தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
41 – 45 பாடல்கள் உரையுடன்
கேட்டவை யெல்லாம் கேண்மையிற் கொடுக்கும்
கேள்வனைக் கிளர்ந்துளே கருதிப்
பாட்டவை கொண்டு பரிவுடன் பாடிப்
பத்திசெய் திருப்பிரே லிங்கே
நாட்டவர் நயப்ப வீட்டவர் வியப்ப
நல்லவாழ் வுற்றிட லாமே
தாட்டலந் தந்து என்னைவாழ் வித்த
தயாநிதிக் கடவுள ரிவரே. பாடல்.41
உரை.
இதோ இந்தத் தயாநிதித் தெய்வம்தான் நாம் கேட்பவை யாவும் உவந்து வழங்க உள்ளது. ஆகையால், உள்ளுணர்ச்சியாற் கண்டு முன் நின்று, துதிபாடிப் பக்தி செய்து இருந்தால் தயாநலம் பெறலாம். அந்த நல்வாழ்வை நாட்டு மக்களும், வீட்டு நிலையில் வாழ்நரும் வியந்து ஏற்க வருவர். தாள்+தலம் = தாட்டலம். திருவடி தங்கும் இடம் – இது நம் தலை நடு இடமே !
இவருமின் இந்தத் தயாநிலை மேலே
இறவிலா வரந்தரு மிறைவன்
நவவுரு கொண்டு நமைவர வேற்கும்
ஞானநன் மணியென வொளிருஞ்
சிவமுத லாகச் செப்பிடுமத் தெய்வத்
திருவளர் கற்பனைக் கெல்லாம்
உவமனுக் கெட்டா வொருதயா வடிவாய்
உள்ளது வந்துபா ரீரே. பாடல்.42.
உரை.
இந்த மேனிலைக்கு ஏறிவந்து தயாபதி முன் பணிந்து நிற்பீர். இறவா வரம் தரும் இறையொளி இதுவெனக் காண்போம். இதுவே, நவஉரு (புதுமை, அல்லது ஒன்பது) வடிவேற்று ஞான ஜோதி மணியாக விளங்குகின்றதாம். இந்தத் தயவு ஜோதியே சிவம் முதலாகச் சொல்லப்படும் எல்லாத் தெய்வத்திற்கும் உட்பொருளாய் உள்ளது. இதன் உண்மையை நேரில் வந்து பாருங்கள். ஏனென்றால் இது இப்படி இருக்கிறது - அப்படியுள்ளது என - மனோ கற்பனையால் அளந்து கூறமுடியாததாம்.
உள்ளது என்று முலைவிலா திருப்ப
உலைந்துகே டுறுகிற வுருவைக்
கொள்வது என்ன கூடம தாமோ
கூறுக வென்றெனைக் கேட்பின்
அள்ளுறு மரவிந் தருண்மலர் மலர
அளவிலாக் காலம தாகும்
கள்ளுணு மளிகள் அதுவரை வந்து
கடந்துகொண் டிருப்பது கரியே. பாடல்.43.
உரை.
என்றும் ஒருபடித்தாய் உள்ளது கடவுள். அது உள்ளாக உள்ள நிலை. அப்படி அகநிலை குலையாதிருக்கவும். புறத்தே மட்டும் அனந்த வண்ண பேதத் தோற்றங்கள் ஆவதும், அழிவதும் இருத்தல் ஏனோ என்று எனை வினவுவீர்களேயானால், ஓர் உதாரணத்தால் விளக்குகிறேன். சேற்றிலே இருந்து முளைத்தெழும் தாமரை, நீர்மட்ட மேல் வந்து, சிறு அரும்பாகத் தோற்றி நெடு நாட்களுக்குப் பின், மொட்டாகிக் கட்டவிழ்ந்து மலரும். அதுவரை தேன் உண்ணும் வண்டுகள் எத்தனையோ வந்து வந்து பறந்து சென்று கொண்டேயிருப்பது போல, ஆன்ம பரிபாக மலர்ச்சி பெறுமுன் எத்தனையோ உடல்கள் தோன்றி அழிதல் கண்கூடு.
கரியதன் கையுந் நாசியு மொன்றாய்க்
கலந்தொரு பொருளென வுளபோல்
பெரியநம் பெருமான் அருளுநம் உயிரும்
பிரிவறக் கலந்துள தாமே
அரியநல் யோகி வாசிகைக் கொண்டு
அத்துவி தப்பொருள் காண்பன்
உரியநம் அருளா முணர்வது கொண்டு
உயரனு பவம்பெற லாமே. பாடல்.44.
உரை.
யானையின் துதிக்கை ஒரு சிறப்பான உறுப்பு. மூக்கும் கையும் ஒரு கருவியாய், கந்தமும் பரிசமும் அறிய உதவுகின்றது. இதுபோல், ஆண்டவர் அருளும் நமது மெய்யறி உயிரும் இணைந்து ஒரு பொருளாய் இருக்கின்றது. இதனை ஒரு வாசியோகி முடிவில் சிவாகாரமாய்க் காணக் கூடும். கண்டு அதில் மறைவான். நாமோ ஜீவ தயாவுயிர் அனுபவமேல் உறும், அருளனுபவத்தால் உயர் இன்ப வாழ்வு பெறலாம்.
பவம்பெறு மிந்தப் பழிவளர் வாழ்வில்
பாழ்பெறப் படிந்திடல் வேண்டாம்
தவம்பெறு முயற்சி தான் செயத் தக்க
தருணமீ தல்லவென் றறிந்து
சிவம்பெறு தயவாம் திருவினைத் தாழாச்
சேர்ந்திடு வீரெனி லின்னே
அவம்பெறு வாழ்வு அறுமுட னழியா
அருட்பெரு வாழ்வுவந் திடுமே. பாடல்.45.
உரை.
உலக வாழ்வில் அழுந்தினால் பவமாகிய பிறவி மேன்மேலும் தொடரும். கடுந்தவ முயற்சியும் கூட இப்போது அற்பப்பயனே விளைவிப்பதாகவுள்ளது. ஆகையால், சிவானந்தம் எனும் தயா இன்ப வாழ்வு பெற, உள்ளொளியைச் சார்ந்து கொள்ள வேண்டும். அப்போது, வீணான அவ வாழ்வு நீங்கி, அருட்பெரு வாழ்வு சூழ்வது திண்ணம்.
ContentRef: Dhayaa vilakka maalai
Write a comment