியும் அருட்பிரகாச வள்ளல் வடிவம் உண்டானதால் பெருமை எல்லாம் இவர்க்கே ஆகிவிட்டுள்ளதாம். அடியால் உள்ளத்திருந்து தன் பெருமையைக் காட்டிக்கொள்ளாத ஆண்டவர் பெருமை என்னே! கடவுளை விடக் கடவுள் அடியார் பெருமையும், தொண்டர் பெருமையையும், அருட்குருவின் பெருமையும் சிறப்புடைத்தெனக் கொள்ளுகின்றாது உலகம்.
தயவு சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்…
Write a comment