அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சத்திய ஞான சபைத் தத்துவ விளக்கம்
சுவாமி சரவணானந்தா.
1949.
அறிவுரை விண்ணப்பம்.
சர்வ வல்லமையுடையவராயும், சர்வ ஜீவ தயாபரராயும், எங்கும் நிறைந்து என்றும் விளங்கும் ஒப்புயர்வற்ற தனித்தலைமைப் பெரும்பதியே, எல்லார்க்கும் பொதுவாய் விளங்கும் உண்மைக் கடவுளென்று, நம் மெய்யறிவின் கண் திருவருளால் உணர்த்தப் பெற்று அறிந்து கொள்கின்றோம். இத் தெய்வ சக்தி விளக்கமும், அதன் அனுபவத்தால் அருட்பெருஞ் சித்தி அற்புத வாழ்வும், நம் மெய்யறிவின் கண்ணின்றே பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றன. இச் சக்தி சித்தி அனுபவத்திற்கு நம் மனித தேகம்தான் உரியதாக இருக்கின்றது. ஆகையால், இத் தேகம் நன் நிலைலியிருக்கும்போதே மேற்படி தெய்வானுபவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இத் தேகத்திலிருந்து, இதற்குள்ளீடாய் விளங்கும் “அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை” ஆண்டவரை உண்மையாகக் கண்டு கொண்டால், அவருடைய திருவருளாலேதான் இப்பொழுது இம்மனித ஜீவ தேகத்தில் நிலைத்துள்ளோமென்பதையும், நம்மைச் சூழ்ந்த பிரபஞ்சப் பொருட்கள் யாவும், அவர் திருவருளாலேயே நிலைத்துள்ளனவென்பதையும் உண்மையாக அறிந்து கொள்வோம். அங்ஙனம் அறிந்து கொண்டு அவ்வனுபவம் பெறுவதற்கு ஒருமையோடும் தயையோடும் அதி தீவிரமாக முயல வேண்டும். அப்பொழுது, அட் தெய்வ சக்தியே நம் தேகத்திலும், ஜீவனிலும், போகப் பொருள்களிலும் பூரணமாய் இடங்கொண்டு விளங்கும். அப்போது தான் இத் தேகம் பிற சக்தித் துணையின்றி, அழிவற்ற அருட்பெருஞ்ஜோதி சக்தியால், நித்திய ஜீவனோடு நிலைக்கும். இவ்வருட்பெருஞ் ஜோதி சித்தியால் மகா அற்புத சித்திகளெல்லாம் விளங்கும்.
மேற்படி அருட்பெருஞ்ஜோதி சக்தியைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ளாவிட்டடல் இப்பிறவிப் பெரும் பயன் அடையக் கூடாது போகும். நம் மனித தேகத்தைப் பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும், மேற்படி சக்தி சித்தி வழங்கப்பட்டுள்ள போதிலும், அஃது, ஒருமையும், தயவும் பூரணமாய் நம்மில் விளங்கும் போதுதான் அனுபவப்படுவதாயுள்ளது. ஏகதேச அனுபவம் பெற்றுக் கொண்டவர்கள், மனித தரத்திற்குச் சற்று அப்பாற்பட்ட தெய்வ சக்தி கைவரப் பெற்றவர்களாய், அது கொண்டு, அற்புதம் பல நிகழ்த்துகின்றனர். அவர்களும் பூரண சக்தியப் பெற்றுக் கொள்ளாததினால் தெய்வ நிலைப் பெருஞ்சித்தியைப் பெற முடியாது போக, முடிவில் தம் தேகத்தை விட்டு விடுகின்றனர். பின்னர் அவர்களின் சக்தி சித்தி பூரணமடைவதற்கு மறுபடியும், தேகம் வேண்டியிருக்கிறது. ஆகையால் மறுபடியும் மனிதப் பிறப்புத் தேகம் பெற்று மேலேற வேண்டியதாகும்.
எனவே, மனித தேகத்தைப் பெற்றுள்ள நாம், கடவுணிலையறிந்து அடைய வேண்டுமென்பதே திருவருள் ஆணையாகும். இதற்காகவே நம்மை இவ் வுயர்வுடைய மனித தேகத்தில் நம் கருணாமூர்த்தி வருவித்து பக்குவப் படுத்திக் கொண்டிருக்கின்றார். இத் திருவருளாணையை உணராது, கடவுளைப் பற்றிய விசாரமில்லாது, உலக சுக போகங்களில் மூழ்கியிருப்பவர்களும், உலக சுக போகங்களை வெறுத்து ஒன்றும் வேண்டாமென்று தனித்திருப்பவர்களும், நாம் பாடுபடுகின்றோம், பயன் பெறுகின்றோம், சுகமாய் வாழ்கின்றோம், பிறர் தயவு நமக்கென்னத்திற்கு, என்று இறுமாந்திருப்பவர்களும், உண்மை அறியாததினால் அப்படியிருந்து மாண்டொழிந்தனர். அவர்களுடைய கதி என்ன ? அவர்களுடைய வாழ்க்கை முடிந்து விட்டதா ? இல்லை ! இல்லை !! இவர்களுக்குக் கொடுத்த சிறந்த தேகத்தை அலட்சியம் செய்து அதனால் அடைய வேண்டிய பெருவாழ்வு பெற்றுக் கொள்ளாது போனார்களே ! இவர்கள் இன்னும் பக்குவ நிலை அடையவில்லை, ஆதலால் அங்ஙனம் அஜாக்கிரதையால் தம் தேகத்தை மன்ணாக்கிக் கொண்டார்கள் ! என்று, பின்னும் தயை மிகுதியினால், மறுபடியும், அவர்கள் மேல் நிலை அடைய வேண்டுமென்ற பெரு நோக்கத்தோடு, திருவருளால் மனித தேகம் வழங்கப்படும். ஆகையால் முன் மனித தேகத்தில் நமக்கென்னவென்று ஏமாந்திருந்தவர்கள் திருவருளாணைக்கு, அறியாமையால், மாறுபட்டிருந்தனரென்றும், அப்படி இருந்ததும், இருப்பதும், இருக்கின்றதும், திருவருட் சம்மதவல்லவென்றும், இப் பிறப்பில்லாவிட்டால், அடுத்த பிறப்பிலாவது அல்லது பல பிறவிகளிலும் அல்லலும், அவத்தையும் பட்டொழிந்த பின்னராவது முடிவில் தெய்வ நிலை அடைய வேண்டுமென்பதே கடவுட் சம்மதம். ஆதலால், அறிவுடையார் யாவரும் திருவருளாணைக்கிணங்க, இப் பிறவிப் பெரும் பயனை காலமுள்ளபோதே பெற்றுக் கொண்டு கடவுட் பாலனாய் களித்து, கருணை ஜோதி வாழ்வில் வாழ வேண்டும்.