தயவுப் பாக்கள் ஆடியோ சி.டி.மூலம் வெளியாகியுள்ள 10 பாடல்கள் வெளியீடு.
இயற்றியவர் - சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
1.
சுத்ததயா சன்மார்க்க ஜோதிவருகின்ற
சுகாரம்ப தினம்இதுவாம் சூழ்ந்துவம்மின் இங்கே
இத்தரணி எங்கும்இனி என்பதியின் எழிலே
இயல்பெறவே ஓங்கிடும்நீர் மயலறவே காண்பீர்
சித்தசிகா மணிஎன்று வித்தகர்கள் செப்பும்
செல்வப்பேர் ஒடுதெய்வத் திருநாமம் எல்லாம்
உத்தமனார் ஒருவருக்கே கற்பித்த உண்மை
ஒருமையினாற் கண்டென்றும் பெருமையில்வாழ் வீரே.
தயவுவரு கின்றஒரு தருணமிது தானே
சத்தியமென் றறிந்திடுமின் நித்தியம்பெற் றிடலாம்
மயலறிவு கொண்டினிமேல் மலங்கிடுதல் வேண்டாம்
மன்னருளின் உணர்வாலே மாநிலத்தில் மகிழ்ந்து
அயலறியா தெல்லாரும் அகவுரிமை கொண்டு
ஆனந்த வாழ்வுறுதற் கானஒரு அமயம்
இயலாக இன்றவந்து இசைந்திட்ட திதனால்
இன்னலிருள் கழிந் தெங்கும் பொன்ஒளிதங்கியதே.
வரமளிக்க நம்முடைய வள்ளல்வரு கின்றார்
மண்ணுடம்பைப் பொன்னுடம்பாய் ஆக்கவரு கின்றார்
சிரநடுவாங் காற்குளத்தே திகழுநம(து) உருவில்
சேர்கின்றார் நமதுகுரு ரவிமதியுங் கொண்டே
உரனளிக்க உளத்தெழுநம் உடையவனை அடைய
ஒருமையொடு தயவுகொண்டு ஒடிவரு வீரேல்
கரமளித்து மேல்தூக்கி கலியுடம்பை மாற்றி
கழிவில்லாக் கனகமய இன்புருவாக் குவரே.
என்வார்த்தை என்றுஇதனை எண்ணாதீர் எனக்கு
என்தலைவர் உள்ளிருந்து இசைத்திட்டால் அன்றி
புன்அணுவும் அசைத்தொலிக்க என்னாவாற் கூடா
புரிந்துகொள்வீர் எல்லாமென் புண்ணியனார் உரையாய்
பொன்போன்ற அவர்இன்று புவியில்வரு தற்கு
புலையேனுள் இருந்திங்கே புனைந்துரைக்கின் றாரே
நன்மொழியீ(து) என்றுகொண்டு நல்தயவால் வருவீர்
நாதனருள் பெற்றென்றும் நனிமகிழத் தானே.
அரியவழி ஆயிரம்இங்(கு) ஆண்டவரைக் காண
ஆன்றோர்கள் வகுத்தார்கள் அவற்றாலே கண்ட
துரியவெளி நின்றநம திறைவரைநாம் தொட்டு
சுகபரிசத் தாலிங்கே சுவர்ணமய மாகி
பெரியவழி காட்டிடற்குப் பெற்றிபெறா திருந்தோம்
பெருமானே இன்றுவந்து பிடிக்கின்றார் தயவால்
உரியவழி தயவுநெறி ஒன்றேயாங் கிடவும்
உரைக்கின்றார் உடனின்று உரைக்கின்றேன் நானே.
உலகமெலாந் தயவாலே தனிநிறைந்த ஒளியே
உள்ளுணர்வாய் என்னுளத்தே யான்காண ஒருவா(து)
இலகுகின்ற என்னுரிமைப் பதியேஎன் இறைவா
எனையாட்கொண் டின்பளிக்க இசைந்த என(து)இன்பா
அலகிலருட் பெருஞ்ஜோதி அப்பா நான் அறிதற்(கு)
அரியபெரும் உண்மைஎல்லாம் அறிவித்தாய் அன்பால்
விலகறியா துனைமேவி வினைமேவா வண்ணம்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே.
7. நான்என்று எதைச்சொல்வேன் அதுநீயே ஆனாய்
ஞானம்சேர் ஆன்மாணு நானோநீ தானே
ஊன்என்னும் உடல் எனதோ அதுவுமுன தாமே
உடல்பெற்ற உயிர்உணர்வும் உடமைகளும் எல்லாம்
தான்இன்று தயவாலே தருகின்றாய் இந்த
தனித்தசுதந் தரம்உனக்கே உளதாலே நீதான்
மேல்நின்று மேதினிமேல் எனைக்கலந்து நானாய்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே.
8. சிற்றணுவின் உட்பொருளாய்ச் செறிந்துசிதை யாது
திகழ்ந்தோங்கி வளர்கின்ற திருவடிஒன் றாகும்
மற்றஒரு திருவடிதான் வானவெளி நிறைந்து
மதிக்களவாப் பிரபஞ்சம் விதித்தளிப்பதாமே
கற்றறியாக் கடையனையும் கடைத்தேற்றும் வண்ணம்
கால்கடுக்க நடந்துவந்தென் கருங்குடிலுற் றாயே
நற்றவர்கள் நயந்திடவே இங்கிதமும் காட்டி
நாயேனை ஆட்கொண்டு நடிக்கின்றாய் துரையே
9. மாயைஎன்று மறைசொல்லும் மலர்ந்தொளிர்வ தொன்று
மகம்என்னும் அகத்திருந்து வளர்ந்திடுவ தொன்று
நேயமுடன் இவ்விருகால் கொண்டுநெடுங் காலம்
நீள்உலகில் நடந்திளைத்து நெளிபுழுவிற் சிறியேன்
தோயுமொரு இருள்இடத்தே தொடர்ந்துவந்து என்னைத்
தொட்டதனால் தூயவனாய்த் துலங்கிடச்செய் திங்கே
சேயைநற்றாய் தழுவிடல்போல் செல்வமுற நோக்கி
திருநடன இங்கிதஞ்செய் திருக்குநட மணியே.
10. மதிபோன்று வளர்வதுவும் தேய்வதுவும் ஆன
மண்ணான புறவடிவம் மேன்மேலும் வழங்கும்
விதியென்னும் சக்தியொரு வியன்அடிய தாகும்
விண்மணிபோல் உள்ளொளிரும் மெய்யடிஒன்றாகும்
பதியாகும் நும்முடைய பாங்காம்அவ் அடியால்
பார்மீது பரிந்துவந்து நெருங்கிஎனை அணுகி
துதிபெருகும் சுகம்தரவே கூடிமகிழ் வோடு
சுத்தநடம் இங்கிதத்தால் சூழுநடத் தரசே.
தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை,
சத்திய ஞானக் கோட்டம்,
4, நாகசாமி ஐயர் சந்து,
திண்டுக்கல். 624 001.