.
தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
மூன்றாம் அதிகாரம்
மெய்யன்பு
|
1.
|
அமிழ்துறழ் ஈசன் அடிமுடி நாப்பண்
தமிழ்தரு அன்புருவந் தான்.
|
21.
|
கு.வி. - முன் அதிகாரத்தில் மெய்யறிவை விளக்கி, அவ்வறிவில் புறக்காரியப் பாடாகிய மெய்யன்புச் செயலை விளக்கவே இவ் வதிகாரம் தொடர்கின்றதாம்.
அன்பின் தத்துவமாகிய கடவுட் செயல் இவ்வுலகில் அடிமுடிதொட்டு நிற்கிறது. இந்த உண்மையை அடிநிலையாகக் கொண்டு கடவுள் இயல் விளக்கம் வெளிப்படுத்தவே நம் தமிழ் மொழியை ஆக்கித் தந்துள்ளனர் நம் ஆன்றோர்.
அமிழ்து – அமிர்தம், அழியாமையைத் தருவது. இது போன்றதே கடவுட் தத்துவம். அடி, நடு, முடி நிறைந்த கடவுள் தத்துவத்தை மெய்யன்புருவமாக ஆக்கித் தமிழ் மொழியில் புகட்டி உள்ளார்கள். ஆகவே, இந்த அன்பு என்ற தமிழ்ச் சொல்லே கடவுள் வடிவமாகக் கண்டு கொள்ளலாம்.
|
2.
|
அகர னகரம் அடிமுடி யாகிப்
புகரத் திருக்கும் பொலிந்து.
|
22.
|
கு.வி. – அன்பு என்ற சொல்லில், அகரம் முதலாகவும், னகர மெய்யீறாகவும் கொண்ட தமிழ் மொழியின் தெய்வப் பண்பை உணர்த்தி, அவ்வுண்மை வெளிப்பட்டிலங்கும் நம் சிரநடு ஆன்ம ஜோதிக் கடவுள் ஒளி நிலையைப் ‘பு’ கரமாகக் கொண்டு சேர்த்து அன்பின் மெய்ப் பொருளைக் காட்டியுள்ளனர்.
இவ் அன்பு வடிவக் கடவுளை அடைவதற்கும் அன்பு புரிதல் வேண்டுமென்பதே மெய்யன்புடையார் கண்ட மெய்ப்பொருள்.
புகரம் = (ப்+உ) பகர மெய், நம் தலை நடுவுள்ள பகர வடிவக் குழி மீது நித்திய தீப ஆன்ம விளக்காககவும், அது உகரமாகிய ஐந்தாம் உயிரெழுத்தால் கடவுள் ஐந்தொழில் சக்திச் செயலைப் புரிவதையும் விளக்க வந்துள்ளதாம்.
|
3.
|
அன்பொளியா லாளு மவனல்ல திவ்வுலகில்
மன்னணுவு மில்லதே மற்று.
|
23.
|
கு.வி- ஒவ்வொரு அணுவும் உருவாகி நிலைத்திருப்பதற்கு, அதன் அகத்துள்ள கடவுட் சக்தியே காரணமாம். இந்தச் சக்தி இல்லையானால் எந்த அணுவும் தோற்றாது.
மேற்குறித்த அணுவகச் சக்தியே அன்பொளியாக உள்ளது. இவ் அன்பொளி காரணத்தால் ஐம்பூத அணுக்கள் உதித்துத் திரண்டு உருண்டு பிரபஞ்ச உலகமெல்லாமாகித் திகழ்கின்றன.
இந்த அன்பொளித் தோற்றம் அணுத்துவ நிலையும் கடந்து அகத்தே உள்ளது. இந் நிலையினின்று நோக்கும் போது அகண்ட பிரபஞ்சம் முற்றும் பேரன்பொளி மயமாகத் தோற்றும். ஆதலின். இவ் ஒளியே உலகெல்லாம் ஆளுகின்றதாம்.
அன்பில்லாத வன்செயலால் அணுவகச் சக்தி வெளிப்படுத்தப்படும்போது, பெரும் பூச சக்தியாகத் தோன்றி உலகை மயக்குவதே இன்றைய விஞ்ஞானம் கண்டதாம்.
|
4.
|
அறிவோ டிசைந்த அகத்தே யிருந்து
குறைநீக்கு மன்பே குறி.
|
24.
|
கு.வி. – மெய்யன்புச் செயலால் சூழ்நருக்குக் குறை தவிர்த்து நிறை இன்பத்தை வழங்க வேண்டும். ஆதலின், அவ் அன்பு நல்லறிவோடு கூடிய உள்ளத்திருந்து தோற்றிக் காரியப்படல் வேண்டும்.
|
5.
|
அன்போ டறிவும் அணிந்தோர்க் கிறைவனே
இன்பெலா மீவா னிவண்.
|
25.
|
கு.வி. – மெய்யன்பும் மெய்யறிவும் கொண்டு சன்மார்க்க வாழ்வு வாழ்கின்றவர்களுக்கு, அன்பு ஆட்சி புரிகின்ற ஆண்டவர் எல்லா நலனும் தடையறாது ஈந்து இன்பு செய்கின்றார்.
|
6.
|
மெய்யன்புக் கில்லையே மேல்கீழாம் பேதங்கள்
செய்யகத் தோர்ந்து தெளி.
|
26.
|
கு.வி – என்றும் ஒரே மாதிரியாக, அன்பொளி வீசுகின்ற நம் பதி சந்நிதியாம் இவ்வுலகில், எறும்பு முதல் யானை யீறாக உள்ள சீவர்களும், மூடமுண்ட மந்தன் முதல் மோன ஞானானந்த மகான் வரையுமுள்ள மனிதர்களும், மற்றெல்லாச் சீவர்களும் வாழ்வு பெற்று மேலோங்குகின்றன.
ஆகையால் அவ் அன்புக்கு உயர்வு தாழ்வு, மேல் கீழ் என்பதில்லையாம். இவ்வுண்மையை அறிந்து தெளிந்து நமது அன்பையும் பொது நோக்கோடு வளர்த்தல் வேண்டும்.
|
7.
|
என்புருகச் செய்தவத்தின் எய்யாத மெய்ப்பொருளை
அன்பருளாற் பெற்றிடலு மாம்.
|
27.
|
கு.வி – கடவுளை அறிந்து அடைதற்காக வேண்டிக் கடுந்தவம் செய்து உடல் வற்றி உள்ளுருகிப் போவதால் பயனில்லை.
உயிர்களிடத்து இரக்கங் கொண்டு, உள்ளுணர்ந்து மெய்யன்பு செய்து கொண்டிருந்தால், திருவருள்தானே அம்மெய்ப் பொருளைக் காட்டிக் கூட்டி வைக்கும். (எய்யாத = அறியாத).
|
8.
|
ஐயறிவுக் கப்பாலாம் ஆன்ற அருளுணர்வில்
மெய்யன்பு ஓங்கும் விரிந்து.
|
28.
|
கு.வி – ஐம்புலன் உணர்வுக்கு எட்டாத நிலையிலே சுத்த மனத்திலே சுடர்
விடுவது அருள் உணர்வு. இதில் தோன்றுகின்ற மெய்யன்புச் சக்தியே அகிலமெலாம் படர்ந்து தழைத் தோங்குவதாம்.
|
9.
|
அன்பரு ளின்பா மவனை யடைதற்கு
வன்பற்ற அன்பே வழி.
|
29.
|
கு.வி – அன்பு, அருள், இன்பம் – சத்து, சித்து, ஆனந்தம். இவையே தன் சொரூப, ரூப, சுபாவமாய் உள்ள பரம் பொருளை அடைவதற்குரிய நெறி, கடினத் தன்மையற்ற அன்பு ஒன்றினாலே ஆனதாம்.
மெய்யன்பு மார்க்கமே மெய்ப்பொருளாம் கடவுளை அடைய சரியான வழியாகும். சுத்த அன்பு, சுத்த சன்மார்க்கமல்லாத பிற மார்க்கங்களில் விளங்குவதில்லை.
|
10
|
ஓர்தெய்வந் தானுண்ட` தோங்கியெங்கும் அன்பொளியாய்ச்
சீர்பெற்று நிற்றல் திடம்.
|
30.
|
கு.வி – மெய்யன்புருவாகிய கடவுள் ஒருவரே இருக்க, அவ் அன்பொளியே அருளின்பானுபவம் வழங்க, அனந்த வண்ண பேத உருவொடு சூழ்ந்து திகழ்கின்றது. அவ்வுரு நிலை கடந்து அக ஒளியைக் கண்டு கொண்டால், அருளின்பப் பெருவாழ்வில் நிலைத்து வாழலாகும்.