தயவு
அருட்பெருஞ்ஜோதி தயவு மலர்.
அருட்பெருஞ்ஜோதி மெய்
1. தெய்வத்திற்கு மனித வடிவம்.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
நள குரு மகா தைப்பூச வெளியீடு
3.2.1977.
உலகுயிர் அனைத்துக்கும் ஆற்றல்கள் யாவற்றிற்கும் புறத்துணையாய் விளங்குகின்றது, வான் இரவியாம் ஜோதி ஞாயிறு என்பது யாவரும் அறிவர். ஆனால் அந்தச் சூரிய ஜோதியையும் அதுபோன்ற விண்மீன்களையும் எண்ணற்ற ஜோதி கோளங்களையும் ஆக்கியும், அளவு கடந்த நெடுங்காலமாக இயக்கிச் சற்றும் பிசகாது செலுத்திக் கொண்டும், ஒவ்வொன்றின் உள்ளிருந்து ஆண்டு கொண்டுள்ளது எதுவோ, அதுவே கடவுள் எனக் கண்டு வெளியிட்டுள்ளனர் ஆன்றோர். அந்தக் கடவுள் தானே, யாவுமாய் உருவாகி விளங்குவதும், அருள் ஞானக் கண்ணாரக் கண்டு கொள்ள முடிகின்றதாம். அகமிருக்கும் அழியா அருட்பேராற்றல், ஐஞ் சக்திகளை விரித்து அளவில் தோற்றங்களை விளங்கச் செய்து கொண்டுள்ளதும் உண்மையே.
அக அருட்பேராற்றலையும், புற வடிவத் தோற்ற நிலையையும் அறிந்து கொள்ளும் ஞானம், இந்த மனிதப் பிறப்பு வாழ்வில்தான் வெளியாகின்றது. கடவுளே இந்த மனிதனில் அகம், புறம் நிறைந்து, அருள் அனுபவத்தில் விளங்கிக் கொண்டிருத்தல் மெய்யே. இப்படிக் கடவுள் உண்மை முழுவதும் இம் மனித வடிவில் அனுபவமுற்று விளங்குங் காரணத்தால் இவனே கடவுள் மயமாய் விளங்கற்கு உரியவனாகின்றான். இதனால் தெய்வ வடிவங்களை மனித உருவத்தில் ஆக்கிக் கொண்டு வழிபடுதல் முன்னோர் கண்ட ஒரு உபாய நெறியாகும். அகம் புறம் நிறைந்த அருட்பெருங் கடவுள் வழிபாட்டிற்கு, தெய்வ மனித உருவ வழிபாடு முடிவு அல்ல. ஆனால் இந்த மனித வடிவம் கடவுள் அனுபவத்திற்கு அவசியம் இருந்தே ஆகவேண்டும். இது, அக நிலையிலிருந்து தயவு அல்லது அருள் ஒளி நிறைவால் வாழ்ந்தால் உடல் அருட் பிரகாசமாய், உரு மாற்றமுற்று, அழியாமை பெற்று என்றும் ஆனந்தமாய் வாழலாகின்றது.
இதற்குச் சான்று திருவருட் பிரகாச வள்ளலாரே.
Thankyou for Good sanmarga information.I have read.