என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே அன்னையும் அப்பனுமாகி வீற்றிருந்து
உலகியல் சிறிதும் உளம் பிடியாவகை அலகில் பேர் அருளால் அறிவது விளக்கிச்
சிறு நெறி செல்லாத் திறன் அளித்து அழியாது உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து
சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச் சாகா வரத்தையும் தந்து மென்மேலும்
அன்பையும் விளைவித்து அருட்பேர் ஒளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்
ஓருருவாக்கி யான் உன்னியபடி எலாம் சீர் உறச் செய்து உயிர்த் திறம் பெற அழியா
அருளமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்சோதி
வெல்க நின் பேர் அருள் வெல்க நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்சோதி (வரிகள் 1561 -1580 வரை )
இந்த வரிகளைப் படித்த போது ஒரு சந்தேகம் தோன்றியது. அது என் அறியாமையால் இருக்கலாம்.அதற்கு எனக்கு ஒரு விளக்கமும் தெரிந்தது.அந்த விளக்கத்தை ஏற்பதும் தள்ளிவிடுவதும் உங்கள் விருப்பம்.தொடருங்கள் வெல்க நின் பேரருள் வெல்க நின் பெரும் சீர் என்று வள்ளலார் சொல்கிறாரே -பேர் அருளுக்கும் ஆண்டவனுடைய பெரும் சீருக்கும் கூடத் தோல்வி உண்டா என்ற சந்தேகம்தான் என்னுள் எழுந்தது.
நம்மில் ஒருவர் தேர்வு எழுதச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அவரை wish you goodluck என்று வாழ்த்துகிறோம். ஏனெனில் அவர் தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. இது சரி. ஆண்டவனின் பேர் அருளுக்கும் அவனது சீருக்கும் கூட தோல்வி உண்டா? ஒரு தந்தை தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவளுக்குத் தரவேண்டிய சீர் அனைத்தும் குறைவு இல்லாமல் கொடுத்துவிட்டார்.மகளும் தன கணவன் வீட்டிற்குச் சென்று விட்டாள் .தந்தையின் கடமை முடிந்து விட்டதா? இல்லை. தன் மகள் புருஷன் வீட்டில் நன்றாக வாழ்கிறாளா என்றும் பார்க்கவேண்டும். அதுபோல் இறைவா நீ எனக்குத் தரவேண்டிய சீர் வகை அனைத்தும் தந்து விட்டாய்.என் மனமோ மிக மிகக் கொடிய மனம். உன் பேரருளையும் வெல்லக் கூடிய ஆற்றல் பெற்றது.என் உள்ளே உன் அருளுக்கும் என் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தில் என் மனம் வென்று விடக் கூடாது, என்தெய்வமே நின் அருள் வெல்லவேண்டும்.இந்தப் ப்ரார்த்தனையைத்தான் வெல்க நின் பேரருள் வெல்க நின் பெருஞ்சீர் என்று வள்ளலார் பாடியுள்ளார். என் இறைவா வள்ளல் பெருமானே சன்மார்கத்தில் நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நீ மிக மிக அழகாக தெளிவாகப் பாடியும் எழுதியும் அளித்துவிட்டாய். என் மனப் போராட்டம் நீ அறிவாய் உன் கொள்கை வெல்வதாக. என் மனம் தோல்வி அடையட்டும். நின் அருள் வெல்வதாக
கே சிவப்ரகாஷ்