திண்டுக்கல் பொன்னகரத்தில் பூசநாள்விழா 19.10.2008
அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
மாதாந்திரக் கூட்டநடவடிக்கைகள்
நாள்– 19.10.2008.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட உரை நடை நூல்கள்எழுதிவெளியிட்டுள்ளார்கள்.
உபதேசப்பகுதியில் வள்ளல்பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப்பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெருநெறி, தயவுக் குறள் என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமிஅ வர்களுக்கு, மேட்டுக் குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம்ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பூசநாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ் ஜோதி தயவு இல்லத்தில் சனமார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்திவரும் அன்பர் திருஎஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 19.10..2008ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணி. கொடிவணக்கம்
திரு அருட்பாவில், சிற் சக்திதுதி (கொடி வணக்கம்) 10 பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடிஏற்றப்பட்டது. தயவுநூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின்னர், வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப்புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல் (3) அட்டகம் முதலானவற்றையும், சின்மயபுரம் என்ற சின்னாளப்பட்டி சன்மார்க்க அன்பர்கள் சுவாமி சரவணானந்தாஅவர்கள் பெயரால் வழங்கிய குருநாதர் வாழ்த்துப் பாவினையும் பாடினர்.
மதியம் 12.30 மணி
உலகில் உள்ளோர் அனைத்து ஆன்மாக்களின் நலன்களுக்காகவும் தயவுத் தியானம் நடைபெற்றது
மதியம் 12.35 மணி
திண்டுக்கல் சுவாமிகளின் அணுக்கத் தொண்டர் தயவு விசுவநாதன். வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
அதன் பின்னர் திண்டுக்கல் தயவுத்திரு ராம்சங்கர் அவர்களால், சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய “பேருபதேசப் பிழிவு” வாசிக்கப்பட்டு, பொருள் விளக்கம் மற்றும் அன்பர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தெளிவுரை அளிக்கப்பட்டது.
மதியம் 1.00 மணி
திண்டுக்கல் அய்யாப்பட்டி தயவுத் தொண்டர் திரு வே.மூக்கையன்சாமி அவர்கள் உரையாற்றினார். அவர் கூறியதாவது.
“கையற விலாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவ தென்றேமறைகள் பாடுவது பாட்டு” …. (திரு அருட்பா)
என்ற வள்ளற் பெருமானின் பாடலுக்கிணங்க வெறும் வழிபாடு செய்து வணங்குவதால் மட்டும் போதாது. நமக்குள் உள்ள மூச்சுக் காற்றைக் கொண்டு, நடுக்கண் புருவப்பூட்டிலே நாட்டம் செலுத்தி தியானித்து, உள்ளொளியைக் கண்டுகொள்ள வேண்டும். அப்பொழுது தான். நாம் எல்லாம் உய்யும் வகையில் “ஐயர்” எனும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அப்பர் விளையாட்டினை, திருக்கூத்துச் செயல்பாட்டினை உணர்ந்து அவர் வழியினைப் பின்பற்றி நடக்கலாம்.
மதியம் 1.10 மணி
தயவு விசுவநாதன் சொற்பொழிவு நிகழ்த்தி, வந்திருந்த அனைவருக்கும் நன்றி உரை வழங்கினார். அவர் கூறியதாவது –
யார் ஒருவர் தமது சிர நடு பகர வடிவ “ஓடம்” போன்ற தெய்வமணி தயவுப் பீடத்திலே சத்திய ஞான தீப ஒளியைக் கண்டு கொள்கின்றார்களோ அவர்களே உண்மையான தீபாவளியைக் கொண்டாடுபவர்களாக ஆகிவிடுகின்றார்கள். இதற்கென அகச்சான்றுப் பாடல் –
“ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம்”
மேலும் இந்த ஐப்பசித் திங்கள் 7ம் நாள் (23.10.2008) வள்ளலார் அவர்கள் கொடி கட்டிக் கொண்டு பேருபதேசம் புரிந்ததாகவும் வருகின்றது.
கொடி என்றால் தேகம் என்று பொருள். இந்த தேகம், துக்க தேகமாக, கறுப்பு காகமாக இருக்கின்றது.
சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து நினைந்து நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, யான் எனது என்ற தேகப்பற்று அறும் வண்ணம் சத்விசார சத்திய கங்கையில் மூழ்கி, தீப ஒளி கண்டபோது, கறுப்பு காகம் வெள்ளை அன்னம் ஆக மாறுகின்றது. பின் அது மேருவைச் சார்ந்தபோது பொன் மேனியாக, சுத்த தேகமாக மாறுகின்றது.
இப்படிப்பட்ட அனுபவங்களை எல்லாம் சுத்த சன்மார்க்கத்தின் மிக ஆழ்ந்த நிலையில் நின்று, ஒவ்வொரு தினமும் கண்டுகொண்டு வாழ்ந்து வரல் வேண்டும். இதுதான் உண்மை என்றார்.
அடுத்த கார்த்திகைத் திங்கள் பூச விழா இங்கு 23.11.2008ம் தேதியன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மதியம் 1.30 மணி
அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை
சிறந்த தயவுத் தொண்டரும், பிரதி மாதந்தோறும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் வள்ளலாரின் அருள், தயவுக் கொள்கைகளைப் பரப்பி வருபவருமான தயவுத்திரு மாதவன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜோதி வழிபாடு நடத்தப்பட்டது. விண்ணப்பம் படிக்கப்பட்டு, விழா நிறைவுற்றது.
இக் கூட்டத்தில் முக்கியஸ்தர்களும் சுற்று வட்டாரத்தில் இருந்தும் சுமார் 100 சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர்களில் முக்கியஸ்தர்கள் பெயர்கள் வருமாறு –
சின்னாளப்பட்டி டாக்டர் சண்முகம் தம்பதிகள்
திண்டுக்கல் தயவுத்திருவாளர்கள் சி சுந்தர்ராஜன் ஆர்.எம்.காலனி, ராஜாஜி நாகல்நகர் சொக்கலிங்கம் ஐயா,
கே.கே.வெங்கடாசலபதி ஐயா, முருகதாஸ் ஐயா, ராஜா அவர்கள்.
பாளையங்கோட்டை குமரகுருபரன் தம்பதிகள்.
கரூர் ஏ.முத்துக்குமார் தேனி பழனிசெட்டியபட்டி ராம் குமார், ஊத்துப்பட்டி கே.பி.மாரிப்பெருமாள், கொத்தபுளிபட்டி, பொன்.சங்கரலிங்கம்,
தயவுத் திருமதி லோகாம்பாள், ரமா பிரபா மற்றும் மீனாட்சி ஆகியோர்.
தயவுத் தொண்டர்கள் சான்றோர்கள், தாய்மார்கள், மாணவ மணிகள்.
சின்னாளப்பட்டி தயவுத் திருமதி எம். சகுந்தலா அம்மாள் குடும்பத்தார்
மற்றும் தயவுத் திரு கே.எஸ்.எம்.செளந்தரராஜன் குடும்பத்தினர்
ஆகியோரால் அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும்
பசியாற்றுவித்தல் பணி நடைபெற்று விழா முடிவடைந்தது.
Write a comment