தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
ஐந்தாம் அதிகாரம்
தெய்வம்.
|
1.
|
ஆழ்ந்தகத் துள்ள அவனருட் சக்தியே
சூழ்ந்திடுந் தெய்வமெனச் சூழு.
|
41.
|
கு.வி – ஒன்றான கடவுள் அகத்தே மறைந்துள்ளதாகக் கண்டோம். அக்கடவுள் சக்தியே அருட்ஜோதியாகிச் சூழ்ந்து உலகெல்லாம் நிறைந்துள்ளதாம். இவ்வருட் ஜோதியே பலவாகிய தெய்வ வடிவங் கொள்வதாகும்.
அகமுடையானின் அருட்சக்தியே புறத்தே, ஜோதியாய், உயிராய், உருவாய், ஆற்றலாய், நியதியாய், விதியாய், உலகெல்லாமாய்ச் சூழ்ந்துள்ளது. இவை தனித்தனி ஒவ்வொரு அம்சமும் தெய்வமாகவே போற்றிக் கொள்ளப்படும் ஒவ்வொரு நிலையில்.
|
2.
|
அருள்நிலைக் கேற்றிட வன்றோநற் றெய்வம்
தருகுதே யாவும் சகத்து.
|
42.
|
கு.வி – சீவர்களுக்குப் பலவாகிய தேகங்களையும் போகப் பொருள்களையும் வழங்கி, புலனறிவை வளர்த்து, மேல் நிலைக்கு ஏற்றிக்கொண்டே உள்ளது, நம்மைச் சூழ்ந்த நல்ல தெய்வ சக்தி. அறிவு நிலையில் படிப்படியாக மேலேற்றி முடிவில் தன் அருட்சக்தியை அறிந்து கொள்ளும் அருள் உணர்வை வழங்குகின்றதாம்.
|
3.
|
வாழ்வளிக்க வல்லூழ் வகுத்தானைச் சார்ந்தார்க்கே
ஊழ்வெல்லு மாற்றலு முண்டு.
|
43.
|
கு.வி – வாழ்வின் குறிக்கோள் கடவுள் நிலை அடைந்து, கழியாப் பேரின்பில் என்றும் திகழ்வதேயாம். முடிவில் இந் நிலையைக் கூட்டி வைப்பதற்காகவே சூழ்ந்தியங்குகின்றது ஊழ்வினை. நல்வினைப்
பயனால் இகபர இன்பத்தையும், தீவினைப் பயனால் துன்பத்தையும் வழங்குவதே இவ்வூழின் நியதி.
இவ்வுண்மையை அருள் உணர்வினால் கண்டு தேறி, இன்ப துன்ப அனுபவத்தில் பற்றற்று, ஊழுக்குக் காரணமாகிய கடவுள் அடி சார்ந்து, சுத்த தயவினால் வாழ்பவர்கள் ஊழை வென்று உலவா இன்ப நிலையில் திகழ்வார்கள்.
மற்றெந்த வகை முயற்சியாலும் எவரும் ஊழை வெல்லுவது கூடாத ஒன்றாம்.
|
4.
|
அறம்பாவ மென்னும் அடியிரண்டாற் றெய்வம்
புறத்தாடி நிற்கும் புரிந்து.
|
44.
|
கு.வி – அகம் பழுக்கவே, புறத்தில் தெய்வ சக்தியானது, நல்வினை, தீவினை என்னும் இரு கூறாகி இயங்கிக் கொண்டே உள்ளது. ஆன்மாவின் புறத்தே இவ்விதி நடனம், இருவினை ஒப்பு வரும்வரை நந்து கொண்டேதான் இருக்கும்.
அருள் வந்து மல மறைப்பு நீங்கிய போது, பதி நிலைக் கண் நிற்கவும், அப்போது விதி நடனம் காலோய்ந்து ஒழியவும் காண்போம்.
ஆன்ம பதியின் அருள் ஆனந்த நடனம் கண்டு கொண்டார்க்கு. புறத்திலங்கும் தெய்வ விதி நடனம் பற்றுவதில்லை. பற்றாது புறத்தாடுவதாம்.
|
5.
|
பற்றற்ற உள்ளானைப் பற்றித் தயவாலே
சுற்றுற்ற தெய்வத்தைச் சூழ்.
|
45.
|
கு.வி – உடலொடு ஒட்டாது ஆன்மாகாசத்தே ஒளிரும் ஆண்டவனைப் பற்றி, ஒன்றி, அதுவாகி நின்று தெய்வம் தரு வாழ்வை, சூழ்நிலையைத் தயவாலே எதிர் கொண்டு இன்பு செய்து மகிழ்ந்திருத்தல் வேண்டும்.
|
6.
|
அழுது அகங்குழைந் தன்பானார் போற்றித்
தொழுந்தெய்வம் யாதுநீ சொல்.
|
46.
|
கு.வி – அன்பே லட்சியமாகக் கொண்டு உருகி, அகங்காரம் ஒழிந்து, தேகப்பற்றற்று, தயா வண்ணமானவர்கள் போற்றி வணங்குகின்ற தெய்வம் எது ?
இக பர போகங்களைத் தரவல்ல தெய்வங்களே எல்லாம் தன்னாணையின்படி ஆட்டி வைக்கும் ஒன்றான கடவுளை அன்பருளாற் கண்டு கொண்டவர்கள், அக்கடவுளைத் தொழுவதே அன்றி பிற தெய்வந் தொழார்கள்.
|
7.
|
தெய்வந் தொழாஅர் தியாகமே தன்னுருவாய்
எய்துவா ரெண்ணியவெல் லாம்.
|
47.
|
கு.வி – தயவின் திரண்ட வடிவமே தியாகமாக உள்ளதால் அத்தியாகமே தம் வடிவமாகப் பெற்றோர், தாம் எண்ணியவை யாவும் தடையின்றி உடன் எய்துவார்கள்.
அப்படிப்பட்ட தியாக வண்ணர்கள் பிற தெய்வம் எதனையும் வணங்க மாட்டார்கள். ஆனால், தெய்வ தத்துவ வடிவங்கள் யாவையும் கடவுள் தயவாகக் கண்டு, அன்பு செய்து கொண்டு நிரதிசயானந்தமாக நிற்பார்கள்.
|
8.
|
தாயகமும் நாயகமும் தானான மெய்ப்பொருளே
காயந்தாங் குந்தெய்வங் காண்.
|
48.
|
கு.வி – இத் தேகத்தைத் தாங்கி நின்று அருள் செய்கின்ற தயா பெருஞ் சக்தியாகிய தெய்வம் தானே, இதற்குத் தாயகமாகவும் (ஆதார நிலையமாகவும்), நாயகமாகவும், (தலைவனாகவும்) உள்ள பரம் பொருளாம் கடவுள்.
|
9.
|
அருள்தெய்வம் தானே அறமறங் கட்குப்
பொருள்தந்து நிற்கும் புகல்.
|
49.
|
கு.வி – கடவுள் அருட்சக்தியாம் தெய்வம், ஆன்மாக்களைக் கடைத்தேற்றும் பொருட்டு, அறக்கருணையால் தாங்கியும், மறக்கருணையால் எதிர் நின்று வாங்கியும் மேலேற்றுகின்றது.
அறம் – வரையறை செய்யப்பட்ட விதி, அன்பு மார்க்கம்.
மறம் - அவ்விதிக்கு எதிரானது, மறுக்கப்பட்டது, மறக்கருணையாகிய வன்நெறி.
இவ்விரண்டும் ஆன்ம பரிபாகத்திற்குத் துணை செய்கின்ற தெய்வ சக்தியாம்.
|
10.
|
தெய்வம் தயவுத் திருவுரு வாய்க்கண்டு
உய்யும் வழிபா டுஞற்று.
|
50.
|
கு.வி – ஏகதேச தயவே ஓர் வடிவம் கொண்டு திகழ்கின்றதுதான், தெய்வம். இவ் வுண்மையை உள்ளவாறு அறிந்து, நாம் நல்வாழ்வு அடையவே தயா வழிபாடு செய்திடல் வேண்டும்.
உஞற்றுதல் = முயன்று செய்தல்.
உய்யும் வழிபாடாவது, தயா வழிபாட்டால் கடவுள் அருள் அடைந்து, நிலையான இன்ப வாழ்வு பெறுதலாம்.