HyperLink HyperLink

தயவுக் குறள் 91-100 மூலமும் உரையும்

 

தயவுக் குறள்
 
சுவாமி சரவணானந்தா
 
குறிப்புரை விளக்கம்
 
சிறப்பொழுக்கம்
 
பத்தாம் அதிகாரம்
 
(பஞ்சேந்திரியங்களில்)
 
                     3. வாய் இந்திரிய ஒழுக்கம்.
 

1.
உண்மைத் தயவை யுணர்வுற்று வாய்மையாற்
பண்போ டுரைக்க பணிந்து.
91.

 
            கு.வி – கடவுள் தயாசக்தியே, உள்ளத்தில் அரும்பி உண்மையாய் விளங்குவதும், வாய்மையாம் மலர்வதும், மெய்மையாய் விரிவதுமாம். ஆதலின், இவ்வுண்மை கண்டு, இதன் தன்மையாகிய தயவே பெருக, கனிந்த சொற்களைப் பணிந்து உரைத்திடல் வாயினுக்குரிய நல்லொழுக்கமாம்.
 
            மேற்படி உண்மைத் தயவே சத்தியம். இதுவே, உள்ளத்தில் உண்மையாகவும், வாயினிடத்து வாய்மையாயும், காயத்தினிடத்து மெய்மையாயும் திகழ்வதாம்.
           
            வாய்மையாகிய சொல் தயவும் பணிவும் உடையதாக இருக்க வேண்டும். மற்றபடி தயவும் பணிவுமில்லாத சொல், சத்திய வார்த்தையாகாது. மெய்யும், பொய்யேயாம்.
 
 

2.
நலமளிக்க வார்த்தை நயந்துரைக்க என்றும்
புலமளிக்கும் பொய்யுமெய்யாய்ப் போம்.
92.

 
 
        கு.வி – பொய் என்பதும், மெய் என்பதும், தயவின்மையால் வரும் தீமையுடையதும், தயவுடைமையால் விளையும் நன்மை கொண்டதுமாம்.  ஆதலின் உள்ளத் தயவோடு நெகிழ்ந்துரைக்கும் நன்மொழி,  என்றும் நலமே பயக்கும். அம்மொழி உலகியலில் பொய்யாய்த் தோன்றினும், அருளியலினின்று நோக்கும் போது உண்மையாய் விளங்கும்.
 
            “பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
             நன்மை பயக்கு மெனின்” --   (திருக்குறள்)
 
 

3.
குறள்போற் சுருக்கிக் குறிப்போ டுரைக்க
வறளுறு வீண்சொல் மறுத்து.
93.

 
            கு.வி – பிறர்க்குப் பெரும் பயனும் நன்மையும் உண்டாகும்படி எதையும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் வேண்டும். பெரும் ஆரவாரச் சொற் பெருக்கால் கதைத்தல் கூடாவாம். உண்மையாகிய மெய்ப்பொருளைக் கண்டு கொண்டால் சொற்பிரபஞ்சம் முற்றும், அதன் விரிவாக விளங்கக் காணலாம்.
 
            அணுவில் அகண்டாண்டத்தை அடக்கி வைத்தாற்போல், சிறு குறட்பாவில் அருட் பெருங் கடவுள் உண்மையைப் பொதிந்து வைப்பது, நம் தமிழ்ச் செய்யுள் மரபு.
 

4.
சொல்லடக்கி மீதூண் சுவையடக்கி யுண்ணின்(று)
எல்லடுக்கும் வாய்மை யியம்பு.
94.

           
            கு. வி – “யாகாவாராயினும் நாகாக்க”, அதாவது, எதைக் காக்காவிட்டாலும், நாவைக் காத்தல் வேண்டும் என்பது பொய்யா மொழி.
 
            கூடாத சொல்லால் துன்பம் விளையும். சுவையுள்ள பொருள்களில் மிக விருப்பங்கொண்டு உண்டு களிப்பதால், பொறி புலன் அடங்காது கிளர்ந்து எழுந்து அல்லல் தரும்.
 
            ஆகையால், நாவடக்கி, விருப்பு வெறுப்பின்றி தக்க உணவை அளவோடு உண்டு, உள்ளொளியை வளர்த்துக் கொண்டு தயா வாய்மை புகன்றிருத்தல் வேண்டும்.
 
            எல் = அகத்தே தோன்றும் அருள் ஒளியைக் குறிக்கின்றது.
 
 

5.
காண்பரிய மெய்ப்பொருளைக் காணத் தமிழ்மொழியே
மாண்புடையார் வாய்மலர்ந்த வாக்கு.
95.

 
            கு.வி – கடவுள் உண்மையைக் கைக்கனியாய்க் கண்டு கொண்ட நம் அருட் பெரியோர்கள், அந்தத் தத்துவத்தை ஆதாரமாய் வைத்து நம் தமிழ் மொழியை அமைத்துள்ளனர்.
 
            மெய்யுணர்வில் அருவமாயுள்ள ஒன்றை, ஒலி வடிவ அருவுருவில் கண்டு, வரிவடிவ உருவில் ஆக்கி வைக்கப்பட்டுள்ளது, தமிழ் எழுத்து.   எழுத்து பல்கிச் சொல்லாகி, சொற்கள் பெருகிச் செய்யுளாகி, அச்செய்யுளே கடவுளைக் குறிக்க வந்தது,  நம் தெய்வத் தமிழ்.
 
            பொறி புலனுணர்வுக்கு அப்பால் சென்று, அன்பறிவு வண்ணமாய் நின்று கடவுளுண்மையைக் கண்டு, அது வெளிப்பட திருவாய் மலர்ந்த, அருட் செல்வர்கள் கண்ட தமிழுக்கு பிற எந்நிலையினர் வகுத்துத் தந்த மெய்யறியா மொழிகள் ஈடாகும் ?
 
            அருளுணர்வுடையார்க்கு, பிற எத்துணையுமின்றி, தமிழ் மொழி, தானே கடவுள் இயலுண்மை விளக்கத்தைக் காட்டி விடும்.
 

6.
பேசுக பேசிற் பெரும்பய னுள்ளனவே
பேசற்க மட்டரகப் பேச்சு.
96.

 
            கு.வி – உண்மையான நன்மை தரும் உரை வழங்குதம் வேண்டுமே அல்லாது கீழான, தாழ்வான பேச்சு பேசுதல் கூடாது. அற்புதமான பேசும் சக்தியைப் பெற்றுள்ள மனிதன், அதனைத் தன் பகுத்தறிவால் தொகுத்தறிந்த உண்மையை விரித்துரைக்க உபயோகப்படுத்திக் கொள்ளுதலே நன்று.
 
            மற்றபடி, நாத்தழும்ப நாத்திகம் பேசி, நலிவுறுதல் நலமன்று. பேசாத பேச்சாலும், மெளனச் செயலாலும், இயலாலும் கருத்தைப் பிறர்க்குணர்த்தல் ஞானந்தரு மோன உரையாகும்.
 
 

7.
பதிபதம் போற்றிப் பணிந்துள் ளுருகித்
துதிசெய்தல் வாழ்வின் துணை.
97.

 
            கு.வி – கடவுள் அருட் புகழைப் பேச, பக்தி செய்து துதி பாட நமக்கு வாய் கொடுக்கப் பட்டுள்ளது. உள்ளுருகிக் கடவுள் திருவடியைப் போற்றித் துதித்தால் எளிதில் மனம் ஓர்மைப்பட்டு உண்மையைக் காண உதவும்.
 
            இதனால், தெய்வத் தோத்திரம் தயா இன்ப நிலைக் கேற உற்ற துணையாய் அமைகின்றது. தோத்திரம் செய்ய இசைக் கருவிகளும் பயிற்சிகளும் வேண்டுவதில்லை.
 
            தயவால் உளமுருகி நின்று, வாய்மொழியால் விண்ணப்பித்து வேண்டிக் கொண்டாலே போதும்.
 
 

8.
வள்ளல் அருள்பணிந்து வாயார வாழ்த்தினால்
கொள்ளரு மின்பருளுங் கோ.
98.

 
            கு.வி – அருளைப் பணிவது என்பது வணங்கி அருளுணர்வைப் பெறுவதும், புறத்தில் அருட் பணியைப் புரிவதுமாம்.
 
            ஆதலின், அகத்தே நிரம்பிய அருள் உணர்வு வாய் வழியாக, வாய் மொழியாக வெளிப்பட்டு, கடவுளை வாழ்த்துவதும், சீவர்களை வாழச் செய்வதும் உண்மை வாழ்த்தாகும். இவ்வாழ்த்தால், நம் பதி நமக்கு நல்லின்பமெல்லாம் வழங்கிடுவார்.
 

9.
விண்கலந்த ஓமொலியே மேவுமுயிர் உட்பெருகி
எண்கலந்த மெய்ம்மொழியா மே.
99.

 
 
            கு.வி – வானிற் பிரிவறக் கலந்துள்ள வாயு சக்தியால் தோற்றிய பிரணவநாதம், பக்குவ சீவர்கள் உள்ளத்தில் பெருகி, கருத்தில் கலந்து வாய்மையாக வெளிப்படுகின்றது.
 
            அகத்தே தயாவுணர்வோடு கலந்து புறத்துறுகின்ற மெய்ம்மொழியே அருள் வாக்காகக் கூறப்படும்.
 
 

10.
வன்கணழித் தன்பருளை மன்னகத்தே யோங்குவிக்கும்
இன்பே யிசையி னிசை.
100.

 
            கு.வி – இசை அல்லது பண்ணிறைப் பாக்களின் தனிப்பெருமை, வன் மனத்தைக் கரைத்து, அன்பைப் பெருக்கி, அருளானந்த அனுபவத்தை அகத்தே நிரப்புவதாம். ஆதலின், நம் தமிழ் இசை தெய்வீகமானது. வெற்றுச் சப்த சாலங்களும், கருவி இன்னிசைகளும் நாத சக்தியால் மனத்தைக் கவர்ந்து மயக்கி பரவசப்படுத்தலாம்.
 
            அன்பகத்திலிருந்து அனகமுறும் அருட்பாடலின் இசையே மெய்ஞ்ஞான பரவசத்தில் இருத்தித் தனி இன்பம் வழங்குவதாம்.
 
           
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.