சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை
சுவாமி சரவணானந்தா.
1968
முன்னுரை
- அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடிவம்.
“ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான் அருட்
ஜோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே”
== திருமந்திரம்==
அகண்டாகாசப் பிரபஞ்ச வெளியில் ‘ஓம்’ என்னும் பிரணவ நாத அணுக்கள் என்றும் விளங்குகின்றன. இக் காரணத்தால், சமுத்திர அலையொலியிலும், கான்வெளிக் காற்றொலியிலும், சங்க நாதத்திலும், மணியோசையிலும், மேற்படி பிரணவ நாதத்தையே கேட்கின்றோம். இடியும் மின்னலும் உடனாய்த் தோன்றுவதே போன்று, பிரணவ நாதம் தோன்றும்போது ஓர் ஒளியும் தோன்றுகின்றது. இவ் ஒலியும் ஒளியுந்தான் ஆகாச வெளி ற்றும் நிறைந்துள்ளது. ஆகாசத்தில் நிலைத்து விளங்கும் பிரணவ சக்தியினால் பிரபஞ்சப் பொருட்கள் யாவும் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு கடைசியில் அழிக்கப்படுகின்றன. ஆனால், இவ்வழியுந் தன்மையுடைய மாயா பிரபஞ்சத்திற்குக் காரணமாயுள்ள கடவுட் சக்தி என்றும் அழியாதது; எல்லாம் செய்யவல்லது. இது அருட்பெருஞ் சக்தி. இது அழிவற்ற ஆகாசத்திற் கலந்த பிரணவ சக்திக்குள்ளீடாய் நிலைத்து விளங்குவதாம். ஆகவே, ஆகாச வெளியிற் கலந்துள்ள பிரணவநாத ஜோதி அருட்பெருஞ் ஜோதி சக்தியாக அறியப்படும்.
அருட்பெருஞ் ஜோதி சக்தி அழிவற்றது, எங்கும் நிறைந்தது. இது மாயா பிரபஞ்சப் பொருள்களில், உள்ளும் புறமும் நிறைந்து நின்று, அவைகளையெல்லாம் தம் அருட் ஜோதி மயமாக்கப் பக்குவக் வருவித்துக் கொண்டுள்ளது. இப் பக்குவ நிலை எப்படி வருவிக்கப்படுகின்றதெனில் : அருட்ஜோதி அணுவை, உணர்வு ஒரு சிறிது விளங்காத - சடப் பொருள்களிலிருந்து ஓரறிவு விளங்கும் புற்பூண்டுகளுக்குள் ஏற்றப்பட்டு, அவ்வறிவு விளக்கம் பூரணமாகும் வரை அத்தாவர யோனியிற் பிறப்பிக்கப்படுகின்றது. பின்னர் ஈரறிவு விளங்கும் சங்கு, சிப்பி, முதலியனவாக பல்காற் பிறந்து பிறந்து சிதைந்து சிதைந்து ஈரறிவு பூர்த்தியாக்கப்பட்டு, மூவறிவு விளங்கும் ஈ, எறும்பு முதலியனவாகவும், நான்கறிவு விளங்கும் பறவை முதலியனவாகவும், ஐயறிவு விளங்கும் மிருகம் முதலியனவாகவும் பலகாலும் பிறந்து, பிறந்து, பல்வேறு அவத்தைகளால் சிதைந்து சிதைந்து கடைசியாக, மனித தேகத்தில் அவ் வருட்ஜோதி அணு வருவிக்கப்படுகின்றது. இதிலும், பல பிறப்புக்களை வழங்கி ஆறாவதறிவு விர்த்தி செய்யப்படுகின்றது. இவ்வறிவு விளக்கத்தால் கடவுள் உணர்வு பெறப்படுகின்றது. இது மெய்யறிவு. அருட்பெருஞ் ஜோதி சக்தியுணர்ச்சியாக அறியப்படுகின்றது.
மேற்படி அருட்பெருஞ் ஜோதி சக்தி நம்மில் நிலைத்துள்ளது. இதுவரை அது எல்லாப் பிறப்புகளிலுஞ் சென்று சென்று, பிறந்து அங்கங்கு அறிவு விளங்கப்பெற்று, இப்பொழுது இந்த மனித தேகத்தில் நிலைத்துள்ள கடவுட் சக்தியாகயுணர்கின்றோம். இது அருட்பெருஞ் ஜோதியாய் - நம் அறிவின்கண் வெளிப்பட்டு விளங்குவதாயும், தனிப்பெருங்கருணையோடு நமக்கு தம் அருட்பெருஞ் ஜோதி அழிவற்ற நிலை வழங்குவதாகவும் சத்தியமாக அறியப்படும்.
ஆகவே, எங்கும் நிறைந்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சக்தி நம் அறிவின்கண் அருட்பெருஞ்ஜோதி வண்ணமாய்த் தனிப்பெருங்கருணையோடு விளங்குவதாகும்.
- மனிதப் பிறப்பினால் அடைய வேண்டிய பெரிய லாபம்.
எல்லாப் பிறப்புக்களிலும் உயர்வுடையது, இம்மனிதப் பிறப்பாகும். இதில், அருட்பெருங் கடவுள் நிலை அறியப்படுவதாயும், அதன் துணை கொண்டு நிலைத்து, நம் வடிவத்தையும், தன்மையையும் அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணையாக மாற்றிக் கொண்டு, எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாத சுக பூரணப் பெருவாழ்வை அடைவதாகவும் உள்ளதே இம்மனிதப் பிறப்பில் அடைய வேண்டிய பெரிய லாபமென்று ஒவ்வொருவரும் அறியவேண்டும்.
- தூல தேகத்தில் அவசியம்
மேற்குறித்த அருட்பெருஞ் ஜோதியைப் பெற்று, அழிவற்ற நித்திய வாழ்வு அடையும்வரை இத்தூல தேகம் வேண்டும். திருவருளால் அளிக்கப்பட்டுள்ள இந்த மாயா தேகம் தோன்றி, வளர்ச்சி பெற்று, அறிவு விளக்கம் அடைகின்றது. அவ்வறிவு பூரண விளக்கம் அடையும் வரை அறியாமையினால், இத்தேகத்திற்கும், ஜீவனுக்கும் பல்வேறு அவத்தைகள் தோன்றுவதுமன்றி, அநித்தியப் போகப் பொருள்களினால் பெறக் கருதும் இன்பத்தாலும், பெருந்தடையும் துன்பங்களும் தோன்றி வருத்தும். பூரண அறிவு பெறும் போது, இவ் வநித்திய மாயா தேகத்துக்குள்ளே - நித்தியமாய் விளங்கும் அருட் பெருஞ் ஜோதி சக்தி விளங்கும். எனவே, இத்தோன்றி வளர்ந்து அழியக்கூடிய தூல தேகத்தில், நம் அழிவற்ற அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், நாம் அறியுங்காறும் மறைந்திருக்கின்றார். இங்ஙனம் மறைந்திருக்கும் நம் கடவுளரை இத் தேகம் உள்ளபோதே தான் அறிந்து அடைய வேண்டும். அப்படி அடையாவிட்டால், இத்தேகம் அழிந்து விடும். இது போய்விட்டால், மனித தேகமல்லாத பிற தேகங்களில் பூரண அறிவு விளங்காததால், அவைகளிலிருந்து கடவுளை அறிந்தடையக் கூடாது போகும். பின்னும். மறுபடியும், இம் மனித தேகம் கிடைக்கும் வரை தாமதிக்க வேண்டும். அப்போது, திருவருளால், மறுபடியும் மனித தேகம் வழங்கப்படும். அதிலிருந்து ஆண்டவருடைய சக்தியைப் பெற்றுக் கொள்ளக்கூடும். அதிலும் பெற்றுக் கொள்ளாவிட்டால் மறுபடியும் அத்தேகமும் அழிந்து நாசமாகிவிடும். எனவே, இம்மனித தேகம் பல்வேறு அவத்தைகளை அடைந்தடைந்து மாண்டொழியக் காரணம், நம்மில் மறைந்துள்ள அழிவற்ற அருட்பெருஞ் ஜோதி சக்தியைப் பெற்று வாழாததினாலென்று உண்மையாக அறிந்து கொள்ளப்படும்.