HyperLink HyperLink

நிறை மனிதன் (9. நிறை நிலை)

 

 
நிறை மனிதன்
 
(The man of Divine Perfection)
 
9. நிறை நிலை.
 
சுவாமி சரவணானந்தா.
 
                                1974. 
 
          இறை அருள் இயக்கமே எங்கும் உண்ணின்று செயல்படுத்திக் கொண்டுள்ளது. அவ்விறை நிலையே பரிபூரணமாக என்கும், என்றும் நிறைவுற்று இருந்து கொண்டிருந்தாலும், அதனை உண்மையாக அறிந்து பயன்படுத்திக் கொள்ளாத வரையும் யாருக்கு என்ன பயன் ? இதனால் தான் முன்னிருந்த யோக ஞானசித்தர்கள் நிரவிய அழலுருவாய் நிறைந்த இறை ஜோதிக் காட்சியைக் கண்டும், அற்புத ஆற்றல் பெற்று அனந்த சித்திகள் புரிந்தும், நிறை மன்பதைக்குப் பொது   நல்வாழ்வு சிறக்க வழிகாணக்கூடாது போய் விட்டதாம். புதிதாய்ச் சமூக நலத்தொண்டு புரிய முற்பட்டவர்களும் கூட  புரட்சிகரமாகப் பலவாறு முயன்றும் தக்க பலன் அடையாது போயினர். ஆகையால், இத்தருணம் இறையருள் இயக்க நெறியுண்ணின்று வெளிப்பட்டு, ஓங்க, அவ்விறையே அருள் பாலிக்கின்றதாம்.
 
          நம் இறை அருள் உண்மை, இயற்கை நிறைவாய் எவ்விடத்தும், நிலைத்து ஆனால் செயலொடு நிலவிக் கொண்டு மன்னியுள்ளதாம். அப்படி நிறையுற்று நின்று நிலவும் ஒன்றை நமது ஆன்ம சிற்சபையிலே இருந்துதான் உண்மையாகக் கண்டு கொள்ளுகின்றோம். இந்த சிற்றம்பலக் கடவுள்தான் நம் இறைவன். இறை என்ற சொற்பொருள், மிகச் சிறியது எனவும், நிலைத்துத் தங்கி இருப்பது எனவும் அனுப ஞானத்தாற் கண்டுரைக்கப் பட்டதாம். நம் சிற்றம்பல அருட்ஜோதி நடனபதியே எங்கும் தங்கி அருள் இயக்கமாகிய திருநடனம் புரிந்து கொண்டுள்ளதை நாமே காண்கின்றோம். இது நம் இறைவனுக்கு இயற்கையான நிறை நிலையாகும். இந் நிலை அனாதி காலமாகவே இருந்து கொண்டுள்ள ஒன்றாம். இது எக்காலும், குறைவதுமில்லை மறைவதுமில்லை. அப்படியே இருந்து கொண்டிருப்பதால் என்ன பயன் ? அவ்வுண்மை வெளிப்பட்டு, அறிந்து கொள்ளப்படும்போது தான் வியப்பும், அதில் பற்றுதலும் ஈடுபாடும் சொல்லரிய இன்பமும் உண்டாகக் கூடியதாயிருக்கின்றதாம். ஆகவே அவ்விறையுண்மை வெளிப்பட வேண்டிப் பிரபஞ்சப் பேரியக்கம் உண்டாகி, எண்ணிலாப் படைப்புகளும் தோன்றி இம் மனிதப் பிறப்பில் தன்னறிவு விளைவு கொண்ட இச்சமயம்தான் இந்த இறைவன் காட்சியும், கண்டு கொள்ளப்பட்டுள்ளது. நிறை ஜோதி இறைக் காட்சியால் மனிதன் அடைந்த வியப்பு, இன்பம் மிகப் பெரியவைதான். எனினும் அந்நிறை நிலை அனுபவம் உடல் இழப்பால் தடைபட்டுப் போகின்றது ஓர் ஆன்மாவுக்கு. அந்த ஆன்மா மனிதனாய் இருந்தவரையிலும்தான் இறை இன்ப அனுபவத்தில் வாழ்ந்து வர முடிந்தது. பின்னர் அம்மனிதன் இறந்தபோது அக் கடவுட் சிந்தனையோடேயே சென்றிருந்தாலும் கூட, அவன் கடவுளாகி விட்டான் என்று கொள்ள முடியுமா ? முடியாது. ஏனெனில், அந்த இறைவன்தானே அம்மனித உயிருடல் கொண்டு விரிந்ததும் பின் ஒடுங்கினதுமாயுள்ளதால், அந்த இறை நிலையே அக் குறிப்பிட்ட மனிதனாய்த் தோன்று முன்பும் இருந்தது. அம் மனித நிலை நீங்கின பின்பும் இருப்பதாயுள்ளது தான் உண்மையாம். ஆகவே அம்மனிதன் மாண்டொழிந்தானே அன்றி,  இறைநிலை பெற்றவனாக மாட்டான். எனவே, மனிதன் கண்ட இறை நிலையின் பயன் நிறை நிலை கொண்ட ஒன்று அல்ல என அறியலாகும்.
 
          இறைநிலை குறைவற்ற நிறைநிலையாக விளங்க வேண்டி,  திருவருள் பூரணமாய் வெளியாக்கப்படுகின்றது. இப்பொழுது, மனிதன் தேக நிலையிலிருந்து, இறை நிலையைக் காண்கின்றவனல்ல. அந்த இறை நிலையினின்றே,  அவ்வியல் உண்மை இறை நிலையை, எங்கும் அருளொடு விளங்கக் காண்கின்றான். தான் அதுவாய் இருப்பதால், எங்குந்தானே உள்ளீடாய் இருந்து,  ஒவ்வொரு உயிராயும், பொருளாயும் வெளிப்பட்டுள்ளதையும் உணர்கின்றான். மேலும் தன்னொடு தானாய் இருக்கும் அருள் இறைவனின் ஆணையாலே சூழ வருவிக்கப் படுகின்ற ஆருயிர்கட்கு இயன்ற அளவுக்கு உயிர்விளக்க, அறிவு விளக்க அருட்பணி செய்து கொண்டிருக்க வேண்டியவனாகின்றான். இவ் வருளிறை பணியில் திளைக்கத் திளைக்க இவனது உயிருடம்பும், அருளின் நிறைவுபெற்று இறவா வடிவாய் மாறிவிடுவது உண்மை. இது நம் வள்ளல் பெற்ற மரணமிலாப் பெரு நிலையால் விளங்குவது. இதுவரை இறைவனுக்கு இயற்கை உண்மை நிலையாய் உள் மறைந்து கிடந்த ஒன்று இந்த அருள் வடிவு கொண்டு, அழியாது விளங்க முற்பட்ட மனிதனில் வெளியாகி நிலவத் தொடங்கி விட்டுள்ளதாம். இந்த நிறை நிலை மனித வடிவில் அழிவின்றி எக்காலும் விளங்க வல்லதாகி விடுகின்றது உண்மையே. இது கடவுளின் இயற்கையான நிறை நிலையினும் உயர் சிறப்புடைய ஒன்றாம். இவ்விறை நிறை நிலையாய், கடவுள்தான் சுத்த மனித வடிவில் அருட்பிரகாசமாய் விளங்க வெளிப்பட்டுள்ளார் என அறிந்து கொள்ளலாம்.
 
          மனிதன்தான் கடவுள் நிலை அடைந்தானா, அல்லது கடவுள்தான் மனித வடிவிற்கு இறங்கி வந்து விட்டாரா என்றால் உண்மை இதுதான். உண்மையில் இருப்பது அருட்பெருங்கடவுள் ஒருவரே அன்றி, பிற மனிதனோ, தேவனோ, மற்ற உயிரோ, பொருளோ இல்லையென்று சொல்லற்கில்லை (அப்படிச் சொல்லுவர் வேதாந்திகள் – பிரம்மம் தவிர மற்று யாவும், மித்தை, பொய், மனோ கற்பிதம் என்பர்).  அவ்வொன்றான இறைவன் தான் தனது அருளையே விரித்து ஒவ்வொரு உயிராய், பொருளாய் மற்று யாவுமாய்த் தோற்றுவித்து அருட்பக்குவம் வருவிக்கச் செய்யும் திருச் செயலாகக் காண்கின்றான் சன்மார்க்கி. ஆகையால் ஒன்றான அருட்பெருங்கடவுள் தானே என்றும் உள்ளவர். இதுநாள் வரை இயற்கை நிறை நிலையில் விளங்கிக் கொண்டிருந்த அவரே, திருவருளால் இம் மனித வடிவேற்று, இதிலே தன் அருளை நிறைத்து,  இவ் வடிவையே அருட்ஜோதி வடிவாக மாற்றிக் கொண்டு தன்னிறை நிலை விளங்க விளங்கிக் கொண்டிருக்கின்றார் என்று தெரிந்து கொள்வோமாக. ஆகவே, கடவுள் மனித நிலைக்கு இறங்கவுமில்லை. மனிதன், கடவுணிலைக்கு ஏறவுமில்லையாம். கடவுள் தான் கடவுளாகவே யிருக்கின்றார். முன்பு இருந்தது இயற்கையுண்மை இறைநிலை. இப்பொழுது ஏற்பட்டுள்ளது சிறப்பு உண்மை இறைநிலையாகும். இந்த சிறப்பு இறை நிலையே மனிதனுக்குரிய, திருவருளால் ஆணை செய்யப்பட்டுள்ள, நிறை நிலையாகும். இந்நிறை நிலையால் உலகில் நல்லின்ப வாழ்வு சூழும் என்பது நிச்சயம்.
 
          இதுவரை இருந்து வந்துள்ள சமய மத நெறிகளும், உலகாயத நாத்திக மார்க்கங்களும், கற்பனைக் கொள்கைகளும் இப்பொழுது பரவியுள்ள விஞ்ஞானப் படைப்புகளும், புரட்சி இயக்கங்களும் அருள் ஞானம் இன்மையால்,  மிக மிகக் குறைவுடையனவாகவேயுள்ளனவாம். இவைகளை எல்லாம் ஒழித்து,  நிறை அருட்பெரு நெறியை எப்படி மக்களிடை புகுத்துவது என்று எண்ணும்போது சற்று தயக்கம் ஏற்படுகின்றது. என்றாலும் அருட்பெரும்பதி அருள் புரிவது திண்னம் என்ற உள்ளுணர்ச்சித் தூண்டலால்,  இந்த அருள் இறை நிலையைப் பற்றி சிந்தித்தறியவும், வெளியிட்டுப் பரப்பவும் முயன்று, ஒருவாறு இது குறிக்கப்பட்டதாகும். அவ் விறையருள் நிறைநிலை,  நம்மில் செயல்பட விரிந்து என்றும் நல்லின்ப வாழ்வில் ஓங்கச் செய்வதாக.
 
                                                                            முற்றிற்று.
 
 
 
         
 
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.