அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.5 உரை)
சுவாமி சரவணானந்தா.
1980.
சுத்தவே தாந்த மவுனமோ அலது
சுத்த சித்தாந்த ராசியமோ
நித்த நாதாந்த நிலை அனுபவமோ
நிகழ்பிற முடிபின் மேல்முடிபோ
புத்தமு தனைய சமரசத் ததுவோ
பொருளியல் அறிந்திலம் எனவே
அத்தகை உணர்ந்தோர் உரைத்து உரைத்தேத்தும்
அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே.
ஒரு வேதாந்தி பிரம்ம பாவனையில் கலந்து இருக்கிறார். நிர்விகற்ப சமாதியில் ஒடுங்கி நிற்கிறார். அதிலிருந்து விழித்தெழுந்த பிறகு, முன் தாம் அடைந்த பிரம்மானந்த அனுபவத்தை உணர்கிறார்.
இந்த உடம்பால் உண்டாகின்ற உணர்வு இல்லாதபோது தான் தமக்குப் பிரம்மானந்தம் ஏற்படுகிறது என்று நம்புகிறார். தம் உடல் பிரம்ம அனுபவ வாழ்வுக்குத் தடையாக இருப்பதாக எண்ணுகிறார். எனவே உடலைத் துறக்க விரும்புகிறார்.
மனம் எதிலும் ஈடுபடாமல் மவுனமாக இருப்பதில்தான் இன்பம் இருக்கிறது என்று நம்புகிறார்.
இந்த மவுனத்தை மூன்று வகையாகப் பகுத்துக் கொள்கிறார். வாய் பேசாமல் இருப்பது, உடல் அசையாமல் ஒரே இடத்தில் இருப்பது, மனத்தை அசையாமல் நிறுத்துவது. இந்த மூன்று நிலையும் ஒன்று சேர்வது மகா மவுனம் என்பார்கள். மகா மவுன நிலையில் இருப்பதுதான் பெரிய இன்பம் என்று எண்ணிக் கொண்டு வேதாந்தி செயல்படுகிறார்.
மகா மவுன நிலையில் ஒருவருக்கு எந்தவிதமான அனுபவமும் ஏற்பட வழியே இல்லை. மகா மவுன நிலையில் இருந்து ஒருவர் விலகிய பிறகுதான் பொறிபுலன்களுடன் கூடிய தம் உடம்பின் உணர்வு அவருக்கு வருகிறது. மனம் முதலிய கரண உணர்வு வருகிறது. காரண உடம்பின் இன்ப உணர்வும் வருகிறது. அவர் மீண்டும் உலக வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
முன்பு உடம்பு, மனம் முதலியவைகள் ஒடுங்கிக் கிடந்த போது அவர் இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்க முடியாத மகா மவுன நிலையில் இருந்தார். எதையும் அனுபவிக்க முடியாத அந்த நிலையைத்தான் பேரின்ப நிலை என்று மற்றவர்களுக்குச் சொல்கிறார் அவ்வளவுதான்.
இந்த வேதாந்த நிலை உலக வாழ்வுக்கு எந்த வகையிலும் உதவாது.
வள்ளலாரோ சுத்த வேதாந்தத்தைப் பற்றிப் பேசுகிறார். சுத்த வேதாந்தம் உலக வாழ்வுக்கு உதவி புரிவதாகும்.
சுத்தம் என்றால் அருள் என்று பொருள். அருளுடன் கூடிய வேதாந்தம்தான் சுத்த வேதாந்தம்.
நம் சிரநடுவிலே இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் ஒன்றி நின்று அவரருளுடன் உலக வாழ்வை ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் நடத்துவதுதான் சுத்த வேதாந்த வாழ்வாகும்.
இதுதான் வள்ளலார் அனுபவத்தில் கண்ட உண்மை.
அடுத்து ‘சுத்த சித்தாந்த ராசியமோ ?’ என்று கேட்கிறார் வள்ளலார்.
சித்தாந்த அனுபவத்துக்குள் அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தை அடக்கிவிட முடியாது.
ஒரு சித்தாந்தி முதலில் தம் பற்று முழுவதையும் விட்டு விடுகிறார். ஆண்டவனுடன் இரண்டறக் கலந்து விடுகிறார். இது சித்தாந்தியின் முடிவான இலட்சியம்.
இந்த சித்தாந்தம், சித்தாந்தியைத் தம் இறை அனுபவத்தோடு இந்த உலகில் நிலைத்து வாழ வைப்பதில்லை.
வள்ளலாரின் அருட்பெரு நெறியோ, திரு அருள் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது.
அருட்ஜோதி ஆண்டவர் நம்முடன் ஒன்றியிருப்பதை உணர்த்துவது.
நம் உள் இருக்கும் இறைவனுடன் இணைந்து நின்று அனக வாழ்வை மேற்கொள்ளச் செய்வது.
நிறைவான இறை அனுபவத்துடன் இவ்வுலகில் நம்மை என்றும் நிலைத்து வாழ வைப்பது.
இதுதான் பழைய சித்தாந்தத்தைக் கடந்த சுத்த சித்தாந்தத்தின் ரகசியம்.
இதற்கும் மேலே வள்ளலார் ‘நித்த நாதாந்த நிலை அனுபவமோ ?’ என்று கேட்டு வியப்படைகிறார்.
நாதாந்தம் இரு வகைப்படும்.
ஒன்று அபரநாத இறை அனுபவத்தில் பரவசப்பட்டு மயங்கிக் கிடந்து மறைந்து போவது. மற்றொன்று பரநாத நிலை கடந்து பெருஞ்ஜோதியில் கலந்து மறைந்து போவது.
அருள் அனுபவ நெறியோ பரநாதத்தில் கிடைக்கின்ற பெருஞ்ஜோதி அனுபவம் கெடாமல் இறை அனுபவத்துடன் என்றும் நிலைத்து வாழச் செய்வதாகும்.
இதனால்தான் இதை ‘நித்த நாதாந்த நிலை அனுபவம்’ என்று வியந்து உரைக்கிறார் வள்ளலார்.
இதுவரை, வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் என்ற் மூன்று அந்தங்களின் சுத்த நிலைகளைப்பற்றி விளக்கினார் திரு அருட்பிரகாச வள்ளலார்.
இதற்குமேல் ‘பிற முடிபின் மேல் முடிபோ’ என்று கேட்கிறார் வள்ளலார்.
அந்தப் பிற முடிவுகள் போதாந்தம், கலாந்தம், யோகாந்தம் என்பவை.
இம்மூன்றும் மனிதனை மரணமிலா வாழ்க்கையில் விளங்க வைப்பன அல்ல.
இவைகளுடைய முடிவுகளுக்கும் மேலான முடிவுகள்தான் சுத்த போதாந்தம், சுத்த கலாந்தம், சுத்த யோகாந்தம் என்பவை.
இவை மனிதனை அருள் அனுபவத்தால் மரணமின்றி இவ்வுலகில் நிலைத்து வாழ வைக்கக் கூடியவை.
“புத்தமுதனைய சமரசத்து அதுவோ ?” என்று கேட்கிறார் திரு அருட்பிரகாச வள்ளலார்.
இதுவரை சமரச ஞானிகள் கண்டது என்ன ?
அறிவு பூர்வமாக ஏதோ ஓரளவு சமரச உண்மையை விளங்கிக் கொண்டிருந்தார்கள். கடவுள் சச்சிதானந்தர் என்பதையும் ஓரளவு உணர்ந்து இருந்தார்கள்.
ஆனால் உண்மைக் கடவுள் இன்ப வாழ்வு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
உண்மையான இறை அனுபவம் பெறுவதற்கு அறிவுத் தெளிவு மட்டும் போதாது. அருள் அனுபவமும் வேண்டும்.
அருள் அனுபவத்துடன் இறை அனுபவம் பெற்றவர்கள் தான் மரணமில்லா பெருவாழ்வைப் பெறுவார்கள். இதைப் பெற்றிருப்பவர் வள்ளல் பெருமான்.
இந்தன் பேரின்ப அனுபவத்தைத்தான் ‘புத்தமுதனைய சமரசத்து அதுவோ’ என்கிறார் வள்ளலார்.
சுத்த சன்மார்க்கத்தை உணர்ந்தவர்கள் இவ்வாறு புகழ்ந்து அருட்பெருஞ் ஜோதி அரசைத் துதிக்கிறார்கள்.
மற்றவர்களோ, கடவுள் உண்மையை அறியாமலேயே அவரை வாழ்த்தி வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அருள் நெறியில் நின்று உண்மையை உணர்ந்தவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வு அளிக்கக் கூடியவர்தான் அருட்பெருஞ் ஜோதி அரசர் என்கிறார்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி வெளிப்படுவதற்கு முன்னால் வாழ்ந்த ஞானிகள், திருவருளை முழுவதும் அறிந்து கொள்ளவில்லை. புற நோக்காக ஓரளவு அறிந்திருந்தார்கள்.
அவர்கள் திரு அருள் அறிவு, நிறைவு பெறாததால், ஏதேதோ கற்பனையில் கடவுளை உருவாக்கினார்கள். அந்தக் கற்பனைக் கடவுளைப் போற்றி வணங்கி வந்தார்கள். மற்றவர்களையும் வணங்கச் சொன்னார்கள்.
முடிவில் எல்லோரையும் போலவே அவர்களும் மறைந்து போனார்கள்.
வள்ளலாரோ திரு அருளால் கடவுளின் முழு உண்மையும், தம் உள்ளேயே இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். தம் புருவ மத்தியில் இருக்கும் உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி அரசரின் முன் ஒருமையுடனும் உள நெகிழ்வுடனும் பிரார்த்தித்து வந்தார்.
அவருடைய அறியாமை என்னும் திரைகள் விலகின. அவர் உள்ளே ஒளி வீசிக் கொண்டிருக்கும் அருட்பெருஞ் ஜோதியுடன் ஒன்றி அதுவாகவே நின்றார்.
தாம் கண்டு அனுபவிக்கும் இந்த அருட்பெருஞ் ஜோதி காட்சியைத்தான், வடலூரில் சத்திய ஞான சபையாக அமைத்து இருக்கிறார்.
வடலூர் சத்திய ஞான சபை முன் நின்று அருட்பெருஞ்ஜோதியை வழிபடுவதுடன் நம் உடலுக்குள் இருக்கும் ஞான சபையில் எழுந்தருளியிருக்கிற அருட்பெருஞ் ஜோதியை வழிபட்டு நித்திய வாழ்வு பெற முயல்வோம்.
(தொடரும்)
.
.