HyperLink HyperLink

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (முதற் செய்யுள் விளக்கம்)

 

அருட்பெருஞ்ஜோதி அட்டகம்
 
சுவாமி சரவணானந்தா
 
1980.
 
1. செய்யுள் விளக்கம்
 
 
அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
          அருட்பெரும் தலத்துமேல் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
          அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
          அருட்பெரும் சித்திஎன் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெரும் சுகமே
          அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே.                                        (திரு அருட்பா-அட்டகம்)
 
            அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவடி சூட்டி, திருமுடி காட்டி நம்மை, தம் பெருங் கருணையால் ஆட்கொள்கிறார்.
 
            அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவடிப் பெருமையைத் திருவடிப் புகழ்ச்சியிலும், திருமுடி உயர்வை அருட்பெருஞ் ஜோதி அகவலிலும் அறிந்து இன்புறுகிறோம். தெளிவு பெறுகிறோம்.
 
            அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அருள் அம்பலத்து அரசராகக் கொண்டு அவரை முன்னிலைப் படுத்தித்   துதிக்கப் பெறுகிறது  இவ் அட்டகப் பாடல்.
 
            இந்தப் பாடலின் கடைசி அடியில்தான் “அருட்பெருஞ்ஜோதி என் அரசே” என்று வள்ளலார் அழைக்கிறார்.
 
            அருட்பெரு வெளியை நம் உள்ளத்தில் அருள் உணர்வோடு அறியத் தொடங்கும்போது அருட்பெரு வெளிக்கு எல்லையே இல்லை என்பதை உணர முடிகிறது.  வார்த்தைகளால் இதைச் சொல்லிக் காட்டவும் முடிவதில்லை.
 
            நம் தலையின் மத்தியப் பகுதிதான் அருட்பெரும் தலம். அதில் இருக்கிறது அருட்பெரும் ஞான பீடம்.
 
            அந்த ஞானபீடத்தில் அருட்பெரும் வடிவத்துடனும், அருட்பெரும் விளக்கத்துடனும் வீற்றிருந்து அருளுகிறார் அருட்பெருஞ் ஜோதிக்கடவுள்.
 
            அவர் அருட்பெரும் நிதியாகவும், அருட்பெரும் சித்தியைத் தருகிற அமுதமாகவும், அருட்பெரும் இன்பமாகவும், நிலைத்த சுகம் தரும் பெரு வாழ்வாகவும் விளங்குகிறார். அவரே எல்லாப் பொருள்களுக்கும் அரசராக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
 
            அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சந்நிதியில் இருந்துகொண்டே அவருடைய பெருமையை அறிந்து உயிர்ப்பணி புரிவதன் மூலமே, பரோபகாரத் தொண்டு ஆற்றுவதன் மூலமே,  அருட்பெருஞ் ஜோதியின் அனுபவத்தைப் பெற வேண்டும்.; பெற முடியும். வள்ளலாரின் அனுபவம் இது.
 
                                                                                                                                                       (தொடரும்)
 
 
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.