Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
வள்ளல் யார் ?

உண்மை வள்ளல் யார் ?
இராமலிங்கர் வாழ்க்கை உண்மை
சுவாமி சரவணானந்தா
உள்ளொளிர் அருட்ஜோதிதான் உண்மை வள்ளலாக இருக்கின்றது.
எல்லோருக்கும், எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும் உண்மையான தேவைகள் எவையோ, அவைகளை எல்லாம், அவர் அவர்கள் கேட்டாலும், கேட்கா விட்டாலும் இடையறாது கொடுத்துக் கொடுத்து உள்ளும் புறமும் துணண நின்று காத்து வாழ்வித்து உய்வளிக்கின்ற வள்ளல் தான் நமது உள்ளமாகிய சத்திய ஞான சபையிலே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணைப்பதி ஆவார். இவரன்றோ மெய்யான வள்ளல்.
உலகம் கண்ட முதல் இடை கடை வள்ளல்களையும், பிற ஏகதேச தான தர்மங்கள் செய்தும் ஞான உபதேசங்கள் புரிந்தும் வள்ளல் என்ற பட்டம் பெற்றவர்களெல்லாம் நம் அருட்பெருந்தயாஜோதி வள்ளலுக்கு எங்ஙனம் நிகராவார்கள் ! ஒரு போதும் சிறிதளவும் நிகராக மாட்டார்கள் என்பது உண்மை.
அருள் ஒளியால் அருட்பிரகாசனார்.
இந்த அருட்ஜோதி வள்ளலைத்தான் அம்பலத்திலே நம் அருட்பிள்ளையார் கண்டார், கலந்தார், அதுவாகி வாழலானார். இந்த உண்மையை இப்படிப் பாடுகின்றார்.
அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் ஜோதியைஎன்
அம்மையை என்அப்பனை என்ஆண்டவனை அமுதைத்
தெருளுறும்என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும் எனக்களித்த
வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே
எனத் திருவடிப் புகழ்ச்சியில் போற்றி செய்கின்றார். மேலும் பாடுகின்றார்.
அடியாது என்று அறிந்துகொளற்கு அரும்பெரிய நிலையே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
முடியாதுஎன்று அறிந்திடற்கு முடியாதுஎன்று உணர்ந்தோர்
மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியேஎன் களிப்பே
மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கையியற் பொருளே.
என்பதில் இருந்தே அகமுடையானோடு (அகம்+உடையான்) அத்துவிதமாகி, (ஒன்றிக் கலந்து) மடியாத வடிவெய்தி வாழும் வரம் பெற்ற உண்மை பேசப்படுகின்றதாம். இதனால், இப்பொழுது இவர் இராமலிங்கர் அல்ல, உண்மையில் அகம் வளர் அருளொளி வள்ளலே என அறிந்து கொள்ள வேண்டும்.
புற உலகம் இவரை இராமலிங்க அடிகளாராகத்தான் கண்டு கொண்டிருந்தது. அருட்ஜோதி வளர் அகவுலகில் அருட்பிரகாச வள்ளலார் ஆக விளங்கலாயினார். இந்தத் திருவருட் பிரகாச வள்ளலுக்கு கற்பூர மணம் கந்திக்கும் கடவுட் ஜோதித் திருமேனி ஏற்பட்டு விட்டதாம். இதனை அவரே கூறுகிறார்.
கற்பூர மணக்கின்றது என்உடம்பு முழுதுங்
கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
புண்ணியனார் திருவடிவின் நண்ணியவாறு அதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
இதனால் நம் வள்ளலார் பசுங்கற்பூர நறுமணம் வீசும் தெய்வத் திருமேனியோடு என்றும் திகழ வல்லவராகி விட்டார் என்று அறிதல் வேண்டும். இந்நிலை அனுபவம் இறுதிக் காலத்தில் தான் கிடைக்கப் பெற்றது. அதாவது அகமிருந்து அனகமுற்றதாகும். இது வெளியாகுமுன் சுத்த தயவு நிரம்பிட வேண்டியிருந்தது. ஜீவ கருணை வளர வேண்டியிருந்தது.
அறிவு ஒன்றாலே ஆதிகாலத்தில் தானே கடவுள் ஆன்ம உண்மை கண்டு கொள்ளப்பட்டு இருந்ததால், அது குறித்து முயற்சி கொள்ள வேண்டிய பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால், அந்த அக ஞானத்தால் கண்டிருந்த கடவுள் உண்மை கொண்டு வாழற்கு வகைதேட வேண்டிய பொறுப்புதான் பெரிதான ஒன்றாய்த் தோன்றி இருந்தது. அறிவினாற் கண்டதைப் பாவனையால் கூடி சிறிது காலம் களித்திருந்து, அழிந்து போகத்தான் செய்ததால், அவ் வழியை விட்டுவிட்டு வேறு ஒரு புது நெறியைக் காண வேண்டியிருந்தது. இப்புது நெறி கடவுள் இயற்கையோடு வெளிப்பட நேர்ந்ததாகும்.