HyperLink HyperLink

நிறைமனிதன் - (2. உயிர்த் தோற்றம்)

 

நிறை மனிதன்
 
(The man of Divine Perfection)
 
2. உயிர்த் தோற்றம்.
 
 Swami Saravanaananda.
 
1974.
 
                        பெருவெளியில் இயற்கை நிறைவாகி அனாதி காலமாக நிலவுகின்றது - ஆகாச பூதம் என்னும் நுண் அணுச் செறிவு நிலையாகும். அவ்வாகாச அணுவுக்குள் உலகுக்கெல்லாம் காரணமான ஒளி உடைய அணுச் சக்தியிருந்து கொண்டு,  சிற்றசைவை உண்டு பண்ணுகின்றது. இவ்வசைவினால் தான் அகண்ட வெளியிலே காற்றணுக்களும், தீ அணுக்களும், நீரணுக்களும், மண்ணணுக்களும் பெருகிப் பெருகி ஐம்பூத உலகங்கள் தோன்றினவாம். இப்படி வந்த மண்ணணுவிலே அந்த உள் அசைவால் அல்லது அணுவக இயக்கத்தால், புரதப் பொருள் (Protein) களும், செரிமான பொருள் (Enzyme) களின் அமைப்புகளும் தோன்றிட சடபூத அணுவில் உயிர்ச்சக்தியாய், உயிர் வடிவம் ஏற்கின்றதாம். இதுவே சடப் பொருளிலிருந்து உயிரியல் வெளியாம் முறையாகும். அணு ஜீவர்களின் தோற்றநிலை இவையாம். இப்படியாகப் பாரிலும், நீரிலும், தீயிலும், காற்றிலும், வானிலுங்கூட மிக மிக நுண்ணுயிர்கள் உதிக்கின்றனவாம். நீரிலும், நிலத்தினும் தோன்றியுள்ள உயிரினங்களே ஆயிரம் ஆயிரம் வகையாக உள்ளன. இவைகளில் முக்கியமாக இந்நில வாழ்வுயிர்களைப் பற்றி அதிகமாய்த் தெரிந்து கொண்டு பயனடைய உள்ளோம்.
 
ஏன், எப்படி அணு நிலையினின்று உயிர் ஆற்றல் வெளிப்பட்டு விளங்குகின்றது என்பதை நம் பக்குவ அறிவினால் ஆய்ந்து னோக்குவோம். சிற்றணு நிலயானது ஓங்கார வண்ணமாய் சிற்றசைவோடு கூடி இருந்து, காலக்கிரமத்தில் உயிர் பரிணாம நிலை எய்துகின்றதாம்.
 
            ஏன் என்ற கேள்விக்கு விடை – அகவுண்மை வெளிப்படவும் முடிவில் நிலைத்த இன்பானுபவம் உண்டாகவுமேயாம். அக விளைவுக்குத் தகவே ஒவ்வொரு உயிர் அணுவும் உரிய வடிவம் ஏற்று,  விளக்கம் பெற்று வளருகின்றதாம். சூழ்ந்த வடிவினால் உண்டாம் அக விளக்கம் சிறிது சிறிதாக மேலோங்குகின்றது. ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான், அவ்வடிவும் அனுபவமும் கூடி விளங்கி நின்ற பின்னர், வேறு அடுத்த ஒரு சூழுருவ விளைவுக்கு உட்படுத்தப்படும்.   எண்ணற்ற உயிர்களை, நால்வகையோனி, ஏழ்வகைப் பிறவி எண்பத்து நான்கு லட்ச பேதத் தோற்றங்களில் விளங்குகின்றனவாக முன்னோர் ஆய்ந்து கூறியுள்ளனர். இவ்வுயிர் வர்க்கங்களில் சில காலம் உருவத் தோற்றங்களில் மாற்றமும், பழையன மறைந்து, புதியன தோன்றலும் உண்டாம். இவ்வுயிர் வடிவங்களில் புறத்தோற்றமும் மறைவும் ஏற்படுவதற்கொப்ப அக உறுப்புகளும், ஆற்றல்களும் அனுபவங்களும் வேறுபாடடைகின்றனவாம். எந்த ஒருவுயிரும் சதா இயக்கத்தோடுதான் இருக்கின்றதாம். வளர்ச்சியும், செயலும் உயிருக்கு சுபாவமாம். உயிராற்றல் உள்ளொடுங்கிட உடற்பிரிவு ஏற்படும். அப்போதும் கூட அந்த உயிர் இயக்கம் ஓய்கின்றதில்லை. ஆதலின் மற்றொரு தேக வடிவத் தோற்றம் உண்டாகி வளரத் தொடங்கி விடுகின்றதாம்.
 
            சிற்றணுமய ஆன்மா கட்புலனாகாத ஒன்றாம். அந்த ஆன்மாவிலிருந்து உயிர் செயல்பட்டு உடலை ஏற்று வாழும்போதுதான் அவ்வான்மாவின் இருப்பு அறிவினால் அறியப்படும். ஆன்மா சூக்கும ஆகாச அணுத்துவமானதென்றும், அவ்வணுவகச் சக்தியாய்த்தான் உயிர் ஆற்றலாயும், உடல் உருவங்களின் இயக்கமாயும் விளங்கி அறிவனுபவங்களுக்கும் முடிவில் நிலையான இன்ப வாழ்வுக்கும் பயன்படுகின்றதாம். மிக நுண்ணிய சிற்றணுத்துகளில் இவ்வளவு அரிய பெரிய ஆற்றல் எப்படி இருக்கக் கூடும் என்று ஐயமுற்று, அதுவெல்லாம் கற்பனை எனக் கருதுகின்றனர், இந்நாள் விஞ்ஞானர். சாதாரண அணுசக்தியின் உண்மையே சமீப காலத்தில் தானே கண்டு வியந்து கொள்ள நேர்ந்துள்ளது. இனி இவ்வான்ம அணுவின் பெருமை வெளிப்படுங்காலம் அடுத்துதான் இருக்கின்றதாம். ஆனால் இவ்வுண்மையை முன்பே ஒருவாறு ஆன்மானுபவிகள் கண்டுள்ளார்கள். அது கொண்டு அறிவுத் துறையிலும், உலகியல் வாழ்வுத் துறையிலும் பல அருஞ் செயல் புரிந்துள்ளார்கள். எனினும் அது விஞ்ஞான பூர்வமாக பொதுமக்களின் வாழ்வு நிலைக்கு வெளியாக்கப்படாது மூடி மறைக்கப்பட்டு, தேக இழப்பால் அழிந்து ஒழிந்தும் போய்க்கொண்டிருந்த காரணத்தால் மக்கள் அதனை அறியவும் நம்பிக்கை கொள்ளவும் கூடாது போயிற்றாம். இப்பொழுது ஏற்பட்டுள்ள விழிப்பும், எழுச்சியும் இயக்கமும் சமூக வாழ்வைக் கனிவுபெறச் செய்யவுள்ளனவாம். ஒரு முற்றிய காயின் உள்ளிருக்கும் சூக்குமப் பொருள் நிலையேதான் புறச் சேர்க்கை நிலையை பழுத்துக்கனிந்து விளங்கச் செய்வதே போல், ஒர் உயிரின் உள்ளிருக்கும் தெய்வீக ஆன்ம ஆற்றலே, மனித சமுதாய வாழ்வில் மேலான இன்பயன் வெளிப்படுத்துவதாக அறிந்து கொள்ளலாம். அகவுண்மையும், தயாவாழ்வால் ஏற்பட இருக்கும் பெருநிலையும் உணர்ந்து கொள்ளப்படாதவரை, மனித சமுதாயம் லட்சிய சித்தி அடையாது.
 
            உலகில் உயிர்கள் தோன்றுதலும், வளர்தலும் மடிதலும் இயற்கையே. இந்த உலகுயிர் இயக்கம் இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருப்பதால், உள்ளுறை ஆன்ம விளக்கம் வளர்ந்தோங்கிக் கொண்டே வந்து மனிதப் பிறப்புருவில் வெளிப்படுகின்றதாம். ஆன்ம இயற்கை தயா சக்தியாக உள்ளதால், அம்மேனிலையுறும் மனிதன் தயவு நிரம்பிய வாழ்வு கொண்டு விளங்குவான். மனித உயிர் தயா வாழ்வால் பெரும்பயன் அடைய உள்ளதால், ஒவ்வொருவனும் தயவு வாழ்வு மேற்கொள்ள வேண்டும். உலகியல் வாழ்வில் பிற உயிர்களை தயவோடு காத்து வாழ்விக்கவும், அவற்றினிடத்திருந்து கிடைக்கக் கூடிய நற்பயனை ஏற்று நம் வாழ்வுக்குத் துணைப் பொருளாக்கிக் கொள்வதும் நன்றாம். உயிர்களை சிறுபயன் கருதி வீணில் அழிப்பதுவும், தம் உயிரையே மாய்த்துக் கொள்வதும் மூடச் செயல்களாம். தான் அழிவற்ற கடவுளான்ம வடிவினன் என்று சொல்லிக் கொண்ட வேதாந்தி, புறவுலகைத் தயவில்லாத அலட்சிய நோக்கோடும், பற்றற்று பணிபுரியும் எச்செயலோடும் (உயிர் நீக்கும் கொலை பாதகச் செயலிலும்கூட) வாழ முற்படுகின்றான். இந்த மாதிரி வேதாந்த மனப்பான்மைதான் சமுதாய வாழ்வில் பெருங்குழப்பத்தையும் நாசத்தையும் உண்டுபண்ணிக் கொண்டிருப்பதாகும். இது முற்றிலும் ஒழிய வேண்டும். உலகுயிர்களை மாயை என்றும் மித்தை என்றும் கருதி விலகியும். இரங்கி வாழச் செய்யாமலும் இருந்ததைவிட்டு, அவ்வுலகுயிர்களை அக உண்மையின் மெய்யின்ப அனுபவத்திற்கு மிக தேவையான ஓர் அம்சமாகக் கருதி தயா இயக்கச் செயலால் பயன்கொள்ளுதலே அறிவுடைமையாகும்.
 
            மனிதனில் தோற்றி விளங்குகின்ற உயிர்ச்சக்தி மிகச் சொற்பமானது. அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நிலைக்காது போம். இந்த உயிர் விளக்கம் உள்ளபோதே, நிலையான அகவுயிராம் ஆன்ம உண்மையை ஓர்ந்து அதிற் பொருந்தி, தயவு நிரம்பிய வாழ்வு மேற்கொண்டால் அதுவே உயிராகி நீடித்து விளங்கிடச் செய்துவிடும். இது சுத்த சன்மார்க்கங் கண்ட திருவருட் பிரகாச வள்ளலாரின் அனுபவ நிலையாகும்.
                                                                                                           (தொடரும்)
 
           
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.