HyperLink HyperLink

தயவுக் குறள் 51-60 மூலமும் உரையும்

 

 
 
தயவுக் குறள்
 
சுவாமி சரவணானந்தா
 
குறிப்புரை விளக்கம்
 
ஆறாம் அதிகாரம்
 
தெய்வ வழிபாடு
 

1.
வழிபா டினிதாற்றில் வையத்தி லின்னே
அழிபா டகற்றும் அருள்.
51.

 
கு.வி – முன் அதிகாரத்தில் குறித்த - தயா தெய்வத்தை அறிந்து கொண்டவர்கள், அத் தயா வழிபாடு செய்தல் வேண்டுவது குறித்து இவ்வதிகாரம் தொடரப் பெற்றுள்ளது.
 
வழிபாட்டினால் பெறும் பயன் பெரிதாம். அந்த வழிபாடும் இவ்வுலகின் கண்ணே இப்போதே செய்துவிட வேண்டியுள்ளது. முறையாக வழிபாடு செய்தால் திருவருள் கிடைக்கும். அத்திருவருளே அழிபாட்டை அகற்றும்.
 
அழிபாடு என்பது, பயனின்றிக் கெடும் வீணான பெரு முயற்சி அல்லது இறந்து படுதல். அருள் வழிபாடு செய்வதால் நல்ல தயவுச் செயலோடு இனிது வாழலாகும் என்பதாம்.
 

2.
அருளிறையோ டொன்றி அவனியிலே யென்றுந்
தெருள்வழி பாட்டினைச் செய்.
52.

 
            கு.வி – ஒவறு உள்ளத்து உள்ளிருந்து கொண்டு அருளொளி வீசுகின்ற இறையோடு இரண்டறக் கலந்து, அதுவாகி நின்று, உலக வாழ்க்கையை உண்மை இன்பம் சேர்க்கும் தெய்வ வழிபாடாக நடத்தல் வேண்டும்.
 
            அகத்திருந்து அனகத் தோங்கும் அருள் ஒளியோடு நமது சிந்தனையும், சொல்லும், செயலும் வெளிப்பட வாழ்வதே சிறந்த வழிபாடாம்.
 

3.
ஆகமக் கூற்றாலும் ஆற்றுப் படையாலும்
ஏக பதியின்கண் ஏகு.
53.

 
            கு.வி – ஆகமாதி சாத்திரங்களில் ஏகமான பதியை, ஒன்றான கடவுளை முதலாகக் கொண்டு கற்பனையாற் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வுண்மையை அடையவே, அவைகள்  தந்திர,  மந்திர,  ஞான உபதேசங்கள் கூறி ஆற்றுப்படை வகுத்துள்ளன.
 
            அதாவது (ஆறு + படை = வழிபடுத்தல்) வழிபட, வழிபாடு செய்ய பல முறைகளை விதித்துள்ளன. சுத்த  சன்மார்க்கத்தினின்று தயா வழிபாடு செய்தற்குத் துணையாகவே மேற்படி ஆகமாதி சாத்திர விளங்கங்களை ஓரளவு அறிந்து கொள்ளலாம். மற்றபடி அவைகளினால் பூரண நிலை அடைதல் கூடாது.
 

4.
விண்டவழி கொண்டுநீ வீண்போகாச் சுத்ததயை
கண்டவழி கண்டு களி.
54.

 
            கு.வி – பலவாகச் சொல்லப்பட்ட கற்பனை மார்க்கங்களிலே சென்று சென்று காலத்தை வீணிற் கழிக்காது, கடவுள் உண்மையை அறிந்து, சுத்த தயவாலே உள்ளுற உணர்ந்து கொண்டு தயா வழிபாடு செய்வதே முறையாகும்.
 
            கரண இந்திரியங்களுக்கு அப்பாலுள்ள கடவுள் உண்மை, அருள் உணர்வுக்கு அனுபவப்படுவது அன்றி, பிறவற்றால் கண்டு கொள்ளவும், விண்டு சொல்லவும் கூடாதாம்.
 

5.
அருளின்றிச் செய்யும் அருச்சனை யாவும்
பொருளின்றிப் போகும் புறத்து.
55.

 
            கு.வி – உள்ளத்தில் கடவுள் அருள் ஒளியுணர்வு பெறாமல், புறத்தே செய்யப்படும் வந்தனை வழிபாடுகள் எல்லாம் பயனளிக்காது, அர்த்தம் அற்றவையாக ஒழியும்.
 
            வெற்று நம்பிக்கையும், பணிதலும், பயமும், பக்தியும் ஓரளவுக்குப் பயனளிப்பனவாகத் தோற்றக் காரணம், உண்மை காணாத நிலையிலும் அருள் ஏகதேசம் வெளிப்படுவதேயாம்.
 
           

6.
ஆலயம் போற்றி அகமறிந்து ஈண்டென்றுஞ்
சாலவே ஆற்று தயை.
56.

 
கு.வி - கோயில் வழிபாட்டால் அறியத்தக்க அகவுண்மையை நன்கு தெளிந்து தேறவே, கற்பனை செய்து வழங்கப்பட்டுள்ளன நமது அற்புத சிற்ப ஆலயங்கள் யாவும். ஆதலின், தெய்வயா உண்மையை உள்ளவாறு அறிந்து, இவ்வுலக வாழ்வில், நன்றாகத் தயா பணி புரிதல் வேண்டும்.
 

7.
மகத்தே குருசேர் மதிநிறை நாளோ
அகத்தே  அருட்குரு  வாம்.
57.

 
            புற வானிலே மக நட்சத்திரத்தில் வியாழனும் முழுமதியும் கூடித் தோன்றும் தினம் ஒரு புனித நாளாக, மகாமகம் எனக் கூறப்படுகின்றது.
 
            நமது அகத்தே ஒளிரும் பூரண ஞான அருட்குருவை உணர்த்தும் அது ஓர் அடையாளமாம். அக ஓர்மையில் மூழ்கி அருள் ஞான குருவின் தரிசனையால் ஆனந்தானுபவம் பெறல் வேண்டுமே அல்லாது, கும்பகோண மகாமகப் புற வழிபாட்டால் பெறும் பயன் சிறப்புடையதன்றாம்.
 

8.
பயனோக்கி ஈதலின் பன்மடங்கு நன்றே
தயைவழி நின்றீதற் றான்.
58.

 
            கு.வி – நாம் பிறர்க்குக் கொடுத்தால் நமக்கு தெய்வம் கொடுக்கும் - என்ற ஆவலோடு ஈதலினும் -  சாலச் சிறந்தது -  பிரதிபலன் கருதா ஈகை.
 
            நம் பதியின் தயவு நம்மில் வெளிப்பட, அதுவே நமது ஈகையாய்ப் புறத்தில் காரியப்படுவதால், இத்தயா செயலே கடவுள் வழிபாடாக முடிகின்றது. இதனால் சித்தின்பது பேரின்பமாம்.
 

9.
விழாவழி பாட்டால் விளையறி வன்பு
நிலாவிட வேண்டும் நிலத்து.
59.

 
            கு.வி. பொது மக்களை ஒன்று கூட்டித் திருவிழா முதலியன கொண்டாடுவதால், மெய்யறிவு விளக்கமும், மெய்யன்புச் செயலும் வெளிப்படுத்தப் பெறல் வேண்டும்.
 
            அகத்தில் அறிவும், புறத்தில் அன்பும் வளர்த்தற்கே விழா எடுத்தலன்றி, வீண் ஆரவாரமும், பெரும் பொருள் விரயமும், அர்த்தமற்ற செயல்களும் கூடாவாம்.
           

10.
தியாகேசன்  தாள்படுமித்  தென்னிந்  தியாவே
தயாமூல  பண்டாரந்  தான்.
60.

 
            கு.வி – நம் தென்னிந்தியாதான், தியாகேசனை உள்ளவாறு அறிந்து வழிபட்டு, தயா உண்மையைக் கண்டு கொண்டது. தென்னிந்தியா என்பதன் உட்பொருள் ஆன்மாவாம்.
 
            நமது ஆன்மாவில்தான் தியாகேசனாகிய கடவுள் திருவருள் பொருந்தி நின்று இன்பானுபவம் வழங்குகின்றது. இவ்வான்மாவே தயாமூல பண்டாரம்.
 
            பண்டாரம் = பொருள் வைப்பிடம், கருவூலம், பண்டாகிய பரம்பொருள் உள்ள நிலையம், அதனை உளங்கொண்ட துறவியுமாம்.
 
            நமது ஆன்மநாதன் தான் எல்லோருடைய ஆன்மாவிலும் உள்ளவன். அன்றியும், பிற எல்லா உயிர்களின் அகத்தும் உள்ளவன் நம் அகமுடையானாகிய தியாகேசனே.
 
            தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கு மிறைவன் என்றதன் கருத்தும், நம் தென்னிந்தியாகேசனே எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இறைவன் என்றதும் உண்மையே.
 
 
                                    பாயிரம் விளக்கம் முற்றிற்று.
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.