Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
1 - 5 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சரவணானந்தா
1978
முன்னுரை
எல்லாம் வல்ல இறைவன், தயாபெருஞ்ஜோதி பதியாய் எழுந்தருளி விளங்கும் திருமுன் உற்றுப் போற்றிச் சுத்த சுகானந்த வாழ்வு எவரும் பெற, வழங்கப்படும் பாமாலை இதுவாகும்.
தயாவொளி விளக்கே தயாபரஞ் சுடரே
தயாபெருஞ் ஜோதியென் அரசே
தயாவெளித் தலத்தே தயாமணி மன்றில்
தயாஅரி ஆதனத் தமர்ந்து
தயாமுறை விளங்கத் தயாநெறி யோங்கத்
தயாவர சியற்பெருஞ் செங்கோல்
தயாவிய லுண்மை தயாவறி வின்பம்
தயாவுல கெலாஞ்செலுத் துகவே பாடல் . 1.
தயா விளக்கக் கருத்து விளக்கம்.
தயாவெளித்தலம், தயாமெய் யறிவு விளங்கும் இடம் – இதுவே உண்மைச் சின்மயபுரம் ஆம்.
இங்கு விளங்கும் மணிமன்றம் தயவு ஆலயமே.
இந்தக் கோயிலில், ஐங்கோண ஆசனத்தில், திகழும் விளக்குதான் நம் பதியைச் சுட்டுவது. இச் சந்நிதியில் இருந்து கொண்டு, தயா பெருஞ்செங்கோல் ஓச்சும் மன்னர் மன்ன!
உலகம் எல்லாம் சச்சிதானந்த வாழ்வில் தழைக்க தயை பாலி, என வேண்டப் படுகின்றது.
உலகெலாம் தயவில் உலவிடா துலவி
ஒளிவளர் வெளியினில் நிறைந்தே
அலகிலா நினது ஆற்றலை யெவரும்
அறிந்தடைந் திடுவதற் காக
நலமெலாந் திரண்ட நல்லொளி வடிவு
நனிபெறத் தரித்தருள் பெருகும்
தலமதிற் சிறந்த தத்துவங் கடந்த
தயாவுணர் தலந்தனித் தாயே. பாடல். 2.
உரை
அருள் பெருகும் நலம் எல்லாம் திரண்டு ஓர் உருவாய், நல்ல ஒரு தீபச் சுடராய் இத் தத்துவாதீதச் சின்மயபுரத் தலத்திலே வீற்றிருந்து ஆள்கின்றாய். ஏனெனில், அகண்ட வெளி நிறை எண்ணற்ற உலகங்களில் வாழும் மக்கள் நினது தயா பெருஞ் சக்தியை அறிந்து அடைதற்காகவே விளங்குகின்றாய்.
தாயெனக் கானாய் தந்தையு மெனது
சாமியுஞ் சகலசாத் திரத்தின்
மேயதோர் ஞான மெய்ப்பொருள் காட்டும்
மிக்குயர் குருவுமெற் கானாய்
நேயனு மானாய் நீளுல கெல்லாம்
நிறைந்தனை நிறைந்தனை யென்னுள்
காயெனக் காய்த்துக் கனியெனக் கனிந்து
களித்திட சார்ந்தகற் பகமே. பாடல் 3.
உரை
எங்கணும் நிரம்பியுள்ள நீயே, எனது தாயாகவும். தகப்பனாகவும். தெய்வமாகவும். ஞான குருவாகவும். நல்ல நண்பனாகவும் விளங்கி, இப்போது என்னுள், சிறந்த ஒரு கற்பக மரமாய்த் தோற்றிக் காய்த்துக் கனிந்து திகழ்ந்து, பேருன்பம் அருள உள்ளாய். எல்லாம் ஆனது கடவுள் ஒன்றே. அதுவே ஒரு தெய்வத் தருவாய்த் தோற்றி நமக்குத் தயானந்தக் கனியை வழங்கி வாழ்விக்கவுள்ளது.
சார்ந்திடற் கரிய சார்பெனவுன்னைச்
சார்ந்தனன் சார்ந்தவென் றனக்கே
ஓர்ந்திடற் கரிய உண்மைகள் யாவும்
உளத்திருந் துணர்த்தினை யுவந்தே
தேர்ந்திடற் கரிய தெய்வநன் நிலைக்கே
திறலொடு சேர்த்தனை தேவே
ஆர்ந்திடு மரிய ஆகம வேதக்
கலைகளும் அளக்கொணா வருளே. பாடல் 4
உரை
உன்னையே அறிந்து வந்து அடைவது பெரும் பேறு என அறிந்து வந்தேன். அடைந்து நிற்கும் சமயம் ஓதி உணர்தற்கு அரிய உண்மைகளை எல்லாம் உணர்த்தி மேனிலைக்குத் தயவோடு ஏற்றுகின்றாய். மறை ஆகமங்களுக்கு எட்டாத அருட்பேரனுபவ நிலையில் விளங்கச் செய்வாயாக.
அளக்கொணா தகன்ற அருட்பெரு வெளியில்
அருள்தயா வொளியொடு வமர்ந்தே
பளக்கிலா துயிர்கள் பணிந்துநற் பத்திப்
பணிசெயப் பணித்தனை பதியே
கிளக்கிலா மறையிற் கேள்வியாற் காணாக்
கிளரொளி யெனதுளிற் கிளர்ந்து
வளர்க்குமெய்ப் பொருளாய் வாழ்ந்தனை வாழ்வு
வழங்கினை யென்பெரு வாழ்வே. பாடல் 5.
உரை
எனது அகத்தே தயாவொளியாய்க் கிளர்ந்து நின்று. கல்வி கேள்வியால் அறிவரிய அகண்ட பரஞ்ஜோதியை உண்ர்த்திக் கொண்டுள்ளாய். பளகு (குற்றம்) இல்லாப் பத்தி வழிபாட்டால் பலர்க்கும் உய்யும் வழிகாட்டி வளர்த்து, வாழ்விக்கின்றாய். கிளக்கிலா மறை என்பது, சொல்லரிய இறையுண்மை மறை பொருள்.