நிறை மனிதன்
(The man of Divine Perfection)
5. ஆன்ம ஞானம்.
சுவாமி சரவணானந்தா.
1974.
புலன் இன்ப வாழ்வில் சிக்கிக் கொண்டு உழல்கின்றவர்களுக்கு, உள் வளர் ஆன்ம தத்துவத்தைப் பற்றி ஏதும் புலனாகாது. மேற்படி புலன்வேட்கை அற்றவர்கள்தாம் உள் அழுந்திய தியான முடிவில் அந்த ஆன்ம தத்துவத்தை ஒருவாறு அறிந்து வந்து வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் தம் தேக நிலையிலிருந்துதான் அகத்திலங்குகின்ற அழிவில்லா ஆன்மாவைக் கண்டு கொண்டனர். அவ்வான்மா தெய்வீகமானதென்றும், அதுவே தம் உண்மைச் சொரூபமென்றும் கண்டவர்கள், அதிலேயே மிகுபற்று வைத்து சார்ந்து நின்ற போது, அறிவரிய உண்மைகளையும், செயற்கரிய அற்புதச் செயல்களையும், அனுபவித்தற்கரிய அற்புதச் செயல்களையும், அனுபவித்தற்கரிய இன்பானுபவத்தையும் அடைந்து, மற்ற எதிலும் பற்றுக் கொள்ளாது தேகாதி பிரபஞ்சத்தைத் துறந்து விட்டனர். அப்படி அவர்கள் தம் உடலை விட்டுவிட்டதனால், தாம் பெற்றிருந்த இன்பானுபவம் வெளிப்பட்டு விளங்கற்கில்லாது உள் மறைந்து ஒழிந்து போயிற்றாம். ஆனால் இந்த ஒழிவு நிலையைத்தான் மேற்பிறவா முத்தி நிலை என முழக்கி விட்டனர், சூழ இருக்கும் ஆன்ம ஞானிகள் ! இவர்களின் கூற்றில் ஓரளவு உண்மையும் இருக்கின்றது. என்றாலும் அது உலகியல் வாழ்வில் மனித சமுதாயத்தைக் குழப்பிக் குலைத்துத் துன்பியற் சிக்கலில் மாட்டி வைத்து விட்டுள்ளதாம். அந்த அகம் கண்ட ஆன்ம ஞானம்தான், பலவாகிய தெய்வ கற்பனைக்கும், அத்தெய்வ நிலையை அடையற்கான பலவாகிய சமய மதக்கொள்கை கோட்பாடுகளுக்கும் இடம் கொடுத்துள்ளதாகும். அவ்வான்ம ஞானியின், தேக பிரபஞ்சத் துறவு மனப்பான்மையும், ஆன்ம நிலையிற் கொண்ட மிகுபற்றும்தான், தன் தெய்வக் கொள்கைக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டதால், மதக் கொள்கையில், மிக வலியுறுத்தலை காண்கின்றோம். மனிதன் தனது தெய்வ இயற்கை நிலையை விட்டு விட்டுக் கீழ் நிலைக்கு இறங்கிவந்து, தேகாதி பிரபஞ்சத்தில் பற்று கொண்டு உழல்வதாகவும் இந்நிலை மாறவேண்டியே, உடலுலகை எல்லாம் துறந்து, திருச்சந்நிதியுற்று, தன் தெய்வத்தோடு ஒன்றிவிடவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்து விட்டான் மதத் தலைவன். உண்மை ஒன்றிருக்கவும் அதனைக் குறித்துச் செய்யப்பட்ட கற்பனையோ வேறு வேறாய் விளங்குவதால் சமயங்களும், மதங்களும் பலவாய் விளைந்து விட்டன. அவற்றை, நம்பிக்கையோடு பின்பற்றியவர்களும், உண்மை காணாது, பல பிரிவுகளில் எதிர்ந்துகொண்டு, மாறுபாடுடையவர்களாகி, ஒத்து வாழக்கூடாது சீர்கெட்டு அழிகின்றனராம். ஆகையால் இந்தக் குறைவுடைய ஆன்ம ஞானக் கொள்கை மாற வேண்டும் இப்பொழுது.
மனிதன், மனோ அறிவின் பக்குவ வசத்தால், இத்தேகத்திற்குள் ஒளிர் அழிவற்ற கடவுளான்மாவைக் கண்டுகொண்டது சரிதான். ஆனால், அக் கடவுளான்மா எது ? அதனைக் கண்டுகொண்டிருக்கிற மனிதன் யார் ? இவ்விரு வினாக்களுக்கும் விடை ஒன்றேயாம். ஆம், கடவுளான்மாவாகிய ஒன்றுதான், ஒவ்வொரு மனிதனின். உயிராய், உணர்வாய், அறிவாய்த் தேகவடிவேற்று விளங்குகின்றதாம். ஆகவே, உண்மையில் கடவுளான்மாதான் உண்மை மனித சொரூபமாக இத்தேகம் ஏற்றுத் திகழ்கின்றதாம். இந் நிலை நின்று தான் ஒவ்வொரு மனிதனையும் மதிப்பிட வேண்டியுள்ளது. ஒன்றாகிய கடவுளான்மாவே தன்னைத்தான் இம் மனித வடிவில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது, தான் ‘அது’ என்ற உண்மையை யுணராது, வேறாகக் கருதிக்கொண்டு, தேகத்தினிடத்து பற்றுதலும், துறத்தலும் தீமையையே விளைவிக்கின்றனவாம்.
ஆன்ம ஞானம் விளங்கற்கு இம்மனிதப் பிறப்புத் தேகம் தேவையாயுள்ளது. இந்த ஞான ஆன்மாவுக்கு உரிய அங்கமாக முக்கிய உறுப்பாக உள்ள இத்தேகத்தை இழந்துவிட்டால், அவ்வான்மாவானது வாழ்வழிந்து குறைபட்டுக் கிடக்கின்றதாம். அந்நிலை அவ்வான்மாவுக்குக் கடவுட் கலப்புநிலை என்றோ, ஐக்கியானுபவ ஆனந்த நிலை என்றோ கூறுவதில் அருத்தமில்லையாம். ஆகையால், இதுமுதல் ஓர் ஆன்மஞானி, தான் ஆன்ம அக வடிவினன் என்றும் தன் ஆன்மாவின் விரிநிலைக் கூறே தனது உடலாக ஆக்கப் பெற்றுள்ளதென்றும் ஐயமில்லாது அறிந்து நிற்றல் வேண்டும். அப்படி நின்றே தேக போக இச்சையின்றி, அனக அருள் இயக்கச் செயலால் வரும் தயா இன்ப உணர்வில் நிலைகொண்டு அனகதயா வடிவாய் வாழ்ந்துவர வேண்டியுள்ளதாம். இந்த வாழ்க்கை முறையே இன்றைய ஆன்ம ஞானிக்கு இறவாமை நல்கி என்றும் இன்புற்றுத் திகழச் செய்வதாம். ஒன்றாய் இருந்து தயவோடு செயல்பட வாழ்வதே ஆன்ம ஞானத்தின் பயனாக உள்ளதால், இரண்டெனக் கண்டு இடருறப் பிழைத்துவரல் நன்றன்றாம். உலகச் சமய மத நெறிகள் எல்லாம் மக்களை இரண்டு படுத்தியும் அலைக்கழித்தும் துன்பியலில் சூழச் செய்துவிட்டுள்ளனவாம். பக்தி நெறியின் முடிவே, துவைதத்தினின்று அத்துவைத நிலை பெறுதலாம். இந் நெறியில் ஆன்மக் கடவுள் நிலையே கற்பனா விக்கிரக வடிவாக்கி சிற்பாலயக் கருவறையில் நிலைபெறுத்தப் பட்டுள்ளதாகும். இவ்விக்கிரக வழிபாட்டினின்று அக ஆன்ம நிலையுறுவது ஆன்றோர் உட்கோள். அவ்வுண்மை அறிந்து பயன்கொள்ளாது, விக்கிரக வழிபாட்டில் பக்தி பரவசவிரதாதி, வேண்டுகைகளால் ஓரளவு இட்ட காரிய சித்திகள் பெற்று அத்தோடு கழிந்து போய்க் கொண்டுள்ளனர் பக்த கோடிகள் ! வேதாந்த அத்துவைத ஞானிகளும்கூட, பிரம்ம பாவனையில் இருந்தாலும், உலகுயிர் வாழ்வை பொருட்படுத்தாது நியதிப்படி வருகின்ற எதையும் உண்டு, எதையும் செய்து, சுக துக்காதிகளைச் சகித்து வாழ்நாளை முடித்துக் கொள்ளுகின்றார்கள், இவர்கள் உடல் வாழ்வில் இருக்கும்வரை ஜீவன் முக்தர்களாகவும், தேக வியோகத்தில் (இறப்பின்) பின் விதேக முக்தர்களாகவும் போற்றிக்கொள்ளப் படுகின்றனர். இவர்களுடைய ஆன்மக் கடவுள் வாழ்வு அப்படி முடிந்ததாம். ஆகவே இவர்களின் அந்தப் பழைய ஆன்ம ஞானக் கொள்கைகளால் உலகில் தெய்வீக இன்ப வாழ்வு தோன்றற்கு இடமில்லாது போயிற்றென்று அறியப்படுகின்றது.
இப்பொழுது ஆன்ம ஞான உண்மை, திருவருட் பிரகாச வள்ளலாரால் கண்டடைந்து அகநிலை நின்று அனகத் தோற்ற வண்ணமாக வெளி ஆக்கப்பட்டுள்ளதாம். அவ்வான்ம ஞான உண்மை குறிக்க வந்ததே, வடலூர் “சத்திய ஞான சபை” என்று அறிய வேண்டும். இந்த ஆன்ம ஞானக் கோயிலில் கடவுள் உண்மை அருட்பெருஞ்ஜோதி அகண்ட தீபமாய் விளங்குகின்றது. ஜீவ தயா வொழுக்க நெறிநின்று, சத்விசாரம் செய்து, கடவுட் சுடரின் முன் நின்று வேண்டித் தொழுது கொள்ளும்போது, புறத்தொளிர் அருட்ஜோதி விளக்கு, அகத்திலங்கு கடவுட் ஜோதியாய், ‘நாம்’ போய் அதுவாகி விளங்கும் இயல் உண்மை நிலை அறிந்து கொள்ளப்படுகின்றதாம். இவ்வக ஒளிநிலை நின்று அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டு அருட் செயலோடு வாழ வாழ, அந்த வாழ்வு நிலையான அருளின்ப வாழ்வாக நிலவத் தொடங்கும் என்பதற்குச் சான்று, நம் திருவருட் பிரகாச வள்ளல் பெற்ற திரிதேக சித்திப் பேரின்ப வாழ்வேயாம். இதில்தான் ஆன்ம ஞானத்தின் பெரும்பயன் விளைவு ஏற்படுவதாயுள்ளது. இது மக்கள் சமுதாயத்திற்கு என்றும் நலன் கொடுப்பதாம்.