Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
23.11.2008 மாதாந்திர பூச நாள் விழா - திண்டுக்கல் பொன்னகரம் நிகழ்ச்சி விவரம்.

அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
மாதாந்திர பூச நாள் விழா.
நாள் 23-11..2008. ஸர்வதாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் பூச நாள்விழா.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 23-11-2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணி. கொடி வணக்கம்
திரு அருட்பாவில், சிற்சக்தி துதி (கொடி வணக்கம்) 10 பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடி ஏற்றப் பட்டது. தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின்னர், வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப் புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல் (3) அட்டகம் முதலானவற்றையும், சின்மயபுரம் என்ற சின்னாளப்பட்டி சன்மார்க்க அன்பர்கள் சுவாமி சரவணானந்தா அவர்கள் பெயரால் வழங்கிய குருநாதர் வாழ்த்துப் பாவினையும் திருமதி இந்திரா ராமலிங்கம் அவர்கள் தலைமையில் அனைவரும் பாடினர்.
மதியம் 12.30 மணி
உலகில் உள்ளோர் அனைவரின் நலன்களுக்காகவும் தயவுத் தியானம் நடைபெற்றது
மதியம் 12.35 மணி.
தயவுத்திரு எஸ்.ஆர்.ராமலிங்கம் அவ்ர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அதற்குப்பின்னர் திண்டுக்கம் நாகல்நகர் தயவுத்திரு சொக்கலிங்கம் அய்யா அவர்களால் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய பேருபதேசப் பிழிவு வாசிக்கப்பட்டு தெளிவுரை அளிக்கப்பட்டது.
மதியம் 1.00 மணி
திண்டுக்கல் சுவாமி அவர்களின் அணுக்கத் தொண்டர் தயவு விசுவநாதன் சொற்பொழிவு நிகழ்த்தி வந்திருந்த அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.
அவர் கூறியதாவது
ஒரு ஆண்டில் 12 மாதங்களில் இங்கே பூச விழா நடைபெற்று வந்தாலும் குறிப்பாக இந்த மாதப் பூச விழா மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கின்றது. இன்றைய விழா மாதப் பூச விழாவாகவும் மாத குருபூஜை விழாவாகவும் சுவாமி சரவணானந்தா அடிகளின் வருவிக்க உற்ற தின விழாவாகவும் மொத்தத்தில் ஒரு முப்பெரும் விழாவாக இன்று இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சுவாமிகள், தமிழ் சாதாரண ஆண்டு கார்த்திகை திங்கள் 4ஆம் நாள் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் கடக லக்னம் சனிக்கிழமை 19.11.1910ல் வருவிக்க உற்றார். இவருக்கு 98 அகவை நிறைவாகி 99-வது அகவையில் அடி எடுத்து வைக்கின்றார், அனகமாக. சுவாமிகள்,தமது பிறந்த நாளை, ஒருபோதும் கொண்டாடியதில்லை.
ஆனால் தயவு அன்பர்களின் பிறந்த நாட்களுக்கு, வாழ்த்துப்பாக்கள் எழுதி வெளியிடுவார்கள். எல்லாப் பிறந்த நாள் அகவை அனுபவங்களையும் எல்லோரின் ஆன்ம அக நிலைக்குக் கொண்டு வந்து அனகமாகக் கொண்டாடுவார்கள். சுவாமிகள் இந்த 98 அகவை நிறைவினில் இப்போது ஒவ்வொருவரின் சிரநடு சிற்றம்பலத்திலேயும், தனிப் பெருந்தயவுப் பேராற்றலோடு எழுந்தருளி, தயா ஒளி விளக்காக சுடராக, ஜோதியாக, இருந்து, உயிர், உணர்வு, உடல் எல்லாம் பெருகப் பெருக சுத்த சன்மார்க்க உலகில் தமது முழு சுத்த அனுபவங்களை அனகமாக வழங்கிக் கொண்டே உள்ளார்கள் என்பது தான் உண்மையாகும்.
நம் ஒவ்வொருவரின் தூல தேகத்திற்குள்ளும் சூக்கும வடிவில் சுவாமி அவர்க்ளும் காரண் வடிவில் நம் வள்ளற் பெருமான் அவர்களும், அதி காரண வடிவில் அந்த ஒன்றான அருட்பெருஞ் ஜோதிக் கடவுளும்தான் நம்மை வழி நடத்திச் செல்கின்றார்கள். இவைகளை எல்லாம் அந்த அருட்பெருஞ் ஜோதி நிலை நின்று உணர வேண்டியுள்ளவர்களாக இருக்கின்றோம். க்ந்த நந்நாளில் சிறந்தநாளில், பொன்னாளில், உலகிற்கு வெளிப்படுத்து வண்ணம் www.vallalarspace ல் பதிவு செய்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த டிசம்பர் மாத பூச விழா இங்கு 14.12.2008ல் நடைபெறுவதாக அறிவிககப் பட்டது.
மதியம் 1.30 மணி
அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை தயவுத் திரு எஸ்.ஆர். அரவிந்தனால் மேற்கொள்ளப் பட்டது. இதனைத் தொடர்ந்து ஜோதி வழிபாடு மற்றும் விண்ணப்பம் சொல்லி, விழா நிறைவுற்றது. இக் கூட்டத்தில் முக்கியஸ்தர்களும் சுற்று வட்டாரத்திலிருந்தும் சுமார் 100 சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
. முக்கியஸ்தர்களின் பெயர் வருமாறு.
திண்டுக்கல் நாகல் நகர் தயவுத் திருவாளர்கள் ஏ.அருணகிரி, குமாரசிவம், சண்முக வேல், கே.கே.வெங்கடாசலபதி அய்யா, தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டி ராம்குமார், கே.அய்யாப்பட்டி மூக்கையன் சாமி, சின்னாளப்பட்டி பத்மநாதன் தம்பதிகள், தயவுத் திருமதி ஞானம் ரமாபிரபா, மீனாட்சி மற்றும் சசிகலா ஆகியோர் தயவுத் தொண்டர்கள், சான்றோர்கள், தாய்மார்கள், மாணவ மாணவிகள்
சென்னை தயவுத்திரு எஸ்.ஆர்.சரவணன் குடும்பத்தார் மற்றும் துபாய் தயவுத்திரு ஜெயந்தி கண்ணன் குடும்பத்தார் ஆகியோர் அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் எழை எளிய மக்களுக்கும் பசியாற்றுவித்தல் பணி நடைபெற்று விழா இனிதே முடிவடைந்தது.