Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் 31-40 மூலமும் உரையும்

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
நான்காம் அதிகாரம்
கடவுள்

1.
உலகுயிர்க் கெட்டாதே உண்ணின் றெவையும்
இலகுற வோங்கு மிறை.
31

கு.வி- மெய்யறிவு கொண்டும், மெய்யன்பு கொண்டும் கண்டு கொள்ளப்படுவது கடவுள். ஆதலின், இவ்வதிகாரம் அவற்றிற்கு அடுத்து வந்துள்ளதாம்.
உலகுயிர்கள் எல்லாம் விளங்கி ஓங்கச் செய்துகொண்டிருக்கும் ஒன்று கடவுள். புறத்தோற்றத்தில் கண்டு கொள்ளப்படாது, அகத்தே மறைந்து நின்று அருள் செய்கின்றதால் கடவுள் என்று குறிக்கப்படுகின்றார், நம் பதி.

2.
ஒன்றா மிறைவன் ஒழிவின்றித் தன்னருளால்
நின்றான் உலகில் நிறைந்து.
32.

கு.வி. – உலகம் மிகப் பெரிது. அதிலுள்ள பொருள்கள் அனந்தம். அப் பொருளிற் கலந்த அணுக்கள் அனந்தானந்தம். ஆகாய பூத அணுக்கள் அகண்ட வெளி முற்றும் நிரம்பி உள்ளன. ஒவ்வொரு அணுவுக்கும் உள்ளாக பூரணமாகக் கடவுள் சக்தி பொருந்தியுள்ளது.
இங்கு, அணு என்றது, சாதாரண பூத அணுவன்று. பூத நிலை எல்லாம் கடந்த ஆன்ம அணுவாகும். இதுவே கடவுள் அணு, சச்சிதானந்தமானது.
இவ்வுண்மைக் கடவுளே அகத்தே கண்டு நிற்கும்போது, இந்த ஒன்றே, அருட் சித் சக்தியால் யாவுளும் நிறைந்து தன் மயம் காட்டியுள்ளதாக அறியப்படும்.

3.
உள்வடிவந் தன்வடிவாய் ஓவற் றிலங்கமேல்
கொள்வடிவம் போமே குலைந்து.
33.

கு.வி - அகத்திலே உள்ள கடவுள் வடிவம் அழியாது நிலைத்திருக்கிறது. ஆனால், அப்படி நிலைத்த ஒன்றன் மேலே சீவ தேகம் ஒவ்வொன்றாக வந்து, வந்து, வளர்ந்து, சிதைந்து அழிந்து போய்க் கொண்டேயுள்ளது.
இதனால், கடவுள் ஒன்றே நித்தியம் எனவும், சீவர்கள் அநித்தியம் எனவும் விளங்கும்.

4.
எல்லாஞ்செய் வல்ல தெதுவோ அதுவேநம்
எல்லார்க்கு மாங்கடவு ளே.
34.

கு.வி – எல்லார் உளத்தும் இருக்கின்ற கடவுள் ஒன்று. அதுவே யாவருக்கும் துணையாவது. எல்லாம் செய்ய வல்லது. மேலான இன்ப நிலைக்கு ஏற்ற தயை புரிந்து கொண்டே உள்ளது. ஆகையால் எல்லோரும் மெய்யறிவின்பால் மெய்ப் பொருளாம் ஒரே கடவுளைப் போற்றிக் கொள்ளுவோம்.

5.
எவ்வுருவும் பற்றாத ஈசன் அகத்திருந்து
ஒவ்வுருவ மீவா னுவந்து.
35.

கு.வி – தீண்டப்படாத அகவெளியில் வளர் தீண்டப்படாத கடவுள், ஆன்மாக்களுக்கு எந்த வித தேகங்களும், ஜீவனும் போகப் பொருள்களும் வேண்டுமோ அவற்றைக் காலத்தே வழங்குகின்றான்.
ஆன்ம பரிபாகத்திற்குப் பொருந்தும் உருவை அளிக்கின்ற பதி முடிவில் ஒவ்வுருவத்தை (ஓங்காரமாகிய பிரணவ தேகத்தை) உவந்தளிக்கின்றான்.
ஒவ்வுருவம் = (அபக்குவ காலத்தில்) பொருத்தமான அல்லது தகுதியான வடிவம். (பக்குவ காலத்தில்) ஓங்கார சுக சாயுச்சிய வடிவாம்.

6.
ஆன்மாணு நம்பன் அழியாக் கடமாகும்
தான்கடவு ளாகவிருந் தான்.
36.

கு.வி – ஆன்ம அணுவே அழியாத கடம். உலகில் மற்றவை எல்லாம் தோன்றுவதும் அழிவதுமாம். புற உலகில் பூத அணுவை சிதைத்து அதன் உள்ளிருக்கும் பெரும் பூத சக்தியைக் கண்டுள்ளது விஞ்ஞானம்.
ஆனால், மெய்ஞ்ஞானத்தில் விளங்கும் கடவுள் வடிவாகியதுதான் - அழியாத ஆன்ம அணு என்பது. ஆகவே, அழிவற்ற ஆன்மாவே கடம் என்றும். அதற்குள் இருக்கின்ற எல்லாம் வல்ல பரம்பொருளே கடவுள் என்றும் தெரிந்து கொள்வோமாக.

7.
கடமே தனதரங்காக் காணைந் தொழிலே
நடமாக்கொண் டுள்ளான் நயந்து.
37.

கு.வி – ஆன்ம அக வெளியே கடவுளுக்கு ஆடரங்காக உள்ளது. இவ் வரங்கில் நின்றுதான் ஐந்தொழில் நடனம் புரிகின்றார் நம் பதி. இந்த ஐந்தொழில் நடனம் புறத்தே காணக்கூடியதாய் உள்ளது. ஆனால், அகம் மறைந்து ஆடுகின்ற பதியை அருள் ஒன்றினால்தான் காணக் கூடும்.

8.
புலனுக் குளவாகாப் புண்ணியனைக் காண
நிலமே வருளே நெறி.
38.

கு.வி – கண் முதலான இந்திரியங்களுக்குத் தோற்றாத கடவுளை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு இவ் வுலகில், இப் பிறப்பில் திருவருள் உணர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ் வருள் உணர்வு, பகுத்தறிவாம் மனோ உணர்வுக்கு அப்பாற்பட்டதாம். ஆகையால், அருள் நெறியாகிய சன்மார்க்கம் ஒன்றினால்தான் கடவுளைக் கண்டு அடைய முடிவதாம்.

9.
பிண்ட வுயிர்ப்பலவும் பேரண்டத் தெவ்வுலகும்
உண்டே சதாவலங்கொள் ஒன்று.
39.

கு.வி – உயிர்களும், உலகங்களும் என்றும் வலஞ்செய்து கொண்டே உள்ள ஒன்று நித்தியமாக நிலைத்துள்ளது. அந்த ஒன்று, பிண்ட உயிரில் ஆன்ம அணுவாய் நடு நிற்க உயிர்ச்சக்தி தோன்றி வலஞ் செய்யவும், பூத அணுவில் மூலக்கரு (Proton) நடுநிற்க காந்தச் சூழல் (ELECTRON) வலஞ் சுற்றவும், ஞாயிற்றை நடு வைத்து கோட்கள் (PLANETS) வலஞ் செய்யவும், எண்ணற்ற ஜோதி உடுக்கள் மாமேருவை வலங்கொள்ளவும் விளங்குகின்றதுவே அந்த ஒன்றாகிய கடவுள்.

10.
கடவுளே நம்மைக் கலந்தின்று மாயை
விடவுளே நின்றான் விளைந்து.
40.

கு.வி – அகத்தே கலந்துள்ள கடவுள் உண்மையைக் கண்டு கொள்ள நமக்குப் பக்குவ முண்டாக வேண்டியிருந்தது. இப் பக்குவம் உண்டாக்கவும் மாயா மறைப்பைப் போக்கிடவும் தான் நம் பதி சக்தி இதுகாறும் அகத்தில் விளைந்து முதிர்ந்து கொண்டிருந்தது. இத் தருணம் அம்மறைப்பு நீங்கவும் உண்மையைக் காணவும் தயை புரிகின்றார் நம் பதி.