DAEIOU - தயவு
4.10.2008 - திண்டுக்கல் அருள் ஜோதி வள்ளலார் மேனிலைப்பள்ளி-வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா.

4.10.2008 திண்டுக்கல் அருள் ஜோதி வள்ளலார் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற “வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா” நிகழ்ச்சி

அருள் ஜோதி வள்ளலார் மேல் நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா.

4.10.2008

திண்டுக்கல் நகரில் அவதரித்த தயாநிதி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம் அருகே என்.எஸ்.குப்புசமி நகர் என்னும் இடத்தில், அருள் ஜோதி வள்ளலார் மேல் நிலைப் பள்ளி நிர்வாகத் தலைவர், அருட்பெருஞ்ஜோதி தயவுத் திரு S.S. கிருஷ்ணமூர்த்தி ஐயா, நிர்வாகக் குழு அன்பர்கள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டு தோறும் “வள்ளலார் வருவிக்கவுற்ற நாள்” விழாவினை நடத்தி வருகின்றனர்.

இப்பள்ளி, திண்டுக்கல் நாகல் நகரின் வாழும் மொழிச் சிறுபான்மையினராகிய செளராஷ்ட்ரா சமூகத்தினரால் 1986ஆம் ஆண்டில் செளராஷ்ட்ரா கல்வி அபிவிருத்தி சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இச் சங்கத்தின் சார்பாக முதன் முதலில் அருள்ஜோதி வள்ளலார் உயர்நிலைப்பள்ளியாக, 30.6.1987ல் துவக்கப்பட்டது. மேலும், 1997ஆம் ஆண்டு மேல் நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இப் பள்ளி துவக்கப்பட்டதன் நோக்கம் அனைத்து சாதி, சமய, இன, மொழி பாகுபாடு இல்லாமல், எல்லாத் தரப்பு மாணவர்ச்களுக்கும் இடமளித்து, குழந்தைகளின் அறிவுக் கண்ணைத் திறந்து, தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித் திட்டத்தின்படி, இப்பள்ளி இயங்கி வருகிறது.

திருவருட் பிரகாச வள்ளற் பெருமானின் திருப்பெயரால், இப் பள்ளி இயங்கி வருவதைக் கருத்திற்கொண்டு, வள்ளலாரின் சீரிய கொள்கைகளை எல்லாம் செயல்படுத்தும் ஒரு தனி நோக்கிலும் இப் பள்ளி இயங்கி வருவது சிறப்பிற்குச் சிறப்புச் சேர்ப்பதாகும்.

வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை பரப்பும் இப் பள்ளியின் நோக்கத்தின்படி, இந்த ஆண்டு, 2008-ஆம் ஆண்டிலும், வள்ளலாரின் வருவிக்கவுற்ற நாளினை வெகு விமரிசையாகக் கொண்டாடும் வகையில், தயவுத் தொண்டர் விசுவநாதன் அவர்களை, இந் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய வேண்டுமென. இப்பள்ளியின் நிர்வாகத் தலைவரும், திண்டுக்கல் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தலைவருமான தயவுத் திரு S.S. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் விரும்பினார். அவர், கேட்டுக் கொண்டதற்கிணங்க, தயவு விசுவநாதன் 4.10.2008 அன்று, இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.

4.10.2008 (சனிக்கிழமை) காலை 9.20 மணி

அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் நூற்றுக் கணக்கான பள்ளி மாணவர்கள் குழுமி இருந்தனர். அனைத்து ஆசிரியர் பெருமக்களும் வருகை தந்திருந்தனர். தலைமை ஆசிரியர் தயவுத் திரு R. பிரகாஷ், M.A., M.A., M.Ed., அவர்கள், வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் திண்டுக்கல் தயவு அன்பர் திரு விசுவநாதன் அவர்கள் இந் நிகழ்ச்சியின் சிறப்பினை, விரிவாக எடுத்துரைத்தார். அவர் தமது உரையில் கீழ்க்கண்ட விளக்கத்தினை அளித்தார்.

வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாளினை, உலகமுழுவதும் கொண்டாடி வருகிறது. 5.10.2008ஆம் நாளான நாளை விடுமுறை ஆதலால், இங்கு, ஒரு நாள் முன்னதாகவே, இந்த விழாவினை 4.10.2008-ஆம் நாளன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

வள்ளலார் பிறந்தநாள், ஜனா நாள், ஜெயந்தி நாள், அவதார தினம் என்று எல்லாம் சொல்லுவதை விட வள்ளலார் வருவிக்க உற்ற நாள் என்று சொல்லுவதே சிறப்பு ஆகும்.

ஏனெனில் திருவருட் பிரகாச வள்ளற் பெருமானே இதைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது

“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் டவைவித்திட அவரும்

இகத்தே வரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே”

என்கின்றார். வள்ளலார் வருவிக்கவுற்ற நாள்: சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் 21 ஆகும். அதாவது 5.10.1823.

நம் தமிழ் நாட்டிலேயே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறை செயற்பாடுகள் எல்லாம் பல்வேறு இடங்களில் பரிணமித்திருந்தாலும், (1) வடலூர் மற்றும் (2) திண்டுக்கல் ஆகிய இரண்டு இடங்களாகிய (1) வள்ளலார் வாழ்ந்த இடம், (2) சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த இடம் ஆகிய இரண்டு இடங்களில்தான் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வடலூரிலே வள்ளற் பெருமானின் கொள்கைகளைப் பரப்புவதற்கு “வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி” என்ற ஒன்று உள்ளதைப்போலவே திண்டுக்கல்லில், அருள் ஜோதி வள்ளலார் மேல் நிலைப் பள்ளி”யும் உள்ளது. இரண்டுமே, வள்ளற்பெருமானின் திருப் பெயரைத்தாங்கி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

வள்ளற் பெருமான் அவர்கள் இந்த உலகிலுள்ள மாந்தர்களுக்கு, 6,000க்கும் மேற்பட்ட திரு அருட்பாக்களை வழங்கிச் சென்றார். திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளும், 6.000க்கும் மேற்பட்ட தயவுப் பாக்களையும், வள்ளற் பெருமானால் பாடப்பட்ட திரு அருட்பாக்களில் பாமாலைப் பாடல்களுக்கு, 60க்கும் மேற்பட்டவற்றிற்கு உரை விளக்கங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை எல்லாம் மேலும் தெள்ளத் தெளிவாக அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளியிடப்பட்டதுதான், சுவாமிகள் தயவு அனுபவங்கள்.

தமிழ் நாட்டில் வள்ளற் பெருமான் அவர்கள் முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவர். முதியோர் கல்வியை ஏற்படுத்தினார். மும்மொழி (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) பாடசாலை நிறுவியவர். சுத்த சன்மார்க்க நெறிக்கு 1 பங்கு மஞ்சள், 3 பங்கு வெண்மை என ஒரு தனி சுத்த சன்மார்க்கக் கொடி கண்டவர்.

ஒரு தனி மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தமது மார்க்கத்திற்கு, சங்கம், சாலை, சபை அமைத்தவர். எல்லோருக்கும் பொதுவாக ஒரு ஒளி நெறியை சத்திய ஞான தீபமாகக் காட்டியவர்.

வள்ளலார் தமது 9-ஆம் அகவையில், இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றார். இவர், எப் பள்ளியிலும் பயின்றதில்லை. எந்த ஆசிரியரிடத்தும் படித்ததில்லை. கற்க வேண்டியவற்றை, இறைவனிடமே கற்றார். எல்லாவற்றையும் ஓதாதே உணர்ந்தார்.

இவர் தமது 9ஆம் வயதிலேயே, தமது தமையனாருக்குப் பதிலாக, தாமே இரவு நெடு நேரம் சேக்கிழாரின் பெரிய புராணத்திற்கு உரை விளக்க சொற்பொழிவு நிகழ்த்தினார். இந் நிகழ்ச்சி, கன்னிச் சொற்பொழிவாக நிகழ்ந்து, வள்ளலாரின் சிறப்புக்களைப்பற்றி வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்திவிட்டது.

பின்னாளில் முதன்முதலாக (1) மனுமுறை கண்ட வாசகம் (2) ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூல்களை எழுதி வெளியிட்டார். “சிதம்பரம் இராமலிங்கர்” என அழைக்கப்பட்டவர், பின்னர் “திரு அருட்பிரகாச வள்ளலார்”ஆனார்.

மாணவர்களாகிய நீங்கள், இந்தப் பள்ளியிலே பயிலுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி என்றால் என்ன ? அது எங்கே இருக்கின்றது ?


இதோ இங்கே இருக்கின்ற மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் தலை நடு இடத்திலிருந்து அருவமாக, உள்ளாக, அருள் ஒளியாக இருந்து, பெருஞ்ஜோதியாக எங்கும் நிறைந்து உள்ளதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பது ஆகும்.

வள்ளலார் எங்கே இருக்கின்றார் ? உங்களின் சிரநடுவே ஒரு வெற்றிடம் vacuum கண்ணுக்குத் தெரியாத சிறு வெளி, ஞாகாசம், சிதாகாசம் என்பார்கள். அங்கு ஒரு சிறு அணுப்புள்ளியாக, அருள் ஒளியாக, வள்ளலார் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார்.

நாம் அங்கிருந்து, இரு கண்கள் வழியாகப் பார்க்கின்றோம். காதுகளின் வழியாகக் கேட்கின்றோம். படிக்கின்றோம். எல்லாம், பள்ளியிலேயே சொல்லித் தந்த பாடங்களை எல்லாம், மீண்டும் வீட்டிலே வந்து பார்க்கும்போது, அந்த தலை நடு வள்ளலார் ஒளியே, மேலும் மேலும் ட்க்ஹெளிவாக்கி, தேர்வுகள் எழுதச் செய்து, தேர்ச்சி பெறச் செய்கின்றது. எல்லாம் வள்ளலார்தான் வள்ளலார் ஒளிதான்.

வள்ளற் பெருமானின் காலத்திலிருந்து, கதிரவனைப் போல பரவி வந்த சுத்த சன்மார்க்கப் பெரு நெறி, இன்று உலகம் பூராவும் www.vallalarspace.com என்ற இணைய தளத்தின்மூலம் சுத்த வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்துவிட்டன. நாங்கள் உங்களிடையே விதைகளைத் தூவிக் கொண்டிருக்கின்றோம். இனி வருங்காலத்தில் நீங்கள் இந் நெறியில் தழைக்கப்போவது உறுதி.

என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று. பார்த்திப ஆண்டு பங்குனி மாதம் 23ம் தேதி, 6.4.2006-ம் தேதியன்று, தயாநிதி சுவாமி அவர்கள் சித்தி அடைந்தார்கள். 7.4.2006-ந் தேதி அன்று, முழு பூச நாள். மதிய நேரத்தில் எல்லா சன்மார்க்க ஆன்றோர்கள், சான்றோர்கள், அன்பர்களிடையில், பள்ளி மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அணி வகுத்து, சுவாமிகளின் இல்லத்திற்கும் பொன்னகரத்திற்கும் அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்திற்கும் வந்து, அங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், சுவாமிகளின் திருமேனியையும் வலம் வந்து, அஞ்சலி செலுத்தியது.

“இந்த உடம்பில் இருக்கின்றேன். இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன்” என்ற வள்ளலாரின் வாசகம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இப்பொழுதும் அத நினைத்துப் பார்க்கின்றேன். எனவே, உங்கள் பள்ளிக்கு

அருகாமையிலேயே, தயாநிதி சுவாமி அவர்களின் பரிபூரணமான ஆசிகள் உங்களுக்கு கிடைத்துவிட்டது. நீங்கள் எல்லோரும் வரும் காலத்தில் வள்ளலாராக வருவீர்கள். எந்தத் துறையிலும் சிறந்து விளங்குவீர்கள் என்று இந்த நேரத்தில் எனது தயவு வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்கி, எனது உரையினை நிறைவு செய்கின்றேன்.

இதன்பின், உதவித் தலைமை ஆசிரியர் நன்றியுரை வழங்கினார். இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழா இனிதே நிறைவடைந்தது.