புத்தாண்டுச் செய்தி
சிறந்த நாள்
ஆனந்த வாழ்வு பெறும் நாள்
சுவாமி சரவணானந்தா.
எத்தனை நாள், எத்தனை காலம், எத்தனை பிறவிகள் விஷய சுகங்களைத் தேடித் தேடி அலைகின்றது ஓர் ஆன்மா.
எதற்காக சுகத்தை மட்டும் எல்லா உயிர்களும் நாடுகின்றன, எனில், நித்தியானந்தராயும். சச்சிதானந்தமாயுமுள்ளவர் நம் பதி, அவர் ஒருவரே, அந்தப் பூரணமாகிய ஆனந்த நிலை வெளிப்படற்காகவே எல்லா உயிர்களாய் புறநிலைச் சூழலை ஏற்றுள்ளார்.
எல்லாவற்றிலும் இருந்து அந்த ஆனந்தத்தின் ஏகதேசத் துணுக்குகள் அப்போதப்போது சிதறுகின்றன. இதனால்தான் எவ்வுயிரும் ஆனந்த வேட்டை ஆடுகின்றன.
மனிதக் குழவி அறியாப் பருவத்திலே சிரிக்கின்றது.
வளர்ச்சி பெற்றோர்கள், திருப்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும்போது சிரிக்கின்றனர்.
மற்ற மற்ற ஜீவர்கள் கூட மகிழ்வுண்டான போது தம் தம் செயல்களில், தோற்றங்களில் இன்ப விளக்கத்தைக் காட்டுகின்றன.
மரங்களும், செடி, கொடிகளும். வண்ண வண்ணப் பூச்சிகளும், சிறு பிராணிகளும், பூத்துக் குலுங்கியும், புறத்தும், ஓடியும், களித்தும் தத்தம் மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ளுகின்றனவாம்.
இவையெல்லாம் அந்த அகப் பெரும் ஆனந்த பதியின் நிழற் கூறேயாகும்.
அன்பும் அறிவும் வளர்ச்சி பெற்ற மனிதன் தான் இன்ப வேட்டையில் அதிகல் ஈடுபட்டிருக்கின்றான்.
ஆனால் அவனது அன்பும் அறிவும் புலனின்ப வேட்கையில்,. சார்ந்திருப்பதால் புறப்பொருளையும். விஷய சுகங்களையும் முயன்று தேடித் துய்த்து, இன்பில் கசப்பு கண்டு வெறுத்து விடுகின்றான்.
முடிவில் விருப்பு வெறுப் பொழிந்து தயாஞான முண்டாகி சுத்த இன்பத்தைக் காண முயல்கின்றான். இந்த நிலையில்தான் கடவுள் தயவு வெளிப்பட்டு இந்த ஆனந்த வாழ்வு நல்க முன் வந்துள்ளது.
சத் விசாரமும், பரோபகாரமும் தழைத்திட அகத்திருக்கும் ஆனந்தம் பழுக்கின்றது. இது களித்து தித்திக்கும் தருணம் அடுத்துள்ளது.
நிராசையோடு, தயா ஒருமையோடு இங்குறுவோர் உண்மை ஆனந்தம் பெறுவார்கள். ஒவ்வொருவரும் இந்த ஆனந்த நிலைக்கு இன்று வருகின்றவர்கள், வள்ளல் பெருமான் காட்டிய தயவு மார்க்கத்தாலே தயா சித்தி பெற்று வாழ்வார்கள்.
எந்த நாள் ஒருவனுக்கு, உண்மைத் தயவு வெளிப்பட்டு, அகத்தே தயா இன்ப அனுபவமும் புறத்தே தயா ஜோதி வடிவமும் கிடைக்கப் பெறுகின்றனவோ அந்த நாளே பிறவிப் பெரும் பயன் அடைகின்ற நாள். இது வரை அறிந்து அடையாத இன்ப நிலை பெற்று தயானந்த வாழ்வு வாழு நாளே சிறந்த நாளாகும்.
சத்தியவான் வார்த்தையிது தான் உரைத்தேன் கண்டாய்
சந்தேகமிலை இதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவருமத் தினங்களெலாம் இன்பமுறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மையுறும் நீயுரைத்த சொல்லனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்து மகிழ்ந்திருப்பார்
திருவருட் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே.
அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிப்பெற் றுவந்தே.
ஐயன்அருள் வருகின்ற தருணமிது கண்டீர்
ஐயம்இலை ஐயம்இலை ஐயன்அடி ஆணை
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்ஜோதி துரியநட நாதன்
சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே
திரு அருட்பா
சுத்த தயா சன்மார்க்க ஜோதிவருகின்ற
சுகாரம்ப தினம்இதுவாம் சூழ்ந்துவம்மின் இங்கே
இத்தரணி எங்கும்இனி என்பதியின் எழிலே
இயல்பெறவே ஓங்கிடும்நீர் மயலறவே காண்பீர்
சித்தசிகா மணி என்று வித்தகர்கள் செப்பும்
செல்வப்பேர் ஒடுதெய்வத் திருநாமம் எல்லாம்
உத்தமனார் ஒருவருக்கே கற்பித்த உண்மை
ஒருமையினாற் கண்டெங்கும் பெருமையில்வாழ் வீரே.
தயவுப் பாக்கள்.
Write a comment