நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத் தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே.
திரு அருட்பாவை அச்சிடுவதற்கே அனுமதி மறுத்த வள்ளர்பெருமானார். ஞானசரியை 28 பாடல்களில் கண்டபடி தெய்வ பாவனையை செய்யுங்கள் என்றார்.இதன் அருமையை நாம் உணர்ந்து படிப்போமாக.முதற் பாடலின் பொருளை உணர ஒருவாறு முயற்சி செய்வோமாக.
பாடல்கள் இயற்ற இலக்கணம் உண்டு. அதன்படி ஒரு சொல் அதே பொருளில் ஒரு முறைதான் வரவேண்டும். அதற்கு மேல் வந்தால் குற்றம். ஆனால் இரண்டு முறை வரலாம்.அதற்கு அடுக்குத் தொடர் என்று பெயர். அதாவது ஒரு செயலை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றால் அடுக்குத் தொடராக இரண்டு முறை ஒரு சொல் வரலாம். நினைந்து என்ற சொல் இரண்டு முறை என் வந்துள்ளது? எதையோ நினைத்துக் கொண்டே இருக்கவேண்டுமாம். எதை நினைப்பது. விடை அருட்பாவிலேயே தேடுவோம். நின் பேரருளை நினைக்குந்தோறும் உடம்பு பொடிக்குதே என்ற வரி நாம் எதை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வழி காட்டுகிறது. நமக்கு எப்போதெல்லாம் பெருமானாரின் அருள் கிடைத்துள்ளதோ அவற்றை எல்லாம் நினைக்கவேண்டும்.அதை நினைத்தால் நம் வள்ளலார் நம்முடன் இருப்பதை உணர்வோம்.நினைத்ததால் உணர்ந்தது இது. நாம் எந்தத் தகுதியும் இல்லாதிருந்தும் நமக்கும் அருள் கொடுத்தாரே என்று உணர்ந்தால் தானாகவே நமது மனதில் நெகிழ்வு ஏற்படும். அதன் விளைவு அவர்மீது நமக்கு அன்பு பெருக்கெடுக்கும்.அன்பு நிறையும். நமது வாய் அவரை அருள் அமுதே, நன் நிதியே , ஞான நடத் தரசே , என்னுரிமை நாயகனே என்றெல்லாம் வாழ்த்தும். அதன் பலன் நாம் மரணமிலாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம். மரணமிலாப் பெரு வாழ்வா ? நாம் நம்ப மாட்டோம் என்பதும் அவர் அறிவார்.நாம் நம்பவேண்டும் என்று அந்த இரக்கமனம் துடிக்கிறது. எனவே நான் கட்டுக் கதையாக புனைந்து உரைக்கவில்லை, பொய்யும் சொல்லவில்லை, சத்தியமே சொல்கின்றேன் என்று உறுதி அளிக்கிறார். நாம் செய்ய வேண்டியது ஒன்று உண்டு அதையும் சொல்கிறார்; அதாவது நம் உடம்பிலே பொற்சபை சிற்சபை என்ற இரண்டும் எங்கே உள்ளது என்று அறிந்து நாம் அதிலே புகுந்து கொள்ளவேண்டுமாம். செய்யலாமா?
Write a comment