Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
நிறை மனிதன் (8. நித்திய இயக்கம்)

நிறை மனிதன்
(The man of Divine Perfection)
8. நித்திய இயக்கம்
சுவாமி சரவணானந்தா.
1974.
அகண்ட பிரபஞ்சத்திலுள்ள அணுமுதல் எல்லாப் பொருள்களிலும் அடிப்படையான ஒரு நித்திய இயக்கம் இயற்கையிலேயேயிருந்து வருகிறது. அதுகாரணமாகத்தான் உலகில் இடையறாத மாற்ற தோற்றங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றனவாம். பொருளுலக இயக்கங்களையும், உயிரியல் இயக்கங்களையும் எளிதில் கண்டு கொள்ள முடிகின்றன. ஏனெனில் இவை புற நிகழ்ச்சிகளாய்த் தோன்றுகின்ற காரணத்தால் அறிந்து கொள்ளுதல் எளிதாகும். ஆனால், அணுவக இயக்கங்களையும், அறிவுப் பரிணாம இயக்கங்களையும், மிக நுணுகி ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளனவாம். அகண்ட வெளியில், எண்ணற்ற பேரொளி அண்டங்களும், கோட் கோளங்களும் சற்றும் பிசகாது முறையாக எவ்வளவோ காலமாய்ச் சுழன்று சுழன்று விரைந்து சுற்றிவந்து இயங்கிக் கொண்டே யிருக்கின்றனவாம். அக் கோளங்களிலே ஒன்றாகிய இந் நிலவுலகிலே உயிர்ப்பொருள்களின் இயக்கங்கள்தான் எத்தனை ! எத்தனை !! இவ்வெல்லா இயக்கங்களும் ஒரு மேலான குறிக்கோள் அடைவின் நிமித்தம் தான் நடைபெற்று வருகின்றன என்பது, சாதாரண மக்கள் அறிவுக்கு விளங்குகின்றதில்லை. இப்பொழுது மெய்யருள் ஞானத்தால் அந்த நித்திய இயக்கத்தின் காரணமும் அதனால் எய்தப் பெறும் முடிவு நிலையும் உள்ளவாறு காண்கின்றோம்.
எல்லா இயக்கங்களுக்கும் காரணமான ஒன்று புலனறியாச் சிற்றசைவாக ஒவ்வொரு சிற்றணுவகத்தும் இருக்கின்றதை அன்றே மெய்யறிவு உணர்ந்தது. இன்றோ விஞ்ஞானமும் அரிய கருவிகளால் கண்டு கொண்டுள்ளது. அவ்வக இயக்கத்தினின்று புற உலகத்தோற்ற இயக்கங்களெல்லாம் செயல்படுகின்றதை விஞ்ஞான பூர்வமாக அறிகின்றான் மனிதன். ஆனால் இவ்வியக்கத்தின் காரணமும், அடிமுடி உண்மையும் அறிந்துகொள்ளப்படவில்லை இன்னும். அருட்பெருக்கடவுள் உண்மை அறிந்து கொள்ளப் படுகின்றபோதுதான் இந்த நித்திய இயக்கத்தின் மறைபொருள் உண்மையும் வெளிப்படுகின்றது. அண்டப் பொருள்களின் இயக்கம் காரணமாக, வான்கலந்த காற்றிலே ஓங்கார நாதம் உண்டாகி என்றும் ஒலித்துக்கொண்டே யிருக்கின்றது. உலகில் உருவாகும் உயிர்ப் பொருள்களை எல்லாம் இவ்வொலியே இயக்கித் தன் வண்ண வடிவாய் உருவாக்கிப் படைக்கின்றதாம். சிற்றணுவுள்ளும் இவ்வோங்கார இயக்கம்தான் இருந்து வெளியாகின்றதாம். இந்த ஒலியின் உட்கூறுகள், அ – உ – ம் என்னும் மூன்றம்சமாயுள்ளது. இவற்றின் இயக்க நிலை உண்மையை மனிதப் படைப்புருவில் நன்கு காணலாம். மனிதக் கருப்பிண்ட வடிவில் இவ் ஓங்கார இயக்க வளர்ச்சியை நன்கு காண்கின்றோம். நிறையறிவுடன் விளங்கும் மனிதனின் உடலுருவும், உயிர்ப்புச் சக்தியும், அறிவு விளக்கமும் இந்த ஓங்காரத்தின் உட்படு அகர, உகர, மகர மெய் வண்ணமாக இருக்கக் காண்கின்றோம். மேலும், இதற்கெல்லாம் காரணமாம் - அழிவற்ற அகப்பொருள் ஓங்கார வண்ண ஆன்ம அணுவாய்த்தான் இருக்கின்றதை பகுத்தறிவும் ஏற்கின்றது.
கடவுள் அருளே ஓங்கார வண்ண ஆன்ம அணுவாய் இருந்துகொண்டு, தன் உண்மை வெளிப்பட்டு அனுபவம் உண்டாக வேண்டி, இந்த நித்திய இயக்கத்தைச் செயல்படுத்திக் கொண்டுள்ளதாய்த் திருவருளாலே உணர்த்தப் படுகின்றோம். இவ் ஓங்கார உண்மை கண்டிருந்த நம்மனோரே, நம் கடவுளான்மாவை ஓம் என்னும் ஒரு சொல்லென்றும், அதன் பொருள் அருளே என்றும் கூறி வைத்தனர். பின்னுற்றவர்கள், இவ் வான்ம உண்மையை உட்கொண்டே, ‘அயம் ஆத்மா பிரம்மம்’ அதாவது இந்த ஆன்மாவே கடவுள் என்ற வேத மகா வாக்கியத்தை ஆக்கி வைத்தனர். ஒரு சொல்லை ‘சோல்’ (Soul) ஆக்கி ஆன்மா என்ற பொருளைக் குறித்து விட்டனர் சிலர். ஓம் என்பதன் கூறாகிய அகர உகர மகரத்திற்கொப்ப அ – உ – ண் எனக் கொண்டு (அ+ண்+வு=) அணுவைக் கற்பித்துக் கொண்டனர் அறிஞர். இந்த இயல் உண்மை இயக்க அணுவை ‘ஆட்டம்’ (Atom) எனக் கொண்டதிலும் மெய்ப்பொருள் உண்டு. இவ்வான்மாதான் அருட்பெருக் கடவுளரின் நித்திய இயக்கமாகிய ஆட்டம் என்னும் திருநடனம் கண்டு கொள்ளப்படும் இடமாகவுள்ளதாம். இவ்வருள் இயக்க உண்மையே அருட்பெருஞ்ஜோதி நடன பதியின் நித்தியானந்த தாண்டவ இரகசியமாகும். இவ்வுண்மை விளக்கும் ஒரு திருவருட்பாவை இங்கு எடுத்து விளக்குவாம்.
“எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும்
இலங்குசிவம் ஒன்றே
என் ஆணை என் மகனே
இரண்டில்லை யாங்கே
செவ்விடத்தே அருளொடு சேர்ந்து
இரண்டெனக்கண் டறிநீ
திகைப்படையேல் என்றெனக்குச்
செப்பியசற் குருவே”.
அவ்விடத்தே உவ்விடதே
அமர்ந்ததுபோல் காட்டி
அங்குமிங்கும் அப்புறமும்
எங்கும் நிறைபொருளே
ஒவ்விடசிற் சபையிடத்தும்
பொற்சபையி னிடத்தும்
ஓங்குநடத் தரசே என்
உரையுமணிந் தருளே”.
என ஓதப்பட்டுள்ள பாடலின் உண்மையை ஓர்ந்துகொள்ளல் நன்றாம். ஒவ்விட சிற்சபை என்றது, நம் “ஓங்கார ஆன்ம அணுவே” யாகும். இதிலிருந்து செய்யப்படுகின்ற நித்திய அருள் இயக்கமாகிய நடனம்தான் அகண்ட பிரபஞ்சத் தெங்கும் பேரியக்கமாய் வெளிப்பட்டுள்ளதாகும். இப்புற வெளி நிலையே பொற்சபையாகப் போற்றிக் கொள்ளப்படுகின்றது. இங்கு மாசற்ற பொன்மய ஒளி நிறை காரணத்தால்தான் பொற்சபை எனக் குறிக்கப்படுவதாம். இவ்வியக்க நடன இறையருட் பெரும் பதியைத் துதிக்கின்ற வள்ளலார், அருள் உண்மைக் கடவுள் நிலையையும் செயலையும் தெளிவு படுத்தி விடுகின்றார். அவ் விறையருளை வேண்டிப் பெற்றுக் கொண்டால், அவரோடு ஒன்றி ஆனந்த நடன நித்திய இயக்கத்தோடு விளங்கலாமென்பது கருத்து. சிற்சபையாம் ஆன்மாலயத்தில் நின்றாடுங் கடவுள், ஒருவரே தான் உண்மையில் எவ்விடத்துள்ள எவ்வுயிரின் அகத்தும் இருந்து கொண்டுள்ளார். இந்த ஒன்றான கடவுளை மெய்யறிவால் தன் அகத்தே கண்டு கொள்ளுகின்றான் ஆன்ம ஞானி. புறத்தேயுள்ள உயிர் வடிவங்களின் அகத்தே, தனது உள்ளமுடையானே இருந்து, அப்புற வடிவம் ஒவ்வொன்றுமாய்த் தோற்றி இயக்குகின்றார் என்பதையும் உணர்வால் உணர்ந்து கொள்ளுகின்றான் அந்த அகஞானி. மற்றபடி புறத்தே கடவுள் உண்மை வடிவைப் புலக் கண்ணால் காணற்கில்லையாம். அகமிருக்கும் கடவுள் ஒருவரே எங்கும் உட்பொருளாய் உள்ளவர் என்பது உண்மை. அந்த ஒன்றான கடவுள், தன் அருளையே புறத்தோற்றங்களாக விரித்துக் காட்டியும், பிரித்து மாற்றியும் கொண்டுள்ளார். இதனால் நம் பதி அகத்தில் ஒன்றாய் இருந்து கொண்டும், புறத்தில் அருளியக்கத்தால் பலப்பலவாகிய தோற்ற வடிவு கொண்டும் விளங்குகின்றார். மேலும் நமது கடவுளர் ஒவ்வொன்றின் அகத்திலும் அதன் நிறைவிலும், அதன் புறத்திலும் தனித்தனி இருப்பது போல் தோற்றியும், எங்கும் அதீதமாய் நிறைவுற்ற ஒன்றாய்த் திகழ்வது போலும் உணர்த்திக் கொண்டுள்ளார். இப்படியுள்ள ஆண்டவரைப் பணிந்து போற்றி அருளால் ஒன்றிக் கொள்ளுவதால் அக நிலையிற் பிறழாதிருந்து கொண்டு, அருளியக்கச் செயலால் ஆனந்த சமுதாய வாழ்வை உலகில் விளங்கச் செய்யலாம் என்பது திருவுள்ளக் கருத்தாம். நம் வள்ளலார் கண்டு பெற்ற அருட்ஜோதிக் காட்சியின் பெரும்பயன், முன்னோர் கண்டிருந்த நடனானந்தக் காட்சியால் விளளவு கொள்ளவில்லை. ஏனெனில், அவர்கள் அந்த ஆனந்த நடனக் காட்சியில் ஒன்றி பரவசப்பட்டு அதிலேயே கரைந்து மறைந்து போய்விட்டார்கல். ஆனால் நமது சுத்த சன்மார்க்க வள்ளலோ இயல்பாகவே தம்மைப் பதியோடு ஒன்றியுள்ளவராய்க் கண்டு, ஜீவ தயா முயற்சியால் அருளோடு நித்திய இயக்க வாழ்வு பெற்றுவிட்டூள்ளார். ஆதலின் இவ்வியக்க, அனக நெறிதான் உலகுக்குத் தேவையாய், இன்று தெரிந்து, மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றதாம்.
உலகில் பொதுஜன சமூகத்தில் நல்வாழ்வுக்கு தடையான மாறுபாட்டுக் கொள்கைகளும், பகுத்தறிவுக்கும், இயற்கையுண்மைக்கும் பொருந்தாத சில கட்டு திட்டங்களும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாததும், வேண்டாததுமான பழக்க வழக்கங்களும் மிகுந்துள்ளன. அவைகளில் மாற்றப்பட வேண்டியவைகளை , நீக்கப்பட வேண்டியவைகளை நீக்கியும், மக்கள் சமுதாயம் ஒன்றுபட்டு அன்பு வாழ்வில் தழைத்தோங்கச் செய்யவல்ல நல்லியக்கம் எதுவோ அதுவே இப்பொழுது மிக மிகத் தேவையாம். அப்படிப்பட்ட நல்லியக்கம் அக நின்று அருளொடு தோன்றி எங்கும் பரவுதல் வேண்டும். அருள் உண்மை ஞானமும், தயா நன்முயற்சிச் செயல்களும் வெளிப்படாமல் வெற்றிப் புரட்சிக் கொள்கைகளாலும், இயக்கங்கலாலும் எழுகின்ற செயல்கள் போர்க்கோலம் பூண்டு, அழிவுப் பணியில் மக்களை இட்டுச் செல்லுகின்றன. ஆனாலும் இப்பொழுதுள்ள வன்மை மிக்க மாறுபாட்டு நிலையில் அருளுபதேசம் மக்களுள்ளத்திலே இலேசிலே பதியாது போல் தோன்றுகின்றது. அதனால் அருளாளன் திருவுள்ளம் எதுவோ என ஏங்கிச் சீக்கிரத்திலே நலமுண்டாக வேண்டிக் கொல்ள வேண்டியிருக்கின்றது. நாம் இப்படி வேண்டிக் கொண்டும், இயன்ற அளவு முயன்று கொண்டும் அருளைப் பெருக்கிக் கொண்டிருந்தால், நம்பதி எந்த விதத்திலும் தனது மறக்கருனையாலும், அறக் கருணையாலும், ஒறுத்துத் திருத்தி, நம் அருள் வழிக்கு, மக்களைத் திருப்பிவிடுவார் என்பது உறுதி. ஆகவே, இவ் வரூள் நன்முயற்சியே நம் இயக்கமாக ஓங்கட்டும்.