Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.4 உரை)

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.4 உரை)
சுவாமி சரவணானந்தா.
1980.
நசைத்த மேனிலை ஈதென உணர்ந்தாங்கே
நண்ணியும் கண்ணுறாது அந்தோ
திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
திரும்பின எனில்அதன் இயலை
இசைத்தல் எங்ஙனமோ ஐயகோ சிறிதும்
இசைத்திடு வேம்என நாவை
அசைத்திடற்கு அரிதென்று உணர்ந்துளோர் வழுத்தும்
அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே.
நானே கடவுள் என்று பாவனை செய்து கொண்டிருப்பவர்கள் உலகில் உள்ள பொருள்களை எல்லாம் அனுபவித்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கடவுள் அனுபவ வாழ்வை மட்டும் பெற்று இருக்க முடியாது.
வேதம் ஓதிய மறையவர்கள் பிரம்மநிலை இது என ஒருவாறு உணர்ந்தார்கள். அதை அடைந்து அனுபவிப்பதற்கும் ஆசைப்பட்டார்கள்.
பிரம்ம நிலை எது என்று உணர்ந்த மறையவர்கள் அது எங்கு இருக்கிறது என்று எண்ணினார்களோ அந்த இடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு ஒன்றையும் அவர்களால் காண முடியவில்லை. பாவம் ! வேறு வழி தெரியாமல் அங்கிருந்து திரும்பி விட்டார்கள்.
அவ்வாறு திரும்பியவர்கள் பிரம்மத்தின் பேரியல்பைத் தாங்கள் உணர்ந்த அளவாவது சொல்லலாம் என்று எண்ணினாலும் அவர்களால் சொல்ல முடியவில்லல. அவர்கள் நா அசையவில்லை. மவுனமாகவே இறைவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டவனின் ஆற்றலை அனுபவித்து அது இவ்வாறுதான் இருந்தது என்று சொல்லிவிட முடியாது என்கிறார்கள் உண்மையை உணர முயன்ற ஞானிகள்.
வேதம் ஓதுவதன் மூலமாகக் கடவுள் உண்மையைக் காண முடியுமா ? கண்டு அனுபவிக்க முடியுமா ?
முடியாது ? ஏன் ?
‘நானே கடவுள்’ என்று வேதம் சொல்கிறது.
‘நான் வேறு கடவுள் வேறு’ என்ற உண்மையை உணர்ந்தால்தான் கடவுளை அடைந்து அனுபவிக்க முடியும்.
தேகத்துக்கும் மனம் முதலிய கரணங்களுக்கும் அப்பாற்பட்டது, இறைவனின் இயற்கை உண்மை நிலை.
இதே கருத்தை மகா தேவ மாலையிலும் திரு அருட்பிரகாச வள்ளலார் சொல்கிறார்.
பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவுகாணா
தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமேஈன்ற
தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
வேதங்கள் பல காலமாகப் பல வழிகளில் முயன்றும் காண முடியாதவர், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
வேதங்களின் துணை கொண்டு இறைவனைக் காண முயன்ற பெரியோர்கள் இறைவனின் பேரருளை அணு அளவு கூட அடைய முடியாமல் திரும்பி விட்டனர். மனம் நொந்து அழுது சிவ சிவ என்று ஏங்கி நிற்கின்றனர்.
இவர்கள் எல்லாம் தேடியும் கிடைக்காத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் பெருவெளியில் இருந்து, பெற்ற தாய்போல் அன்புடன் வந்து என் போன்றவர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார் என்கிறார் வள்ளலார். இதுதான் மேலே கண்ட மகாதேவ மாலைப் பாடலின் பொருள்.
பெரிய பெரிய மகான்களால் எல்லாம் காண முடியாத பிரம்மம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அவர் நம் சிரநடுவில் இருக்கும் ஞானசபையில் எழுந்தருளியிருக்கிறார். அவர் தம் தனிப்பெருங் கருணையால் நமக்குப் பேரின்பத்தை வழங்கி நம்மை வாழ்விக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை வள்ளலாரின் வாழ்க்கை அனுபவத்தால் உணர்கிறோம்.
வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளியிருப்பது காட்டப்பட்டிருக்கிறது.
இது நமது சிர நடுவில் இருக்கும் சத்திய ஞான சபையில் எழுந்தருளியிருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, நாம் எப்படிக் கண்டு, கலந்து அதுவாகி நிற்பது, என்ற இயற்கை உண்மையை உணர்த்துவதுதான்.
வெளியில் எங்கெங்கோ, எப்படி எல்லாமோ தெய்வ வழிபாடு செய்தும் பெற முடியாத அக அனுபவமும், புற அனுபவமும் சேர்ந்த ஆனந்த வாழ்வை நாம் எப்படிப் பெறுவது என்கிற வாய்ப்பு இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது.
திரு அருட்பிரகாச வள்ளலாருக்கு முன்னால், கடவுளின் அருள் உண்மையை, யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
உயிருக்கு உயிராக இருந்து நம்மை இயக்கும் கடவுளை அவர் எங்கோ வெளியில் இருக்கிறார் என்று எண்ணியிருந்தார்கள். அதனால் அவர்கள் எண்ணியபடி அவர்களுக்கு இறை அனுபவம் கிடைக்கவில்லை. நம் உள் இருந்து நம்மை இயக்குபவர் இறைவன்தான் என்பதை வள்ளலார் தம் அருள் நிறை அனுபவத்தால் அறிந்து நமக்குச் சொல்லி இருக்கிறார்.
நம் உள் இருக்கும் இறைவனோடு நாம் ஒன்றி இருந்து செயல்படும்போது அவர் உள்ளும் புறமுமாக, அனகமாக விரிந்து இருந்து நமக்கு வாழ்வு அளிக்கிறார்.
இதுதான் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தெரிவிக்கும் உண்மையாகும். அவருடைய அனுபவமும் ஆகும்.
தாம் பெற்ற இந்த அனக அருள் அனுபவத்தை வள்ளலார் அனுபவ மாலையில் உள்ள ஐம்பத்தொன்பதாவது பாடலில் அற்புதமாக விளக்குகிறார்.
ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
அம்பலத்தே திருநடம்கண்டு அகங்களிக்கும் போது
மையகத்தே பொருந்தாத வள்ளல் அருகுஅணைந்துஎன்
மடிபிடித்தார் நானும் அவர் அடிபிடித்துக் கொண்டேன்
மெய்யகத்தே நம்மைவைத்து விழித்திருக் கின்றாய்நீ
விளங்குக சன்மார்க்கநிலை விளக்குக என்றுஎனது
கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
கருணையினால் தாயணையார் கண்டாய் என் தோழி.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் சந்தேகத்துடன் இருந்தவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள்.
நானோ என் உள் இருக்கும் திருச்சிற்றம்பலத்தில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் திருநடனம் புரிவதைக் கண்டு இன்புற்றுக் கொண்டிருக்கிறேன்.
வஞ்சகர்கள் காண முடியாத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என் அருகில் வந்து என் மடியைப் பிடித்தார். நான் அவர் திருவடியைப் பற்றிக் கொண்டேன்.
“உன் உள்ளேயே என்னை வைத்துக் கொண்டு ஏன் தவித்துக் கொண்டிருக்கிறாய் ? உனக்குப் பெருவாழ்வு அளிக்கிறேன். இந்த உலக மக்களுக்கு சுத்த சன்மார்க்க முறையை விளக்குவாய்” என்று சொல்லி என்னைப் பெற்ற தாய்போல பெரும் கருணையுடன் அணைத்து, என் கையில் ஒரு பொற்கங்கணத்தை அணிவித்தார் என்கிறார் வள்ளலார்.
வள்ளல் பெருமான் வகுத்துக் கொடுத்திருக்கும் சுத்த சன்மார்க்கத்தை உலகுக்கு அறிவிக்க வேண்டியது நமது கடமை என்று உணர்ந்து இதை இங்கு சொல்கிறோம். உலகம் சுத்த சன்மார்க்கத்தை ஏற்று நிலையான இன்பத்தைப் பெற்று வாழப் பிரார்த்திக்கிறோம்.
(தொடரும்)
.