HyperLink HyperLink

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.3 உரை)

 

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.3 உரை)
 
சுவாமி சரவணானந்தா.
 
1980
 
 
கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
        கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
        இசைக்குமோர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
        விளங்குவ தரிதென உணர்ந்தோர்
கண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
        அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே.
 
            உயிர்கள் நம்மை அடையும் வழியினை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்படி விளங்க வைக்கிறார் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.
 
            மெய், வாய், மூக்கு, கண், காது என்னும் ஐம்பொறிகள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்கள், இவைகள் இயக்குவதற்கு அடிப்படையாக இருப்பது உயிர் உணர்வு.  இவைகளால் எல்லாம் மனிதன் இறைவனைக் கண்டு அனுபவித்துவிட முடியாது.
 
            வித்தை முதலிய ஆன்ம தத்துவங்களாலும் இறைவனை அறிந்து அனுபவிக்க முடியாது.
 
            சிவ தத்துவம் என்கிற ஈஸ்வரம் முதலிய ஐந்து தத்துவங்களாலும் இறைவனை அடைந்து அனுபவிக்க முடியாது. மேலே குறிப்பிட்ட தத்துவங்கள் எதனாலும் இறைவனை அடைந்து அனுபவிக்க முடியாது.
 
            சுத்த ஞான யோக சாதனைகளில் ஆன்ம தத்துவம் முதலியவற்றில் பரநிலையும், அபர நிலையும் உண்டு.
 
            இவற்றைப் பகுத்தறிவதன் மூலமாகவும், இறைவனைக் கண்டு அனுபவிக்க முடியாது.
 
            சிரநடுவில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இருப்பதை உணர்ந்து தியானம் செய்து வருவதன் மூலமாகவும் இறைவனை அறிந்து அனுபவிக்க முடியாது.
 
            இறைவனின் பெருமையை உணர்ந்து உயிர்க் குலத்துக்குப் பணி செய்து வருவதன் மூலமாகத்தான் இறைவனின் அருளைப் பெற முடியும். இந்த உண்மையை உணராமல் வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.
 
            கடவுளை வெளிப்படையாக அனுபவிக்க முடியாமல் ஏதோ கற்பனைகள் செய்து காலம் கழித்து வருகிறோம்.
 
            இறைவனைச் சார்ந்து நின்று உயிர்ப்பணி செய்து வருவதன் மூலமாகத்தான், ஒவ்வொருவரும் பக்குவம் பெற முடியும். அப்படி ஒவ்வொருவரும் அடைந்து வரும் பக்குவத்துக்கு ஏற்ப,  திருவருளும் தம் உண்மையைச் சிறிது சிறிதாக அவர்கள் உணரும்படிச் செய்து வருகிறது.
 
            இறை உண்மையை உணர்ந்து அதை அடைய வேண்டிய வழிகளில் முறையாக முயற்சிக்காமல் மக்கள் இனம், பல வழிகளில் முயன்று இறைவனைக் கண்டு அனுபவிக்க முடியாமல் திகைத்து நிற்கிறது.
 
            மக்கள் இனத்தின் இந்தத் திகைப்பைப் போக்கி அவர்கள் இறைவனைக் கண்டு அனுபவிப்பது எப்படி என்று இறைவனே தம் பெருங்கருணையால் உணர்த்துகிறார்.
 
            அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் நம்முள் இருந்து நம்மை இயக்கிக் கொண்டு இருப்பவர். இந்த உண்மையை அவரே நமக்கு அறிவுறுத்துகிறார். இதுதான் முதலும், முடிவும் இல்லாத இறைவனின் உண்மை நிலையாகும்.
 
            இறைவனை நாம் வெளிப்படையாகக் காண முடியாவிட்டாலும், அவர் நம் உள்ளேயேதான் இருக்கிறார் என்ற உண்மையை இறைவனின் அருளினாலேயே உணர்த்தப் பெறுகிறோம்.
 
            ‘அண்முதல்’ என்ற சொற்றொடர் இந்த உண்மையைக் காட்டுகிறது.
 
            ‘அண்’ என்றால் ‘நெருங்கி இருத்தல்’ என்று பொருள்.
 
            ‘முதல்’ என்றால் இறைவன் என்று பொருள்.
 
            ‘அண்முதல்’ என்றால் மிக நெருங்கியிருக்கிற இறைவன் என்று பொருள்.
 
          நம்மிடம் அண்முதலாக இருக்கும் இறைவன், உலகத்தில்,  அண்டத்தில், ஆண்டவனாகவும் விளங்குகிறார்.
 
          அனைத்தும் ஆண்டவர் இருக்குமிடம்தான். அவர் எங்கும் எல்லாப் பொருள்களிலும் பூரணமாய் நிரம்பி இருக்கிறார். இருந்தாலும் நம் ஆன்ம அணுவில் அருளால் வெளிப்பட்டு அனுபவத்தில் விளங்கக் கூடியவராக இருக்கிறார்.
 
            ஆண்டவர் நம்மிடம் எப்படி விளங்குகிறார் என்பதைப் பார்ப்போம்.
 
            கரு உருவாகின்றபோது,  ஆண் கரு அணுவும், பெண்கரு அணுவும் ஒன்றை ஒன்று அணுகி ஒரே கருவாக உருவாக்குவதும், அண்முதலாகிய ஆண்டவரின் பெருங்கருணைச் செயல்.
 
            கரு உற்பத்தியில் அண்முதல் பொருளான ஆண்டவரின் அருள் ஒளி கருவின் நடுவில் விளங்க, ஓங்கார மூளையும், மற்ற தலை முதலான உடற்பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி முடிவில் குழந்தையாய் உருவம் பெறுகிறது. பிறகு தாய் வயிற்றிலிருந்து வெளிப்படுகிறது.
 
            பிறந்த குழந்தை தடித்து வளர்ச்சி பெற்று பக்குவம் பெறுகிறது. இவ்வாறு வளரும் குழந்தையிடம் ஆண்டவர் அருள் சிறிது சிறிதாகப் படிந்து, அது தன்னையே உணர்ந்து கொள்ளும்படியும் செய்கிறது.
 
          அண்முதலாகிய மெய்ப்பொருள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
 
            அவர் இதுவரை நம் அகத்தில் மறைந்து இருந்தார். அருள் சூழ்நிலையை வளர்த்தார். தம் மெய்யருட் சக்தியை நம் உணர்விலே படியச் செய்தார்.
 
            இதனால் நாம் இறைவனோடு இரண்டற்று ஒன்றி இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்டு இருக்கிறோம்.
 
            இதுகாறும் மற்ற யாராலும் உணரப்படாத, உணர முடியாத, இறை உண்மை அனுபவத்தையும் நாம் அடையத் தொடங்கியிருக்கிறோம்.
 
                                                                                                                                                 (தொடரும்)
 
 
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.