Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயா விளக்க மாலை பாடல்கள் 66-75

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 66-75 உரையுடன்
புனைபொரு ளிதுவாய்ப் பொய்படா துணரப்
புதுதயா வொழுக்கமே பூண்பீர்
வனைமொழி சோதி மதியெனப் படுவ
வளரொளி ஆன்மநன் மணியே
வினையொழி நம்பன் வியனுற நம்மை
மேவிய வடிவநம் ஆன்மா
நினைவற விதிலே நிர்மல வாழ்வு
நிலைகொள நிலவுமிங் கீதே. பாடல்.66.
உரை.
முன்னதின் உண்மையை மேலும் விளக்கவே வருவது இது. தயா ஒழுக்க சத் விசாரத்தில், கடவுளான்மாதான் இரவிமதியின் இணை பொருளாக இருக்கின்றது. இந்நிலையுற்று தயா வாழ்வு மேற்கொண்டு ஒழுகும்போது, இறை இன்பம் தழைத் தோங்கும். நிறைமதி ஜோதி, மூன்றாம் பிறைக்குமேல் 13 கலை சேர 16 கலைமுழு மதியாகும். இதுதான் சத்திய ஞானக் கடவுள் வண்ணம்.
ஈதுகேள் அன்பீர் இறைவனின் சேர்க்கை
என்பது சத்விசா ரத்தால்
ஜோதிசூழ் ஆன்ம நிலையினிற் பொருந்தி
சூதுடைக் கன்மமு மாயைக்
கோதுறா வாழ்தல் குருபிறை குறித்த
கோலநற் பெரியவாழ் வாகும்
தீதுகள் யாவுந் தீர்த்தெனைச் சேர்ந்தார்
தெய்வமா லையிலிதோர் மலரே. பாடல்.67.
உரை.
இதுவும் முன்னதின் விரிவே. கடவுள் சார்பு கொண்டு வாழ்வது என்பது, கன்ம உடற்பற்றும். மாயா ஜீவ உணர்வுப் பற்றும் கடந்து, கடவுளான்ம நிலையில் பொருந்தி, பாதியாயுள்ள ஆன்ம ஆணவ இயல் தேய்ந்து ஒழிய ஒழிய, கடவுள் அருள் இயல் வளர்ந்து நிறைவுறும். இங்கு பெறப்படும் பெரிய வாழ்வு இன்பமே நிறைந்த ஆனந்த வாழ்வாகும். இப்படியுள்ள தெய்வ உண்மை குறிக்கும் இப் பா இம் மாலையில் ஒளிர்கின்றது.
தெய்வமே என்னை நான்றெளிந் திடற்குத்
திருவருள் சிறிதளித் திட்டாய்
எய்வதற் குரிய உண்மைகள் யாவும்
இம்மையே யினிதுணர் கின்றேன்
உய்வதற் குரிய உன்னுடைத் தயவை
ஒல்லையில் முழுவதும் அருள்வாய்
செய்வதற் கரிய திருமலர் மாலை
திகழ்சிரத் திதுவுமேற் றருளே. பாடல்.68.
உரை.
தெய்வம் என்ற சொல். தேயு ஆம் ஒலி வண்ணமும். தயவு எனும் பண்பு இயல்பும் கொண்ட ஒன்று ஆம். அதன் ஏகதேச அருளால், அதனை ஒருவாறு கண்டு கொண்டுள்ளோம். அதுகொண்டு உண்மையைச் சிறிது சிறிதாக உணர்ந்து வருகின்றேன். விரைவிலே உனது முழுத் தயவையும் வெளிப்படுத்தி, என்னை வாழ்விப்பதோடு, இம் மாலையில் இவ் வுண்மையைப் பிறரும் கண்டுய்ய அருள்.
சிரத்தி லுனது சேவடி மலரைச்
சிறப்புற அணிவதோ டெனது
கரத்தினிற் கனக கங்கண மொன்றுங்
கட்டினை கடிமணக் குறியாய்
மரத்தினிற் சிறந்த கற்பகத் தருவாய்
வரமெலாந் தரவருந் தேவே
உரத்தினிற் சூட வொருதயா மாலை
உனக்கிசைத் தேனிதைத் தரியே. பாடல்.69.
உரை.
ஆண்டவரின் திருவடி மலரை, ஆன்மாவிற் காண்கின்றதோடு, அது நம் தலையிடத்திற் பொருந்தியுள்ளதையும் காண்கின்றோம். இந்த இறை அனுபவம் கைவரப் பெறற்கு ஒரு அடையாளமாய், மணிக்கட்டில் ஒரு பொற் கங்கணமும் கட்டப்படுகின்றது. இது திருமணக் குறி என்பர். இதில், பொன், கம், கணம் மூன்றும் – முறையே சுத்த பிரணவ ஞான தேக சித்தியைச் சுட்டும். இப்படியான கடவுளைச் சிறந்த கற்பக மரமாகக் கற்பனை செய்தல் மரபே. இவ் வண்ணப்பா மலரை இம் மாலையில் அமைத்து, ஆண்டவர் மார்பில் அணியத் தருகின்றனன்.
தேனினு மினிய திருவரு ளமுதைச்
சீவர்களி யாவரும் பெறவே
வானினு மிந்த மண்ணினு முள்ளோர்
வாழ்த்திவாழ்ந் திடமகிழ்ந் திங்கே
ஏனினும் வந்தா யில்லையென் அப்பா
என்றனன் என்றசொல் லறுமுன்
ஊனினு மெனது உணர்வினுந் தயவாய்
ஒன்றினை மாலையீ துவந்தே. பாடல்.70.
உரை.
உலகறியாதது திருவருள் அமுதம். அதற்கு ஒப்பானது இல்லை. இருந்தும் ஒருவாறு ஒப்பிட்டுக் கூறத் தேனை எடுத்துக் கொண்டு, அதனினும் இனியது எனப்படுகின்றது. எவ்வுலகத்துள்ளோரும் அவ்வருள் அமுதேற்று மகிழ்வுறும்படி ஏன் இதுகாறும் வெளிப்பட வில்லை என்று கேட்டேன். இக் கேள்வி எழுந்து அடங்குமுன், உடனேயே மேனிலை நின்றே எனது உடலிலும், உயிரிலும், தயவாய்க் கலந்துள்ள அமுதபதியை உணர்ந்து கொண்டேன். யாவரும் இதனைக் கண்டு கொள்ள இம் மாலையும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார்.
தயா ஒழுக்கம்.
உவந்துள மகிழ உலகம தெல்லாம்
உயர்தயா வொழுக்கமுற் றோங்க
நவந்தரு கண்டத் தவரெலாந் நயக்குந்
நாவலந் தீவிதின் றென்பால்
பவந்தவிர் பதும கிரிவளர் பதியின்
பாங்கருள் ளோங்குமென் பரமா
தவந்திகழ் தயவு ஆலயங் கொண்டாய்
தரித்திடித் தாமமுங் கொண்டே. பாடல்.71.
உரை.
இது முதல் பத்து, பத்து பாக்கள், தயாவொழுக்கம், தயாவிசாரம், தயா இன்ப வாழ்வு விளக்க உள்ளனவாம்.
உலகம் உயர்தயா வொழுக்கம் பூண்டு வாழ்ந்தின்புறவே, இந்த நவகண்ட பூமி (பிரணவாகார மக்கட் பிறப்புத் தேகம்) நாவலம் தீவு எனும், நாவின் மேலுள்ள முகுளம், பூர்வம் என்ற தென் திசையில் விளங்குகிண்றது. இதுதான் பவம் தவிர் பதுமகிரியாம் முளரிமலை. இதற்கு அடுத்த இடத்தே தான் தவம் திகழ் (ஒளி விளங்கும்) சின்மயபுர தயவு ஆலயம் கொண்டுள்ள பதிக்கு இம் மாலை அணிவிக்கப் படுகின்றது.
தாமம தணிந்த தனிப்பெருந் தலைவா
தரணியோர் தனித்தயா நெறியால்
காமமா தியவோர் அணுத்துணை யேனுங்
கண்டிடாக் கருணையே கண்டு
ஏமம தென்று மிணையிலா தோங்க
இசைதயா வொழுக்கமுள் ளிருந்தே
சேமமார் வாழ்விற் பெருகிடச் செய்வாய்
சேர்க்கவிம் மாலைநுஞ் சிரத்தே. பாடல்.72.
உரை.
தாமம், மாலை அல்லது ஒளியாம். கடவுள், தயா ஒளியாயுள்ளார். அவர் தயாவொழுக்கத்தால் உலகை வாழ்விக்க ஆணை செய்கின்றார். ஆகையால், அகத்தே தஅயா ஒளியில் நிலைத்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால், பேராசை முதலியவற்றால் பாதிக்கப்படாது, கருணையால் பாதுகாக்கப் பெற்று, நல்வாழ்வில் தழைத்திடலாகும். இந்த உண்மையைச் சுட்ட வந்தது இத் தாமம்.
நுஞ்சிரத் தணியுந் நுவலரும் முடிதான்
நூறிலாத் தயாமணி முடியே
எஞ்சிரத் தணிய விசைந்தனை யதனால்
இறப்பது இரிந்திடச் செய்து
வெஞ்சினத் தவரை தண்கரு ணையராய்
மேன்மைசேர் தயாவொழுக் கத்தால்
உய்ஞ்சிடத் தருவாய் உனக்கணி கின்ற
உரைசெயும் அலங்கலு முவந்தே. பாடல்.73.
உரை.
உமது தலையிற் கொண்டுள்ள மணிமுடி, தயவுதானாம். அத் தயாமணி முடியை, அடியனின் சிரத்திலே சூட்டப் பெற்று, இறவா வாழ்வில் திகழச் செய்வாய். இதன் மூலம் கடின சித்தக் கோபிகளையும். கருணையுள்ள நண்பர்களாக மாற்றவும், தயவொழுக்கத்தால் உய்விக்கவும். நான் தொடுக்கும் இம்மாலையை அணிந்து கொள்வாய். உய்ஞ்சிட – உய்ந்திட = வாழ்வு பெற.
தேமொழி மாலை யீதல வெனினுஞ்
சிறியனே னுள்ளமாந் தடத்தில்
ஓமொழி யாகும் பஞ்சமிப் பதுமம்
ஒடுங்கியே கிடந்ததுன் னொளியால்
பாமொழி யாகி வைகரி வாக்காய்ப்
பாருற மலர்ந்தது வதனால்
தோமொழி தயவு வொழுக்கமே சூழத்
தொடுத்தனன் மாலைநுந் தோட்கே. பாடல்.74.
உரை.
தெய்விக இன்சொல் மாலை என இதனைக் குறிக்கவில்லை. என்றாலும், பஞ்சமிப்பதுமம் என உள்வளர் ஜோதி மலர், ஒளியாயிருந்து, ஓம் ஒலியாய் வெளிப்படும் போது, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி வாக்காகிக் கேட்கப்படுகின்றது. அப்படி எழுந்த ஒலிவண்ண எழுத்து மொழிகளைக் கொண்டு வரிவடிவச் சொன் மாலையாகத் தொடுத்து, குற்றமற்ற தயாவொழுக்கத்தைப் பரப்ப இதனை உமது தோளில் அணிவிக்கிறேன்.
தொடுத்துரைக் கின்றேன் சுத்தசன் மார்க்கத்
தூநெறி யுலகெலாந் துலங்க
அடுத்துரைக் கின்றேன் அருளடை வதற்கு
ஆனஅத் தயாவொழுக் கத்தை
எடுத்துரைக் கின்ற பிறிதுவெந் நெறியு
மேற்றது அன்றென எள்ளித்
தடுத்துரைத் தாண்ட தயாபெருஞ்ஜோதித்
தலைவனே தாமமீ தேலே. பாடல்.75.
உரை.
சுத்த சன்மார்க்கமாம் தூநெறி ஒன்றே உலகில் தழைத்திடச் செய்ய, இதனை மேன்மேலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உட்பொருந்தி (அடுத்து) அருள் அடைவதற்குரிய தயாவொழுக்கத்தையே வலியுறுத்துகின்றேன். ஏனெனில், மற்ற எந்த ஒரு மார்க்கமும், சற்றும் பொருந்தாது எனத் தடுத்துக் கூறி ஆட்கொண்டுள்ளது என் தயா பெருஞ்ஜோதிபதி. அவர்க்கே இம் மாலையைச் சூட்டி, அவர் மூலம் இந் நெறியே பரவ வேண்டுகின்றனன்.

Content Ref: Dhaya vilakka Maalai