Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
6-10 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சரவணானந்தா
6 - 10 பாடல்கள்)
பெரியவாழ் வளிக்கும் பெருந்தயா நிதியே
பேரருட் பெருங்குணக் குன்றே
விரியுமேழ் பிறப்பாம் மைக்கடல் வீழ்ந்து
வேகமாய்ச் சுழலுமிவ் வினைஞ்ஞன்
துரியவாழ் ஜோதித் தெய்வமே யென்று
துதித்துனைத் தொழுது வாழ்ந்திடற்கே
உரியவாழ் வருளி யொருபெரு நிலையி
லோங்கிட உளமகிழ்ந் துதவே. பாடல்.6.
உரை
பெரிய வாழ்வு என்பது மரணமில்லா நிறை இன்ப வாழ்வு. பிறப்பிறப்பில் உண்டாகின்ற குறைவாழ்வு, வாழ்வு அல்ல. பிழைப்பே! ஆம். பெருந்தயா நிதியாய். பெருங்குணக் குன்றாய்த் திகழும் நீ ! அடியேனை, ஏழ்பிறப்பு என்னும் கருங்கடலில் சிக்கி மிக விரைவாகச் சுற்றிக் கொண்டிருத்தலை ஒழித்து, மேனிலையில், சுகானந்த வாழ்வில் திகழத் தயை புரிதல் வேண்டும்.
மகிழ்ந்துனை யெங்கும் வாயினாற் புகழ்ந்து
வாழ்த்திட வாழ்த்திட வுள்ளம்
நெகிழ்ந்துனை யுள்ளே நீளொளி யாக
நிலைபெறப் பற்றியே நின்று
செகந்தனைப் பற்றாத் தியாகநற் செயலே
செழித்திடச் சிதைவிலா தெனையே
சுகந்தனைச் சேர்ந்த ஜோதியாம் ஞான
சுத்தசன் மார்க்கமெய் சூழே. பாடல்.7.
உரை
உள்ளத்திலே, தயா ஞானம் விளங்கவும், அது கொண்டு, உன்னையே எங்கெங்கும் கண்டு துதிக்கவும். மகிழவும். உலகில் தயவோடு தியாகப் பணியே புரியவும், அருள் செய்க. இம்மாதிரி அகமிருந்து அனகமாக வாழ்வதே சுத்த சன்மார்க்க மெய்ந் நெறியாக எவரும் ஏற்றுக் கொள்ள இசைப்பாயாக.
சூழொளி கொண்ட சுயம்பிர காசச்
சுகதயா திருவுருத் தரித்து
ஏழொளித் திரைகள் எழில்செய மறைத்தே
யிருந்தன விருந்தவை யெல்லாம்
பாழொளி யாக்கிப் படைத்திடல் முதலாப்
பண்புறு மைந்தொழில் எவையும்
காழொளி மனத்தேன் கரம்பெற வளித்த
கடவுளே கடவுளர் கோவே. பாடல்.8.
உரை.
நம் தயா பெருஞ்ஜோதிபதி இயற்கையாய், சுயம் பிரகாசத்தோடு இருந்தும், நாம் கண்டு கொள்ள முடியாதபடி இருக்கக் காரணம், நமது மனோ அபக்குவ நிலையே ஆம். காழ் (வைரம்) போன்ற கடின மனத்துள், கடவுள் ஒளி ஒளிந்து கொண்டுள்ளதாகத் தோற்றுகின்றது. இம் மனம் சுத்த முறும் போது அறியாமை என்னும் ஏழ் திரை மறைப்பும் நீக்கப்பட்டது போல், உள்ளொளி விளங்கக் காண்போம். இவ் வொளியே நம்மை அதுவாகக் கொண்டு நின்று உலகெலாம் ஐந்தொழில் செய்வதையும் கண்டு மகிழ்வோம்.
கடவுளர் கோவே கனிவுளோர் கருத்திற்
கனிந்தொளிர் கற்பகக் கனியே
இடர்உள மார்க்க மியாவையுந் தவிர்த்து
இயற்பெருந் தயாநெறி யொன்றே
தொடர்புள தாகித் துலங்கியென் றென்றுந்
துவக்கறத் தோன்றருள் துணையே
சுடர்வளர் ஜோதி சுகப்பெருந் தயவாஞ்
சுத்த மெய்ஞ் ஞானவான் பொருளே. பாடல்.9.
உரை.
வளர் ஒளியாய் விளங்குகின்ற தயா பரம்பொருள் தான் தேவதேவனாம் மகாதேவனாய், நல்லோர் உளத்தே யாவையும் அருளும் கற்பகக் கனிஎனத் திகழ்கின்றது. இதன் ஒளியால். துன்ப நிறை நெறிகளை யாவும் விலக்கித் தள்ளி விட்டு, தயா பெருஞ் ஜோதி நெறியொன்றே உலகில் தழைத்துப் பிறவித் தொடர் சூழாவண்ணம் உதவுவதாம். இதுதான் சாகாக் கல்வியின் பயனாகும்.
வான்பொருள் கலந்த வளர்மணிப் பொதுவில்
வயங்கிய வள்ளலே யெனது
மான்பொருள் கலந்த மதியிலா மனத்தை
வாலருள் தயவினால் விளக்கி
ஊன்பொருள் வடிவை யொளியுறச் செய்தாய்
உனக்குயான் எதுசெயக் கடவேன்
நான்பொரு ளாவி நலியுடல் மூன்றுந்
நவையறக் கொடுத்தன னுனக்கே. பாடல்.10.
உரை.
வான் நிரம்பிய வெளி முற்றும் இடையறாது என்றும் தோற்றரிதாய் விளக்கிக் கொண்டுள்ளது நம் வள்ளற் ஜோதி. ஆனால், ஓளி விளங்காத, மயக்கிருள் மனக்கண்ணுக்குத் தோற்றுவதில்லை அவ் ஒளி. சுத்த அருள் ஞான ஒளியால்,
இருளை அகற்றி உண்மையைக் காட்டி, நம்மையே அவ்வொளி வண்ணமாக ஆக்கிவிடும் பதிக்கு, நம் உடல் பொருள் ஆவியை எல்லாம் தந்து நிற்கின்றோம்.
ContentRef: Dhayaa vilakka maalai