Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
36-40 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
36 – 40 பாடல்கள் உரையுடன்
இலங்கிடு மில்லம் தயவுஆ லயமே
யிதிலரு ளொளித்திரு எழிலாய்த்
துலங்கிடு கின்றாள் தூதயா முறையால்
சுகந்தர மணந்திடு கின்றாள்
மலங்கிட லற்று மணந்துகொண் டிங்கே
மகிழ்வொடு வாழலாம் வம்மின்
கலங்கிட வேண்டாம் தயாஅறங் காண்மின்
கடவுளில் லறமிது வாமே. பாடல்.36.
உரை.
நம் தயவு ஆலயம்தான் எவர்க்கும் உண்மை இல்லம் ஆகும். இதிலேதான் அருள் ஒளித்திரு தயா செல்வி என்றும் அழகு குலையாது விளங்கிக் கொண்டுள்ளாள். இவளே தயவு நெறி முறையால் நம்மை மணந்து பேரின்ப நலம் தர உள்ளாள். அதன் சேர்க்கையோடு, அம்மேனிலையினின்று மலங்கிடாது (கீழ் நழுவாது) ஆனந்தமாக அனக வாழ்வுடன் திகழலாம். இதுதான் கடவுள் இல்லத்து விளங்கும் உண்மை இல்லறமாகும்.
ஏண்பெற என்று மினிதுவாழ்ந் திடலாம்
இவ்வறந் தான்மிக நல்ல
மாண்புற வாழு மனையற மாகும்
மகனெனு மகனையும் பெற்று
காண்புறந் தழுவி கனகமா முத்திக்
கரிசிலா வடிவுகொண் டிடலாம்
நாண்பெற நல்லோர் நல்லற மென்று
நவில்வதிவ் வில்லறந் தானே. பாடல்.37.
உரை.
நல்லோர் நவிலும் நல்லறமாம் இல்லறம் மேற்கொண்டு வல்லப சக்தியோடு நலமே வாழ்ந்திடலாம். இம்மனை அற வாழ்வில்தான் மகன் என்னும், (ம்+அகன்) ஒளியோடு கூடிய ஆன்ம மைந்தனைப் பெற்று, புறத்தே விளங்கும் புன்புலால் ஆக்கையும், சுத்த, சுக, ஆனந்தமாம் முத்தி வடிவமாக மாற்றிடப் பெற்று மகிழ்ந்திருக்கலாகும்.
அறம்பொரு ளின்பம் வீடெனு நான்கும்
யாவரும் அடைந்திடல் வேண்டும்
உறம்பெறு முலகில் உண்மையே தழைக்க
ஒளிநெறி யோங்கிடல் வேண்டும்
திறம்பெற வெவருந் திருவுடை யவராய்ச்
சிறந்திட வாழ்ந்திட வேண்டும்
புறம்பொலி யுடம்பே பொன்னுடம்பாகி
புவியிலே விளங்க வேண்டுவனே. பாடல்.38.
உரை
இந்த வீட்டிலே இருந்து கொண்டு, அறம் பொருள் இன்பம் சேர வாழ்வதே நான்மறை மெய்ப்பொருளாய் எவரும் கண்டிட வேண்டும். வான்குறள் வகுத்த வள்ளுவர், கடவுள் வாழ்த்தான முதல் அதிகாரத்தையே, வீடு எனக் கொண்டு முத்தி வாழ்வில் அடங்கினார் ஆவர். இன்றோ அனக சுத்த நெறியால் நாற்பால் பயனும் நன்கு விளங்க, நல்லொளியுடம்பொடு வாழ வைப்பதாய் உள்ளது நம் தயா ஒளி நெறி.
புவியிலே வாழும் புண்ணியம் பெற்றோர்
பொன்றுத லென்றுமில் லாது
சவியெனத் திகழத் தயாபெரு முரிமை
தானுடை யவர்களே யாவர்
அவிசுணுந் தேவர்க் கரியதிப் பேறு
அவர்களு மவாவுவ ரவனிக்
கவினுறு கருணை பெறும்பெரு வாழ்வே
கண்டுறு வீர்விரைந் திங்கே. பாடல்.39.
உரை.
இந்நிலவுலகிலே வாழப்பிறந்துள்ளது நம் பெரும் பாக்கியமே. ஏனெனில் இங்கு தோன்றியுள்ள எல்லோருமே தயவு ஒளி வடிவேற்று வாழும் உரிமை ஏற்க உள்ளனர். இந்தப் பேறு தேவர்கட்கும் இல்லை ! அவர்கள் உண்ட அமிர்தம் மருள் வாழ்விலே யுகம், யுகம் இருந்தும் வாதனையில் மடியச் செய்வதேயாம். இவ்வுலகில் மனிதப் பிறப்பெய்தியே தனிப் பெருங்கருணையால் அருட்பெருஞ்ஜோதி வாழ்வு ஏற்க முடியும். தயையுடையீர் இவண் உறுவீர்.
விரைந்துவந் திடுமின் மேதினி யீரே
மெய்மையுற் றிருக்கலா மென்றும்
திரைந்ததோ லுடம்பு செழும்பசும் பொன்னாய்த்
திகழ்ந்திடப் பெற்றிட லாமே
வரைந்திடற் கரிய மொழியினா லும்மை
மனமகிழ்ந் தழைத்திடும் வாக்கை
கரைந்திடுங் கருணை யுளத்திலே யிருந்து
கருத்துறக் கேட்டுசார் வீரே. பாடல்.40.
உரை.
கருணை உள்ளத்திலே ஒளிர்கின்றது கடவுட்ஜோதி. தயா நெகிழ்ச்சியோடு ஜோதி முன்னுற்று இருந்தால், அவ்வொளியே பேசா மொழியால், மெளன வாசகத்தால், “திரைந்த தோல் உடம்பு செழும் பசும்பொன்னாய்த் திகழ்ந்திடப் பெற்றிடலாம்” என அழைத்துக் கொண்டுள்ளதை கேட்கலாம். தயவால் அடைந்து மெய்மையுற்றிருக்கலாம். மெய்மையாவது, மெய்யினது தன்மை. அது மெய்யாக அழியாதிருப்பதுவேயாம்.

Content Ref: Dhayaavilakkamalai