HyperLink HyperLink

சிற்சக்தி துதி - சுத்த சன்மார்க்கக் கொடி விளக்கம்

 

திரு அருட்பா பதிகம் 126. சிற்சத்தி துதி
 
ஆறாம் திருமுறை.
 
வள்ளற் பெருமான், ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசி மாதம் 7ஆம் தேதி,
புதன்கிழமை காலை 8.00 மணி அளவில் மேட்டுக் குப்பத்தில் சித்தி வளாகத்  திருமாளிகையில்,
சன்மார்க்கக் கொடி கட்டியபின் பேருபதேசத்தை
அருளினார்.  (நாள்-30.1.1874)
 
உபதேசக் குறிப்பு.
 
         சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.
 
       இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக
 
   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
   தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
   என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.
 
       தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.
 
   * தாயுமான சுவாமிகள் - கருணாகரக்கடவுள் - 7.
 
         மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே.
 
ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.
 
         இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
 
        உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
 
   எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.
 
 அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
( 5457 )
சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே எனைஈன்ற
ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே
( 5458 )
பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
வருணக் கொடியே எல்லாஞ்செய் வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
தருணக் கொடியே என்தன்னைக் தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே அருளுகவே
( 5459 )
நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப்
பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே பரநாத
நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம்
கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே
( 5460 )
மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே
( 5461 )
நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே
( 5462 )
மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே
( 5463 )
புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே
( 5464 )
வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே
( 5465 )
கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே
(5466)
ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே
 
சிற்சக்தி துதி.
(சுத்த சன்மார்க்கக் கொடி விளக்கம்)
கொடியின் உண்மை.
சுவாமி சரவணானந்தா.
         இந்தச் சிற்சக்தி துதிப்பாடல், திருவருட்பாவிலே முக்கியமான ஒரு பதிகமாய் அமைந்துள்ளது. அநேகமாக எல்லாச் சன்மார்க்க சங்கங்களிலும், விழாக்கள் கொண்டாடும்போது முதலில், சன்மார்க்க கொடியை ஏற்றுவார்கள். அச் சமயத்தில், இப் பத்துப் பாக்களைப் பாடி கொடி ஏற்றுவது பழக்கமாக இருந்து வருகிறது. பலரும், பலகாலும், இப் பாக்களை ஓதிவரினும், அவற்றின் பொருள், அக மெய்ப் பொருள் புரிந்து கொள்ளாமலே இருக்கின்றனர். இதன் விளக்கம் வேண்டும் என்ற அன்பர்களின் விருப்பப்படியும், அருள் ஆண்டவரின் திருவுள்ளப்படியும், இப்போது வெளியாக்கப்படுகின்றது.
         இப் பதிகத் தலைப்புக்கு அடியில், “சுத்த சன்மார்க்க கொடி விளக்கம்” என்று சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. ஏனெனில், அருட்ஜொதியாம் சக்தியையே கொடியாகக் கொண்ட சிற்சக்தியை துதிக்கும் முகத்தான், அகம் வளர் அருள் ஆண்டவரையே தெளிந்து அடைய ஏதுவாக உள்ளதாம்.
         சாதாரணமாக கற்பனா, தெய்வ தத்துவங்களை உணர்த்த அச் சந்நிதிகளில் விசேட காலங்களில், விழாத் தொடங்கு முன். அத் தெய்வ தத்துவக் கொடிகளை ஏற்றுகின்றார்கள். முடிவில் இறக்கி விடுகின்றனர்.
         நம்முடைய “அருட்பெருஞ்ஜோதி” தெய்வமும், அது விளங்கும் சத்திய ஞான சபையும், அத் தத்துவாதீத தெய்வமும், ஆன்மக் கடவுள் உண்மைகளையே அடிப்படையாய்க் கொண்டனவேயாம். இந்த நெறியாளர், கடவுள் உண்மையும், தம் உண்மையும் ஒன்றே எனக் கண்டிருத்தலின், கடவுள் ஒருவரே அகத்தும், அனகத்தும் விளங்குவதே போன்று, ஆன்மாவின் அனக நிறைவே “தான்” என அக நின்று அறிகின்றான். அப்படி அறிந்தபின், அனக வாழ்வு - தயவு வாழ்வாக மேற்கொண்டு விளங்குவான்.
         அது நீயாய் இருக்கின்றாய், என்பதும், “தத்துவம்” என்பதும் ஒருவனைத் ‘தானே’ கடவுள் எனக் கருதச் செய்கின்றது. இது உடல் வடிவே “நான்” என எண்ணி வாழ்ந்து வருகின்றவர்களுக்கு, அக மெய்ப் பொருள் விளங்குவதே இல்லை. இவன் ‘நான் கடவுள்’ என்று தேக பாவனையினின்று கூறுகின்றான். இப்படி ஆன்மக் கடவுள் உண்மையை உணராது, தேக நிலையிலிருந்து கொடி உண்மையைப் பற்றிக் கருதும்போது, இவ் வுடல் துக்க தேகமாகவும், இதனை விளக்க வந்த கொடி கறுப்புக் கொடியாகவும் காண்கின்றான். இக் கருங்கொடியைக் கருங்காகமாகக் கற்பித்தனர் கன்ம சித்தர்கள். இது கொண்டு, காகம் என்ற சொல்லுக்கு கொடி என்ற பொருளையும் வழங்கியுள்ளனர்.
         உண்மையில் கடவுள் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள மனிதன். கருப்புக்கொடியாம் துக்க தேகியாக இல்லை ! இவன். சத்விசார சத்திய ஞான கங்கையில் மூழ்கி எழும்போது தன்னை இத்துக்க தேகி அல்ல, அகம் இருக்கும் சுத்த ஆன்ம வடிவினனே என அறிகின்றான். இக் கருத்தை வைத்தே கறுப்புக் காகம் கங்கையில் மூழ்கினால், வெள்ளை அன்னமாகும் என்ற மறைமுகமாகச் சொல்லி வைத்தனர். இதற்கு மேல் அருள் ஞான அனுபவத்தினால், ஆன்மா ‘நான்’ என்ற தற்போதமும் ஒழிய அருள் ஒளிவண்ணக் கடவுள் என்பது தெளிவாகின்றதாம்.
         இப்படியாக, தேகப்பற்றற்ற சன்மார்க்கி சுத்த ஆன்ம நிலையில் கடவுளும் தானுமே இரண்டு படாது ஒன்றி இருத்தலைத் தன் உண்மை வடிவாகவும் கடவுள் மெய்யுருவாகவும், அணுத்துவமாய் அருகிக் கிடத்தலை ஓர்ந்து, இவ்வண்ண தன் இறை உண்மையையே கொடிச் சின்னமாக ஆக்கிக் கொண்டான். இவ் அகச் சிற்றுரு நிலை நின்று, அனகப் பெருவடிவ அனுபவ வாழ்வு பெறவே சிற்சக்தித் துதிப்பாடல் எழுந்தனவாம். இவன் இயல்பாகவே தேக நிலை கடந்து இருத்தலின் இவனது கொடி கருமை கொண்டதாக இல்லை. வெண்மையும், பொன்மையுமே ஏற்று இலங்குகின்றதாம். கறுப்புக் காகம் கங்கையில் மூழ்கினால் வெண்ணிற அன்னமாகும் என்பதும் இறைவண்ணப் பொன் மேருவைச் சேர்ந்த காகம் பொன்னாகும் என்பதும் சித்தர் பரிபாஷை தரும் வாசகம்.
       அருட்ஜோதிக் கடவுளே, ஆன்மாவாய் இருந்து, இந்த உயிர் உடம்பு ஏற்றுள்ளதை பொன் நிறமும் வெண்ணிறமும் ஆக அறிவோம். கடவுள் ஆன்ம நிலை ஒரு பங்கும் சூழ் தேக வடிவம் மூன்று பங்கும் சேர்ந்ததுதான், கடவுணிலை காலும், உடல்நிலை முக்காலுமாய்க் காட்டத் தெளிவு செய்யப்பட்ட கொடி அப்படி அமைந்தது. இதற்குப் புற நிலவு ஒளியில் ¼ பங்கு பொன் நிறமும் ¾ பங்கு வெண்ணிறமும் இருப்பது முறையாகும். மற்றபடி 2 பங்கும் 3 பங்குமாகவோ, பாதி பாதியாகவோ வேறு அளவுகளிலோ கொடி அமைப்பதில் சன்மார்க்க உண்மை இல்லை. “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற மகா மந்திர வடிவில் மூன்று அருட்பெருஞ்ஜோதியும், ஒரு தனிப்பெருங்கருணையும் இருத்தலே, கடவுளும் நாமும் ஒன்றிய அனுபவம் தருவது சான்றாகும்.
         சுத்த சன்மார்க்க அனுபவம், புருவ நடு ஒருமை மனத்தோடிருந்து, சிரநடு சிற்ஜோதியை நோக்கி வேண்டி வேண்டி, உள்ளொன்றி அது ஆவது முதற்படியாம். அடுத்து அந்த சிற்ஜோதியாய் அகத்தே இருந்து கொண்டே, முத்தேக வழி சிந்தனை, சொல், செயலை வெளிப்படுத்திய வண்ணம் வாழ்ந்து வருவதே சன்மார்க்க வாழ்வு முறையாகும்.
       உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஒன்றே என்பதே உண்மை. அதுவே அதுவாய் இருந்து உணர்த்துவதும், அதுவே நாமாய் இருந்து துதிப்பதும், வேண்டுவதும் ஆக, இப்படி, ஒன்றே அனுபவ நிமித்தம் இரண்டு பட்டாற் போலும்,  பின் ஒன்றுபடுவது போலும் கொள்ளுவதெல்லாம் உபாய முறையே அன்றி வேறல்லவாம். இந்த அடிப்படையில்தான் சத்விசார பரோபகாரமும் தியான தியாகமும் முறை செய்யப்பட்டுள்ளன.
நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
         நினைப்பற நின்றபோ தெல்லாம்
எனைத்தனி யாக்கி நின்கணே நின்றேன்
         என்செயல் என்னவோர் செயலும்
தினைத்தனை யேனும் புரிந்திலேன் எல்லாம்
         சிவன் செயலாமெனப் புரிந்தேன்
அனைத்துமென் அரசே நீ அறிந்ததுவே
         அடிக்கடி உரைப்பதென் நினக்கே”  
                                                                                                                                               என்றதாலும்
“ஊடுதற்கோர் இடம்காணேன் உவக்குமிடம் உளதோ
    உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால்”
என்ற செய்யுட் பகுதியாலும் நாம் அக நிலையிற் பிறழாது இருந்துகொண்டே, அனகமாக வாழ்த்துவதும், பிறரை வாழ்விப்பதும், நாமே வாழ்வதும் தான் சுத்த சன்மார்க்க வாழ்க்கை முறையாம். சிறுகக் கட்டி பெருக வாழ்வது போன்று, சிற்சக்தியைப் போற்றி செய்து கொண்டு முத் தேகப் பெருஞ்சித்தி வாழ்வு ஏற்று, இனிது நிலவுவோம் இறை இன்ப நிறை வாழ்வில்.        
                                                                                                                                    தயா நேயன்.
                                                                                                                                  சரவணானந்தா.
        
        
       
 
 
கொடி வணக்க விண்ணப்பம்.
 
தயவுப் பாக்கள்.
 
சுவாமி சரவணானந்தா.
 
1.         ருட்பெருஞ் ஜோதியான தெய்வக் கொடியே-இந்த
    அவனியெல்லாம் கட்டியாளும் அன்புக் கொடியே.
2.     ஆருயிர்கட்(கு) யாவும்இன்பம் தருங்கொடியே-என்            
        அகம்புறம்எல் லாம் நிறைந்த அருட்கொடியே 
3.     இவ்வுலகில் எம்போல்வார்க்கு அருளும் கொடியே-உன்
   இயல் உண்மை அளித்திடுவாய் இன்பக் கொடியே.
4.       கையில்லார் காணுகின்ற(து) இருட்கொடியே-அவர்
   இங்(கு) அறியார் கங்கைமூழ்கும் வெள்ளைக் கொடியே.
 
5. உயர்மேகு வெற்புஅடைந்த ஒருகொடியே – நின்
 
   உருவதுவே பொன்உருவாய்ப் பெற்ற கொடியே.
6.       ர்அறிய கங்கைமேரு காட்டு என் கொடியே – அதில்
உவப்புடனே படிந்தோங்கச் செய்வாய் கொடியே.
7.       ழிலோடு பறக்கின்ற இசைக்கொடியே – நல்ல
    இன்புருவம் பெற்றனையே ஜோதிக் கொடியே.
8.       றாத நிலைமிசை ஏற்றுங் கொடியே-உயிர்த்(து)
    எழுந்தார் பிடித்துவரும் வெற்றிக் கொடியே.
9.       யமிட்டு அருள்அடைந்தார் அங்கைக் கொடியே-அவர்க்கு
    ஐயர்அருள் அம்பலத்தில் சேர்க்கும் கொடியே.
10.     ன்றான தயாபரன்தன் தன்மைக் கொடியே – இறை
    ஒன்றும் தயா வுண்மைநெறி கொண்ட கொடியே.
11.        ங்கார வண்ணம் கொண்டு ஓங்குங் கொடியே – தனி
          உயர்கருணை ஆட்சிசெய்யும் ஒளிக்கொடியே.
12.      ஒளவியம்தீர்த்(து) அகிலமெல்லாம் அணிசெய்கொடியே-யார்க்கும்
     அருந்துணையாம் அருட்பெருஞ் ஜோதிக் கொடியே.
 
13, தனிநிலையாம் ஆய்தம்(அ)து(ஆ)ன கொடியே – எங்கும்
 
    தயா இன்பம் வளர்ப்பாய் என் தயவுக் கொடியே.
 
வள்ளலார்ஸ்பேஸ் இணைய தளத்தில்
 
15.9.2008 சர்வதாரி ஆண்டு ஆவணி  மாதம், திங்கட் கிழமை  (பெளர்ணமி) நாளன்று வள்ளற்
 
பெருமானின் அருட்பெருங் கருணையினால், சுத்த சன்மார்க்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
 
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.