Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
21-25 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சரவணானந்தா
(21-25 பாடல்கள்)
ஒருதயா மன்றம் உலகினி லோங்க
வுவந்தருள் புரிகவென் னுயிரே
வருதயா மார்க்கம் வளரொளி யின்பம்
வழங்குவ தறிகவென் றுணர்த்தி
இருதயாம் பரத்திலிருந்திசை விப்பாய்
இவ்வுல கவரெலா மகிழ
உருதயா வுருவ முறுவது தானே
உயர்இலக் கெனவுரைத் தாயே. பாடல் 21.
உரை
இப்பிறப்பில் உயர்ந்த குறிக்கோள்: என்ன என்றால், கடவுள் உண்மை ஆகிய தயவு ஜோதி வடிவுகொண்டு, என்றும் இன்பொடு வாழ்வதுதான் என்றாய். இந்த உண்மையை வழங்கும் சுத்த தயா சன்மார்க்கத்தை வெளிப்படுத்தவே ஒரு தயவு ஆலயம் உலகில் தோற்றுவிப்பாய் என் ஆருயிரே ! இதன் உண்மையை ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்தும் கண்டு வாழ்வில் ஏற்று இன்பிலே ஓங்கிடச் செய்வாயாக.
உரைத்திடற் கரிய ஒருபெரும் வெளியில்
ஓங்கிடு பொன்புரை யோங்கல்
கரைத்திடற் கரிய கணக்கிலாச் சோதிக்
கவின்பெரு கோளக கோளம்
நிறைத்திடக் கொண்டு நிலைபெறத் தாங்குந்
நினைக்கொணா வாற்றலைக் கண்டு
திரைத்திடு மேனி சிலிர்த்திட நின்று
சினந்தகங் கரித்தலற் றேனே. பாடல்.22.
உரை
அகண்ட வெளி, இவவளவு பெரியது என்று எவராலும் சொல்லவே முடியாது. அவ்வெளி முற்றும். என்றும் நீக்கமற உள்ள (தோற்றரிய) ஜோதியே நிலைத்த மலையாகக் கூறப்படுவது. இதன் அருள் ஐஞ்சக்திச் செயலால் தான் அழகு ஒளிர்ஜோதி கோளங்கள் எண்ணற்றவை ககோளமாகிய வான்பெரு வெளியில் சுழன்று கொண்டேயுள்ளன. இந்த இறை பேராற்றலை எண்ணிப் பார்க்கும்போது, எனது உடம்பும், உள்ளுணர்வும் சிலிர்க்க, அறியாமையில் எழும் எனது சினமும், அகங்கார உணர்ச்சியும் ஒழியக் காண்கின்றேன்.
அகங்கரித் திங்கே அணுவினுஞ் சிறியேன்
அடாதன செய்தவை யெல்லாம்
அகந்தெரிந் திட்ட வமயநான் பட்ட
அவலநீ யறிவையென் அரசே
முகந்தெரி யாத அன்னியன் போல
மோனமா யிருந்திடல் முறையோ
சகங்கரி யாகத் தனித்தயா வடிவந்
தாங்கிடத் தாங்கிடு வாயே. பாடல்.23.
உரை
நின்சந்நிதி விசேடத்தால் இப்பொழுது இங்கு வந்து நிற்கும் தருணம். முன்புநான், அணுவினும் சிறியனாகிய அற்பனாய் இருந்தும். எவ்வளவு அகங்காரம் கொண்டு, எத்தனை கேடுகளைச் செய்து விட்டேன், என்று எண்ணி எண்ணி கரைந்து நெகிழ்கின்றேன். நின் பெருந்தயவால், இங்கு வருவித்துள்ளாய். இனி ஆற்றேன் ஒரு கணமும் யாரோ அன்னியன் போல நீ என்னைப் பார்த்தும் சும்மா இருக்கலாமா? உலகமெல்லாம் கண்டு கொள்ளும்படி எனக்கு தயவு இன்ப வடிவம் வழங்கி வாழ்விப்பாயாக.
தாங்கிடு வடிவம் சாவுறு முடம்பு
சஞ்சலக் கூடென வுணர்ந்தேன்
ஏங்கிடு கின்றேன் என்றுஇவ் வேக்கம்
இரிந்திட இறையருள் வடிவு
தாங்கிடு வேனோ தயவுதான் சார்ந்து
சாவுறா தென்றுநான் வாழ
வாங்கிடு வாயே வன்மலம் யாவும்
வள்ளலே வழங்கிடுன் தயவே. பாடல்.24.
உரை
இப்போது யான் சுமந்து கொண்டுள்ள தேகம், அழியும் தன்மை கொண்டதாய், சஞ்சலத்திற் குரியதாய் இருக்கக் கண்டு கவலையும் துக்கமும் அடைந்து கொண்டுள்ளேன். இக்கவலை எப்போது ஒழியும், தயா ஒளிபெற்று சாவாமையுறுவது என்றோ என நின் திருமுன் உற்றுள்ளேன். வலிமை மிக்க ஆணவாதி மலங்களை அழித்து, அழியாத தயவுத் திருவுருவோடு வாழத் தயவு செய்.
தயவதே யெனது வடிவெனத் தனித்த
தலமெனத் தரித்தநற் பெயரும்
இயலுறு முடமை யெவ்வெவை யாவும்
இயம்புமத் தயவென விங்கே
செயலெலா முன்றன் திருச்செய லென்றே
சிந்தனை செய்திருப் பேனை
மயலறி வுடையோர் வந்துரை யாடின்
மாற்றமிங் கென்மொழி வேனே. பாடல்.25.
உரை
சுத்த சத்விசாரத்தால் தயா உண்மையை உணர்ந்து கொண்டுள்ள இத்தருணம் எனது உருவமும். யானிருக்கும் இடமும் யான் கொண்டுள்ள எனது பெயரும், இயற்கையில் வழங்கப் பெற்றுள்ள ஒவ்வொன்றும் கூட அத்தயவே எனவும். எந்த செயலும் உனது தயா திருச்செயலே எனவும் கண்டு இருக்கின்றேன். இப்படியுள்ள என்னிடம் மாயா மயக்கறிவுடையோர் வந்து வீண் வார்த்தை மொழிகின்றார்களே. அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவது !
Content Ref: Dhayaa Vilakka Maalai.