தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
ஒழுக்கவியல்
ஏழாம் அதிகாரம்
|
1.
|
ஒழுக்கம் வழிபாட்டிற் குற்ற துணையானல்
லொழுக்கம் உயிருக் குயிர்.
|
61.
|
கு.வி – உலகியலில் அருள் வழிபாடியற்ற நற்றுணையாய் உள்ளது நல்லொழுக்கமே.
உடம்பிற்கு உயிர் – விளக்கமும், இயக்கமும் தருவது போல் மெய்யுருவாகிய ஆன்மாவுக்கு கடவுள் அருளே விளக்கமும் வாழ்வும் வழங்குகின்றது.
ஆதலின், அகமுணர்ந்து, அருள்வழி ஒழுகுதல், நம் உயிர்க்குயிரை வளர்த்து என்றும் நம்மை வாழ்விப்பதாம். பொதுவாகிய இவ்வருள் ஒழுக்கம், சிறப்பு வகையான் நம் இந்திரிய, கரண, ஜீவ, ஆன்மனில் விரித்துக் கொள்ளப்படும்.
|
2.
|
உலகத்தோ டொட்டி யொழுகற்குக் கற்க
பளகற்ற வாழ்வின் பயன்.
|
62.
|
கு.வி – நமது வாழ்வில் அடைய வேண்டியது, பளகு (குற்றம்) அற்ற பயனாம் பேரின்பம். இதற்காக நாம் கற்க வேண்டியது, உலகத்தோடு ஒட்டியொழுகு முறையேயாம்.
அகத்துள்ள கடவுளுக்கும், புறத்துள்ள உலகுக்கும் உள்ள தொடர்பாகிய ஒட்டு, அருட்சக்தியேயாம். இதனைக் கற்று, இதன்படி ஒழுகுதல்தான் உலகத்தோடொட்டி வாழ்தலாம்.
உலகைத் துறந்து ஒழியாமலும், உலகத்திற் கலந்து அழியாமலும், அருள் ஒழுக்கத்தினால் உலகத்துடன் ஒட்டி வாழத் தெரிந்து கொண்டால், பெற வேண்டிய பயனைப் பெற்றுக் கொள்ளலாம்.
|
3.
|
நல்லொழுக்க மென்றுந் நலந்தரலால் மேற்கொண்டு
புல்லொழுக்கந் தீண்டற்க போந்து.
|
63.
|
கு.வி – நல்ல ஒழுக்கத்தால் எல்லாவித நன்மையும், இன்பமும் கிடைக்கப் பெறுதல் உண்மை. ஆதலின், அவ்வுயரிய ஒழுக்கத்தைப் போற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
ஈதல்லாத தீயொழுக்கத்தை, மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் தீண்டாது விட்டொழித்தல் வேண்டும். மேல் உயர் நிலைக்கு ஏற்றுவது நல்லொழுக்கம். அந்நிலையினின்று நழுவிக் கீழ்போந்து கெடுதல் கூடாது.
|
4.
|
விலங்கிய லிச்சை விடுத்துத் தயைசேர்
நலந்தரு மாற்றில் நட.
|
64.
|
கு.வி – தயவு ஒழுக்கத்தை மேற்கொண்டு, இறை இன்ப வாழ்வாம் உயர்ந்த குறிக்கோளோடு உலகியலை நடத்தல் வேண்டும்.
தேகப்பற்று இல்லாது, தயா மார்க்கத்தில் அதிகம் ஈடுபட ஈடுபட விலங்கியலிச்சை (animal passion) குன்றி ஒழியும். மற்றபடி தயாவொழுக்கம் மேற்கொள்ளாது, இவ்விச்சையுடன் கூடிக் குடும்பத்தைப் பெருக்கிக் கொண்டு போவதும், இயந்திர, தந்திர, கருவிகளின் உதவியால் சிறு இன்ப வாழ்வில் திளைப்பதும் ஒழுக்கமற்ற செயலேயாம்.
தயாவொழுக்கம் கடைப்பிடித்தால் பெருநலமுண்டாகும்.
|
5.
|
இந்திரிய மைந்தின் எழுதரு பேரருள்
வந்திட வந்திடும் வாழ்வு.
|
65.
|
கு.வி – அகத்தே தோற்றிடும் கடவுள் அருள் உணர்வு ஐம்பொறிவாயில் வழியாகக் காரியப்பட்டால், மனிதனுடைய வாழ்வு, நல்வாழ்வாக, நல்லின்ப வாழ்வாக விளங்கும்.
எழுதரு பேரருள் என்றது, எழுகின்ற, உதிக்கின்ற தோற்றுகின்ற பெருந்தயவு என்பதாம். அன்றியும், எழுத அரும், அதாவது எழுதுதற்கு அரிய, எழுத முடியாத பேரருள் என்பதுமாம்.
திருவருள் உண்மை, மனோ வாக்கிற்கு எட்டாத ஒன்றாதலின் சொல்லாலும், சொற்கொண்ட எழுத்தாலும் குறித்துக் காட்ட முடியாது என்பது தெளிவு.
|
6.
|
கரணநான் கிற்றான் கருணை யொழுக்கால்
மரணமாங் கேவல மாற்று.
|
66.
|
கு.வி – கருணை ஒழுக்கம் மேற்கொண்டு ஒருமையோடு வாழ், வாழ் மனமானது சுத்தமுறும். அப்போது, புத்தி கூர்மையாகி நிலைத்து, சித்தம் தெளிந்து, அகங்காரம் ஒழிந்து, மெய்ப் பொருட் காட்சியுண்டாகும்.
இப்படி மனம், புத்தி, சித்தம் அகங்காரமாகிய அகக்கரணம் நான்கும் மெய்ப் பொருட் காட்சி பெறும்போது, மனோ வாக்கு காயமாகிய புறக்கரணம் மூன்றும் கருணைச் சோதியின் சேர்ப்பால், கேவல மரணாவத்தையை ஒழித்துச் சுத்த தயவொடு திகழுமாம்.
|
7.
|
சீவர்மூ வர்க்குத் தெளிவளித் திங்கென்றும்
ஓவலிற் கொள்க ஒழுக்கு.
|
67.
|
கு.வி – ஓவல் – நீங்குதல், இல்-இல்லாத, அதாவது நீங்குதலில்லாத நித்திய ஒழுக்கம் மேற்கொண்டு மூவகை சீவர்கட்கும் இயன்ற அளவு அன்பு காட்டி இன்ப மூட்டல் வேண்டும்.
சீவர், மூவர் என்றது, ஆன்மாவின் பக்குவ, பக்குவாபக்குவ, அபக்குவ வசத்தால் உயர்ந்தாரும், ஒத்தாரும், தாழ்ந்தாருமாக வாழ்பவர்கள்.
இவர்கள் யாவரும் மேல்நிலைக்கேற உதவுதல் திருவருட் சம்மதம்.
|
8.
|
ஆன்மாக்க டோறுநின் றத்துவித மானபர
மான்மாவைக் கண்டு அடை.
|
68.
|
கு.வி – பலவாகிய ஆன்மாக்களில் இரண்டறக் கலந்து நிற்கும் பரமான்மாவாகிய பதியை அறிந்து அடைவதுதான் ஆன்ம ஒழுக்கத்தின் கருத்து.
நமது அகத்துள்ள ஆன்ம அணுவவக் கண்டு கொண்டு, அதிலுள்ள நம் பதி ஒருவரே அருட் சித்தால் எவ்வுயிர் உருவுமாகி நம்மைச் சூழ்ந்து வந்து வாழ்வருளி இன்ப நிலைக்கு ஏற்றுகின்றார் என்று ஆன்ம ஒழுக்கத்தால் அறிந்து கொள்ளலாகும்.
|
9.
|
கடவுள் தயாவொழுக்கம் கண்டதின் ஒன்றித்
திடமுடன் வாழ்க தெளிந்து.
|
69.
|
கு.வி – உலகெலாம் காத்தளித்து வளர்த்துக் கொண்டுள்ள கடவுட் சக்தி சுத்த தயாமயமானது என்ற உண்மையை உள்ளவாறு அறிந்து கொண்டு அக்கடவுள் நிலையமாகிய நமது ஆன்ம உள்ளத்து நின்று தயா வண்ண வாழ்வு நாம் வாழ வேண்டும். இதுவே நிலையான நித்தியானந்த வாழ்வாக தெளிந்து கொள்வோமாக.
|
10.
|
பொதுவொழுக்க மெல்லார்க்கும் பொய்யா நலந்தந்
ததுவோங்கு மேசிறப் பாய்.
|
70.
|
கு.வி – இப்பொது ஒழுக்கம் ஏற்று நடப்போர்க்கு - ஏற்றமருள்வது. ஆதலின், யாவரும் நன்குணர்ந்து பற்றி ஒழுகற்குத் தகச் சிறப்பு வகையான், பலவாகப் பகுத்துத் தனித்தனி விரித்து, மேலதிகாரங்களில் விளக்கப்படும்.
மேலும் ‘பொது’ என்பதற்கு ஆன்ம சிற்சபையாகிய ஆலயம் என்பதே மெய்ப் பொருளாதலின், இவ்வான்மப் பொதுவினின்று ஆன்ம இயற்கைத் தயா வொழுக்க வாழ்க்கை மேற்கொள்ளல் மெய்யின்பத்திற்கு வழியாம்.