HyperLink HyperLink

தயவுக் குறள் 11-20 மூலமும் உரையும்.

 

 
தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
இரண்டாம் அதிகாரம்
மெய்யறிவு
 

1.
தயவோ டியைந்த தலையாய செய்கை
நயமாமெய்ச் சேரறிவாய் நாட்டு
11.

 
கு.வி – முன்குறித்த தயா நெறிக்கு மெய்யறிவு என்னும் ஒளியே என்றும் துணையாக உள்ளது. மெய்யறிவு இல்லையானால் தயவு நிறைவுற்று விளங்காது.
 
மேலும் இம் மெய்யறிவு என்பதே தயவோடு கூடியதும், செயலில் காரியப்படுவதுமாம். செயலற்ற தயவென்பது உயிரற்ற உடல் போன்றாம்.
 

2.
இறப்பென்னும் பேதமை இன்றே அழிக்குஞ்
சிறப்பாம் அறிவைநீ சேர்.
12.

 
கு.வி – சிறப்பாம் அறிவாவது, செம்பொருள் என்னும் கடவுள் ஞானம்.
 
“பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு” என்பது திருக்குறள்.
 
            இனி பிறவி எடுக்காமல் இருக்க வேணுமானால் இப்போதே, இப்பிறப்பே இறவாமை யுற்று, எப்போதும் வாழ வேண்டும். இதற்குத் தயா ஞானபதியோடு ஒன்றி அதுவாய், எஞ்ஞான்றும் இலங்குவதே பொருந்தும். இம் மெய்யறிவுதான் சன்மார்க்க ஞானம்.
 

3.
தலைவனைக் காணுந் தயாவறிவே யல்லாற்
கொலைவினை காட்டாக் குரு.
13.

 
கு.வி – குரு என்பது, அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியைத் தந்து மேல்நிலைக்கு ஏற்றக் கூடிய ஒருவன் அல்லது ஒன்று என்ப.
 
            மெய்யறிவே தன்மயமாக உள்ள   தயவுக் கடவுளே   உண்மைக் குருவாய் என்றென்றும் இருக்கின்றது.
 
            இவ்வனுபவம் ஏகதேசம் பெற்றவர்கள் புறக் குருவாகக் கொள்ளப்படுவர். உள்ளத்தில் தயவு பெருகப் பெருக மெய்யறிவாம் குருவைக் கண்டு கொள்ளுவோம்.
 
            ஆதலின், தயா   வினையே குருவைக் காட்டிக் கூட்டி வைப்பது. தயவில்லாத கொலை வினை உள்ளொளியாகிய மெய்க் குருவைக் காட்டாது.
 
            தயவில்லா அறிவு – புலனறிவு, கலையறிவு, விஞ்ஞான அறிவு எல்லாம் மெய்யறிவாகாது. இவற்றால் குருத் துணை கிடைக்காது.
 

4.
பொறிவாயி லைந்தின் புலனின்பங் காண்பார்
அறியா ரவியா அறிவு.
14.

 
            கு.வி – நித்தியமாய் விளங்கும் ஞான ஒளி விளக்காம் மெய்யறிவைக் காண வேண்டில், ஐம்பொறி வாயில் ஆறாகத் துய்க்கின்ற புலனின்பத்தில் அவா முற்றும் அறல் வேண்டும்.
 
            அப்படிப் புலனின்பத்தில் ஆசையற்றுத் தயவோடிருப்பவர்களே மெய்யறிவை அறிந்து அடைவார்கள்.
 

5.
சூழுலகைத் துன்புறுத்தித் துய்க்கின்ற பொய்யின்பில்
ஆழுவரோ மெய்யறி வார்.
15.

            கு.வி – மெய்யறிவுடையவர்கள் தயவுடையவர்களே. அவர்கள் பிறர்க்கு அன்பு செய்து இன்பளிப்பார்களே அன்றி, அவர்களைத் துன்பப் படுத்தித் தாம் மட்டும் சுகித்திருக்க ஒருக்காலும் ஒப்ப மாட்டார்கள்.
 
            ஏனெனில், பிறர் வருந்தித் துன்பப்பட்டு உழல, அதனால் தாம் புற இன்பம் அடைவதாய் இருந்தால், அது மனோ மயக்கமே அன்றி மெய்யின்பமாகாது. ஆதலின், அதனை விரும்ப மாட்டார்கள் மெய்யறிவுடையோர்.
 

6.
சமய மதாதீத சத்திய ஞான
அமல தயவே அறிவு.
16.

           
கு.வி – சமயங்கள் மதங்கள் கடவுளின் ஒரு சில தத்துவங்களை அடிப்படையாய்க் கொண்டு, உண்மையை மறைத்து, கற்பனையை வளர்த்திருக்கின்றன.
 
            அவை எல்லாமாகியும், யாவையும் கடந்தும், அவைகளுக்கு அதீதமாய் உள்ளது மெய்ப்பொருள். அது, சுத்த தயவில், சத்திய ஞானமாக, மெய்யறிவாக விளங்குகின்றது.
 
            ஆதலின், இச் சுத்த தயா நெறியால் அவ்வதீதமான மெய்ப் பொருளை அறிதலும், அடைதலும் சாத்தியமாகின்றது.
 

7.
மறையறிவும் விஞ்ஞான மாலறிவும் மெய்யோ
குறையறியா ஒன்றைக் குறி.
17.

 
            கு.வி – வேத முதலான கலையறிவும், புலனின்ப மயக்கத்தைத் தருகின்ற தற்கால விஞ்ஞான அறிவும், சுத்த இன்ப நித்திய வாழ்விற்காம் மெய்ஞ் ஞானத்தைத் தராததினால் அவை எல்லாம் தாழ்வுடையனவே, குறைவுடையனவேயாம்.
 
            குறைவில்லாது என்றும் நிறைவோடு திகழும் தயாஜோதியாம் மெய்ஞ்ஞானம் ஒன்றனையே குறியாகக் கொள்ள வேண்டும்  நாம்.
           

8.
மெய்யறிவாற் காண்பதே மெய்யின்பம் மற்றெல்லாம்
பொய்யாகிப் போகும் புகைந்து.
18.

 
            கு.வி. – உண்மையான தயவுடன் கூடிய செயலால் விளைகின்ற இன்பம் நிலைத்திருக்கும். மற்ற வகையால் காண்கின்ற இன்பம் எல்லாம் மெய்யல்ல. நிலைப்பனவல்ல, புகைந்து, கரைந்து ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும்.
           

9.
தயவா முணர்வே தனதுருவாக் கொண்டு
செயலாற் றுவார்க்கே திரு.
19.

 
            கு.வி – தேக போகத்தை மறந்து, தயா அனுபவத்தை லட்சியமாகக் கொண்டு வாழ்பவர்களே மெய்ஞ்ஞானிகள். இம் மாதிரியான மெய்யறிவு உடையவனுக்கே அருட்பெருந்திருவாம் பெருவாழ்வு சேர்கின்றதாம்.
 
            செயலாற்றுவார்க்கே = செயல் புரிபவருக்கே.
 

10.
மெய்யறிவு மெய்யன்பு மேலோர்காண் மெய்ப்பொருட்குச்
செய்யதுணைத் தாளென்றே செப்பு
20.

 
            கு.வி – மெய்ப் பொருளாகிய நம் தயாபெருஞ் ஜோதி ஆண்டவர், மெய்யறிவும், மெய்யன்புமே இரு திருவடிகளாகக் கொண்டுள்ளார். அப் பதியை அண்டுகின்ற நாமும் இத் திருவடிகளே துணையாய் வழங்கப் பெற்று சுத்த சன்மார்க்கத்தில் நடந்து பேரின்ப எல்லையை அடைய வேண்டியுள்ளோம்.
 
 
           
           
           
 


 
 
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.