Universal Government of Suddha Sanmaarkkaa
நான் வள்ளலாரின் பக்தன். அவர் சொன்னபடியே தான் செய்கிறேன் (Vikatan News)
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை.

ஆனால் ஆச்சர்யமாக கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யமான செய்தி.

இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் குடும்பத்துடன் சாதாரண ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும் செலவாகும் தொகை நிச்சயம் உங் கள் மாத சம்பளத்தில் ஒரு கணிசமான பங்காகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது இந்த 10 ரூபாய் சாப்பாடு.

மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலை மோதியபடியே இருக்கிறது. கல்லாப்பெட்டியிலும் கஸ்டமர் கவனிப்பிலும் பாதிப்பாதி கவனமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடையின் உரிமையாளர் எஸ்.ராம்சேர்வைக்கு வயது 85. மதிய உணவு இடைவேளையில் கூட்டம் குறைந்திருந்த ஒரு நேரத்தில் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். அதிகம் படிக்காததால் ஆரம்பத்தில் கூலி வேலைதான் பார்த்தேன். போதிய வருமானமில்லாத நிலையில் கல்யாணம் நடந்தது. அதன்பின் அந்த சம்பளம் கொஞ்சமும் கட்டவில்லை. மனைவியோடு கலந்து பேசினேன். எதாவது ஒரு தொழிலை செய்யனும். அது மனதுக்கு திருப்தியானதாகவும் இருக்கணும் என முடிவு செஞ்சேன். வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் பலநாட்கள் பட்டினி கிடந்திருக்கேன்.

என்னை போல் எத்தனை பேர் உணவுக்கு கஷ்டபடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கும் எதாவது செய்யவேண்டும் என்று கூறியதை என் மனைவி ஏற்றுக்கொண்டாள்.

பொருளாதாரத்தால் வாழ்க்கை நிலை உயர்த்தலாம் என்ற நிலையிலும் என் யோசனையை என் மனைவி எந்த வாதமுமின்றி ஏற்றுக்கொண்டதற்காக அவளுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். 1967 ஆம் ஆண்டு சிறியதாக கடையாகத் துவக்கினேன்.

முதலாளி தொழிலாளி ரெண்டுமே நானும் என் மனைவியும் தான். ஆரம்பத்தில் 1.25 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம். விலை மலிவாக இருந்ததால் அரசு ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் எங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள்.

வாடிக்கையாளர்கள் இந்த விலையில் திருப்தியடைந்ததால் அவர்கள் மகிழ்ச்சியை நீட்டிக்க எந்தக் காலத்திலும் கையை கடிக்கும் விலையை நிர்ணயிக்க கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டேன். இன்று வரை கடைபிடித்தும் வருகிறேன். பல சமயங்களில் இந்த பணத்தையும் தர இயலாதவர்களிடம் என் மனைவி காசு வாங்க மாட்டாள்.

“குறைவான தொகைதானே அதையும் ஏன் இலவசமாக தரவேண்டும்” என நான் எப்போதாவது கூறினாலும் அவள் நிறுத்திக்கொள்ளமாட்டாள். இப்போது அவள் முடியாமல் இருக்கிறாள். அதனால் யாராவது வந்து காசு இல்லை என்று சொன்னாலும் கூட சாப்பாடு போட்டு அனுப்புவேன். மலிவான விலை இருக்கவேண்டும் என்பதற்காக தரம் குறைந்த அரிசியை பயன்படுத்துவதில்லை. பொன்னி அரிசி மட்டுமே பயன்படுத்துகிறேன். மற்ற ஹோட்டல்களுக்கு ஈடாக கூட்டு ரசம் மோர் ஊறுகாய் என ருசியான உணவையே செய்து கொடுக்கிறேன்” என்கிறார் முகத்தில் பெருமிதம் படர.

“நான் வள்ளலாரின் பக்தன். அவர் சொன்னபடியே தான் செய்கிறேன். அன்னதானம் செய்வது மிகச் சிறப்பானது என்றாலும் என்னிடம் அந்தளவு பணம் இல்லை. அதனால் என் மனதிருப்திக்கு விலை குறைவாகவும், இலவசமாகவும் உணவு தருகிறேன். போதிய வருமானம் இல்லை என்றாலும் மனதுக்கு திருப்தி இருக்கிறது ” என்று சொல்லும்போது விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ராம்சேர்வையின் முகத்தில்.

இந்த கடையில் காலை 4 இட்லி, பொங்கல், தோசை-2 , மதியம் சைவ சாப்பாடு எதுவாக இருந்தாலும் 10 ரூபாய் தான். இந்த விலையால் பலர் ஆர்டர் தந்து வறியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தானம் கொடுக்கச் சொல்வர். அதையும் தவிர்க்காமல் செய்கிறார் ராம்சேர்வை.

உலகநாதன் என்ற வாடிக்கையாளர், “1986 லிருந்து சாப்பிட்டு வருகிறேன். சாதாரண ஓட்டலுக்கு சென்றாலும் பாக்கெட்டை பதம் பார்த்துவிடும் அங்குள்ள உணவுகளின் விலைப்பட்டியல். ஆனால் இத்தனை வருடங்களாக சாப்பிட்டும் எனக்கு இந்த விலை ஒரு செலவாகவே தெரியவில்லை.

உணவும் தரமாக இருப்பது ஆச்சர்யம் தருகிறது. அசைவ ஹோட்டல் என்றால் சாதாரணமாக ஒரு பிரியாணி குறைந்தது 200 ரூபாய். இங்கு அந்த பணத்தில் 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் 3 வேளை உணவு சாப்பிடலாம். அதுவும் இங்கே வயிறு நிறைய மன திருப்தியுடன்” என்றபடி ஒற்றை 10 ரூபாய் தாளுடன் கல்லாவை நோக்கி நடக்கிறார்.

வாழ்க்கை முழுதும் படிப்பவர்கள் பலபேர். ஆனால் வாழ்க்கையையே படிப்பவர்கள் மிகச் சிலர். அந்த சிலரில் ராம்சேர்வையும் ஒருவர். தன் உழைப்பையும் முதலீட்டையும் முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் செலவிடும் ராம்சேர்வை போன்றவர்கள்தான் மனிதநேயம் என்ற ஒற்றை வார்த்தையின் மீது இன்னமும் நம்பிக்கை கொள்ள காரணமாகிறார்கள்.

வெறும் பாராட்டுக்களால் அவருக்கு நமது மகிழ்ச்சியை தெரிவிக்காமல் அவரைப்பின்பற்றி நாமும் நம் வாழ்வில் மனிதநேயத்தை பின்பற்றுவோம்.

-அரவிந்த் ராஜ்

படங்கள்: ராஜாமுருகன்
( மாணவப் பத்திரிகையாளர்கள்)

http://news.vikatan.com/article.php?module=news&aid=36197

Thanks : Vikatan.com

hotel ten middle .jpg

hotel ten middle .jpg

hotel ten middle _1 jpg.jpg

hotel ten middle _1 jpg.jpg

hotel ten right 1(1).jpg

hotel ten right 1(1).jpg

5 Comments
Anandha Barathi
It is great service, I request Ramanujama ayya. If possible plaese meet him.
Tuesday, December 16, 2014 at 09:23 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
ஆமாம் அன்பரே....ஓரிரு நாட்களில்..இவரைக்காண நேரம் ஒதுக்கியுள்ளது.
Tuesday, December 16, 2014 at 13:10 pm by Daeiou Daeiou.
Chinnasamy  Rajendiran
The news has been filed by youngsters. That is how Vallalar' message is taken to the next generation. I appreciate the youngsters who have spotted and highlighted the Great work being carried out for almost 50 years. ஆறறுவார் ஆறறல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் (Kural 225)
C. Rajendiran of www.voiceofvalluvar.org
Wednesday, December 17, 2014 at 01:07 am by Chinnasamy Rajendiran
TMR RAMALINGAM
பத்து ரூபாய்க்கு தரமான மலிவுவிலை உணவு வழங்கிவரும் இம்மதுரை பெரியவர்களின் சேவை மகத்தானது. இதுவும் வள்ளலார் கூறியபடி அன்னதானமே. முற்றிலும் இலவச உணவு வழங்க முடியாதவர்கள், தங்களது உழைப்புக்கு மட்டும் குறைந்தக் கூலி பெற்றுக்கொண்டு மக்களின் பசியினை தீர்ப்பதும் வள்ளலார் கூறிய அன்னதானத்திற்கு ஒப்பானதே. எனவே இவர்களின் ஒப்பற்ற சேவைக்கு வள்ளலாரின் ஜீவகாருண்ய பலன் கிடைத்தே தீரும். வள்ளலாருக்கு பசி என்று வந்தால், அவரும் மதுரை வந்து பத்து ரூபாய் கொடுத்து அப்பெரியவர்களிடம் சாப்பிடுவார் அல்லது சாப்பிட்டு இருப்பார் என்பதில் ஐயம் இல்லை. தொடருட்டும் அவர்களது அன்னதானச் சேவை.
Wednesday, December 17, 2014 at 04:19 am by TMR RAMALINGAM
Anandha Barathi
Dear Ramanujam ayya,

Thanks a lot.
Wednesday, December 17, 2014 at 04:35 am by Anandha Barathi