தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
சிறப்பொழுக்கம்
ஒன்பதாம் அதிகாரம்
(பஞ்சேந்திரியங்களில்)
- காது இந்திரிய ஒழுக்கம்.
|
1.
|
ஓமருள் வண்ணசெவி யுட்சென் றுணர்த்துமொரு
தேமருவு வுண்மை தெளி.
|
81.
|
கு.வி – ஓம் என்னும் பிரணவ நாதமாகிய அருள் ஒலி, அப்பிரணவ வடிவாகிய காதினுட் புகுந்து உணர்ச்சி நரம்பின் வழி சென்று, கபால நடு சோதி பீடத்தைத் தீண்டுகின்றது.
ஆதலின், தேமருவு உண்மையாகிய அனுபவம் பெற விழைவோர், உட்பொருந்தி நின்று புறத்தில் நல்லன கேட்டு, நற்பணிக்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதல் வேண்டும்.
தே = கடவுட் சக்தியாகிய தெய்வம், அது தயவு.
|
2.
|
கலைபல கற்றலினுங் காதாற்கேட் டுற்ற
நிலையினு(ம்) நன்றுண் ணெகிழ்வு.
|
82.
|
கு.வி. – கற்றலிற் கேட்டல் நன்று என்பர். ஏனெனில், கற்கப்படு கலையோ அனந்தம். அவைகளை எல்லாம் படித்து உணர்ந்து தெரிந்து கொள்ளுவதை விட, அதனைக் கற்றுத் தெளிந்தவர்களின் வாயிலாகக் கேட்டு விரைவில் தெரிந்து கொள்ளலாகும்.
அப்படிக் கேள்வியால் அடையும் முடிந்த பயன் மெய்ப்பொருளை உணர்வதுதான். மற்றபடி, அரிய பெரிய முயற்சியால் கலை பல கற்றும் கேள்வியால் அறிந்தும் தன்னிலை மறந்து பரவசப்பட்டு நிற்றல் முடிவல்லவாம்.
தயவினாலே ஆன்ம நெகிழ்ச்சி பெற ஞான விசாரக் கேள்வியால் முயல வேண்டும். எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது பொய்யா மொழி.
|
3.
|
நல்லிசை கேட்டு நனிசுரந் துள்ளத்தே
புல்லிநின் றன்பு புரி.
|
83.
|
கு.வி – உள்ளத்திருந்தும் அருட்ஜோதியின் சிற்றசைவினாலே தோன்றி வெளிப்படுகின்ற ஒலி அணுக்கள் நல்லிசைக்குக் காரணமாம். ஆகையால், நல்லிசையை ஓர்மையோடிருந்து கேட்பதால் நாதப் பிரம்மத்தில் மனோலயம் உண்டாகின்றது.
இந்த நிலையில் மனம் சுத்தமாகி அதினின்று அன்போடு வெளிப்படுகின்ற சிந்தனையும், சொல்லும், செயலும் இன்ப ஊற்றை வெளிப்படுத்தி எத்திசையினும் நிரப்பும்.
ஆதலின் இசை கேட்டு, அதனால் பெறுகின்ற பயன் ஆன்ம நெகிழ்வும், அருள் அனுபவமும் ஆகும்.
|
4.
|
கொடுஞ்சொல்லும் அற்பர் குறைசொல்லும் உள்ளம்
அடுஞ்சொல்லுங் கேளா தகல்.
|
84.
|
கு.வி. – வன்னெஞ்சர்களின் கொடிய சொற்களையும், கோள்குறை குற்றம் முதலியவே கூறும் கீழ்மக்களின் வார்த்தைகளையும், பழிமொழி சுடுசொல் சினம் காமம் மயக்கம் உண்டாக்கும் தீச் சொற்களையும் கேட்காமல் விலகிடுதல் நன்று.
|
5.
|
துன்புற்றோர் தங்குறை துக்கந் துடைத்திட
அன்புற்றுக் கேளவ ரை.
|
85.
|
கு.வி. – தயவோடு துன்புறுகிறவர்களை அணுகி, அவர்களின் குறையைக் கேட்டுணர்ந்து, அக்குறை தவிர்க்க ஏற்ற வகையில் முயற்சி செய்ய வேண்டும்.
அறியாமையினாலும், பேராசையினாலும், தயவின்மையினாலும், தமக்குரியன அல்லனவற்றை அடைய வேண்டி குறைபட்டுத் துன்புறுகின்றோர்க்கு நல்வார்த்தை கூறி, அன்பும் அறிவும் உண்டாக்கி, மன அமைதியும் இன்பமும் எய்துவித்தல் சாலும்.
|
6.
|
செவியுறா நுண்ணொலியின் செம்பொரு ளுள்ளத்
தவிசிருந் தோதுந் தயவு.
|
86.
|
கு.வி – தயவுடையோர் உள்ளத்தில் ஒருமையுண்டாக உண்டாக, பக்குவ நிலைக்கேற்ப பரமொழி கேட்கும். இதுவே பரவைந்துவத்துரிய வாக்காக சுத்த தயவாளர்க்கு வெளிப்படுவதாம்.
மாயாகாரிகளுக்கு, இது, மனச் சாட்சியின் மொழியாகவும், அந்தரான்மாவின் உரையாகவும், உள்ளொலியாகவும் கேட்கப்படும். இதனால் ஓரளவு உண்மை வெளிப்படும்.
ஆனால், பேருண்மையாகிய கடவுள் விளக்கம் சுத்த தயவாளர்க்கேயாம்.
|
7.
|
கருவியாற் கேட்குங் ககன வொலியின்
அருளாலுட் கேட்பதுண்மை யாம்.
|
87.
|
கு.வி – காதால் கேட்கின்ற வானொலி முதலான எல்லாமும் புறத்திருந்து வருகின்றனவாம். அவ்வொலியில் மயங்கி நிற்றல் கூடாது. அகநிலையினின்று, கடவுள் அருட்சக்தியின் காரணமாக எல்லாவற்றையும் உணர்ந்து கேட்டு, உள்ளத்தே தயா நெகிழ்ச்சி உண்டாகப் பெறல் வேண்டும்.
|
8.
|
வானிறைந்த ஓங்கார மன்னொலியின் முக்காரம்
ஊனிறைந்த திப்பிறவி யுற்று.
|
88.
|
கு.வி. வானிற் கலந்த வாயு சக்தியினால் இடைவிடாது தோன்றி ஒலித்துக் கொண்டேயுள்ள பிரணவ நாத இயக்கம் இப் பிரபஞ்ச வெளிமுற்றும் நிறைந்துள்ளது.
அவ் ஓங்காரத்திற் கலந்த, அகார, உகார, மகார மாகிய முக்காரங்களின் தத்துவ உண்மை முற்றும் வெளிப்படும்படி, இவ் வுயர்வுடைய மனித சீவ தேகத்தில் சேர்ந்துள்ளதாம். மேலும் இத்தேகத்தில் அவ்வொலி ஏற்கும் புறச் செவியுங்கூட நம் ஓங்கார வடிவமாகவே உள்ளதாம்.
|
9.
|
ஒருமையிற் கேட்ட உபதேச முண்ணின்(று)
இருமையுந் தந்திடும் இன்பு.
|
89.
|
கு.வி – உலக போகத்தில் நிராசையும், மெய்ப்பொருளில் விருப்பமும் கொண்டவர்கள் பெறும் உபதேசம், உள்ளத்தில் அவியாது நின்று ஒளிசெய்து எக்காலத்தும் பெருமையும் இன்பமும் வழங்கும்.
இதற்கு, உபதேசம் செய்கின்றவரும், தயாவொருமையால், உள்ளத்தில் தானே அவ்வுபதேசப் பொருளாய் நின்று, கேட்போரின் பக்குவ நிலைக் கொப்ப உபதேசித்தல் வேண்டும்.
கற்பூரம், பஞ்சு, கரிக்கட்டை, பச்சை வாழை மட்டை இவற்றிலிட்ட தீயிக்கு ஒப்ப, அதி தீவிர, தீவிர, மந்ததர மக்களுக்குச் செய்யும் உபதேசமும் பற்றும்.
|
10.
|
நாத நிலைகடந்த ஞான நிலையடைந்தார்
காதாற்கேட் பாருட் கலந்து.
|
90.
|
கு.வி – மோனச் சோதியை அகத்தே கண்டு, அதிலொன்றி நின்று புறத்தே நோக்கும் போது பிரணவ நாத சோதியே உலகெல்லாமாய் விளங்கக் காண்கின்றனர், ஞானிகள். அவ்வக நிலையிலிருந்தே எவ்வுயிர்க்கும் உற்ற குறை கேட்டு உதவுவர்.
ஏழிசையாகிய சப்த சுரங்கட்கு அப்பாலுள்ளது பரநாத நிலை. அதற்கும் அதீதத்திலுள்ளது பெருஞ்ஜோதி மலை. இவை யாவும் அருள் ஒளி கண்டார் நிலையாம். இதனின்றே எவ்வொலியுங் கேளாது கேட்டு இன்பு செய்திருப்பர்.
Write a comment