HyperLink HyperLink

நிறை மனிதன் (3.உயிரின வளர்ச்சி)

 

 
நிறை மனிதன்
 
(The man of Divine Perfection)
 
3. உயிரின வளர்ச்சி.
 
 Swami Saravanaananda.
 
1974.
 
            அகவுண்மை முழுமையாக அறிந்து பயன் கொள்ளப்படும் வரை புற வடிவங்கள் முறையாக தோன்றித் தோன்றி ஒடுங்கிக் கொண்டேதான் இருக்கும். பூத அணு வடிவத்தில் செயல் அறியப் படாதிருக்கும் மறைந்துள்ள ஆற்றல் (Latent Force) உயிர்ச்சக்தியாக உயிரின வடிவங்களில் தோன்றித் தோன்றி அடங்கிக் கொண்டிருக்கின்றதாம். உயிர்ச்சக்தியின் வளர்ச்சியும் விளக்கமும் ஓங்க, ஓங்க, சூழவரும் உயிரின வடிவின் அமைப்பிலும் உயர்நிலை ஏற்பட்டுக் கொண்டே வருகின்றதாகும். இதுதான் பரிணாம முறை (Evolution Theory) எனப்படுகின்றது. அகவிளக்க நிலைக்குத்தகவே புறவடிவத் தோற்றம் அமைக்கின்றதாம். அவ்வக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஓரின உயிர் வடிவங்களே, அதாவது ஓரரிவுடைய புற்பூண்டு முதலிய உயிர் வடிவங்களே வந்து வந்து சென்று கொண்டிருக்கும். பின்னர் அவ்வக வளர்ச்சியின் அடுத்த படி ஏற்படும்போது, அதனைச் சூழும் உயிரின வடிவம் நத்தை, சங்கு, சிப்பி போன்றனவாய்த் தோற்றும். இப்படித்தான் அகநிலை ஏற ஏற மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிரின வடிவங்கள் தோன்றிக் கழிந்த பின்புதான் மனித பிறப்புத் தேகம் வரும். இதில்தான் ஆறாவது அறிவாகிய மனம் என்னும் உணர்வு தோன்றிப் புலன் அறிவையும், அக நிலையையும் தேர்ந்து தெளிந்து கொள்ளுகின்றதாம்.
 
            உயிரினங்களை அறிவு விளக்க அடிப்படையில்தான் பிரித்து தொகுத்தளித்துள்ளனர் முன்னோர். ஓரறிவு முதல் ஆறறிவு ஈறாகக் குறிக்கப்படுகின்றன எல்லாவுயிர்களும். ஒவ்வொரு வடிவத் தோற்றமும், சூக்குமமாய்ச் சிறிதாய் விளங்கி, உயிர் விளக்கத்தால் வளர்ச்சியுற்று பெருகுகின்றது. ஓர் உயிர் வடிவின் வளர்ச்சிக்குப் பிற வடிவங்களின் உதவிச் சேர்க்கை சிதைவு முறையால் ஏற்படுகின்றதாம். இந்த ஆக்கமும் அழிவும் இயக்கவியல் உண்மைத் தத்துவமாக இருக்கின்றதாம். இயங்கியல் உயிரில் பசி உணர்ச்சி ஏற்பட்டு உணவு ஏற்கப்படுவதால், அப்பசி தணிவதும் உயிர் விளக்கம் பெறுவதும், உடல் வளர்ச்சியுறுவதும் அனுபவம்.
 
            தயவில்லாத கீழின உயிர்கள், சூழ்நிலைப் பழக்க வழக்க வசத்தால், பிற உயிர்களை வதைத்தும் அழித்தும் உண்டு வளர்கின்றன. மற்றுஞ் சில உயிர்கள் இயற்கையிலே தாவர உணவுகளை ஏற்றும் வாழ்கின்றன. உயர் அறிவு படைத்த மனிதன், தயவுடையவனாக வாழ வேண்டியவனாயிருக்கின்றான். அவன் தனது உடல் வளர்ச்சிக்கும், அக விளக்கத்திற்கும், தயவோடு சுத்த சத்துவ ஆகாரத்தை ஏற்று நல்வாழ்வு பெற வேண்டும். ஆனால் மனிதன் தயாவியல் அறியாமையால் கொலைவழி வரும் புலையுணவு ஏற்று விலங்கியல் வாழ்வு நடத்திக் கொண்டிருப்பதால்தான் உலகில் அழிவகைப் பிரச்சினைகள் மிகுதியாகச் சூழ்ந்திருக்கக் காண்கின்றோம். தயவில்லா விஞ்ஞானத்தால் மனித சமுதாயம் முற்றிலும் பெருஞ் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கின்றதாகும்.
 
            உயிரினங்களின் வளர்ச்சி இயற்கையியக்கச் சக்தியால் முறைப்படி நடைபெறுத்தப்படுகிறது. தேவையற்றவை தேய்ந்து ஒழியவும், தேவையானவை தோன்றிப் பெருகவும், அகமிருந்துதன் நியதி செய்யப்படுகின்றது. ஆனால் மனிதன் புலன் அவாவைப் பெருக்கிக் கொண்டு, அளவுக்கு மேல் தேவைகளையும் சேகரிக்க முற்பட்டதால் எவ்வளவு பொருள்கள் நாசமாகின்றன ! எவ்வளவு கேடுகள் விளைகின்றன ! வாழ்வே பாழாகிக் கொண்டிருக்கின்றது. தயா நன் முயற்சியில் இருந்து செயலோடு வாழ்ந்தால் எதுவும் அப்போதப்போது தேவைக்குத்தக வழங்கிடப் பெற்று இன்பில் ஓங்க நேரும் என்பது திண்ணம். ஆகவே மனிதன் உலக போக வாழ்வை முற்றும் வெறுத்து ஓடாமலும், அதனையே முழுமையாக இச்சித்து ஆழ்ந்து விடாமலும் சமமகிய தயா நோக்கோடு அகமும் புறமும் தயவும் செயலும் விளைவு கொள்ளும்படி வாழ்ந்து வருதல்தான் முறையாகும்.
 
            உயிரினங்களிலே உச்ச நிலையேறி நிற்கின்றவன் மனிதன். அந்நிலை நின்று அடியும், முடியும் காணக்கூடியவன் மனிதனே. இந்த மனித நிலையை விட்டுக் கீழே இறங்கி வேறான உயிரின வடிவங்களிற் சென்றாலும் சரி, மேலேறி உயர் ஆற்றல் கொண்ட சூக்கும தேவ தேகங்களை அடைந்தாலும் சரி, நிறை இன்ப அனுபவம் பெறக்கூடாதுபோம். அவற்றில் எதிலும் இருந்து கொண்டு தயா ஞானமும், தயா வாழ்வும், வாழமுடியாது பல குறைபாடுகள் உள்ளனவாம். ஆகையால்தான் இந்த மானுடப் பிறவி உயிரினங்களில் உயர்நிலைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றதாகும்.
 
            உயிர் வளர்ச்சியின் போக்கு முன்னோக்கிச் செய்வதேயன்றி, எக்காலும் வக்கரிப்பது (பின்னோக்கிச் செல்வது) இல்லையாம். இவ்வுயிர் வளர்ச்சி ஓரொருக்கால் அதிக வேகங்கொண்டு முன்னேறலாம். ஒரு சமயம் சற்று மெதுவாக முன்னேறக்கூடும். மற்றொரு போது முன்னேற்றமே இல்லாதது போல் மிக மெதுவாக இருந்த இடத்திலே இருப்பதுபோல இயங்கிக் கொண்டேயிருக்கும். மனிதப் பிறவியில் இந்த உயிர் வளர்ச்சியை அக அனுபவத்தால் காணலாகும். மனித வர்க்கம் ஒன்றில்தான் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட சிந்தனை வேறுபாடு உடைய மனம் விளன்குகின்றது. இந்த அனந்த வண்ண சிந்தனா வேறுபாடுடைய மனம் காரணமாகத்தான் மனிதர்களின் முகக்குறிகள் ஒன்றுபோலில்லாமல் மாறுபாடுடையனவாக தோற்றுகின்றனவாம். மற்ற உயிரினங்களிலே புலன் விளக்கமும் சுபாவக் குணச் செயல்களும் ஏகதேசம் ஒரே தன்மையனவாய் இருத்தலின் அவ்வினங்களில் ஒவ்வொரு வர்க்கத்துக்கும் அனேகமாக ஒத்த வடிவங்களே விளங்கக் காண்கின்றோம்.
 
            உயிரின் வளர்ச்சிக் கிரமத்தில், அகத்து அறிவு விளக்கமும், புறத்து உருவப் பரிணாமமும் தொடர்புடையனவாம். ஓரறிவு உயிர்க்கு வழங்கப்படும் உருவம் தாவர இனத்ததாகும். அவ் வடிவில் அகத்தும் புறத்தும் கருவிகரணச் சிக்கல்கள் மிக மிகக் குறைவேயாம். அறிவு ஏறப்பெற்ற உயிரினங்களில்தான் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டு வந்துள்ளனவாம். மேலும் எல்லா உயிரினத் தோற்றங்களிலும்கூட நெடுங்கால எல்லையில், அக விளக்கம் விரிய விரிய புறவடிவம் குறுக்கமும் மென்மையும் அடைந்து வந்துள்ளதாம். இன்றைய மனித வர்க்கம் கடவுள் உண்மையான தயாஞானம் பெற்றுள்ளது. இப்பொழுது மனித உடல் தயா சக்தியால் சுத்த தேகமாக மாறத் தகுந்த நிலையில் உள்ளது. இதனால் பழையதான அற்புத யோகசித்தி பெற்று வாழற்கும், புதியதான விஞ்ஞான சாதனையால் புலனின்ப வாழ்வில் தழைத்தற்கும் பெரிதும் ஆவல் கொண்டு வீணில் அலையாமல், அக நிலை கண்டடைந்து அந்நிலை நின்று அனக தயவு ஒழுக்கத்தோடு வாழ பழகிக் கொள்ளலே ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்கான அறிவு வளர்ச்சி எப்படி உருவாகிக்கொண்டு வந்துள்ளது என்பதை இனி ஆராய்வோம்.
                                                                                                                                             (தொடரும்)
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.