தயவு
பரமான்மபதி
Universal Soul.
(எங்கும் நிறை இறை)
தயாஜோதியில் கண்ட விளக்கம்
பிரமாதி ஆண்டு ஆடித் திங்கள் 30-ம் நாள்
(15.8.1999)
வெளியீடு:
தயவுநூல் வெளியீட்டு அறக்கட்டளை, சத்திய ஞான கோட்டம்,
4, நாகசாமி அய்யர் சந்து, திண்டுக்கல் - 624 001.
போன்: 0451-2429912
உள்ளுரை
அருள் முகவுரை
முன்னுரை
A DIVINE CALL TO ALL.
வேண்டுகை
1. பரமான்மா - கடவுள்
2. ஜீவான்மாக்கள்
3. ஆன்மாவும் சூழ்தேகங்களும்
4. முத்தேகங்கள்
5. ஆவிகளின் உண்மை
6. பிறவிகளின் உண்மை
7. ஆன்ம பரமான்ம முடிநிலை
8. பரமான்மபதி வாழ்வு
9. முடிவுரை
தயவு
அருள் முகவுரை (இரண்டாம் பகுதி)
அருட்பரம் பொருள் அனாதி நித்தியமாய் உள்ளது.. ஆனால் அது, புலன் உணர்வுக்கும், மனோ பகுத்தறிவுக்கும் மேற்பட்ட அருள் மெய்யறிவுக்கே வெளியாகி மனிதனின் தலைநடு ஆன்ம சிற்றணுவில் பக்குவ காலத்தே தோன்றி, அகண்ட பெருவெளி முற்றும் நிறைந்திருப்பதாகக் கண்டுகொள்ளப் படுகிறது. இதுவே ஒன்றான பரம்பொருள் ஆம். இந்தக் கடவுள் அணுவே மனிதனின் ஜீவ ஆன்மாவாய் விளங்க, இதற்குள், அருவ உணர்வாகவும், அகண்ட புறவெளி முற்றும் ஜோதி நிறைவாகவும் திகழ்கின்றது. இதுவே, ஜீவ பரமான்மா ஆகும்.
நிறை மாமனிதனில் அனுபவப்படும்போது தான் இக்கடவுள் உண்மையையும் தன்னுண்மையையும் இரண்டற இருப்பது இயற்கையாக அறியப்படுகின்றது. இந்நிலை அனுபவம் மனித, இனத்திற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இவ்வுலகத்தில், மெய்ஞ்ஞானியர்களால் அறிந்து கொள்ளப்பட்டது உண்மையே. ஆனால் இந்த இறை உண்மையைக் கண்டு, ஜீவபரம ஐக்கியப்பட்டு ஒடுங்கி ஒழிந்து போவதுதான் மனிதப் பிறப்பின் முடிவு எனக் கொள்ளப்பட்டது சரியன்று!
ஏனென்றால் ஆன்ம நிலையோ அனாதி நித்தியமான ஒன்றாய் இருப்பதால் இவ்வனுபவம் பெற்ற ஓர் ஆன்மாவுக்கு அம்மனித வாழ்வு தடைப்பட நேருகின்றது. ஆதலால் தடையற்ற நித்திய வாழ்வுடன் நிலைத்திருக்க வேண்டும்.
இத்தெய்வ அனுபவம் தடையுறாது வாழ்ந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்? பரம்பொருள் என்றும் ஒருவரே அல்லாது, இரண்டல்லது பலவாகவோ ஆவதில்லை! நித்திய அனுபவத்தின் பொருட்டுத் தானே தன் பேரருளால் பலப்பல கோடியாக விளங்கிக் கொண்டும், எல்லாம் புரிந்து கொண்டும் உள்ளார். பக்குவக் குறைவால் புறத்தேக நிலை நிறை ஆன்ம உண்மை கண்டு, முடிவில், உடலை விட்டு அத்தோடு உட்கூடி மறைந்து போனது தவறேயாம்.
பரமான்மபதி ஒருவரே அன்றி தான் இரண்டுபடுவதில்லை! பாலும் அதனின்று பிரிக்கப் படாத அதன் வெண்ணிறமும் போல, பர, ஜீவ ஆன்மா இரண்டு பட்டதில்லை, இவ்வுண்மை அறிந்து ஒரு நிலையிலே இருந்து வாழப்பழகாது புற அழிந்துபடும் தேக நிலையில் பற்று கொண்டோ, வெறுத்துச் சென்றோ எப்படியோ மறைந்து வாழ்வற்றுப் போயினர்!
ஆகையால், பரமான்ம பதியோடு இயல்பாகவே ஒன்றி இருப்பதைச் சுத்த சத்விசாரதத்தால் கண்டொன்றி நிற்கப் பழகுதல் வேண்டும். முதலில் மேல் அந்நிலை நின்றே தயா சிந்தனையும், சொல்லும், செயலும் கொண்டு வாழ்தல் வேண்டும். அப்போது முதல் இறை தயவு தானே அகமிருந்தே அனகமாக ஒருவனில் நிரம்பி, அவனுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு வழங்கி விடுகின்றதாம். இவ் அனகத்தயா நெறி முறையல்லாது நித்திய பரமான்ம வாழ்வு முன்பு கிடைக்கவில்லை.
பரமபதியை நிறை அருளால் கண்டு அகம் இருந்தும், உலகம் எல்லாம் நிறைந்த ஜோதியை புறம் கண்டு, எல்லா அருட் பாடல்களைப் பாடித்தான் தற்போதம் அற்றபோது அகநின்று அனகமாய் விரிந்தார். அதனால், அவர்தானே அருட்பிரகாச வடிவினராகக் கண்டு கொள்ளப்பட்டார். அதனாலே, மரணமில்லாத அருட்பிரகாச வள்ளலார், அகநின்றே எல்லோர் உள்ளத்தும் தன் உண்மைச் சுத்த சன்மார்க்க நெறியால் உணர்த்தி வாழ்விக்கவுள்ளது சத்தியம்.
இந்தப் பரமான்ம இறை உண்மையை உலகம் எல்லாம் ஏற்று பெற வேண்டி இருந்தது. ஆகவே, தன்னை, இராமலிங்க வடிவிலோ, அருட்பிரகாச வடிவிலோ யாவரும் தம்தம், தலைவராகவோ, குருவாகவோ ஏற்கமாட்டார் என்ற காரணத்தால், ஆண்டவர் உண்மையை, ஒவ்வொருவரின் தலைநடு, (கடகநடுகாற்குள) பூசத்தே சூரிய, சந்திர, குரு ஒளியாய், சுத்த தயவு ஆக விளங்க வைத்து விட்டுள்ளார்.
இந்தத் தயவு தான், ஒவ்வொருவர் சிரநடு, பரமான்ம பதியாக இருந்து கொண்டு அகம் ஒன்றே தய என நின்று அதின் பிரிவற்ற வு உடன்கூடி அனகமாக நிறைவுற்று மனிதனைத் தயவு மனிதனாகி நித்தியானந்த வாழ்வோடு விளங்க வைப்பதாம். இதனை உலகம் தயவோடு ஏற்று இன்புருக. இந்தப் பேரின்ப வாழ்வு நல்கவே இந்நூல் இன்று வெளிவந்துள்ளது. இதனை முன்பே வெளியிட நேர்ந்தது திருவருட் பெருஞ்செயலே. அதில், பன்முகத்தே விரித்து விளக்கப்பட்டுள்ளது. அது அந்நாள் வெளிவந்தும் உலகம் பூரணமாக ஏற்றுப் பயன் கொள்ள முற்படவில்லை. இப்போது சுத்த தயா ஜோதி பதியே பரமான்மபதியாம் உண்மையை உலகமெல்லாம் உணர்ந்து தினசரி வாழ்வில் கொண்டு பெருநலம் பெற வேண்டிய காலம் இதுவாகும்.
“சுபானு ஆடி ஜோதிமதியும் தோய்ந்த சுமைகாலம்
தபாது குருவும் தனிப்பெரும் உச்சத் திருந்து தழுவியது
சுபாமணி மண்டப சந்திரவீட்டின் நடுவுறு காற்குளத்தே
அபாயம் நிறைந்த இந்தக் காலம் அபயம்ஈ தாமே”
விளக்கம்:
1943, ஆகஸ்டு, 1 (சுபானு ஆடி அமாவாசை) சூரியன், சந்திரன், குரு மூன்றும், பூசமாகிய காற்குளத்து ஒளிர நின்று, அபயம் தந்து ஆட் கொண்டுள்ளதாம். இந்த வான ஜோதி காட்சி அன்று தோன்றி நின்று, மறைந்து போயது. ஆனால், நம் அக ஆகாசத்தில் என்றென்றும் நிலவி நின்று ஆண்டருள் செய்கின்றதாய் விளங்குகின்றது உண்மை. உலகம் எல்லாம் அகத் தயவு கொண்டு, அனகமாக வாழ்வதாக.
தயவு
2.7.99 - சரவணானந்தா.
தயவு
முன்னுரை
பரமான்மபதி என்னும் இச்சிறுநூல், சுத்த சன்மார்க்க ஒளிநிலையில் தெளிபொருளாய் விளங்குவதாகும். சுத்த சன்மார்க்கம் என்பதே நித்திய உண்மையாய் என்றும் நின்று நிலவுகின்ற, சத்துப் பொருளாகிய ஒன்றினிடத்திலிருந்து நேரடியாக வெளிப்பட்டு விளங்குகின்ற உண்மை நெறியே ஆகும். அந்த நெறியை உலக நெறிகளோடு ஒப்பிடுவதற்கில்லை. இது உண்மையாகிய அகத்திலிருந்து அனகமாக விரிந்து படர்வதாயுள்ளது.. மற்ற நெறிகள் எல்லாம், ஒன்று புறத்தில் அலைத்து குலைத்து வீழச் செய்வது, அல்லது அகத்தில் அழுத்தி ஆழ்த்தி மறையச் செய்வதாம். இவற்றால் எவரையும் எக்காலத்தும் நிலைத்து, நிறைந்த வாழ்வு மேற்கொள்ளச் செய்ய முடியாமல் போயிற்றாம். அவற்றிற்கு மாறாகத்தான் இந்த அனக சுத்த சன்மார்க்கம் பரமான்பதியுடன் பிரிவற இருந்து கொண்டு இவ்வுலகில் நிலைத்து வாழச் செய்யப்படுகின்றதாம்.
இதற்கு முழுமுதற் சாட்சியாய் வந்தவர் நம் திருவருட் பிரகாச வள்ளலேயாவர். அவரே இந்நெறிக்குத் தலைவராகி, பரமான்மபதியோடு அத்துவிதமாய் நம் ஒவ்வொரு ஆன்மாவிலும் நிலைத்து நின்று தன் உண்மையையும், அப்பரமான்ம பதியுண்மையையும் ஒவ்வொருவருக்கும் உணர்த்தித் தெளிவு படுத்திக் கொண்டு இருக்கின்றார். அத்தெளிவிற் பிறந்ததே இவ்விளக்கம் முற்றும்.
பரமான்ம, ஆன்ம உண்மையைக் கற்பனா மறைப்புகளை நீக்கி உள்ளவாறு இதில் காட்டப்படுகின்றதால், உண்மை அறியாதிருந்தவர்களும், ஏகதேசம் அறிந்தும் ஐயம் திரிபுகளால் மயங்கிக் கிடந்தவர்களும், கற்பனைகளால் பொய்யான முடிவுகளைச் செய்து கொண்டு வீண்வாதம் புரிந்து கொண்டிருந்தவர்களும் இருக்கின்றவர்களும் இனி உண்மையைத் தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ள உதவுவது இந்நூல்.
இதில், ஒன்றான கடவுளை, பரமான்மாவாகவும், அதுவேயாவுமாய், எவருமாய் விளங்கும் உண்மையும் குறிக்கப்பட்டுள்ளது. தேகங்களின் உண்மையும், அவை ஆன்மாக்களைச் சூழ்ந்து நின்று பக்குவப்படுத்தும் முறையும், பிறப்புகளின் தோற்றம், தொடர்பு நீக்கம் முதலியவற்றின் உண்மையும், அவதாரங்களின் உண்மையும், அவைகளாலெல்லாம் உண்டாகும் அனுபவமும் சிறிது சிறிது தெளிவு செய்யப்பட்டுள்ளன. இவைகளால் எல்லாம் மனிதனுக்கு உண்மைக் கடவுளிடத்தில் நம்பிக்கையும் பற்றும் உண்டுபண்ணி வைத்து, பிற எவரிடத்தும், எப்பொருளினிடத்தும் பற்று கொள்ளச் செய்யாது, பரமான்மபதியோடு கூடிவாழ்ந்திட வழிவகை கூறுவது இது. அந்த வாழ்க்கை முறையே சுத்த தயா நெறியெனக் கொண்டு தெளிவு செய்யப்பட்டுள்ளது.
உலகிற்கே புதியதொரு மார்க்கம் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. இஃது ஒரு புதுநெறி என்ற மாத்திரத்தில் ஏதோ கற்பனை செய்யப்பட்ட திருத்த நெறியாய்த்தான் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டு, பராக்கில் இருந்துவிட்டால் இதனால் பெறற்குரிய பெரிய பரமபதியின் அருளையே இழந்து நஷ்டப்பட்டுப்போக நேரும். இது, பதி அருளால், அவரோடேயே பிரிவற இருந்து வாழச் செய்யும். இப்பதி தயாபெருஞ்ஜோதி ஆகி இருக்கச் சுத்ததயவே அனக நெறியாகி வந்து என்றும் சுத்த சுகானந்த வாழ்வுடன் திகழச்செய்வது திருவருளாணையாம்.
பரமான்மபதியின் தயவு யாவருக்கும் உண்டாகி, எல்லோரும் சுத்த தயானந்தமாய் என்றும் திகழப் பிரார்த்திக்கின்றனன்.
- சரவணானந்தா
தயவு
வேண்டுகை
இவ்வேண்டுகையை ஊன்றிப்படித்து உளம் கொள்வீர்களாக.
பரமான்மபதி என்ற இந்நூல், கடவுள் உண்மையைத் தெரிந்து, தெரியாத எவரும், மறுப்போரும்கூட, உள்ளபடி அறிந்து, உலக வாழ்வில் உயர்நலம் பெற உதவுவதாம். ஆன்மாவைப் பற்றியும் வேதாகம, தத்துவ ஞான நூல்களில் எவ்வளவோ கூறப்பட்டுள்ளன. அவை எல்லாம் ஓரளவு திருவருள் அறிவால் கண்டு ஓதப்பெற்றன. அவற்றால் பல சக்தி சித்திகளை அடைந்தும், உலக வாழ்வில் நிறை இன்பம் விளையவில்லை! ஏன்?
மனோபகுத்தறிவுக்கு மேல், நித்திய அருட்பரம்பொருள் சத்சித் ஆனந்தமாய்த் திகழ்ந்து கொண்டுள்ளது. இது ஒன்றே, எதுவுமாய் எவருமாய் உலகில் விளங்கிக் கொண்டுள்ளது. அப்படி விளங்கலைத்தான் பக்குவ மனிதன் அறிவால் அறிந்தது மெய்யே! ஆனால் நிறை அருளால், அப்பரம்பொருளை தனது இயல் உண்மையை அனுபவப்படுத்தத்தான் இப்படித் தோன்றியுள்ளதைச் சரியாகப் புரிந்து கொள்ளாது, தான் அதற்கு அயலாயிருந்து, ஏகதேசமாய் அறிந்து அடைய முயன்று எப்படி எப்படியோ பாடுபட்டு எவ்வளவோ சத்தி சித்திகளை எல்லாம் பெற்றும் முடிவில் பரத்தில் ஒடுங்கி மறைவுறத்தான் முடிந்தது.
ஆனால், இப்பொழுது, நிறை அருள் இறைநிலை நின்றே தானும், பிறயாவும் வெளிப்பட்டிலங்கலையுணர்கின்றான். அவ்வருள், அருவாய் உள் இருந்தது; அது நித்தியமாய் இருக்க, புறத்தோற்றம் யாவும் நிறை விளைவு பெற்று, (அகம், புறம் என்ற இருநிலை மாறி, அனகம் என்ற ஒருநிலையாய் என்றென்றும் மன்னி) மனிதவடிவொடு விளங்க ஆணை செய்யப் பட்டுள்ளதாம்.
இதனால், அந்தச் சச்சிதானந்தக் கடவுளே இந்த மனிதனாக நித்திய அனுபவத்தோடு விளங்க வேண்டியவனே என்பது உண்மை! ஆகவே, நித்திய நிறைபரம்பொருளை, பரமான்மா ஆகவும், அதுவே ஒரு மனிதனில் ஜீவான்மா ஆகவும் தோற்றி இருந்து, அந்நிலை நின்றே தயவு உணர்விலும், உயிரிலும், உடலிலும் நிரப்பிக் கொண்டு வாழ வேண்டியுள்ளதாம். இப்போது, வேத உபநிடத மகாவாக்கிய உண்மை (பிரஞ்ஞானம் பிரம்மம், அயம் ஆத்மா பிரம்மம், தத்துவமசி, அகம் பிரம்மாஸ்மி) எல்லாம் அறிவனுபவத்திற்கு மேல், அருள் அனுபவ வாழ்வில் நிலைகொள்வது சத்தியம். சத்திய வேதமாம் பைபிளில், ‘நான் பிதாவோடு கூட இருக்கின்றேன்’, என்றதை அகம் இருந்து அனுபவத்திற் கொண்டு வாழவும் வைப்பதாம்.
ஆகவே, எல்லோரும் பரமான்ம ஜீவான்ம ஒன்றிய கடவுள் மனிதனாய், அகமிருந்து அனகமாய் வாழவேண்டியதே கடமை. மற்ற பழைய லட்சியங்களோடு, எந்தச் சக்தி சித்திகளையும் மதித்து அடைய எண்ணி மோசம் போகக் கூடாது. ஒன்றாகிய பரமபதியே தன் அற்பக் கூறுகளைத்தான் மற்ற தேவர்கள், மகான்கள், ஞானிகள், பெரியோர்கள், பரிசுத்த ஆவி வடிவிகள், பிறவுயிர்கள், பொருள்கள், மந்திர தந்திரங்கள் எல்லாமாய் வெளிப்படுத்தி மறைத்து வந்தது எல்லாம் நம்மைப் பக்குவப்படுத்தவேதான். ஆகையால், உண்மையை உறுதியாக உளம் கொண்டு உய்க உலகம் எல்லாம்.
சத்திய ஞான கோட்டம் இவண்,
திண்டுக்கல். தயாநேயன்,
13.10.92. சரவணானந்தா.
1. பரமான்மா - கடவுள்
“ஒன்றாங் கடவுளை ஓதும் பரமான்மா
மன்றாம் அலகில்ஆன் மா”
(தயவுக் குறள்)
அன்பு ஒழுக்கத்தாலும், அறிவு விளக்கத்தாலும் மனிதனுக்குக் கடவுள் உண்மை சிறிது சிறிதாக வெளிப்படுகின்றது. புலன் உணர்வு மட்டும் அதிகம் விளங்கியும், மன அறிவு பக்குவப்படாத காலத்தே, தேக போகத்தில் பற்று மிக விளைவுற்றிருந்த காரணத்தால், மனிதனுக்கு மெய்யறிவு விளங்கவில்லை. அதனால் மெய் அன்பும் தழைக்கவில்லை. ஆகவே கடவுள் ஞானமும் வெளிப்படவில்லையாம்.
நாளடைவில் புலன் அவாவில் பற்று குறைந்து, தன்னைப் போல் பிறரும் சுகமாக வாழ அன்பு செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மட்டும் மனிதன் மனத்தில் உண்டானது.. தன்னலம் மட்டும் இருந்த இடத்தில், பரநலம் பேணும் தயா குணம் தழைத்ததாம். இதனால் முதலில் அடுத்த உறவினரிடத்தில் பற்றொடு கூடிய அன்பு படர்ந்தது. பின்னர், தன் இனத்தவரிடத்தும், தன் ஊரினரிடத்தும், தன் நாட்டினரிடத்தும், தம் தேசத்தினரிடத்தும் படர்ந்து சர்வதேசத்தினரிடமும் விரிந்து கொண்டுள்ளது இப்பொழுது. இது இனிமேல்நிலையில் அகிலமாம் அன்பாக அனைத்துயிர்களிடத்தும், பற்றற்ற நிலையில் பரந்து விளங்க உள்ளதாகும்.
இங்ஙனம் மனித உள்ளத்தில் அன்பு விளைந்தோங்க ஓங்க அறிவும் விளைந்து கொண்டுள்ளதாம். முதலில் புலனறிவாக இருந்தது போய், மனோ பகுத்தறிவாகப் பெருகி, விஞ்ஞான மெய்ஞ்ஞானங்களாக விரிவடைந்துள்ளதாம். நம் நாட்டில் மெய்ஞ்ஞானம் முந்திக்கொண்டு விட்டது. அக அறிவு பெருக்கமடைந்த காரணத்தால் உள் மறைந்திருந்த இரகசியங்கள் பல வெளிப்பட்டன. ஆண்டவர் உண்மையும், அவரது பிரபஞ்சப் படைப்பின் நோக்கமும் ஏதோ ஓரளவுக்கு கண்டு கொண்டிருந்தனர்.
கடவுள், உயிர், உலகுகளின் உண்மை ஏகதேசம் வெளிப்பட்டதுதான். இம்மூன்றையும் தனித்தனி ஆய்ந்துகொண்டு, பிரித்து ஏற்று வாழவே முயன்றார்கள். கடவுளை மனித வாழ்வின் முடிந்த அடைபொருளாக, குறிக்கோளாகக் கருதப்பட்டது சரிதான். அதற்காக, அக்குறிக்கோளை எய்தற் பொருட்டு உயிர் உலகக் கட்டினின்று பிரிந்து செல்ல வேண்டுமென்றே தீர்மானிக்கப்பட்டிருந்தது. அப்படி தளை அறுத்துக் கொண்ட உயிர் உள்ளொடுங்கி மறைதலே கடவுள் மயமானதாகக் கொள்ளப்பட்டது. அந்நாள் அப்படி அந்த நிலை அடைந்து விட்டவர்களுக்கோ, அல்லது அதனை லட்சியமாய்க் கொண்டு வாழத் தலைப்பட்டவர்களுக்கோ அருளின்பப்பேறு கிட்டி உலவாது விளங்கக் காண்கின்றோமில்லை.
அதனால், பின்னர் வந்தவர்களிடம் மேற்படி லட்சிய சித்தியில் பற்றும் குன்றிவிட்டது. பின்னும் புலனின்பத்தில் நாட்டமும் அவாவும் பெருகலாயின.
புலனின்ப வெள்ளப் பெருக்கு நம் நாட்டை விட மேல்நாட்டில் விரைவும் வேகமும் கொண்டு விட்ட காரணத்தால் இன்றைய விஞ்ஞானம் அங்கு அதிகம் விளங்கக் காண்கின்றோம். இவ்விஞ்ஞானத்தாலேற் படுகின்ற அறிவும், ஆற்றலும் தினசரி வாழ்வில் பயனும் புற உலகம் வியக்க உள்ளன. எனினும் இவற்றால் நல்லின்பச் சூழல் காணவில்லை. ஏன்? அறிவு வளர்ச்சிக்குத் தகுந்த அன்பு வளர்ந்தோங்காததே இதற்குக் காரணமாம். அன்பும் ஓரளவு விளைந்துள்ளதே என்றால், அது உண்மை அன்பல்ல, கடவுள் ஞானத்தோடு கலந்த அன்பல்ல, உண்மையில் மெய்யன்பல்லவாம். அவ்வன்பில் மிகுதியாக அவா மாசு படிந்து புலச் சார்பு கொண்ட பற்றாகச் சூழ்ந்து துன்பத்தையே பெருக்குகின்றதாகும். அம்மாசு ஒழிந்து புலனின்பத்தில் இச்சை அறல் வேண்டும். அத்தோடு பிறவுயிர்க் கிரங்கி உபகரிக்கும் தயவுச்செயல் தடைபடாது ஓங்க வேண்டும்.
இதற்காக, மெய்யறிவு விளக்கம் பெறத் தயாவொழுக்கத் தோடிருந்து கொண்டு சத்விசாரம் செய்து வரல் வேண்டும். அப்படி செய்து கொண்டிருந்தால் புற விஞ்ஞானத் துணையால் அக மெய்ஞ்ஞான விளக்கமும் பெறலாம். அம்மெய்யறிவு வரும் போதுதான், கடவுள் உண்மையை உள்ளவாறு கண்டு கொள்ளலாகும். இன்றைய நிலையில் இந்த விளைவு ஓரளவு ஏற்பட்டுள்ளது காண்கின்றோம். பழைய மெய்ஞ்ஞானத்தையும், புதிய விஞ்ஞானத்தையும் இணைத்துக்கொண்டு கடவுள் உண்மையை ஓர்தல் அமையும். நம் மெய்ஞ்ஞானத்தின் முடி பொருளாகக் கடவுள் ஒருவர்தான் நித்திய சத்தியப் பரம்பொருள் என அறிவிக்கப்பட்டுள்ளோம். அப்பரம்பொருள் தன் இயல் உண்மைச் சச்சிதானந்த நிலையை உள் மறைத்துக் கொண்டு அனந்த வண்ண பேத மாயா பிரபஞ்சமாய்த் தோற்றங்காட்டிக் காட்டி ஒழித்துக் கொண்டே யுள்ளாராம்.
கடமாகிய இப்பிரபஞ்சத்து உள்ளாக மறைந்திருந்து கொண்டு ஆள்கின்ற கடவுளைக் கண்டடைவது எப்படி? அது எந்தப் பொருளின் உள்ளும் காணப்பட வில்லையே என்கிறான் விஞ்ஞானி. காண முடியாதுதான்! ஏனெனில், அது ஐம்புலன் உணர்வுக்கும், ஆறாவதறிவுக்கும் அறியப்படு பொருளாயில்லை. எல்லாம் வல்ல அருட்பெருஞ்சக்தியாய், சச்சிதானந்த நிறைவாய் யாவற்றுள்ளும் மறைந்திருக்கின்றதாம் யாவற்றுள்ளும் என்றதால், பிரபஞ்சமாகிய ஐம்பூத அணுக்கள் எல்லாவற்றிலும், அவ்வணுத் திரள்களாலாகிய உயிர்ப்பொருள்கள் எல்லாவற்றிலும் நிறைந்திருக் கின்றதாகக் கொள்ளப்படும்.
ஒரு சிற்றணுவில் உள்ளிருக்கும் புரோடான் (Proton) துணுக்குக்குங்காரணமாய் இருப்பது நம் பரம்பொருட் சக்தியாம் கடவுள். இச்சிற்றணுவுள் அணுவாய்த் திகழுகின்ற கடவுள் எங்கும் பூரணமாய் உள்ளவர் என்ற உண்மை, திருவருளால் இன்று நன்கு உணர்ந்து கொள்ளப்படுகின்றது.
எவ்வாறெனில், அந்தக் கடவுள் அணுவே, நம் கருவின் முதலணுவாய், கட்டவிழ்ந்து ஒளிர வளர்ந்தோங்கித் தலை நடு நின்று அருள்கின்றதாக அறிந்து கொண்டிருக்கின்றோம். இதில்தான், அணுவில் அணுவாய் விளங்கும் அருட் பரம்பொருளை, அதன் அருளாலே இன்றே அறிகின்றோம். இந்தச் சிற்றணு வடிவம்தான் கடவுளுக்கு உறையுள்ளாக உள்ளதாம். இந்த அணுவிலிருக்கும் கடவுள் பூரணர் தானே மற்றெல்லா அணுக்களிலும் மறைந்து பூரணமாய் விளங்குவதாகவும் அறிவிக்கின்றார். இந்த உண்மை சாதாரண மனிதப் பகுத்தறிவுக்கு விளங்குகின்றதில்லை. அப்பாலான அருள் ஞானத்திற்கே அனுபவமாகின்றதாம்.
மேற்குறித்த அணுவில் அருளாக வெளிப்படுகின்ற கடவுள்தானே, அகமிருந்து அனகம் நிறைகின்ற இது சமயம் அவ்வருள் இறையின் அனுபவத்தைப் பெறுகின்றோம். இந்தக் கடவுளை பரமான்மா என இன்று உண்மையாக அறிகின்றோம்.
இப் பரமான்மாவாகிய சச்சிதானந்தக் கடவுள்தான் சத்தியமாக, நித்தியமாக உள்ள ஒன்றாம். இவ்வொன்றையே உட்கொண்டு உருப்பட்டுள்ளோம். நாம் ஒவ்வொருவரும் ஒன்றே பலவாய்த் தோற்றுகின்ற இந்த பரமான்மா, ஒவ்வொருவரிலும் தனி ஒரு அணுவாய்க் காரியப்பட்டு விளங்குகின்றதாம். பரமான்மா காரியப்பட்டிலங்குகின்ற நம் ஒவ்வொரு உயிர் ஒளிர் அணுவும் ஓர் ஜீவான்மாவாக பகரப்படுகின்றது. இதனால் பரமான்மாவே ஒவ்வொரு ஜீவான்மாவிலும் மறைந்து நின்று உயிர் விளங்க விளங்குகின்றார். ஆதலின், பரமான்மா ஒன்று, ஜீவான்மா அனந்தமாக உள்ளனவாம். இந்த ஜீவான்மாக்களின் விளக்கம் பின்னர் மேற் பிரிதொரு இடத்தில் விரிப்பாம். இங்கு பரமான்மாவின் ஏகதேச விளக்கம் இங்கு தெரிந்து கொள்ளவே இது குறித்ததாம்.
கடவுள் என்றும், பரமான்மாவென்றும் இன்று நாம் காணுகின்ற இதனைப் பற்றிய உண்மையை முன்னோர், நிர்க்குண நிட்களமாய் ஏகதேசம் உணர்ந்தும் புறஉலகுக்கு வெளிப்பட அறிவிக்க வேண்டி, சகுண, சகள குணரூப பேதங்களைப் பலவாகக் கற்பனை செய்து வழங்கிச் சென்றுவிட்டார்கள். அவர்களைப் பின்பற்றி வந்தவர்களும் புற நின்றே ரூப பேதத் தோற்றங்களில் மயங்கி அவற்றை அப்படி அப்படியே தங்கள் உள்ளங்களில் பதியச் செய்து கொண்டார்கள். இதனால், ஒன்றான கடவுட் பரமான்மா விளங்கவேண்டிய இடத்தில், பலவாகிய ரூப பரமான்மாக்களும், கடவுள்களும், மகான்மாக்களும் நுழைந்து விட்டுள்ளனவாம். வேதாந்தியின் பரப்பிரம்மமும் கடவுள் உண்மையைக் காட்டி வாழ்விக்கவில்லை அன்று. யோக ஞான சித்தி நிலை கொண்ட அனுபவிகள் தம் சீடர்களுக்கு உள் வளர் ஒளியை ஓரளவு காட்டி ஒடுங்கச் செய்து தம் கருத்துக்கு இசைய நடக்க வைத்து விட்டனர். இந்த யோக காட்சியால் பல சக்தி சித்திகள் கிடைக்கப் பெற்று புகழ்பட வாழ்ந்தவர்கள் முடிவில் உள்ளொடுங்கி விடுகின்றார்கள். இவர்கள் கண்டு கொண்டிருந்த பிரம்மானந்த நிலை தேக அந்தியத்தில் மறைந்து விடுகின்றதாம்.
முன்பு, பரமான்மாவில் லயித்து சமாதி கூடி மறைந்து போவதே லட்சியமாகக் கொண்டிருந்ததினால், ஜீவனும், மனமும் எந்த இடத்தில் அல்லது எப்பொருளில் உதிக்கின்றதோ அதில் அடக்கி சலனமற இருந்துவிடுவதே முடிவாகக் கொண்டிருந்தனர். இதில், ஜீவான்மா என்ற ஒன்று பரமான்மாவில் இரண்டறக் கலந்து, ஐக்கியப்பட்டு விடுவதாகக் கொள்ளப்பட்டது. அதுவும் ஓரளவுக்கு உண்மையே ஆகும். ஆனால் அதில் அனுபவ வாழ்வுக்கு இடமில்லாது போயதே. அப்படி ஐக்கியப் பட்டுப்போகும் ஜீவான்மாவுக்குப் பரமான்ம நிலை எய்தியது உண்மைதான். இதில், நித்தியமாய் இருக்கின்ற, செயலோடு விளங்குகின்ற கடவுளான்மா, அந்த ஒரு ஜீவான்மாவைத் தன்னில் கிரகித்துக் கொண்டு எப்பவும் போல் திகழ்கின்றதே உண்மை. அங்கு அந்த ஜீவான்மா இல்லை ஆகின்றது. அதுவே இல்லாதபோது அதற்கு இன்பானுபவ வாழ்வு எப்படி இருக்க முடியும்? இருக்கவே முடியாது. ஆகையால், பரமான்மா, பரமான்மாவாகவே இருப்பதில் பயனில்லையாம். அது, மேலும் ஒரு ஜீவான்மாவில் விகசித்துப் பின்னர் ஐக்கியானுபவத்தோடு என்றும் விளங்க வல்லதாகவே வேண்டும். இவ்வனுபவ நிலை வருவிக்கவே இன்று சுத்த சன்மார்க்கம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது.
இச்சுத்த சன்மார்க்கத்தில் நம் பரமான்மக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி அல்லது தயா பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டுள்ளார். அந்தக் கடவுள்தானே இந்த ஜீவான்மாவில் வெளிப்பட்டு சுத்த தயா ஜோதிமயமாய்ச் சூழ்ந்து கொண்டு நித்தியமாய் விளங்கச் செய்யவுள்ளார். இந்த அனக தயாபெருஞ்ஜோதி அனுபவ நிலையே, ஐக்கியானுபவ நிலையாக அறிந்து கொள்ளுவோமாக.
எங்கும் பூரணமாய் நம் பரமான்மக் கடவுள், தன்னையே பூரணமாய் வெளிப்படுத்திக் கொண்டு என்றென்றும் விளங்கற்கு இந்த சுத்த தயா சன்மார்க்கத்தை இப்பொழுது உலகிற்கு காட்டிக் கொடுத்துள்ளார். ஆதலின், இனி பழைய கற்பனா நெறிகளிற் சென்று வீணில் நட்டப்பட்டுப் போகாமல், இத்தயா நெறியிற் கூடி பேரின்ப லாபம் பெற நம் பதி ஆணை செய்கின்றார். கண்டு கொள்வீர்களாக.
பொதுவாகக் கடவுளைப் பற்றியும், பரமான்மாவைப் பற்றியும் பலர் பலவாகக் கற்பனை செய்து கொண்டு, உண்மையை உள்ளவாறு காணாது போகின்றதனால், உலகில் ஒருவருக் கொருவர் மாறுபட்டு, எதிர்ந்து கொண்டு அழிவுப் பாதையில் செல்லுகின்றனர். கற்பனைக் கொள்கை கோட்பாடுகளில் குறைகள் மலிந்தே இருத்தல் இயற்கை ஆதலின் அவற்றைத் தீவிரமாய்ப் பற்றிக் கொண்டு வாதாடுவதில் பயனில்லையாம்.
சமய மதங்களில் வெறி நிலைக்கேறிவிடாதபடி, சுத்த தயாநிலையிலிருந்து, அச்சமய மதங்களை ஊன்றிப் பார்த்தால் உள் மறைந்து கிடக்கும் உண்மையெல்லாம் வெள்ளிடை மலையாய்க் கண்டு கொள்ளலாம். அப்படி செய்தால்தான் அச்சமய மதங்களின் உண்மையைப் பெற்று பயன் அடைந்தவர்களாவோம். அன்றியும் ஒன்றான கடவுட் பெருநெறியில் எல்லோரும் ஒத்து வாழ்ந்து இன்பங் காணவும் கூடும்.
ஒன்றான கடவுளை இன்று நாம் எல்லோருமான தோற்றங்கொண்டிருக்கக் காண்கின்றோம். ஆகையால், நாம் நமது பலவாகிய புறநிலைத் தோற்றங்களையெல்லாம் கடந்து அப்பரமபதி நிலையினின்று நோக்கி நாமெல்லோரும் ஆன்ம ஒருமைத் தன்மையினராய்க் கொண்டு வாழ்வோமோக. மேலும், நம்பதி ஒருவரே ஆகி, நம்முள் நாமாய் இருந்து கொண்டு அருளாணை செய்து கொண்டும் இருக்கின்றார். அவ்வாணைப் படிக்கு பல்வேறு வண்ணமாய்ச் சூழ்ந்து கொண்டிருக்கின்றவராயும் உள்ளார். ஆதலின் அவ்வாணைக்குத் தக சூழ்நிலை விருப்பு வெறுப்பின்றி தயவோடு எதிர்கொண்டு அன்பு செய்வோமாக. இதுவே பரமான்மாவோடு பழகும் பர இன்ப வாழ்வாகும்.
நம் ஜீவபோதம் தேயத் தேய பதி அனுபவம் நிறைவு பெற்றுக் கொண்டேயிருக்கும். பூரண நிலையில், நிலையான தயா இன்பப் பெருவாழ்வு என்றென்றம் நிலவும். இதுவரை பரமான்மாவும் அதன் இயல் உண்மை விளக்கங்களும் சற்றே விரிவுரை செய்யப்பட்டன. மேல், அப்பரமான்மா விளங்கும் ஜீவான்மாக்களைப் பற்றிய தெளிவுரை விரிவு செய்வோம்.
பரமான்மபதி என்ற சுவாமிகளின் புத்தகம் சன்மார்க்க அன்பர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.இதில் சுவாமிகள் வள்ளலார் பெற்ற உண்மை சன்மார்க்க உண்மைகளை வெளி படுத்தி உள்ளார்.உண்மை சன்மார்க்க அன்பர்கள் அறிந்து,உணர கூடிய கருத்துகள் இதில் இடம் பெற்று உள்ளன.ஜீவாத்மா,பரமாத்மா,அனக வாழ்வு,அணு அக உண்மை,மனித அக வாழ்வு,அவர்கள் பிறப்பின் காரணம்,மனிதர்கள் துன்பங்கள் அனுபவிக்க காரணம்,உண்மை கடவுள் உண்மை,பதி விளக்கம் எல்லா உண்மைகளும் அகமாய் வெளிபட்டு உள்ளது.சுவாமிகளும் வள்ளலாரை போன்று சன்மார்க்க ஞானி என்பது எல்லோருக்கும் தெரியாது.வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சுவாமிகளின் இத்தகைய கருத்துகள் இடம் பெற வேண்டும் என்ற உண்மை சிலர்க்கு தான் தெரியும்.-நாகர்கோயில் வள்ளலார் அன்பர்கள்.
Wednesday, March 2, 2011 at 10:20 am
by aruldevi.revathi
Write a comment