வள்ளுவர் வள்ளலார் மன்றம்(Valluvar Vallar Mandarm)
வடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள், வடலூர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கீழ் உள்ள நிலையமாகும். மேற்படி நிலையத்திற்கு சொந்தமான பரந்த இடத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான மாற்றுக்கொள்கை கொண்ட சாதி, சமய, மத, மார்க்கத்தார்களின் கூட்டம், மாநாடு, காட்சியகம் நடத்த அனுமதியளிக்க போவதாக நம்பகத்து செய்திகளை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.

வள்ளலாரின் நெறியானது ஒரு தனி பொது நெறியாக விளங்குகிறது.
அவை;
• சாதி சமயம் மதம் பொய்
• சமய மத மார்க்கங்கள் சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத்தடைகள்
• சமய மத மார்க்கங்களின் சங்கற்ப விகற்பங்கள் மனதில் பற்றக்கூடாது
• புராணங்கள் இதிகாசங்களில் லட்சியம் கூடாது
• வேதாந்தி சித்தாந்தி என்றுப் பெயரிட்டுக் கொண்டவர்கள் உண்மையறியாது சமயவாதிகளை போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள் ஆதலால் நீங்கள் அதை ஒன்றையும் நம்ப வேண்டாம்
• சாதி சமய ஆசாரங்களை விட்டொழிக்க வேண்டும்
• இப்போது வருகிற நமது கடவுள் சமய சாத்திர புராணங்களில் வருவதாக சொல்லப்பட்ட ஏற்பாட்டு கர்த்தர்களோ, கடவுளரோ, ஞானியோ, தலைவர்களோ இவர்களில் ஒருவரல்ல
• சாதி சமய மதங்கள் காணா ஆண்டவரை தான் நான் கண்டேன் என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார்

இங்ஙனமாக, இங்ஙனமாக மட்டுமே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி விளங்கும் போது, சமய, மதத்தார்கள் சாதி சரியென்றும், தெய்வங்களை உருவத்திலும், லிங்கவடிவத்திலும், அவர்களின் ஆசார சடங்குகள் செய்வதற்கும், அவர்களின் மார்க்க நெறியை பரப்புவதற்கும் வள்ளலாரின் நிலைய இடத்தையே கொடுப்பது வள்ளலாரின் கொள்கையை அழிக்கும், மறைக்கும் செயலாக அமையும்.
இது, திரு இணை ஆணையரின் மற்றும் திரு ஆணையரின் ஆணைகளுக்கு எதிராகவும், நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்திரவுக்கு எதிராண செயலாகவும் அமையும் நிலுவையில் உள்ள வழக்கின் எதிரியின் கூற்றுக்கு இந்த அனுமதி வலுவை சேர்க்கும் என்பதை ஏன் நீங்கள் கருத்தில் கொள்ளவில்லை.

நிலைய ஸ்தாபகரின் நெறியை பரப்ப எந்தொரு நடவடிக்கைக்கும் ஏற்பாடு செய்யாமல், வள்ளலாரின் நெறிக்கு முரணான சமய மதத்தாருக்கு அவர்கள் நெறி பரப்ப நிலைய இடத்தை கொடுக்க வருவது இந்திய அரசமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எங்கள் உரிமை தடுக்கும் குற்றச்செயலாகும்.
திருவருட்பிரகாச வள்ளலாரின் தனி நெறி இன்று மிக வேகமாக பரவி வருவதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம். இந்த நெறி பரவக்கூடாது என்று சதி செயல்களில் சமய மத பற்று வெறி கொண்டோர் பல வழியில் முயற்சித்து வருவதும் மீண்டும் சமய சடங்குகளை சத்திய ஞானசபையில் புகுத்திவிடவும் பல முயற்சிகளை சமய மத அன்பர்கள் முயற்சித்து வருவதை தங்களுக்கு பல முறை நேரில் நாங்கள் சொல்லிவருகிறோம். நிலையங்களில் நடைபெறும் விழா மேடைகளில் சமய மதப் பற்றுள்ளவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எங்களின் நீண்ட விண்ணப்பத்தினையும் கடந்த மார்ச் மாதம் இணை ஆணையருக்கு அனுப்பி உள்ளோம். நிலுவையில் உள்ளது.
மேலும், தெய்வ நிலையம் சரியான முறையில் வள்ளலாரின் நெறி அடிப்படையில் பராமரிக்கப்படவில்லை. எனவே இந்து சமய அற நிலைய ஆட்சித் துறையிடமிருந்து நிலையத்தை எடுங்கள் என்போரின் கூற்று, சமய மத செயலுக்கு நிலைய இடத்தை கொடுத்தால், அது உறுதியாகிவிடும்.

• உங்களால் பராமரிக்கப்பட்டு வரும் சைவ சமய கோயில் இடத்தில் வைணவ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுப்பீர்களா?
• பழனி மலையை வேறு ஒரு மதத்தினரின் சடங்குகள் அல்லது அம்மத காட்சியகம் அமைக்க அனுமதி கொடுப்பீர்களா?
• திருசெந்தூர் கோயில் அருகில் பரந்து கிடக்கும் கடற்கரை பகுதியை இஸ்லாம் கிறிஸ்து மதத்தாரின் கூட்டங்களுக்கு அனுமதிப்பீர்களா?
• திருச்சி =ரங்க கோயிலின் பரந்த இடத்தை பலி கொடுக்கும் பழக்கம் கொண்ட மார்க்கத்தார்களுக்கு கூட்டம் நடத்த அனுமதிப்பீர்களா?

எதற்காக இப்படி கேட்கிறோம் என்றால் இங்ஙனமாக சுட்டி காட்டினால் அன்றி வள்ளலாரின் நெறி தனி நெறி என்று, மாறி மாறி வரும் நிலைய நிர்வாகிகள் செயல் அலுவலர் அறியாமல் உள்ளதினால் தான்.
”சுத்த சன்மார்க்கம்” என்பது;
உலகில் காணும் சமய மத சன்மார்க்கங்களை மறுக்க வந்தது.
“சுத்த சிவம்” என்பது;
சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது என்கிறார் வள்ளலார்
திருவருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்திற்கென இருக்கும் ஒரே இடம் வடலூர் மட்டுமே. இப்படி இருக்கையில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை உள்ளது உள்ளபடி உலகத்தாருக்கு வெளிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் நிலையத்தை பரமாரித்து வரும் இந்து சமய அற நிலைய ஆட்சித்துறையிடமே உள்ளது.
இந்திய அரசமைப்பு சட்டம் உறுப்பு 23 – 28 ல் உள்ளதையும் இதுவரை தாங்கள் உத்திரவிட்ட ஆணைகளையும் கடந்த கால நிகழ்வுகளையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்பு உலகில் தோன்றியுள்ள ஒரு புதிய நெறியாம் வள்ளலாரின் தனி சுத்த சன்மார்க்க நெறியையும் கருத்தில் கொண்டு செயல்படுமாறு மிக்க பணிவுடனும் எங்களுக்கு உள்ள உரிமை அடிப்படையிலும் இந்த விண்ணப்பத்தினை வைத்து வேண்டுகிறோம்.

பெறுநர்:

உயர்திரு அரசு செயலாளர் அவர்கள்,
இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை
மற்றும் சுற்றுலாத்துறை,
தலைமை செயலகம், சென்னை 9

உயர்திரு ஆணையர் அவர்கள்,
இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை,
நுங்கம்பாக்கம், சென்னை -34

உயர்திரு இணை ஆணையர் அவர்கள்,
இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை,
விழுப்புரம்

உயர்திரு செயல் அலுவலர் அவர்கள்,
திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்,
வடலூர்

மதிப்பிற்குரிய அய்யா,

திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள், வடலூர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கீழ் உள்ள நிலையமாகும் இந்த நிலையத்தின் வருவாயை இந்த நிலையத்திற்கும் வள்ளலாரின் நெறி பரப்புவதற்கும் பயன்படுத்தப் படவேண்டும்.
மேற்படி நிலையத்திற்கு சொந்தமான பரந்த பல ஏக்கர் இடத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படையில் மற்றும் ஜீவகாருண்ய அடிப்படையில் கீழ்வரும் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுகிறோம்.

1. திருஅகவல் திரு விண்ணப்பங்கள் நான்கு 28 பாசுரப்பாடல்கள் சுத்த சன்மார்க்கத்தார்கள் வாசிக்க மெல்லனெ துதி செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது சத்திய ஞான சபை முன்பு முன் அனுமதி பெற்று நடைபெற அனுமதிக்க வேண்டும். வெளியூர் மன்றங்கள் குழுக்களாகவும், தனியாகவும் அனுமதிக்கலாம் இதற்கென கட்டணமும் வசூலிக்கலாம்.

2. ஜீவகாருண்ய அடிப்படையில் வள்ளலாரால் கண்டு வெளிப்படுத்தப்பட்ட மூலிகைகள் கொண்ட ஒரு நிலையம் ஆரம்பிக்க வேண்டும்.

3. தருமசாலையில் நடைப்பெற்று வரும் அன்னதான சேவையை விரிவுபடுத்த வேண்டும்.

4. அநாதை முதியோர் இல்லத்தை நல்ல முறையில் நடத்த கட்டிடம், மருத்துவ வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்க எடுக்க வேண்டும்.

5. கைவிடப்பட்ட மற்ற உயிர்களை பாதுகாத்து பராமரிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

6. வள்ளலாரின் கட்டளைபடி சுத்த சன்மார்க்கப் பாடச்சாலயை ஏற்படுத்துதல் வேண்டும்.
நிலையங்களில் தொடர்ந்து வாசிப்பு நடைப்பெறல் வேண்டும்

7. தைப்பூசத்திரு நாளில் அருட் ஜோதி ஆண்டவரின் தரிசனத்தை அன்பர்கள் காண சத்திய ஞானசபையின் எட்டு வாசலையும் திறந்து விட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் வசதிகள் செய்தல் வேண்டும்.

8. அனைத்து நாட்களிலும், உங்களால் பராமரிக்கப்படும் மற்ற நிலையங்கள் போல், எல்லா நாட்களிலும் அன்பர்கள் வந்து தரிசிக்க சத்திய ஞான சபை உட்பட அனைத்து நிலையங்களிலும் தகுதி வாய்ந்த ஊழியர்களை நியமித்து வள்ளலாரின் வழிக்காட்டுதலின் படி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

9. விழாகாலங்களில் கூடும் லட்ச கணக்கான அன்பர்கள் தங்குவதற்கு மற்ற கோயிலில் உங்களால் செய்யப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்தல் வேண்டும் .

10. போதியளவு கழிப்பறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்தல் வேண்டும்.

11. மற்ற மாநிலத்தார்கள் வெளி நாட்டவர்கள் வள்ளலாரின் நெறி அறிய ஆசையுடன் வருகிறார்கள் அவர்கள் வள்ளலாரின் நிலையங்களை சுற்றி வருவதற்கும், எடுத்து உரைக்க கெய்டுகளையும், அவர்கள் தங்க வசதியையும், இதற்குரிய ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12. வள்ளலாரின் தனி நெறி விரைந்து மக்கள் அறிந்திட ஒரு நூலகம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

13. சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திற்கென தனி கட்டிடம் கட்டுதல்

14. சாகாகல்வி குறித்த நல்ல விசாரணை ஆய்வு மையம் நிறுவுதல்

மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி வடலூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் விரைவில் அறிவிக்கப்படும் அனைத்து சன்மார்க்க அனபர்களும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டுமென்று பணிவன்புடன் வேண்டுகிறோம்

திருகண்டீஸ்வரம் வள்ளலார் சபை
வள்ளலார் மன்றம், குறிஞ்சிப்பாடி
வள்ளுவர் வள்ளலார் மன்றம், சென்னை
வள்ளுவர் வள்ளலார் மன்றம், மதுரை
சாகாகல்வி மையம், ராஜபாளையம்
சுத்த சன்மார்க்க சபை, தர்மபுரி
சுத்த சன்மார்க்க சங்கம், கோவிந்தபுத்தூர்,அரியலூர்
தொடர்புகொள்ளவும் : 9842818242, 8608342073

இங்ஙணம்
கருணை சபை-சாலை, மதுரை

 

 

ram govi
Very very Good Effort Ayya. God will bless your family and kids and let us pray to God that you all live forever !!. Fasting is a very powerful protocol to assert on the hostility movement!! We need to do similar kind of refusal to accpet/non violent opposition at Chennai!!
Monday, August 21, 2017 at 22:40 pm by ram govi