HyperLink HyperLink

4/29/2008 10:01:42 AM by

11-15 பாடல்கள் பாடல்கள் உரையுடன்

 

தயா விளக்க மாலை
                                                                சரவணானந்தா
 
                                      (11-15 பாடல்கள்)
உனக்குநா னுரிமை யெனக்குநீ யுரிமை
            ஒப்புறு முறவெலா முரித்தே
எனக்குனை யல்லா லேந்துவா ரிலையே
            யென்செயப் புகுவனிவ் வுலகில்
மனக்குறை வதனால் மலங்கியே மயங்கி
            வாடினன் வாட்டநீ யறிவாய்
தனக்குவை யிருந்தென் தனிமனை யிருந்தென்
            தண்ணருள் தயைபுரி வாயே                                   பாடல்.11
 
                                                உரை 
நேர்முகமாக இருந்து வேண்டும் போது இப்படித்தான், இயம்பப் பெறும்.   நமக்கு, உரிமையும், உறவும், நட்பும் இதுவாக இருப்பதை மறந்து, குறைபட்டு, மயங்கியும் நிலையில் தாழ்ந்தும் வாட நேரும் தருணம் தண்ணருள் ஆகிய தயவையே வேண்டுவோம். மற்றபடி மிகு பொருளும், பெரும் அரண்மனையும் இருந்து என்ன செய்ய ! அக இல்லமாகிய ஆன்மாவே அழியா அருளால் பெறும் வீடு.
 
தண்ணருள் ஒன்றே தானெலாந் தருமே
            சத்திய முணர்ந்திடென் றுரைத்தே
எண்ணரும் பொருளென் றெண்ணிடும் அருளே
            எனக்கிலக் காக்கினை இறைவா
விண்ணரும் வியப்ப மண்ணரும் மதிக்க
            மேனிலை வைத்தனை விமலா
பண்ணருள் செய்தே பாடிட வுன்னைப்
            பண்பெலா மெனக்கருள் பதியே                            பாடல்.12.
 
                                                            உரை
எக்காலத்தும், எவ்விடத்தும், எவர்க்கும் வேண்டுவன எல்லாம் தந்து வாழ்விப்பது ஆண்டவரின் தண் அருள் அல்லது தயவு ஒன்றே என்று உணர்த்தி, அதனையே எனது குறிக்கோளாய்க் கொள்ளச் செய்தாய் என் இறைவா ! இதனால், இவனை நல்லோர் பலரும் மதிக்கவும் துதிக்கவும் வைத்தாய். இதனைச் சொல்லி உனை இறைஞ்சப் பண் இசை தருக பரிசுத்தனே !
 
அருள்வதுன் னருளே யாதலால் யானும்
            அவாவுவ துனதரு ளதுவே
மருள்வது வெல்லாம் மனமயக்காலே
            மயக்கொழி தயாவொளி மருந்தால்
தெருள்வது செய்க செயலெலா முனது
            திருவருட் பெருஞ்செய லெனவே
பொருளது வாகப் பொருந்திநா னென்றும்
            பொன்றிடாப் புகழ்ந்திடப் புரியே.                         பாடல்.13.
 
                                                உரை.
நீ மேற்கொண்டுள்ள பிரபஞ்ச காரியம் எல்லாம் எனக்கு அருள் அனுபவம் வழங்கவே என்பதையுணர்ந்து, அதனையே நானும் வேண்டி நிற்கின்றேன். இருந்தும் பலகாலும் மன மயக்காலே, மருட்சியால் அவத்தைப் படுகின்றேன். அப்போதெல்லாம் நீயே தயாஒளி மருந்தால் தெளிவுறச் செய்து, மெய்ப்பொருள் ஏற்று நின் புகழ் புரிந்து கொண்டு இன்பிலே ஓங்க இசைப்பாய் !
 
புரியது என்றும் பொன்றிடா தாக்கி
            பொன்னொளிர் மேனியோ டிலங்கற்
குரியசன் மார்க்கம் உயர்தயா மார்க்கம்
            உணர்கவென் றுணர்த்திய வொளியே
பெரியதுன் தயவே பேறெலாம் பெறற்கு
            பெருந்துணை யாய்ப்பிறங் குவதே
அரியது அந்த அற்புதத் தயவே
            அடியனுக் களிக்கஇப் போதே.                               பாடல்.14.
 
                                                உரை
புன்புலால் ஆக்கையையே பொன் பொலியுடம்பாய் மாற்றி என்றும் விளங்கச் செய்வது. சிறந்த தயா சன்மார்க்கம் ஒன்றே என உணர்த்தினாய். அவ்வற்புதத் தயவுதான், பெருந்துணையாய் இருப்பதும். பெறலரும் பேறு எல்லாம் பெறுவிப்பதுமாம். ஆகையால் அதனை எனக்கு வழங்குக இத் தருணம். அருள் இல்லலப் பொருளால் மட்டும் பெருவாழ்வு பெற முடியாது. அருளால் பொருளும், மற்றெல்லாமும் பெறலாம்.
 
அளித்தருள் நினது அரும்பெறற் பெருங்கால்
            அருட்குள பதமெனக் காட்டிக்
களித்தருள் செய்க கரிசற வெவருங்
            கற்பனை கடந்தநின் றனையே
துளித்தருள் விழிநீர்ப் பெருக்கிடத் தொழுது
            துதித்திடத் தோன்றிடு வாயே
நெளித்தருள் மனத்தோர் நேர்மைபெற் றிடவும்
            நிறையொளி நிறைத்தருள் இன்னே.                      பாடல்.15.
 
                                                உரை
ஆண்டவருடைய அருட்பெருந்திருவடியை நாம் எளிதில் கண்டு கொள்ளும் பொருட்டு, நம்மின் சிரநடு பகரத் தலத்தே (கடக நடுப்பூசம் என்னும்) காற்குள பதமாகக் காட்டியுள்ளார். இங்குதான் கற்பனை கடந்த கடவுள் ஒளியைக் கண்டு, கசிந்திருகிக் கலந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இருளில் புரண்டு கொண்டிருக்கும் மருள் மனத்தவர், அருள் ஒளி பெற்று ஆனந்த வாழ்வில் தழைத்திட தயவு செய்திடுவாய் இப்போதே.
 
Content Ref: Dhayaa vilakka maalai
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.